அரசு வங்கிகளில் பணியாற்றும் பல லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் மார்ச் 15, 16 தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி உள்ளனர். பொது காப்பீட்டுக் கழக ஊழியர்கள் மார்ச் 17-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆயுள் காப்பீட்டுக்கழக ஊழியர்கள் இன்று (மார்ச் 18-ந் தேதி) வேலைநிறுத்தம் செய்கின்றனர். பல வாரங்களுக்கு முன்னதாக இந்த போராட்டங்களை சங்கங்கள் அறிவித்தன. ஆனாலும், மத்திய அரசோ, மத்திய நிதியமைச்சரோ போராட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி கவலைப்படவில்லை.
நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் இரண்டு அரசு வங்கிகளை மொத்தமாக விற்பனை செய்யும் திட்டத்தையும் அறிவித்தார். மேலும் ஜி.ஐ.சி., எல்.ஐ.சி. நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்.இந்திய பொருளாதாரத்தினுடைய முதுகெலும்பாக உள்ள பொதுத்துறை நிதிநிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது என மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தித் தான் இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன. மக்கள் சொத்தான இத்தகைய அரசு நிதி நிறுவனங்களை உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பதை எதிர்த்துத் தான் இந்த போராட்டம். அரசு நிதி நிறுவனங்கள் எல்லாம் தனியார் கைகளுக்குச் சென்றால் எத்தகைய விபரீத விளைவுகளை உருவாக்கிடும் என்பதைபற்றி அரசு கவலைப்படவில்லை.
கடந்த 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெடித்த நிதி நெருக்கடியினால் அமெரிக்க தனியார் வங்கிகள், நிதிநிறுவனங்கள் எல்லாம் நொறுங்கிப்போயின. அமெரிக்க பொருளாதாரத்தில் ஓராண்டில் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு 64800 கோடி டாலர். நெருக்கடி ஏற்பட்ட ஆண்டில்ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட இழப்பு 3.4 லட்சம் கோடி டாலர். அந்த ஆண்டில் பங்கு சந்தையில் ஏற்பட்ட இழப்பு 7.4 லட்சம் டாலர். அமெரிக்காவில் ஒவ்வொரு குடும்பத்திற்கு வருவாய் இழப்பு 4,64,000 ரூபாய். நிதி நெருக்கடியால் வேலை இழந்தவர்கள் 55 லட்சம் பேர். 2008ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அந்த பாதிப்புகளிலிருந்து இதுவரையிலும் அமெரிக்கா மீண்டு வர முடியவில்லை.
அமெரிக்காவில் நிதி நிறுவனங்கள் பெரும்பான்மையாக தனியார் பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கத்தில் உள்ளன. இக்கட்டுரையில் ஏன் அமெரிக்காவை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம்? அமெரிக்காவில் ஏற்பட்டநெருக்கடி பெரும்பான்மையான மேலை நாடுகளை பாதித்தன. ஆனால் இந்தியாவை அந்த அளவிற்கு பாதிக்கவில்லை. ஏன்?1929-க்கு அடுத்ததாக 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடிதான் கடுமையானது என பொருளாதார வல்லுனர்கள் குறிப்பிட்டார்கள். இந்த நெருக்கடியைப் பற்றி நோபல் பரிசு பெற்ற வல்லுநர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் கீழ்க்கண்டவாறு கூறினார்.
“அமெரிக்க நிதிநிறுவனங்ளையும், தொழில்களையும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதித்த 2008 நெருக்கடி இந்தியாவை பாதிக்கவில்லை. இதற்கு காரணம் இந்தியாவில் வங்கிகள், காப்பீட்டுத்துறை உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால்தான் இந்தியா தப்பித்தது.”தற்போது மத்திய அரசு, அரசு வங்கிகளையும், அரசுக்காப்பீட்டு நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்த்தால் அமெரிக்காவில் ஏற்பட்டது போன்று நிதி நெருக்கடி இந்தியாவில் ஏற்பட்டால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். மேலும், கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் 7.7 சதவிகிதம் சரிந்துள்ள போது, பொதுத்துறை நிதி நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது தேசப் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும்.
1956 ஆண்டில் எல்.ஐ.சி பொதுத்துறை நிறுவனமாக துவங்கப்படுகிறது. மத்திய அரசு இட்ட மூலதனம் வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் இன்று அதனுடைய சொத்துமதிப்பு பல லட்சம் கோடி. ஒவ்வொரு 5 ஆண்டு திட்டத்திலும் மத்திய அரசு செய்திடும் ஒதுக்கீட்டில் 20 சதவீதம் எல்.ஐ.சி நிறுவனம் செலுத்துகிறது.எல்.ஐ.சி. நிறுவனத்தினுடைய லாபத்தில் 95 சதவிகிதம்பாலிசிதாரர்களுக்கு பட்டுவாடா ஆகிறது. 5 சதவிகிதம் அரசு செல்கிறது. இந்த நிறுவனம் தனியார் கைக்குச் சென்றால்ஒட்டுமொத்த லாபமும் தனியார் கம்பெனிக்கே செல்லும். அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரமாக இருக்கக்கூடிய எல்.ஐ.சி, ஜி.ஐ.சி நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மிகப்பெரிய தேசத் துரோகம் ஆகும்.அரசு வங்கிகளில் உள்ள மொத்த டெபாசிட் சுமார் 150 லட்சம் கோடி. இது கார்ப்பரேட் கம்பெனிகள் செலுத்தியடெபாசிட் அல்ல. மக்கள் செலுத்திய டெபாசிட். ஒட்டுமொத்த டெபாசிட்டை கொள்ளையடிக்கவே உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் வெறிகொண்டு அலைகின்றனர். அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றத்தான் மோடி அரசு வங்கிகளை தனியார்மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.அரசு வங்கிகளின் மொத்தச் சொத்து கணக்கிலடங்காது. மத்திய அரசோ அரசு வங்கிகளின் அலுவலகங்கள் கட்டிடங்களின் உண்மை மதிப்பைச் சொல்வதில்லை. உதாரணமாக சென்னை அண்ணா சாலையில் பதினொரு அடுக்குமாடி எல்.ஐ.சி கட்டிடத்திற்கு அருகில் உள்ள பாரத வங்கியின் சொத்து மதிப்பு 1 ரூபாய் என்று தான் மத்திய அரசாங்கம் கூறி வருகிறது.
நிதி நிறுவனங்களை மட்டுமல்ல, கேந்திரமான உருக்குமற்றும் எண்ணெய் நிறுவனங்களையும் தனியாருக்குமொத்தமாக விற்பனை செய்திட மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணத்திலுள்ள உருக்கு ஆலையை மொத்தமாக விற்றிட மத்திய அரசுஎடுத்துள்ள் முடிவை எதிர்த்து அந்த நிறுவன தொழிலாளர்கள் ஊழியர்கள் மட்டுமல்ல ஆந்திர மாநிலம் முழுவதும்அனைத்து பகுதி மக்களும் கலந்து கொள்ளக்கூடிய முழு அடைப்பு போராட்டம் நடந்துள்ளது.கொழுத்த லாபம் ஈட்டக்கூடிய பாரத் பெட்ரோலியம் பொதுத்துறை நிறுவனத்தையும் மொத்தமாக விற்றிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கணிசமான அளவுக்கு மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து சுத்திகரித்து மக்களுக்கு விற்பனை செய்கிறது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் போன்ற மத்திய பொதுத்துறை எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் நாட்டின் பல பகுதிகளில் எண்ணெய் உற்பத்தி செய்வதோடுசுத்திகரிப்பும் செய்து மக்களின் ஒருப்பகுதி தேவையை பூர்த்தி செய்கிறது. சுயச்சார்பு பொருளாதாரம் என்று வாய்ச்சவடால் பேசும் மோடி அரசு நமது தேசத்தின் பெருமைமிக்க நிறுவனமாக உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனை விற்றிடத் திட்டமிட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனின் சொத்து மதிப்புரூ.9 லட்சம் கோடி. ரூ.4.5 லட்சம் கோடிக்கு இந்த நிறுவனத்தை விற்பனை செய்திட மத்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. எண்ணெய் எரிவாயு நிறுவன அதிகாரிகள் சங்கம் மத்திய அரசின் இம் முடிவை ஆட்சேபித்து பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனின் ஓராண்டு வருவாய் மட்டும் 3 லட்சத்து 26 ஆயிரம்கோடி. ஆண்டு லாபம் சுமார் மூவாயிரம் கோடிக்கு மேல். இத்தகைய நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்பதை அதிகாரிகள் சங்கம் எதிர்த்து வருகிறது.பொதுத்துறை வங்கிகளிலும், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களையும் பாதுகாப்பதற்காக இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நடத்தும் போராட்டம் தேசம் காக்கும் தேசப்பற்றுமிக்க போராட்டம். பரபரப்பான தேர்தல் களத்திலும், உறுதியுடன் நடக்கும்இந்த போராட்டமும் பாஜக-அதிமுக அரசுகளின் கொள்கைகளை அம்பலப்படுத்துவதற்கான எழுச்சியேயாகும்.
கட்டுரையாளர் : ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர்