கொரோனா இரண்டாவது அலை தீவிரமாய் பரவி வருகிற தருணமிது.கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ஒரு லட்சமாக இருந்த தொற்றின் வேகம் தற்சமயம் 2 லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்ற கேள்விகள் முன்னுக்கு வந்துள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டின் பாடங்களிலிருந்து அரசுகள் ஏதேனும் பாடத்தை கற்று இருக்கின்றனவா; அதிலிருந்து தொழிலாளர்கள் பாதிக்காமல் இருப்பதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கின்றன வா; என்கிற அச்சம்ஏற்பட்டுள்ளன.
திட்டமிடப்படாத ஊரடங்கு
கடந்தாண்டு திடீரென அறிவிக்கப்பட்ட திட்டமிடப்படாத ஊரடங்கு காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 120 லட்சம் பேருக்கு மேல் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். இது, மொத்த உழைப்பாளர் எண்ணிக்கையில் முப்பது சதம் ஆகும்.நீண்ட தூரம் நடந்த களைப்பில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டு இருந்த பதினேழு பேர் ரயில் ஏறி விபத்தில் இறந்தார்கள்.இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோதுதான் ஊருக்கு திரும்பும் போது இறந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விபரம் கூட இல்லை என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இலட்சக்கணக்கான மக்கள் நீண்ட தூரம் நடந்தே சென்றது இதுவே முதல் முறையாகும்.ஏராளமான நவீன போக்குவரத்து வசதிகள் வந்த பின்பும் கூட இந்த நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சிக்குப் பங்களித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கடும் வெயிலிலும் நடந்தே ஊர் திரும்பினர்.ஊருக்கு திரும்பிய தொழிலாளர்களுக்கு உதவிடக் கூடிய முறையில் அரசின் கொள்கையும் செயல் திட்டமும் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வி மிக முக்கியமானதாகும். ஊருக்குத் திரும்பிய தொழிலாளர்களில் 38.3 சதமானவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. 85% பேரின் வருமானத்தில் 85 சதவீதம் சரிவு என்பது ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியில் மிகப்பெரிய அளவிற்கு சரிவு ஏற்பட்டுஉள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்நிலை வருமானம், சேமிப்பு ஆகிய அனைத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தான் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். இதுகுறித்து மூன்று கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜூன், ஆகஸ்ட் மாதங்களிலும், நவம்பர்-டிசம்பர் மாதங்களிலும், கடைசியாக பிப்ரவரி 21ம் தேதியும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் மூலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை எந்தளவுக்கு மோசமாகியுள்ளது என்பதை காண முடிகிறது. அரசு அறிவித்த ஆத்ம நிர்பார் திட்டத்தின் மூலமாக 16 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஏதாவது ஒரு வகையில் குறைந்த பட்ச பலனைப் பெற்றுள்ளனர். மொத்த எண்ணிக்கையில் இது 15% மட்டுமேயாகும். மீதி85% புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசின் திட்டத்தால் எந்த பலனும் கிட்டவில்லை.
மீண்டும் புலம் பெயரும் அவலம்
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உத்திரவாத சட்டத்தின் கீழ் 7.7 சதமான பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிட்டியுள்ளது. இதனால் மீண்டும் வேலைவாய்ப்புக்காக புலம்பெயர வேண்டிய நிர்பந்தம் என்பது உருவாகியுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் வருமான இழப்பு காரணமாக 36.5 சதவீதம் பேர் இன்னும் தங்கள் சொந்த ஊரிலேயே இருக்கவேண்டிய நிலைமை நீடிக்கிறது.இத்தகைய அனுபவங்களைக் கணக்கில் கொண்டு மத்திய அரசு புதிய கொள்கையையும் செயல் திட்டத்தையும் உருவாக்க வேண்டியுள்ளது. கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி வேலை வாய்ப்பை பெருக்குதல், நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்க நகர்ப்புற வேலைஉறுதிச் சட்டத்தை உருவாக்குவது, உணவு பொருள் கிடைப்பதற்கான உத்தரவாதத்தை மேற்கொள்வது, புதிய கட்டுமான திட்டங்களை உருவாக்கி வேலை வாய்ப்பை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை ஆளுகின்ற மோடி அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் மத்திய அரசு கார்ப்பரேட் திட்டங்களுக்கும், சட்டங்களுக்கே முழு கவனத்தை மோடி அரசு செலுத்தி வருகிறது.
அதிகரித்து வரும் நகர்ப்புற வேலையின்மை...
மத்தியில் மோடி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு முன்னுரிமை தந்து செயல்படவில்லை. தேர்தல் வாக்குறுதியான ஆண்டுக்கு 2கோடி பேருக்கான வேலைவாய்ப்பு என்பதை நிறைவேற்றவில்லை.2017-18 ஆம் ஆண்டில் கடந்த 45 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு வேலையின்மை விகிதம் 6.1 சதவீதமாக உயர்ந்தது. 2021 ஏப்ரல் 15 அன்று வேலையின்மை விகிதம் 7.2 சதமாகும். நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 8.5 சதவீதம் ஆகும். கிராமப்புறங்களில் 6.1 சதவீதமாகவும் வேலையின்மை இருந்து வருகிறது. கடந்தாண்டு ஊரடங்கின் போது (ஏப்ரல் 2020) வேலையின்மை விகிதம் 23.5 சதவீதமாக நான்கு மடங்கு அதிகரித்தது. கடந்த ஓராண்டு பேரிடர் காலத்தில் மீண்டும் பழைய நிலைமையை எட்ட முடியவில்லை என்பது மட்டுமல்ல; வேலை வாய்ப்பு மேலும் மேலும் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இதனை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசு கண்டும் காணாமல் இருந்து வருகிறது. நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் வேலையின்மை பல்வேறு தாக்கங்களை உருவாக்குகிறது இதனை கட்டுப்படுத்த நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் அரசு இதனை புறக்கணித்து வருகிறது.மொத்த வேலைவாய்ப்புச் சந்தையில் தொழிலாளர் பங்களிப்பு வீதம் இந்தியாவில் பொதுவாக 50.3 சதவீதமாகும், ஆனால் சீனாவில் 74 சதமாகவும், கனடாவில் 67 சதமாகவும், அமெரிக்காவில் 64 சதமாகவும் இங்கிலாந்தில் 62 சதமாகவும் ஜப்பானில் 60 சதமாகவும் இருந்து வருகிறது. இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது ‘தொழிலாளர்’ என்ற வகையின் பங்களிப்பு என்பது மிகக் குறைவான விகிதத்திலேயே இருந்து வருகிறது. 2019-20 ஆம் ஆண்டில் 42.7 சதமாக இருந்த தொழிலாளர் பங்களிப்பு வீதம்(LPR)2021 மார்ச் மாதம் 40.2 சதவீதமாக குறைந்துஉள்ளது. வேலை வாய்ப்பு விகிதமும் 39.4 சதவீதத்திலிருந்து 37.6 சதமாக குறைந்துள்ளது. இதில் ஏற்படும் ஒன்று அல்லது இரண்டு சதவீத மாற்றங்கள் கூட கோடிக்கணக்கானவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
மாதாந்திர சம்பளதாரர்கள்
வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்படுகின்ற நெருக்கடி பல்வேறு தளங்களில் பிரதிபலிக்கிறது.2020-21 மாதாந்திர சம்பளதாரர்கள் எண்ணிக்கையில் பெருமளவு சரிவு ஏற்பட்டுள்ளது.2020 - 21ல் 7 கோடியே 62 லட்சம் பேர் மாதாந்திர சம்பளம் பெறுவோர்களாக உள்ளனர். 2019-2020ல் மாதாந்திர சம்பளதாரர்கள் எண்ணிக்கை 8 கோடியே 50 லட்சமாக இருந்தது. இதில் கிட்டத்தட்ட 98 லட்சம் பேர் மாதாந்திர சம்பளத்தில் இருந்து தினக்கூலிகளாக அல்லது வேறு வகையில் வருமானம் ஈட்டுவோர்கள் ஆக மாறியுள்ளனர்.இதில் 60 லட்சம் பேர் கிராமப்புறங்களை சார்ந்தவர்கள் ஆவார்கள்.கொரோனாவிற்கு பின்பு புதிய இயல்பு வாழ்க்கை என்பது வேலைவாய்ப்பு தளத்தில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனுடைய விளைவுகள் உணவுப்பொருள் சந்தையிலும் உற்பத்தி துறையிலும் விநியோகத்திலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே மத்திய அரசாங்கம் வீண் வாய்ப் பேச்சுகளை நிறுத்திவிட்டு சரியான திட்டமிடலைச் செய்ய வேண்டிய தருணமாகும். இல்லையெனில் இதற்கெதிரான போராட்ட அலை வெடித்தெழுவதைத் தவிர்க்க முடியாது.
கட்டுரையாளர் : எஸ்.பாலா மாநிலச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்