தொழில் மந்தத்திற்கு கொரோனாவை காரணம் காட்டிஆட்சியாளர்கள் தப்பிக்க பார்க்கிறார்கள். உண்மையில், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முன்பே பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற ஆட்சியாளர்களின் அட்டூழியமான நடவடிக்கையால் தொழில்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக சிறு, குறு தொழில்கள் நடத்துவது என்பது ‘மறுபிறவி’ எடுப்பதற்குசமமானது என்றும், அக்கறை இல்லாத ஆட்சியாளர்களால் லட்சக்கணக்கா னோருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் இத்தொழில்கள் பெரும் ஆபத்தில் ஆட்டம் காணுவதாக தொழில்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
1.5 லட்சம் தொழில் நிறுவனங்கள்
கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50ஆயிரத்திற்கும் அதிகமான சிறு, குறு,நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், பவர்லூம், வெட் கிரைண்டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என சுமார் 60சதவிகித தொழிற்சாலைகள் கிராமப் புறங்களிலும், 40 சதவிகித தொழிற்சாலைகள் நகர்புறங்களிலும் செயல்படுகின்றன.இதில் கிராமப்புறங்களை சுற்றி சுமார் 325 பெரிய தொழிற்நிறுவனங்களும், மாநகராட்சிப் பகுதிகளைச் சுற்றி சுமார் 100 பெரியதொழில்நிறுவனங்களும் உள்ளன. உலகளவில் அதிக அளவிலான வெட் கிரைண்டர்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கோவை மாவட்டத்தில் மட்டுமே உள்ளன.மோட்டார் பம்புகள் தயாரிக்கும் தொழிற்நிறுவனங்கள் விவசாயத்திற்கு மிக முக்கிய பங்கு வகிப்பதால் கோவையில் உள்ள இத்தொழில் நிறுவனங்கள் இந்திய அளவில் உற்பத்தியில் பெரும் பங்கை வகிக்கின்றன. இத்தொழில் நிறுவனங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனைச்சார்ந்து மறைமுகமாக பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
20 ஆயிரம் தொழில் முனைவோர் கோவையில் குறுந்தொழில் முனைவோர்கள் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களிடம் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறுந்தொழில்கள் முக்கியமாக ஜாப் ஆர்டர்களை நம்பியே உள்ளனர். ஆட்டோ மொபைல் தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிப்பு, பம்புசெட் உதிரிபாகங்கள் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் தயாரிப்பது, ஜவுளி தொழில்துறையில் உள்ள இயந்திரங்களுக்கு தேவையான பொருட்களை தயாரிப்பது உள்ளிட்டவை ஜாப் ஆர்டர்களாக பெற்று தயாரிக் கிறார்கள்.
18 சதவீதம் ஜிஎஸ்டி சுமை
இந்நிலையில் மத்திய மோடி அரசு ஜாப் ஆர்டர்களுக்கும் ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்து 12 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை வரிகளை விதித்தது. நேரடியாக உற்பத்தி என்று இல்லாமல் ஆர்டர் பெற்று வேலை செய்து கொடுக்கும் சிறு, குறு தொழில்களின் ஜாப் ஆர்டர்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு கூடாது என மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். ஜாப் ஆர்டர்களுக்கு ஐந்து சதவிகிதம் என்கிறகுறைந்த அளவு ஜிஎஸ்டி வரியை நிர்ணயம் செய்யுங்கள் என தொழில்துறையினர் கதறி வருகின்றனர். ஏற்கனவே பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பணப் பரிமாற்றம் இல்லாமல் சிறு, குறு தொழில்கள் தடுமாறிய நிலையில் ஜிஎஸ்டி என்கிற பெரிய சுமையை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்பதே தொழில்துறை யினரின் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஜாப் ஆர்டர்கள் குறைவு, ஆட்கள் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, விற்பனை மையங்களில் விற்பனை சரிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக தொழில்நிறு வனங்கள் வாழ்வா, சாவா போராட்டத்தில் தொழிலை நடத்தி வருகின்றனர்.
ஆண்டுக்கு இரண்டு கோடிப்பேருக்கு வேலை என்றவர்கள் இருக்கிற வேலையையும் பறித்து நடுத்தெருவில் நிறுத்தியுள்ளனர். விமானத்தில்கூட புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வர நிறுவனங்கள் தயாராக இருக்கும் நிலையில், பல நூறு கிலோ மீட்டர் நடந்தே சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி வருவார்களா என்கிற சந்தேகம் ஒருபுறம் தொழில்நிறுவனங்களை கவலையடையச் செய்துள்ளது. ஆட்சியாளர்களின் அக்கறையின்மை கோவை தொழில்களை ஆட்டம் காணச் செய்துள்ளது. தேர்தல் காலம் என்பதால் தொழில்துறையினரை சந்திக்கும் அரசியல்கட்சியின் தலைவர்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தொழில் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
*****************************
‘உடனடி நிவாரணமாக ரூ.1லட்சம் கடன் வேண்டும்’
கோவை சிட்கோவில் 350க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வங்கிகள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே தொழில்நிறுவனங்கள் மீண்டு எழ முடியும். உடனடி நிவாரணமாக ரூ.1 லட்சம் கடன் எந்த நிபந்தனையும் இன்றி வழங்க வேண்டும். ஜாப் ஆர்டர்கள் 30 முதல் 40 சதவிகிதம் மட்டுமே தற்போது கிடைக்கிறது. தொழில் தெரிந்த ஆட்கள் பற்றாக்குறையும் நிலவி வருகிறது’.
கோயம்புத்தூர் சிட்கோ இண்டஸ்ட்ரியல் மேனுபேக்சரிங் வெல்பேர் அசோசியேசன் (கோசிமா) நிர்வாகிகள்
*****************************
பிணையில்லா கடன் வழங்குக!
கடும் நெருக்கடியில் உள்ள தொழில் நிறுவனங்களை பாதுகாக்க அரசு குறுந்தொழில் முனைவோர்களின் நலன் கருதி எவ்வித நிபந்தனை இல்லாமல், பிணை இல்லாமல் உடனடியாக கடன் வழங்கிட வேண்டும். அதை திருப்பிச் செலுத்த ஒரு ஆண்டு கால அவகாசம் வழங்கிட வேண்டும். நிவாரணமாக உடனடியாக ரூ.1 லட்சம் அனைத்து குறுந்தொழில் முனைவோர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். குறுந்தொழில்கள் தான் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கம் (டேக்ட்) கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ்
*****************************
‘முத்ரா’ கடன்கள் என்னாயிற்று
காட்மா சங்கத்தின் கீழ் 4 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட சிறு,குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. ஜாப் ஆர்டர்களை நம்பியே இந்த தொழில் நிறுவனங்கள் உள்ளன. வங்கிகளிடம் வாங்கிய கடனை செலுத்த 6 மாத கால கடன் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் அதே சமயம் தற்போது 6 மாத காலத்திற்கு கடன் வழங்குவது போல் வழங்கி அதனை மீண்டும் ஒரு தவணையில் வங்கிகள் எடுத்துக்கொள்கின்றன. அதற்கும் சேர்த்து தற்போது வட்டி, கடன் கட்ட வேண்டியுள்ளது. ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கு அதன் அடிப்படையில் வங்கிகளில் கடன் அளிக்கப்பட்டது. ஆனால்கடன் வாங்காமல் தொழிலை நடத்தியவர்களுக்கு கடன் பெரும்பாலும்கிடைக்கவில்லை. எனவே உடனடி நிவாரணமாக சிறுவணிகர்களுக்குகடன் வழங்குவது போது முத்ரா கடன் திட்டத்தில் தொழில்நிறுவனங்களுக்கு தேவைக்களுக்கு ஏற்றவாறு கடன் வழங்கவேண்டும். ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் நாங்கள் தற்போது இந்த கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தொழிலை நடத்துவது என்பது மறுபிறப்பிற்கு சமமாக உள்ளது. இதில் இருந்து நாங்கள் மீண்டு வரவேண்டும் என்றால் ஆட்சியாளர்களின் பார்வை எங்கள் பக்கம் திரும்பாமல் சாத்தியமில்லை”.
கோவை, திருப்பூர் மாவட்ட ஊரக தொழில் முனைவோர் சங்கத்தினர் (காட்மா)
கட்டுரையாளர் : அ.ர.பாபு