மாற்று அரசியல் சக்தியாக கம்யூனிஸ்ட் கட்சி
முதல் அகில இந்திய மாநாடு நடைபெற்றபோது கம்யூனிஸ்ட் கட்சியின் தன்மையில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. காங்கிரசுக்கு உள்ளேயே ஒரு முனைப்பான சக்தியாகத் திகழ்ந்த கம்யூனிஸ்ட் கட்சி ஒரு சுயேச்சையான அரசியல் சக்தியாக வளரத்தொடங்கியது. 1942இல் காங்கிரஸ் தலைமையில் துவங்கிய “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்துக்கு வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்த கம்யூனிஸ்ட்டுகள், அந்த முதல் மாநாட்டில் ஒரு இடதுசாரி கட்சியாக அரசியல் களத்திற்கு வந்தனர்.
அப்போது மேலும் இரண்டு இடதுசாரி கட்சிகள் உருவாகியிருந்தன. ஒன்று காங்கிரஸ் சோசலிஸ்ட்கட்சி, மற்றொன்று பார்வர்டு பிளாக். பார்வர்டு பிளாக் கட்சி, நாட்டை பாசிச சக்திகளின் உதவியோடு விடுதலை செய்துவிடலாம் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதன் தலைவர் சுபாஷ் சந்திர போஸ் முதலில் ஜெர்மனிக்கும் பிறகு ஜப்பானுக்கும் சென்றார். ஜப்பானின் ஆதரவுடன் ஒரு இந்திய தேசிய ராணுவத்தை, இந்தியாவுக்கு அணி வகுக்கச் செய்து பிரிட்டிஷாரை வெளியேற்றும் நோக்கத்துடன் உருவாக்கினார்.
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில், காங்கிரஸ் அறிவித்த “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்காகத் தலைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
முதல் மாநாட்டின்
விவாதப் பொருள் கம்யூனிஸ்ட் கட்சி அந்த இரண்டு இடதுசாரி கட்சிகளுக்கும் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்துச் செயல்பட்டுக் கொண்டி ருந்தது. எனவே, முதல் அகில இந்திய மாநாட்டின் பிரதானமான விவாதப் பொருளே (அஜெண்டா), இந்த நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு மதிப்பீடு செய்வதும் எதிர்கால செயல்பாட்டுக்கான திட்டத்தை உருவாக்கு வதும்தான்.
அதாவது, பெரும்பான்மையான ஏகாதிபத்திய எதிர்ப்புவாதிகளிடமிருந்து தனிமைப்பட்டிருந்த ஒரு ஸ்தாபனத்தின் முதல் அகில இந்திய மாநாடு பம்பாயில் நடைபெற்றது. காங்கிரசுக்குள்ளும் இதர இடதுசாரி கட்சிகளுக்குள்ளும் இருந்த கம்யூ னிஸ்ட் எதிர்ப்பாளர்கள், அந்த மாநாட்டை நடத்துவதற்கு இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சி யாளர்கள் அனுமதியளித்தது மட்டுமல்லா மல்; கட்சியின் அன்றாட செயல்பாடுகளுக்கு நிதி உதவியும் அளித்து வந்ததாகக் குற்றம் சாட்டினர் “எதிர் நீச்சல் போடுவது “ என் பார்களே, அது கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை நேரடி உண்மையாக இருந்தது.
ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகு முறை, எம்.என். ராய் தலைமையிலான சிறு குழுவினரைப் போன்று பிரிட்டிஷ் அரசை ஆதரிப்பதாக இருக்கவில்லை. மாறாக, பாசிச எதிர்ப்பு யுத்தத்திற்கு ஆதரவாக இந்திய மக்களைத் திரட்ட வேண்டுமானால், நாட்டிற்கு சுதந்திரம் அளிக்க பிரிட்டிஷ் அரசு ஒப்புக் கொண்டால்தான் அது சாத்தியம் என்று கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாகத் தெரி வித்தது. அதற்காக தேசிய இயக்கத்தின் அங்கீ கரிக்கப்பட்ட தலைவர்களுடன் பிரிட்டிஷ் அரசு பேச்சு வார்த்தைகளைத் துவக்க வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது.
மக்கள் யுத்தம்
அப்படிச் செய்வதற்கு மாறாக பிரிட்டிஷ் அரசு, நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர்களைக் கைது செய்தது. அரசின் இந்த அணுகு முறையை கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக எதிர்த்தது. மக்கள் யுத்தம் ஒன்றை நடத்திட வேண்டும் என்று கட்சி வலியுறுத்தியது. அந்த யுத்தத்தின் மூலம் சிறைகளிலிருந்து தேசியத் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், தேசியத் தலைவர்களின் உதவியோடும் ஒத்துழைப்போடும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் ஆதரவை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கட்சி கூறியது.
“வெள்ளையனே வெளியேறு” போராட்டம் நடத்தப்பட்டவிதம் பிரிட்டிஷ் அரசுக்கு நிர்பந்தங்களை ஏற்படுத்து வதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இடையூறாக அமைந்து விட்டது என கம்யூ னிஸ்ட் கட்சியின் (முதல்) அகில இந்திய மாநாடு சுட்டிக் காட்டியது. கம்யூனிஸ்ட் கட்சி யின் தொழிலாளி வர்க்க புரட்சிகர அணுகு முறைக்கும் காங்கிரஸ் தலைமையின் முதலாளித்துவ அணுகுமுறைக்கும் இடையே அடிப்படையான வேறுபாடு இருந்தது. “வெள்ளையனே வெளியேறு போராட்டம்” மூலமாக தேசியத் தலைவர் களுடன் பிரிட்டிஷ் அரசைப் பேச்சுவார்த்தை நடத்த வைத்து இந்திய சுதந்திரத்தைப் பெறுவதுதான் காங்கிரஸ் தலைமையின் அணுகுமுறையாக இருந்தது.
தத்துவார்த்த அடிப்படை
ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி அணுகு முறையின் தத்துவார்த்த அடிப்படை என்ன வென்றால், பாசிச எதிர்ப்பு யுத்தத்தினால் ஏற்பட்ட உலக நிலைமையைப் பயன்படுத்தி, இந்திய சுதந்திரத்தை அடைய ஒரு புரட்சிகர மான முறையில் இந்திய மக்களை திரட்டு வது என்பதேயாகும். “வெள்ளையனே வெளி யேறு” போராட்டத்தைத் துவக்கிய காங்கிரஸ் தலைமையின் நோக்கம், பேச்சுவார்த்தைகள் மூலமாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு நிர்பந்தம் ஏற்படுத்துவது என்பதாகும்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்பீடு தான் சரியானது என்பதை பின்வந்த நிகழ்ச்சிகள் நிரூபித்தன. யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் காங்கிரஸ் தலைவர் களுக்கும் இடையேயும்; அதே போல் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்களுக்கிடையேயும் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகின.
இந்த நடை முறைகளின் ஒட்டுமொத்தமான விளை வாகத்தான் இந்தியாவைப் பிரித்து ஒரு இஸ்லாமிய பாகிஸ்தானையும் ஒரு இந்து இந்திய ஒன்றியத்தையும் அமைப்பதற்கான ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சிப் போக்குகளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டு மானால் (இரண்டாம் உலக) யுத்தம் வெடித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் தலை வர்கள் மேற்கொண்ட கொள்கை-அணுகு முறை களை நாம் திரும்பிப் பார்க்கவேண்டும்.
காங்கிரஸ் அணுகுமுறைகள்
1. யுத்தத்தின் முதல் கட்டத்தில் உலக ஏகாதிபத்திய சக்திகள் இரண்டு எதிரெதிர் முகாம்களில் நின்றன. அந்த இரண்டில் பிரிட்டன் உள்ளிட்ட ஒரு முகாம் தோல்வி யையும், மற்றொரு முகாம் வெற்றியையும் சந்தித்துக் கொண்டிருந்தன. பிரிட்டிஷ் பேரரசு மட்டுமல்ல, பிரிட்டன் என்ற நாடே உடைந்து போய் விடக்கூடும் என்கிற ஒரு நிலைமை விரைவில் உருவானது. அப்போது இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்க பிரிட்டன் ஒப்புக்கொள்ளுமானால் அரசுக்குத் தமது ஆதரவையும் உதவியையும் அளிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மற்ற இடதுசாரி கட்சிகளைப் போலவே இந்த அணுகுமுறையை கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்த்தனர்.
2. 1941ஆம் ஆண்டுவாக்கில் யுத்தம் ஒரு புதிய கட்டத்தை அடைந்தது. நாஜி ஜெர்மனி சோவியத் யூனியனுக்குள் நுழைந்தது. பிரிட்டன் உள்ளிட்ட பாசிச எதிர்ப்பு சக்திகள் சோவியத் யூனியனுடன் கைகோர்த்தன . இவற்றைத் தொடர்ந்து அந்த யுத்தம் இரண்டு ஏகாதிபத்திய முகாம்கள் ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்ட யுத்தம்தான் என்கிற நிலைமை மாறியது. சோவியத் யூனியனும் சீனாவும் பங்கு வகித்த அணி -அதிலே சில ஏகாதிபத்திய அரசுகளும் இருந்தன என்ற போதிலும் கூட வெற்றிபெற்றால்தான் உலக சோசலிச சக்திகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்ற நிலைமை உருவானது. எனவே தான், இந்த இரண்டாவது கட்டத்தில் பாசிச எதிர்ப்பு யுத்தமானது ஒரு மக்கள் யுத்தத்தின் தன்மையை அடைந்துவிட்டது என்றும், பாசிச எதிர்ப்பு முகாமை வெற்றி பெறச் செய்வதின் மூலமாகவே இந்தியா விடுதலை அடைய முடியும் என்றும் கம்யூனிஸ்ட்டுகள் கருதினர். காங்கிரஸ் தலைவர்களைப் பொறுத்தவரை யுத்தத்தின் முதல் கட்டத்திலும் இரண்டாவது கட்டத்திலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் பேரம் பேசுவதற்கான ஒரு வாய்ப்பாகவே அவர்கள் யுத்தத்தைப் பயன்படுத்தினர். “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தை “ஒரு சமரசமற்ற போராட்டமாக” நடத்தினால் அது பேச்சுவார்த்தைக்கு வரும்படி பிரிட்டிஷ் அரசை நிர்ப்பந்திக்கும் என அவர்கள் கணக்கிட்டனர். துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் கணக்குப் போட்டபடி நடக்கவில்லை. அந்தப் போராட்டத்தை, முழு பலத்தையும் பிரயோகித்து ஒடுக்கி விடவே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் முடிவு செய்தனர். அதில் வெற்றியும் பெற்றனர்.
3. யுத்தம் முடிந்த பிறகு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் காங்கிரஸ் தலைவர் களுக்கும் இடையே இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைகள் துவங்கின. “வெள்ளை யனே வெளியேறு” போராட்டம் ஒடுக்கப் பட்டதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைப் பாதையையும், அதன் ஒரு பகுதியாக இந்தியாவை இரண்டாக வெட்டுவது என்ற முஸ்லிம் லீக் கோரிக்கையையும் ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு காங்கிரஸ் தலைமை விரைவில் வந்தது. பிரிட்டிஷாரைப் பொறுத்தவரையில், “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தை நசுக்கி விட்டார்கள் என்ற போதிலும் கூட, யுத்தத்தின் முடிவில் ஏற்பட்ட புதிய அரசியல் சூழ்நிலையில் இந்திய சுதந்திரம் பற்றிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கையை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தனர். எனவே பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.
கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சிகர நிலை
4. இந்த மூன்று கட்டங்களிலும் காங்கிரஸ் தலைவர்களின் நிலையிலிருந்து மாறுபட்ட ஒரு புரட்சிகர நிலையை கம்யூனிஸ்ட்டுகள் மேற்கொண்டனர். முதல் கட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி யாளர்களுக்கு எதிரான ஒரு மக்கள் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு யுத்த நிலைமையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கம்யூனிஸ்ட்டுகள் கூறி னர். இரண்டாவது கட்டத்திலும் அவர்கள் அதே நிலையைத் தான் எடுத்தனர். ஆனால் மக்களின் புரட்சிகர ஆற்றலைத் தட்டி யெழுப்ப வேண்டுமானால் சோவியத் யூனி யனும் சீனாவும் அங்கம் வகித்த பாசிச எதிர்ப்பு முகாமின் வெற்றிக்காகவும் உழைத்திட மக்களை அணி திரட்டியாக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். மூன்றாவது கட்டத்தில், பிரிட்டிஷ் ஆட்சி யாளர்களுடன் ஒரு பேரத்திற்குச் செல்வதற்கு மாறாக மக்களைத் திரட்டும் புரட்சிகரப் போராட்டத்திற்கான ஒரு திட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கியது.
இந்தத் தொலைநோக்குடனான இயக்கங்களின் பலனாக, மூன்றாவது கட்டத்தில் நாடு தழுவிய வேலை நிறுத்தங்களும் விவசாயிகள் போராட்டங் களும் அனைத்துப் பிரிவு மக்களின் போராட்டங்களும் வெடித்தன. அவற்றின் உச்சகட்டமாக தெலுங்கானா, புன்னப்புரா-வயலார் போன்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த போராட்டங்கள் நடந்தன.
இந்த மூன்று கட்டங்களிலும் கம்யூ னிஸ்ட் கட்சியின் தொழிலாளி வர்க்க (புரட்சிகர) அணுகுமுறைக்கும், காங்கிர சின் முதலாளித்துவ (பேரம் பேசும்) அணுகு முறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காங்கிரசின் முதலாளித்துவ அணுகு முறைக்கு ஒரு தற்காலிக வெற்றி கிடைத்தது என்றாலும்,
இறுதி வெற்றி கம்யூனிஸ்ட்டு களின் தொழிலாளி வர்க்க அணுகு முறைக்கே கிடைத்தது. சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த முதல் பொதுத் தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடைத்த முன்னேற்றத்திலிருந்து இது தெளிவாகத் தெரிந்தது. நாடாளு மன்றத்திலும் நான்கு மாநில சட்டமன்றங்களி லும் கம்யூனிஸ்ட் கட்சி பிரதான எதிர்க்கட்சி என்ற நிலைக்கு உயர்ந்தது. ஐந்து ஆண்டுகள் கழித்து, ஒரு மாநிலத்தின் (கேரளம்) ஆளும் கட்சி என்ற நிலைக்கு அது மேலும் உயர்ந்தது.
இந்தியாவின் நண்பன் மேலும்
‘’வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தின் போது சோவியத் யூனிய னுக்கு எதிரான தமது வெறுப்பை பகிரங்க மாக வெளிப்படுத்திய காங்கிரஸ் தலைவர் களின் தத்துவார்த்த வறுமையும் சுதந்திரத்துக்குப் பின் வெளிச்சத்துக்கு வந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் அரசு சோவியத் யூனியன் மற்றும் இதர சோசலிச அரசுகளின் கூட்டாளியானது! சோசலிச முகாம் தான் இந்தியாவின் மிகச் சிறந்த-மிக நம்பிக்கையான நண்பன் என்பது எல்லோருக்கும் தெளிவானது.
இவ்வாறு சொல்வதால் “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தை எதிர்ப்பது என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது அகில இந்திய மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட - கொள்கையில் குறைபாடு ஏதும் இல்லை என்று அர்த்தமாகாது.
கட்சி அந்தக் கொள்கை யை வகுத்தது, மொத்தத்தில் சரியானதுதான்; முறையானதுதான்; இருந்த போதிலும் அதை நடைமுறைப்படுத்தியதில் கட்சி சில தவறுகளைச் செய்தது என்பதும் உண்மைதான். அந்த தவறுகளின் விளைவாக, ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளிடமிருந்து கட்சி தற்காலிகமாகத் தனிமைப்பட்டிருக்க நேர்ந்தது. கட்சி இதனை சுயவிமர்சனக் கண்ணோட்டத்துடன் பின்னர் (இரண்டாவது அகில இந்திய மாநாட்டில்) பரிசீலிக்கவும் செய்தது.
உலக இயக்கத்தின் ஒருங்கிணைந்த பகுதி
ஆனால், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கும் உலகளாவிய பாசிச எதிர்ப்புக்கும் இடையேயான உறவு தொடர்பாக முதல் மாநாட்டிலும் அதற்கு முன்னதாகவும் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த நிலை முழுக்க முழுக்க சரியானதாகும். அதன் தொடர்ச்சியாக ஒரு பாட்டாளி வர்க்க அரசியல் சக்தி என்ற முறையில் இன்று வரையில் கம்யூனிஸ்ட்டுகள் மேற்கொண்டு வந்துள்ள அணுகுமுறைகள், அவர்களை உலகம் தழுவிய ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக்கியுள்ளன.
தேசிய இனப் பிரச்சனை
இதனை முடிப்பதற்கு முன்னதாக, முதல் மாநாட்டில் பாகிஸ்தான் பற்றியும் தேசிய இனங்கள் பிரச்சனை பற்றியும் வந்த விவாதம் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். காங்கிரசுக்கும் முஸ்லிம் லீக்கிற்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சையே, இந்தியா என்பது ஒருங்கிணைந்த ஒரே தேசமா அல்லது இந்தியாவில் இந்து-முஸ்லிம் என்ற இரண்டு தேசங்கள் இருக்கிறதா என்பது தான். கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு எடுத்த நிலை, இரண்டையுமே மறுத்தது.
இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும். ஆனால் அதன் பல தேசிய இனத்தன்மை என்பது மதத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. மொழி மற்றும் கலாச்சார வாழ்வின் அடிப்படையில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு தான் இந்தியா. இந்த யதார்த்த நிலைமையை அங்கீகரித்து சுயாட்சி உரிமை கொண்ட தேசிய இனங்களின் ஒரு புதிய ஜனநாயக (கூட்டமைப்பு) அரசு கட்டப்பட வேண்டும், அந்த நடைமுறையின் ஒரு பகுதியாக மன்னராட்சியின் கீழிருந்த மாநிலங்கள் சம்பந்தப்பட்ட தேசிய இனங்களின் மாநிலங்களோடு ஒருங்கி ணைக்கப்பட வேண்டும். இந்த அடிப்ப டையில் மாநிலங்களை மீண்டும் அமைத்து, மாநிலங்களுக்கு விரிவான அதிகாரங்களை அனுமதிக்கிற ஒரு கூட்டமைப்பு உரு வாக்கப்பட வேண்டும். இதுதான் கட்சியின் கோரிக்கையாக இருந்தது.இந்த நிலை மிகச் சரியானதுதான் என்பது மாநிலங்கள் அடுத்தடுத்து மாற்றியமைக்கப்பட்டதன் மூலமாகவும் மத்திய-மாநில உறவுகள் தொடர்பான பிரச்சனையில் உருவான மக்கள் கருத்தின் மூலமாகவும் நிரூபிக்கப் பட்டது.
இதிலேயும் கூட (வெள்ளையனே வெளியேறு போராட்டம் சம்பந்தமான அணுகுமுறையைப் போல) சில நடை முறைத் தவறுகள் ஏற்பட்டன. அதன் விளைவாக கம்யூஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக்கின் பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரிக்கிறது என்பது போன்ற ஒரு கருத்தோட்டம் பரவியது. ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளிடமிருந்து கட்சி அந்நியப்பட்டு நிற்பதற்கு அதுவும் ஒரு காரணமாகியது.
ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அந்த முதல் அகில இந்திய மாநாட்டில்தான் சுதந்திர இந்தியா சுயாட்சி உரிமை கொண்ட மாநிலங்களின் கூட்டமைப்பாக இருக்க வேண்டும்; அது மதத்தின் அடிப்படையில் அல்லாமல் மொழி மற்றும் கலாச்சார அடிப்படையிலான தேசிய இனங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். என்கிற கருத்து முதல் முறையாக உரு வாக்கப்பட்டது. அந்த பெருமை முதலாவது மாநாட்டிற்கு உண்டு.