articles

img

ஏப்ரல் 23: உலக புத்தக தினம்! வாசிப்பை விதைப்போம்- எஸ் வி வேணுகோபாலன்

பிறந்த நாள் போன்ற உற்சாகத்தை ஒரு வாசகருக்குக் கொண்டு வந்து சேர்க்கிறது புத்தக தினம். கையில் கொஞ்சம் காசு தேறினால், புத்தகங்கள் தான் வாங்குவேன், அதற்குப் பின் ஏதேனும் மிஞ்சினால் உணவுக்கோ, உடைக்கோ செலவழிப்பேன் என்கிறார் எராஸ்மஸ் எனும் எழுத்தாளர். புத்தகக் காதல் இலேசானது அல்ல.  டிக்கெட் கொடுப்பதற்கு முன்பாகவே போய்த் திரையரங்குகளில் நெடு நேரம் காத்திருக்கும் ரசிகர்களை என் இளவயதிலிருந்தே பார்த்திருக்கிறேன்.  புத்தகக் கண்காட்சிகளில்  அப்படியான அன்பர்கள் உலவிக்கொண்டே இருக்கத் தான் செய்கின்றனர்.  கண்காட்சியின் கடைசி நாளன்று ஏதோ காதலியை வழியனுப்பி வைப்பது போன்ற கனத்த மனத்தோடு அவர்கள் வீடு திரும்பக் கூடும். 

வாசிப்பின் காந்தம்

முதல் வாசிப்பு ஒருவருக்குள்ளே ஒரு காந்தத்தைப் பக்குவமாகப் பொருத்தி விடுகிறது.  பிறகு புத்தகங்களை நோக்கி வாசகரைக் கொண்டு தள்ளுகிற வேலையை அந்தக் காந்தம் பார்த்துக் கொள்கிறது. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களது விசா சிறுகதையில் வரும் கோணேஸ்வரன் எனும் வண்ணத்துப் பூச்சி ரசிகர், எப்போதும்  பல்வேறு வண்ணத்துப் பூச்சிகளைப் பற்றிய வாசிப்பில் சொக்கி இருப்பார், இவர் வருகைக்காகக் காத்திருக்கும் மனைவி யாமினியின் சேலை நிறத்தைப் பார்த்த மாத்திரத்தில், மஞ்சள், கரும்சிவப்பு, கறுப்பு வண்ணத்தில் தாய்லாந்தில் ஒரு வண்ணத்துப்பூச்சி பற்றி படித்தது ஞாபகத்துக்கு வந்துவிடும் அவருக்கு. போட்டது போட்டபடி விட்டுவிட்டு புத்தக அலமாரியை நோக்கிப் பறந்து போய் விடுவார் என்று எழுதி இருப்பார் முத்துலிங்கம். 

 

அஞ்ச வேண்டியதில்லை, வாசகர் எல்லோரும் இப்படியான உச்ச பட்ச போதையில் இருந்து விட மாட்டார்கள்.  விழுப்புண் படாத நாளை எல்லாம் வாழ்நாள் கணக்கில் சேர்ப்பதில்லை ஒரு சுத்தமான வீரன் என்கிறார் வள்ளுவர்.  புத்தகம் எடுத்து வாசிக்காத நாளை என்ன செய்வது என்று திண்டாடுவார் வாசகர்.  புத்தகத்தை அன்றாடம் எடுத்து வாசிக்காவிட்டாலும், சுற்றிலும் வாசிக்க ஏதோ இருப்பில் இருக்கிறது என்பதே பெரும் உற்சாகம், நம்பிக்கை என்று சொல்வோர் உண்டு.

வாசிப்புப் பசி

குழந்தைகள் புத்தகங்களை விரும்பவே செய்கின்றனர்.  புதிய புத்தகத்தின் வாசனையை நேசிக்கின்றனர்.  பெரிய பெரிய படங்கள், பெரிய பெரிய எழுத்துகளில் விரியும் கதைகள் அவர்களை ஈர்க்கின்றன.  வாசிப்பை பாதுகாக்க முன்னுரிமை கொடுக்கும் பெற்றோர் குழந்தைகள் புத்தகத்தைக் கிழிக்கும்போது அதிகம் அதிர்வதில்லை. பக்குவமாக அணுகுகின்றனர்.  இன்னும் இன்னும் புத்தகம் என்று சிறார்களிடம் வாசிப்புப் பசியை ஊக்குவிக்கின்றனர்.  புத்தகத்தைக் காப்பாற்றத் துடித்துக் கண்டிக்கும் பெற்றோர், ஒரு துடிப்பு மிக்க இளம் வாசகர் மனத்தை நோகடிக்கிறோம் என்று உணர்வதில்லை.

இணைய வழி வாசிப்பில் கண்கள் விரைந்து அயர்ச்சி அடைகின்றன.  புத்தக வாசிப்பு புத்துணர்ச்சியாகவே அமையும்.  இயல்பான சோர்வும், நல்ல உறக்கமும் பிறகு வாய்க்கும்!  பயணத்தில், பேருந்துக்கான காத்திருப்பில், கிடைக்கும் இடைவெளிகளில் எல்லாம் புத்தகத்தைக் கையிலெடுக்கும் மனிதர்கள் மற்றவர்களையும் மறைமுகமாக வாசிப்பு நோக்கிக் கொஞ்சமேனும் தூண்டவே செய்கின்றனர்.

பதிமூணில் ஒண்ணு

வாசிப்பின் பகிர்வில் கிடைக்கும் கொண்டாட்டம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது.  அண்மையில் குவிகம் கிருபானந்தன் அவர்களது அலைபேசி அழைப்பு வரவும், நானே பிறகு அழைக்கிறேன் என்று சொல்லி வைத்தவன் பின்னர் அழைக்க மறந்துவிட்டேன். மறுநாள் அவர் அழைத்தபோது, தொடர் வேலைகளில் திரும்ப அழைக்காது விடுபட்ட அழைப்புகளில் 'பதிமூணில் ஒண்ணு' உங்கள் எண் என்று மிகைச்சுவையாகச் சொன்னேன்.   அவரோ, "ஆஹா, தமிழ்ச்செல்வனின் அற்புதமான கதை ஆயிற்றே பதிமூணில் ஒண்ணு, விடைத்தாளில் நடராஜன் எழுதுவானே, தன் குற்றம் ஏதுமில்லை, வைத்துக் கொண்டு வஞ்சகம் செய்யவில்லை ...."  என அந்தச் சிறுகதை பற்றி ஆரம்பிக்க, நான் அதில் இடம்பெறும் வெவ்வேறு இடங்களை எடுத்துச் சொல்ல சுவாரசியமாகத் தொடர்ந்தது உரையாடல். என் நோக்கம் நிறைவேறி இருந்தது.

பூவும் புத்தகமும்

புத்தகத்தின் காதலர் என்று பேசுகிறோம், காதலர்களும் புத்தகங்களும் என்று சிந்தித்தால், ஸ்பெயின் நாட்டின் கேட்டலோனியா நகரம் நமக்கு ஒரு செய்தியை வைத்திருக்கிறது.  உலக புத்தக தினத்தில் காதலிக்கு ரோஜா மலரைப் பரிசளிக்கிறான் காதலன். அவனுக்கு ஒரு புத்தகத்தைக் கையளிக்கிறாள் காதலி.  ஏப்ரல் 23 அன்று லட்சக் கணக்கில் புத்தகங்களும் ரோஜா பூக்களும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது. ஆண்டின் புத்தக விற்பனையில் பாதி அளவு அந்த ஒரு நாளில் நடைபெற்று விடுகிறது என்றும் அந்தக் குறிப்பு சொல்கிறது. 

தேடல் தூண்டும் வாசிப்பு

வாசிப்பின் சுவாரசியம், வாசிப்பின் இன்பம், வாசிப்பின் பயன், வாசிப்பின் இளைப்பாறுதல் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. கேள்விகளுக்கு சரியான பதில், புதிய கேள்விகள் என்கின்றனர் அறிஞர்கள்.  தேடலைத் தூண்டுவதில் புத்தகங்களின் பங்களிப்பு மகத்தானது.  புதிய சூழலை எப்படி எதிர்கொள்வது என்று பழைய புத்தகங்களை நோக்கி சமூகத்தைத் திரும்ப வைக்கும் ஆற்றல் எழுத்துக்கு இருக்கிறது.  அப்படியான வாசிப்பு மனிதர்களை உயிரோட்டமாக வைத்திருக்கிறது. நூற்றாண்டுகளை இணைக்கிறது. சக உயிரினங்களை நேசிக்க வைக்கிறது. 

கைகளால் விதைப்பதைக் கண்களால் அறுவடை செய்வது எப்படி என்று ஒரு விடுகதை உண்டு.  புத்தக வாசிப்பு என்பது தான் பதில்.  அறுவடைக்குப் பிறகு விதைப்பாடு தொடர வேண்டும் அல்லவா... வாசிப்பை அடுத்தடுத்த  தலைமுறைக்கு விதைப்போம்!