‘தாராள வர்த்தகம்’ நல்லது செய்யும் எனும் மாயை - அபிநவ் சூர்யா
இன்றைய உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் புதிய வர்த்தக வரிகள் பற்றிய பெரும் விவாதம் நிலவுகிறது. உலக வர்த்தகத்தில் அமெரிக்கா நியாயமற்ற முறையில் நடத்தப் பட்டதாகக் கூறி, ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் பல நாடு களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிகளை விதித்தார் - மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவுடன் தொடங்கி, பின்னர் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வரிகள் விரிவாக்கப்பட்டது (இந்தியாவிற்கும் கூடுதலாக 26%). இந்த வரிகள் பின்னர் மறுபேச்சுவார்த்தைகளுக்கு நேரம் அளிக்க 90 நாட்களுக்கு பகுதியளவில் நிறுத்தி வைக்கப்பட்டன (10% வரி அமலில் உள்ளது). எனினும், சீனா மீதான வரிகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டு, 145% வரை உயர்த்தப்பட்டது. இந்த திடீர் நடவடிக்கை உலகை அதிர்ச்சிக்கு ள்ளாக்கியது. பல தசாப்தங்களாக, அமெரிக்கா தாராள வர்த்தகத்தின் வலுவான ஆதரவாளராக இருந்து, “வாஷிங்டன் புரிந்துணர்வு” என்று அறியப்பட்ட கொள்கையின் கீழ் வர்த்தகத் தடைகளைக் குறைக்க நாடுகளை வலியுறுத்தி வந்தது. இப்போது, அமெரிக்காவே அந்தக் கொள்கைகளில் இருந்து விலகிச் செல்கிறது. ஐ.எம்.எஃப் போன்ற முக்கிய சர்வதேச அமைப்புகள் இந்த வரிகள் உலக பொருளா தார வளர்ச்சியை பாதிக்கும் என்று எச்சரித்தன. ஐ.எம்.எஃப் அமெரிக்காவின் வளர்ச்சி கணிப்பை 2.7% இலிருந்து 1.8% ஆகவும், சீனாவிற்கு 4.6% இலிருந்து 4% ஆகவும் மற்றும் இந்தியாவிற்கு 6.5% இலிருந்து 6.2% ஆகவும் குறைத்தது. பொறுப்பற்ற இந்த நடவடிக்கைக்காக டிரம்ப் பரவலான விமர்சனத்தை எதிர்கொண்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எதேச்சதிகார மானது என்றாலும், பல முற்போக்கு வல்லுநர்கள் உட்பட பெரும்பாலான விமர்சகர்கள் “தாராள வர்த்த கம்” என்ற கட்டுக்கதையை கவனிக்காமல், முத லாளித்துவ அறிஞர்கள் உயர்த்திப் பிடிக்கும் கருத்துக்களையே எதிரொலிக்கின்றனர். இன்றைய வர்த்தக பதற்றங்களைப் புரிந்துகொள்ள, உலக முத லாளித்துவத்தின் கட்டமைப்பையும், “தாராள வர்த்த கம்” என்ற பெயரில் அது நிலைநிறுத்தும் சமத்துவ மின்மையையும் பார்க்க வேண்டும்.
“தாராள வர்த்தகமா”? சுரண்டலா?
“தாராள வர்த்தகத்தின்” (Free trade) ஆதரவாளர் கள் கூறுவது என்னவென்றால், கட்டுப்பாடற்ற வர்த்த கம் உலகப் பொருளாதாரங்களை இணைக்கிறது; இந்தியா போன்ற வளரும் நாடுகள் திறந்த பொருளா தாரம் மூலம் வளர்ச்சி பயன்களைப் பெற உதவு கிறது என்பதாகும். உதாரணமாக, வங்கதேசம் ஜவுளி களை மலிவாக உற்பத்தி செய்கிறது, ஜெர்மனி கார்களை உற்பத்தி செய்கிறது - இதனால் இரண்டு நாடுகளும் அவரவர்க்கு சிறப்பாக உற்பத்தி செய்யத் தெரிந்ததில் கவனம் செலுத்தி, வர்த்தகம் செய்து, இரண்டு நாடுகளும் அதிக பண்டங்கள் நுகர்வுக்குப் பெற்று பயனடைய முடியும் என்று அவர்கள் கதையளக்கிறார்கள். இது ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாத கூற்று. வங்கதேசம் ஜவுளிகளை மலிவாக உற்பத்தி செய்வதற்கான உண்மையான காரணம் கொடூரமான தொழிலாளர் சுரண்டல் ஆகும். வங்கதேசம் ஜவுளி உற்பத்தியாளராக தொடர வேண்டும் என்று வலியுறுத்துவதும், அதே சமயம் வளர்ந்த நாடுகள் உயர் தொழில்நுட்ப பொருட்களை உற்பத்தி செய்வ தும், உலகளாவிய சமத்துவமின்மையை வலுப்படுத்து கிறது; வளரும் நாடுகளை குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட துறைகளில் சிக்க வைக்கிறது. ஆக, “தாராள வர்த்தகம்” சமமற்ற பரிமாற்றத்தை நியாயப்படுத்து கிறது
. “தாராள வர்த்தகத்தின்” காலனிய வேர்கள்
தாராள வர்த்தகம் எனும் கருத்து காலனிய ஆதிக்கத்தில் வேரூன்றியுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது, இந்தியாவின் மூலப்பொருட்கள் - பருத்தி, கோதுமை போன்றவை - விவசாயிகள் மீது அதிக வரி விதிக்கப்பட்டு “தாராள வர்த்தகம்” என்ற பெயரில் பிரிட்டனுக்கு இலவசமாக ஏற்றுமதி செய்யப்பட்டன. இவை பிரிட்டிஷ் தொழிற்சாலை களில் பதப்படுத்தப்பட்டு, பின்னர் “தாராளமாக” இந்தியாவுக்கு மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டன, இது உள்ளூர் நெசவாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களை அழித்தது. செழிப்பை ஊக்குவிப்பதற்கு மாறாக, காலனிய வர்த்தகம் இந்தியாவின் தொழில்துறையை அழித்து, நாட்டை பொருளாதார சார்பு நிலைக்குத் தள்ளியது. வலுவான தொழில் துறைகள் இல்லாமல், இந்தியா போன்ற ‘அடிமைக் காலனி நாடுகள்’ குறைந்த உற்பத்தித் திறனில் சிக்கிக்கொண்டன. உலகளாவிய சந்தைகளில் பிழைக்க, அவை தீவிர தொழிலாளர் சுரண்டலை நம்பியிருக்க வேண்டி யிருந்தது - பொருட்களை மலிவாக்க ஊதியத்தை குறைவாக வைத்திருந்தன. அதே நேரத்தில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த சுரண்டல் முறைகளிலிருந்து செல்வம் குவித்தது.
நவீன தாராளமயம்: தாராள வர்த்தகத்தின் நவீன முகம்
1980களில், நவீன தாராளமயத்தின் எழுச்சி தாராள வர்த்தகத்திற்கு புதிய வர்ணம் பூசியது. இது வளரும் நாடுகளின் நுகர்வோருக்கு மலிவான பொருட்களையும் கொண்டுவரும் வழி எனக் கூறப்பட்டது. ஆனால் வெளிநாட்டுப் பொருட் களுக்கு சந்தைகளைத் திறப்பது உள்ளூர் உற்பத்தி யாளர்களை நசுக்கியது, வருமானத்தைக் குறைத்தது தேசிய பொருளாதார இறையாண்மையை பலவீனப்படுத்தியது. 1994இல் உலக வர்த்தக அமைப்பின் (WTO) ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது இதனை நன்கு விளக்குகிறது. தனது சந்தைகளை “தாராள மாக்க” நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டு, இந்தியா விவசாய மானியங்களைக் குறைத்தது. அதே சமயம் அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களது விவசாய உற்பத்திக்கான மானியங்களை வெட்டாமல் சாமர்த்தியமாக தப்பித்துக் கொண்டன. 1995இல், அமெரிக்க விவசாய மானியங்கள் இந்தியாவை விட 70 மடங்கு அதிகமாக இருந்தன. உலகளாவிய போட்டியில் தள்ளப்பட்ட இந்திய விவசாயிகள் ஆழ்ந்த நெருக்கடிக்குத் தள்ளப்பட்டனர் - இந்நிலை இன்றும் கூட தொடர்கிறது. மற்றொரு பெரிய அடி அறிவுசார் சொத்துரிமை பற்றிய டிரிப்ஸ் (TRIPS) ஒப்பந்தத்துடன் வந்தது. இதன் மூலம் மேற்கத்திய நாடுகளால் தயாரிக்கப்படும் பொருட்களை மலிவான முறையில் உற்பத்தி செய்ய இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்றானது. இந்த மாற்றம் இந்திய நிறுவனங்கள் மலிவான விலையில் மருந்துகளை உற்பத்தி செய்வ தை கடினமாக்கியது, அறிவியல் கண்டுபிடிப்புகளை பாதித்தது, உள்ளூர் தொழில்களைத் தாக்கி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு பயனளித்தது. இதற்கு மேலாக, “தாராள வர்த்தகம்” காரணமாக ஏற்பட்ட வர்த்தகப் பற்றாக்குறையை சரிசெய்ய வளரும் நாடுகள் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்க வேண்டியிருந்தது. லாபத்திற்கான நிதி மூலதனத்தின் விதிகளுக்கு கீழ்படிந்து, இந்தியா நலத்திட்ட செலவினங்களை வெட்டிக் குறைத்தது, பொதுச் சொத்துக்களை தனியார்மயமாக்கியது, பெரிய முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கி யது. இவையனைத்தும் சார்புநிலை மற்றும் சமத்துவ மின்மை சுழற்சியை வலுப்படுத்தின.
அமெரிக்க முரண்பாடு
அமெரிக்கா தாராள வர்த்தகக் கொள்கைகளைப் பின்பற்றி வல்லரசாக எழவில்லை. 1865இல் அதன் உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு, அமெரிக்கா தனது தொழில்களைப் பாதுகாக்க வலுவான வர்த்தக வரிகளை பின்பற்றியது, பொது உள்கட்டமைப்பில் அதிகம் முதலீடு செய்தது, ஏகபோக நிறுவனங்களை கட்டுப்படுத்தியது. பல தசாப்தங்களாக வர்த்தக வரிகள்தான் அரசாங்க செலவினங்களுக்கு நிதியளித்தன. கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பொது சேவைகள் அரசு ஆதரவுடன் வழங்கப்பட்டன. வங்கிகள் நீண்ட கால தேசிய இலக்குகளுக்கு சேவை செய்யும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டன. இந்தக் கொள்கை கள் அமெரிக்காவின் தொழில் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருந்தன. இன்று, நவீனதாராளவாத மாற்றத்திற்குப் பிறகு, அமெரிக்கப் பொருளாதாரம் உற்பத்தித் துறைக்குப் பதிலாக நிதி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளால் இயக்கப்படுகிறது. 2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு, அமெரிக்க தொழிலாளர்களின் சேமிப்புகள் சரிந்தன. அதிக வாடகைகள், கடன்கள்; விலை உயர்ந்த சுகாதார சேவைகள் அமெரிக்கக் குடும்பங்களைத் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்குகின்றன. உற்பத்தித் துறை சுருங்குகிறது; உண்மை ஊதியங்கள் தேக்கமடைகின்றன. டிரம்ப் சொல்வது போல வர்த்தக வரிகள் இந்தப் பிரச்சனையைத் தீர்க்காது. ஏனென்றால் அவை “பண்டங்கள்” வர்த்தகம் மீது விதிக்கப்படுகின்றன. ஆனால் அமெரிக்காவின் தொழில் வீழ்ச்சிக்கான உண்மைக் காரணியான நிதி மூலதனம் மீது கட்டுப்பாடுகளை டிரம்ப் விதிக்கவில்லை. வர்த்தகத் வரிகள் உற்பத்தியையோ அல்லது சுய சார்பையோ மீட்டெடுப்பது பற்றியதல்ல. அவை மாறிவரும் உலக சூழலில் அமெரிக்க ஆதிக்கத்தைப் பாதுகாக்கும் உத்தி.
புதிய வகையான ஆதிக்கம்
தாராள வர்த்தகம் என்பது அது பெரும்பாலும் சித்தரிக்கப்படுவது போல நடுநிலையான, இருதரப்பும் வெல்வதாக ஒருபோதும் இருந்ததில்லை. வரலாற்று ரீதியாகவும் இன்றும், இது வலுவான நாடுகள் பலவீனமான நாடுகளைச் சுரண்டுவதற்கான கருவியாகச் செயல்பட்டுள்ளது. சிறு உற்பத்தி யாளர்களைப் பலவீனப்படுத்தி, தொழில்துறையை அழித்து, வேலையின்மையை அதிகரித்து தேசியப் பொருளாதாரங்களை பலவீனப்படுத்துகிறது. இதன் பொருள், வர்த்தகம் என்றாலே கெட்டது என்பதல்ல; மக்களின் நலன் மற்றும் பொருளாதார சுயசார்பை மனதில் கொண்டு கவனமாக நிர்வகிக்கப்பட்டால் வர்த்தகம் பயனுள்ளதாக இருக்க லாம். தங்களது தொழிலாளர்கள் மற்றும் தொழில் களைப் பாதுகாக்கும் வகையில் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் உரிமை வளரும் நாடுகளுக்கு இருக்க வேண்டும் - நவீன தாராளமயம் இந்த உரிமையை மறுக்கிறது. இன்றைய வர்த்தகப் போர்கள் காட்டுவது என்ன வென்றால், தாராள வர்த்தகத்தின் ஆதரவாளர்கள் கூட தங்கள் நலனுக்காக அதைக் கைவிட தயாராக இருக்கிறார்கள். டிரம்பின் வர்த்தக வரிகள் கடந்த காலத்திலிருந்தான ஒரு முறிவு அல்ல; மாறாக புதிய வகையான ஆதிக்க வடிவங்களை நோக்கிய மாற்றம். கட்டுரையாளர் : பொருளாதார ஆய்வு மாணவர்