articles

img

சிறைச்சாலையும் விதி விலக்கல்ல! - எஸ்.பாலா

சிறைச்சாலையும் விதி விலக்கல்ல! - எஸ்.பாலா'

மதுரை நம்பி எழுத்தாக்கத்தில் மற்றொரு சிறந்த படைப் பாக ‘இருள் கிழித்த செஞ்சுடர்கள்’ அகில இந்திய மாநாட்டுக் கலை நிகழ்வில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டுச் சிறைகளில் கம்யூனிஸ்டுகள் சந்தித்த துப்பாக்கிச் சூடுகளும் அடக்குமுறைகளும் ஏராளம். அத்தகைய ஒவ் வொரு நிகழ்வையும் கட்டுரையாக எடுத்தியம்பி அவற்றைக் கண்முன்னே காட்சிப்படுத்தியுள்ளது. தமிழகத்தின் சிறைகளின் எண்ணிக்கையைவிட சிறை யில் சுட்டுக் கொல்லப்பட்ட கம்யூனிஸ்டுகளின் எண்ணி க்கை அதிகமாகும். இன்னும் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கையைக்  கணக்கில் எடுத்தால் அதை விட ஏராளம். தமிழக மண்ணின் வளர்ச்சிக்காகச் சிறைப் பலிகள் ஒன்று இரண்டல்ல. சுட்டுக் கொல்லப்பட்ட மாரி, மணவாளன் தொடங்கி தூக்குமேடை தியாகி பாலு, ஐ.வி.சுப்பையா, அக்னிஸ் மேரி, அன்னை லட்சுமி, சின்னியம்பாளையம் தியாகிகள், சேலம் சிறை  தியாகிகள், களப்பால் குப்பு, ராகவய்யா, உத்திராபதி, ஜோக்கய்யா மற்றும் இளம் தலைவர் எனப் பட்டியல் தொடர்கிறது. அரிய வரலாற்றுத் தகவல்கள்... வரலாற்றை வாசிக்கும்போது ஏற்படும் உத்வேகம் அளப்பரியது. வரலாறுகள் என்பது வெறும் ஆண்டுகள் மற்றும் அரசர்களின் பெயர்களில் இருப்பது அல்ல. கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு உயிர்ப்பும் உணர்வும் கலந்த கலவையாகும். இந்நூலில், நாம் அறியாத பல வரலாற்று நிகழ்வுகளை வாசிக்கும்போது ஏற்படக்கூடிய உணர்வுகள் ஆழமானது. ஒவ்வொரு நிகழ்வும் கம்யூனிஸ்டுகளின் உறுதியையும் போராட்ட குணத்தையும் பறைசாற்றுகிறது. தமிழ்நாட்டுச் சிறைகளில் நான்கு துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் மூன்று கம்யூனிஸ்டுகள் மீது ஏவிவிடப்பட்டவை ஆகும். “என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்” என்று தமிழ் சினிமாவில் ஒரு பாடல் உண்டு. அதில் “மனதைச் சொல்லும்” என்று வரும். அதைப்போல கம்யூனிஸ்டுகளின் அளப்பரிய  தியாகத்தைத் தமிழ்நாட்டின் சிறைகளில் கேட்டுப் பாருங்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். இந்நூல் அதற்கான வரலாற்று ஆதாரத்தைத் தருகிறது. நமக்குத் தெரியாத சிறையில் உண்ணாநோன்பிருந்து மரித்த முதல் போராளி அன்னை லட்சுமிதான். கம்யூனிஸ்ட் கட்சியின்  முழுநேர ஊழியராக இருந்த ஆர்யா என்ற பாஷ்யம், நேதாஜியைச்  சந்தித்த அமீர் ஹைதர் கான், பாஷ்யம் என எண்ணற்ற தகவல்களை அளிக்கிறது. அளப்பரிய தியாகம்... “ஜெயமுண்டு பயமில்லை மனமே இந்த ஜென்மத்தில் விடுதலை உண்டு - வந்தே மாதரம் ஜெயமுண்டு பயமில்லை மனமே” என்கிற பாரதியின் வரியை  உச்சரித்துக்கொண்டே தன்மீது வந்து விழுந்த அடிகளைத் தாங்கிக்கொண்டார் வேலூர் சிறையில் ஆர்யா என்ற பாஷ்யம். கடலூர் சிறையில் ஏ.கே.கோபாலன் மீதும் எம்.ஆர்.வெங்கட்ராமன் மீதும் குறிவைத்துத் துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியபோது அவர்கள் இருவரின் உயிரைக் காப்பதற்காக தெலுங்கானா போராளி ராகவய்யா துப்பாக்கிக் குண்டைத் தன் மார்பில் வாங்கி ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இன்னொரு தோழர் உத்திராபதி துப்பாக்கிச் சூட்டில் குண்டடிபட்டு எம்.ஆர்.வெங்கட்ராமன் மடியிலேயே உயிர்விட்டார். சேலம் சிறையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடல்களில் இருந்து ரத்தம் பீறிட்டுச் சிறைக்குள் செங்குருதி ஆறாக ஓடியது.  இதில் 19 பேர் சிறையிலேயே பலியானார்கள். மூன்று பேர் மருத்துவ மனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தனர். இன்னும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மாற்றுத் திறனாளிகள் ஆக்கப்பட்டனர். இன்னும் சிலரது உடலில் 50, 60 துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்திருந்தன. மாமதுரை தியாகிகள் மாரி, மணவாளன், தூக்குமேடை பாலு ஆகிய மகத்தான மனிதர்களின் தியாக வாழ்வு வரலாறாகப்  பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் சிறை கம்யூனிஸ்டுகளின் இன்னொரு பயிற்சிப் பட்டறையாகத் திகழ்ந்துள்ளது. அமீர் ஹைதர் கான் தொடங்கி ஏ.கே.கோபாலன் முதல் எண்ணற்ற கம்யூனிஸ்டுகள் அளப்பரிய அடக்குமுறையைச் சந்தித்துள்ளனர். இதில் சிறைக்குள் சிறை என்று வருகின்ற நிகழ்வுகளும், அதில் கம்யூனிஸ்டுகள் நடத்திய  போராட்டமும் உலகிற்கு எடுத்துச்சொல்ல வேண்டிய மிக முக்கிய மான வரலாற்று நிகழ்வாகும். இந்த வரலாறு இன்றும் தொடர்கிறது.  இறுதியாக உள்ள இரண்டு கட்டுரைகள் உணர்த்துகின்றன. கம்யூ னிஸ்டுகளின் போராட்டப் பாரம்பரியம் தொடர்ந்து வருகிறது. கம்யூனிஸ்டுகள் செய்த தியாகத்தில் சிறைச்சாலையும் விதி விலக்கல்ல. இதனைச் சிறப்புறப் பதிவு செய்துள்ள மதுரை  நம்பிக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகும். கம்யூனிஸ்ட் இயக்கக் காவியத்தை ஒவ்வொரு தோழர்களும் வாசிக்க வேண்டியது காலத்தின் அவசியமாகும்.