கரிசலின் குரலும் ஒரு கருவி - கே.சாமுவேல்ராஜ்
மண்ணின் குரலாய், கரிசலின் நெஞ்சமாய் ஒலித்த அந்த இசைக் குயில் அமைதியுற்றது. ஒருவர் உடலை எடுத்தொருவர் போர்த்தியிரு சிறுவர் அதோ தெருவோரம் என்ற நவகவியின் வரிகள் கரிசலின் குரலால் நம் இதயத்தைப் பிசைந்தெடுத்தன. அவரது குரலின் ஏற்ற இறக்கங்களில் இருந்த நடுக்கம் நம் உள்ளத்தை நடுங்க வைத்தது - இந்த நடுங்கும் குரலே அவரது தனித்துவம் என்கிறார் ச.தமிழ்செல்வன். நரிக்குளத்தின் துயரம் நோட்டுப் புத்தகம் வைக்கப்பட்ட பை ஒன்றுடன் ஓசையற்று வந்து சென்றவரின் மறைவு எத்தனை பெரிய பேரோசையை எழுப்புகிறது என்று அதிசயித்துக் கொண்டிருந்தது அவரது கிராமமான நரிக்குளம். ஊரின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்ட சிறிய மேடையில் அந்த இசைக் குயில் உறங்கிக் கொண்டிருந்தது, தன்னைச் சுற்றி நடப்பதை அறியாமல். மாநிலத்தின் அனைத்து மூலை முடுக்குகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பரிதவித்துப் பறந்தோடி வந்திருந்தனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க நேரிடும்போதெல்லாம் கண்ணீர் பொசுக்கென்று பெருகியது. இதைத் தவிர்க்கவோ என்னவோ, அனைவரும் எவர் முகத்தையும் பார்க்காமல் வெறும் திசைகளை மட்டுமே நோக்கியிருந்தனர். தோழமையின் ஆழம் கரிசலின் ஆதர்ச புருஷனான ச.தமிழ்செல்வன் கூறினார்: “எனது சிந்தனையில் அழுக்கு சேர்கிறபோதெல்லாம், வெகுளித்தனத்தின் உன்னத நிலையை அடைந்த கரிசல் நம்மை அண்ணன் என்று அழைக்கிறானே, அதற்கு நாம் நியாயம் வழங்க வேண்டாமா என்ற எண்ணமே அந்த அழுக்கிலிருந்து தள்ளி நிற்க வைக்கும்.” இசையின் உயிர்ப்பு கரிசலின் தனித்திறமை நொடிப்பொழுதில் மெட்டமைப்பது. அவரது மேடையில் பாடிய கலைஞர்கள் அனைவரும் “நாங்கள் இவரால்தான் பாடுகிறோம்” என்றனர். அவர் இசைப் பயிற்சி பெற்றவரல்ல, யாருக்கும் இசைப்பயிற்சி அளித்தவருமல்ல. ஆனால் அங்கே பாடியவர்கள் அனைவரும் அவரால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தனர். மூத்த அண்ணனாக... இந்தக் கலைஞர்கள் அனைவரோடும் அவர் குடும்ப உறவுகளைப் பேணினார். பிள்ளைகளின் கல்விக்கு உதவி, குடும்பத் தேவைகளுக்கு ஆதரவு என்று கரிசலின் கரிசனம் உயிர்ப்புடன் இருந்தது. இதனால்தான் கலைஞர்கள் அனைவருக்கும் மூத்த அண்ணனாக அவர் இயல்பாக உருவானார். மக்களின் மனங்களை வென்றவர் தொண்ணூறுகளின் கலை இரவு மேடைகளில் பிரமாண்டமான பேச்சாளர்கள், அதிர வைக்கும் ஆட்டக்கலைகள், பல்துறை வித்தகர்கள், இசைக்குழுவினர், நாடகக் கலைஞர்கள், வீர விளையாட்டு வீரர்கள், திரை ஆளுமைகள், எழுத்துலக சாதனை யாளர்கள் என அனைவரும் மேடையேறும் நிகழ்வுகளில், ஒற்றை மனிதனாக மேடையேறி அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்தும் ஆற்றல் கரிசலுக்கு மட்டுமே இருந்தது. பன்முக ஆளுமை இந்த இசைப்பாடகரை எப்படி வகைப்படுத்துவது? மனங்களைச் செதுக்கும் சிற்பி; மக்களைத் திரட்டும் அமைப்பாளன்; முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான செயல்பாட்டாளன்; தனது இசையால், குரலால் செறிவான அரசியல் பணியைச் செய்து வந்த கரிசல் விடைபெற்றுக் கொண்டார். மற்றவர்களின் துன்பத்தைக் கேட்கக்கூட சகிக்காத, இறகுபோல் இலகுவானவரின் இந்த முடிவு நம்மை இரட்டைத் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பல பத்தாண்டுகள் ஆயிரக்கணக்கான மேடைகளில் நம் முன்னிலையில் பாடியவரின் குரலை இனி பதிவுகளில் மட்டுமே கேட்க முடியும். மனிதர்களின் மனங்களில் விஷம் தூவும் மனிதகுல விரோதிகளுக்கு எதிரான போராட்டக் களத்தில் கரிசலின் குரலும் ஒரு கருவியாக நம்முடன் பயணிக்கும்.