articles

img

கோவிட்... கல்வித் துறையில் உருவாக்கியுள்ள சவால்கள்....

உழைப்பால் உதிரம் கொடுத்து வளர்த்தெடுக்கப்பட்ட வளங்களை கோவிட் பெருந்தொற்றும், அதை முறையாக எதிர்கொள்ளாத ஒன்றிய அரசும், சமத்துவமற்ற சமூகப் பொருளாதார கட்டமைப்புகளும் நாசமாக்கிவருகின்றன. கல்வி துறையில் கோவிட் பெருந்தொற்று உலகெங்கும் உருவாக்கியுள்ள சவால்கள் ஆய்வுப் புலங்களில் கூர்மையான உரையாடலுக்கு வித்திட்டுள்ளன. இந்தியாவில் - தமிழகத்தில் ஆய்வு நிறுவனங்கள், தனிநபர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். 

கொரோனா தொற்றால் உலகடங்கிய காலத்தில் 14 நாடுகளில் 2020 பிப்ரவரி மாதம் முதல் பள்ளிக்கூடங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. வகுப்பறைக் கல்வி என்பது கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது.  விளைவு 25 கோடி மாணவர்கள் எதிர்மறையான தாக்கத்துக்கு ஆளாகியுள்ளதாக கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் செயல்பட்டுவரும் யுனெஸ்கோ  பல்வேறு திட்டங்களை முன்வைத்து விவாதத்தை தொடங்கியுள்ளது (காண்க: பெட்டிச் செய்தி). ஆனால், ஆட்சியிலிருக்கும் ஆட்சியாளர்கள் இவற்றை  நிறைவேற்றுவார்களா? முதலாளித்துவ நெருக்கடி உலகெங்கும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. இவற்றோடு கொரோனா பெருந்தொற்றும் கடந்தாண்டு முதல் சேர்ந்துகொண்டு நெருக்கடிகளை பல மடங்கு அதிகமாக்கியுள்ளது. அதிலிருந்து மீள்வதற்கு வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் காலனியாதிக்க வழிமுறையில் திட்டங்களைத் தீட்டி அமல்படுத்தத் தொடங்கிவிட்டனர். சோசலிச நாடுகளும், இறையாண்மைமிக்க அரசுகளும் இத்தகைய போக்குகளுக்கு எதிராக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களோடு களமாடிவருகின்றன. ஆனால், ஆர்எஸ்எஸ் - பாஜக வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் இந்திய ஒன்றிய அரசு வளர்ந்த முதலாளித்துவ நாடுகள்  நெருக்கடியிலிருந்து மீள நம் நாட்டின்  வளங்களை சூறையாடுவதற்கு உரிய வகையில் சூழ்ச்சித் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதேவேளையில் சமூக, பொருளாதார, வாழ்விடம் சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும் வகையில் அரசின் செயல்பாடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
சமூக வளர்ச்சிக்கான ஓர் அடிப்படைக் கருவி கல்வி

என்பதற்கு மாறாக மனிதவளத்தையும் உலக சந்தையையும் வளர்த்தெடுப்பதற்கான மூலதனமாக பார்க்கும் கருத்தோட்டத்தை நுட்பமாக வளர்த்தெடுத்துவருகின்றனர்.கொரோனா பேரிடர் காலத்திலும் நாட்டுக்கும் மக்களுக்கும் மிக அவசியத் தேவையான மருத்துவத் துறையை முதலாளிகளின் வியாபாரத்திற்காக சீரழிக்கும் திட்டத்தை  நிதி ஆயோக் தீட்டியுள்ளது. அதன்படி, மாவட்ட அரசு மருத்துவமனைகளை தனியாரிடம் ஒப்படைத்து 150  மாணவர்கள் மருத்துவ கல்வி பயிலும் மருத்துவக் கல்லூரிகளாக  மாற்றப் பரிந்துரைத்துள்ளது. இதை கடுமையாக விமர்சித்துள்ள மும்பை டாடா  இன்ஸ்டிடியூட் பேராசிரியர் சுமித்ரா கோஷ்,  வடமாநிலங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறை, மருத்துவ கட்டமைப்புப் பற்றாக்
குறை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு மாறாக, மருத்துவத் துறையை தனியார் முதலாளிகளின் வியாபாரமாக மாற்றுவதற்கே இது வழிவகுக்கும் என்கிறார்.  

ஆன்லைன் கல்வியும் அறிவுப் பறிப்பும்
கோவிட் பெருந்தொற்றுக்  காலத்தில் மாணவர்களை பாதுகாப்பதற்கு கல்வி நிலையங்களுக்கு செல்லாமல்இணையவழி முறையே உகந்தது எனச் சொல்லப்படுகிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இக்கருத்து சரியானதாகவே பட்டாலும் இதைத் தாண்டியும் விவாதிக்க வேண்டியதன் தேவையை கல்வியாளர்களும் கடந்த ஓராண்டு கால அனுபவங்களும்  நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. சமூக வளர்ச்சிக்கான ஓர் அடிப்படைக் கருவி என்பதற்குமாறாக மனிதவளத்தையும் உலக சந்தையையும் வளர்த்தெடுப்பதற்கான மூலதனமாக கல்வித் துறையைப் பார்க்கும் கேடுகெட்ட சந்தைப் பொருளாதாரத்தின் கைப்பிடித்து ஒன்றிய அரசு செல்கிறது. இதன் காரணமாக கொரோனா பெருந்தொற்று கல்வித் துறையில் அதிகாரவர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற வழிவகுத்துவிடுமோ என்கிற அச்சம், சமூக அக்கறை மிகுந்த கல்வியாளர்கள் மத்தியில் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

உலக அளவில் 31 சதவீதமான மாணவர்கள் இணையவழிக் கல்வியிலிருந்து விடுபட்டுள்ளதாக யுனெஸ்கோ சுட்டிக்காட்டுகிறது. தேசிய புள்ளியியல் நிறுவனம் 2019 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கிராமப்புறங்களில் 15 சதவீதமும் நகர்ப்புறங்களில் 42 சதவீதமானவர்களுமே இணைய வசதியை பயன்படுத்துவதாகத் தெரிவித்திருந்தது. 2020-2021 ஆண்டில் இந்த எண்ணிக்கை உயர்ந்து இருந்தாலும் அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்திருக்குமா என்பது கேள்விக்குறியே!

ஆன்லைன் கல்வி முறை குறித்து இந்தியாவில் கொரோனா பேரிடர் காலத்தில் 5 மாநிலங்களில் 16,067மாணவர்கள் மத்தியில் அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கடந்த கல்வியாண்டுடன் ஒப்பிடும்போது, மொழி கற்கும் திறனில் 93 சதவீத மாணவர்களிடையே பாதிப்பையும், கணிதம் கற்கும் திறன் 82 சதவீத மாணவர்களிடையே பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கிறது.தமிழகத்தில் 2020 செப்டம்பர் - நவம்பர் மாதங்களில் 23 மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன. அந்த ஆய்வில் கொரோனா பேரிடருக்கு முன்பாகவே 231 குழந்தைகள் வேலைக்குசெல்வதாகவும் கொரோனா பேரிடர் காலத்தில் இந்த எண்ணிக்கை 650 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.இந்த ஆய்வு பெரும்பாலும் அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 43 சதவீதமான மாணவர்கள் மட்டுமே இணையவழி வகுப்பில் பங்கேற்பதாகவும் 24 சதவீத மாணவர்கள் முழுமையாக ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த பல பத்தாண்டுகளாக குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்கு எடுக்கப்பட்டுவந்த பல்வேறு முயற்சிகள் கொரோனா பேரிடர் காலத்தில் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியிருப்பதை உணர முடிகிறது. குடும்பத்தின் வறுமையைப்போக்குவதற்கு பள்ளிப் படிப்பிலிருந்து விடுபட்டு வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.  ஒரு சில மாணவர்கள் ஸ்மார்ட் போன் தேவைக்காகவும் வேலைக்கு சென்றதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.டிசம்பர் 2020 நாடாளுமன்றக் குழு நகர்ப்புற - கிராமப்புற மாணவர்களிடையே இணைய வசதியில் உள்ள வேறுபாடுகளைக் களைவதற்கு   மலிவு - மானிய விலையில் ஸ்மார்ட் போன் வழங்குவது - தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவது போன்ற ஆலோசனையை அரசுக்கு வழங்கின. அது எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.இதே காலகட்டத்தில் பெண் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதை ஊடகங்கள் அவ்வப்போது சுட்டிக்காட்டிவருகின்றன. இது குறித்து விரிவான ஆய்வுகளை சமூக நலத்துறை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

செய்ய வேண்டியது என்ன?
கொரோனா பேரிடர் அனுபவத்தைக் கருத்தில் கொண்டுசமச்சீர் கல்வியை வலுப்படுத்துவதும் விரிவுபடுத்துவதும் எத்தகைய வழியில் நகர வேண்டும் என்பதையும்,குறிப்பாக சமூக, பொருளாதார, வாழ்விடம் சார்ந்த ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கு உரிய வகையில் விரிவான உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும்.   நகர்ப்புற, கிராமப்புற உழைப்பாளி மக்களிடையே வறுமையை விரட்டுவதற்கு உரிய திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று அவித்த முட்டை, சுண்டல் உள்ளிட்ட சத்தான உணவுப் பொருட்கள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

கொரோனா தொற்று குறைந்து இயல்பாக பள்ளிக்கூடம் திறப்பதற்கு முன்பாக மாணவர்கள் மத்தியில் மன அழுத்தத்தைக் களைவதற்கும் அவர்களது ஆளுமைத் திறனை வளர்ப்பதற்கும் ஏற்ற வகையில் குடியிருப்புகளுக்கு  அருகாமையில் மாணவர் சந்திப்பு நிகழ்வுகளை நடத்துவது. இது குறித்து அறிவியல் இயக்கம், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.அரசு மட்டுமல்லாமல் சமூகப் பண்பாட்டு அமைப்புகள், இயக்கங்கள் அறிவொளி இயக்கத்தைப் போல தங்கள் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வியில் ஏற்படும் இடைவெளியை நிரப்புவதுபோல் முறைசாரா கல்வித் திட்டத்தைப் பரவலாக்க முன்னெடுக்க வேண்டும்.

                                       *******************

யுனெஸ்கோ பரிந்துரைகள்....

“இன்று கல்வித் துறையில் நாம் எடுக்கவுள்ள முடிவுகள் எதிர்காலத்தில் தொடர் விளைவுகளை ஏற்படுத்தும். அதனால்  நமது தேர்வுகள் கல்வி, மேம்பாடு மனித உரிமைகள் பற்றிய மனிதநேயப் பார்வை அடிப்படையில் இருக்க வேண்டும்” என யுனெஸ்கோவின் (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்) அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதற்கு உதவும் வகையில் ஒன்பது யோசனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

1. கல்வியை பொது நன்மைக்குரிய விஷயமாக வலுப்படுத்துக!

ஏற்றத்தாழ்விலிருந்து பாதுகாக்கும் அரண் கல்வி. சுகாதாரத்தைப் போலவே கல்வியைப் பெறுவதிலும் அனைவரும் பாதுகாப்பாக இருந்தால்தான், நாம் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க முடியும். அனைவரும் செழிப்பாக இருந்தால்தான், நாமும் செழிப்பாக இருக்க முடியும்.

2. கல்வியுரிமைக்கான வரையறையை விரிவுபடுத்துக!

கல்விப் பரவலையும் அறிவு - தகவல் பெறும் வாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும். கற்கும் வயதில் இருக்கும் எல்லா வயதினரையும் உலகம் முழுக்க ஒருங்கிணைத்து கல்வியுரிமையை விரிவாக்கும் வழிகளைப் பற்றி விவாதிக்க வேண்டும்.

3. ஆசிரியப் பணியையும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பையும் மதிக்க வேண்டும்!

உடனே மீளக்கூடிய திறன் கொண்ட குடும்பங்கள் - சமூகங்களைக் கொண்டு கோவிட் நெருக்கடியை கல்வியாளர்கள் எதிர்கொண்டதில் நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. முன்களக் கல்வியாளர்கள் தன்னிச்சையாக செயல்படும் சூழலையும் கூட்டாக செயல்படும் வாய்ப்புகளையும் ஊக்குவிக்க வேண்டும்.

4. மாணவர், இளைஞர் - குழந்தைகள் ஆகியோரின் பங்களிப்பையும் உரிமைகளையும் மேம்படுத்துக!

தலைமுறைகளைக் கடந்து நாம் கொண்டிருக்கும் நியாயங்கள் - ஜனநாயகக் கொள்கைகள் ஆகியவை, நாம் விரும்பும் எதிர்கால மாற்றத்தில், மாணவர் - இளைஞர் ஆகியோரின் பங்கேற்பை உறுதிபடுத்திட வேண்டும்.

5. கல்விமுறையை மாற்றும்போது பள்ளிகளில் இருக்கும் சமூக வெளிகளைப் பாதுகாத்தல் வேண்டும்! 

பள்ளிக்கூட அமைப்பு என்பதைத் தவிர்த்திட முடியாதது. பாரம்பரிய வகுப்பறை பாணி கல்வியைக்கூட புது வகையான பயிற்சி வடிவங்களுக்கு மாறச் செய்யலாம். ஆனால், தனியான ஒரு அமைப்பில் கூடி, குறிப்பிட்ட நேரத்துக்கு வாழ்ந்து, பயின்று செல்லும் பள்ளிக்கூட வெளி பாதுகாக்கப்பட வேண்டும்.

6. இலவச - காப்புரிமையற்ற தொழில்நுட்பங்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்!

அனைவருக்குமான காப்புரிமையற்ற கல்வி வளங்களும் தொழில்நுட்பக் கருவிகளும் ஆதரிக்கப்பட வேண்டும். பயிற்றுவிக்கும் இடத்துக்கு வெளியே கல்வி இருப்பதில்லை. ஆசிரியர் - மாணவர்களுக்கு இடையேயான மனித உறவுக்கு வெளியேயும் கல்வி இருக்க முடியாது. தனியார் நிறுவனங்களிடம் இருக்கும் தொழில்நுட்பத் தளங்களை கல்வி சார்ந்திருத்தல் கூடாது.

7. அறிவியல்ரீதியிலான அறிதலை பாடத்திட்டத்தில் உறுதிப்படுத்துக!

திரிக்கப்பட்ட உண்மைகள் நிறைந்து, அறிவியல் அறிவு மறுக்கப்படும் இக்காலம்தான் பாடத்திட்டத்தில் அறிவியல் பார்வையை கொண்டு வருவதற்கு சரியான காலகட்டம்.

8. பொதுக்கல்விக்கான உள்ளூர் - சர்வதேச நிதியைப் பாதுகாத்திடுக!

பல பத்தாண்டுகளுக்கு நாம் அடைந்த முன்னேற்றத்தை அழிக்கும் திறன் வாய்ந்தது இந்த தொற்றுநோய். தேசிய அரசுகளும் சர்வதேச நிறுவனங்களும் கல்வி - வளர்ச்சிக்கு துணைபுரியும் அனைவரும் பொது சுகாதாரத்தையும் சமூக சேவை அமைப்புகளையும் வலுப்படுத்துவதற்கான தேவையை உணர வேண்டும். பொதுக்கல்வி - அதற்கான நிதி பாதுகாக்கப்படுவது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

9. தற்போதைய ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்கான சர்வதேச ஒற்றுமையை முன்னுக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

அதிகார ஏற்றத்தாழ்வுகளை நம் சமூகங்கள் எந்தளவுக்குப் பயன்படுத்தும் என்பதையும் சர்வதேச அமைப்பு ஏற்றத்தாழ்வுகளை எப்படிப் பயன்படுத்தும் என்பதையும் கோவிட் 19 தொற்று காட்டிவிட்டது. பல தரப்புகளின் ஒத்துழைப்பையும் புதுப்பிக்கப்பட்ட உறுதிகளையும் சர்வதேச ஒருங்கிணைப்பையும் இரக்கம் - மனிதநேயம் ஆகியவற்றையும் கொண்ட உலகளாவிய ஒற்றுமையையும் இந்த ஆணையம் கோருகிறது.

கட்டுரையாளர் : ஜி.செல்வா, சிபிஐ(எம்) மத்திய  சென்னை மாவட்டச் செயலாளர்