வந்தே மாதரம் அரசாணையைத் திரும்பப் பெறுக! தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு கண்டனம்
சென்னை, பிப். 14 - அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முழுப் பகுதிகளையும் இசைக்க வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அரசாணை, அரசியல் சட்டத்திற்கு எதிரானது எனத் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ். நூர்முகமது (முன்னாள் எம்.எல்.ஏ), மாநிலப் பொதுச் செயலாளர் பி. செந்தில்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி 28 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில், தேசிய கீதத்திற்கு முன்னதாக வந்தே மாதரம் பாடலின் ஆறு பத்திகளையும் இசைக்க வேண்டும் என்றும், அதற்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 1937-லேயே விவாதிக்கப்பட்டு, இப்பாடலின் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே ஏற்கப்பட்டன. மீதமுள்ள பகுதிகள் இந்து கடவுள்களை வணங்குவதாக அமைந்துள்ளதால், அவை தேசியப் பாடலில் இடம் பெறத் தேவையில்லை என மகாகவி ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோர் அன்றே முடிவெடுத்தனர். அரசியல் சாசனத்தின் 51 (A)(a) பிரிவு, தேசியக் கொடிக்கும் தேசிய கீதத்திற்கும் மட்டுமே மரியாதை செலுத்தக் கூறுகிறது. மேலும், பிஜோ இமானுவேல் வழக்கில் உச்ச நீதிமன்றமும் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தினால் போதுமெனத் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், சங் பரிவாரத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மதச் சிறுபான்மையினரையும் மத நம்பிக்கையற்றோரையும் கட்டாயப்படுத்துவது சட்டப்பிரிவு 25 உறுதிப்படுத்தியுள்ள மத அடிப்படை உரிமைகளுக்கு முரணானது. எனவே, அரசியல் சாசனத்திற்கு மாறான இந்த அரசாணையை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.