இணையர்கள் தேர்வு சுதந்திரத்தைப் பாதுகாத்திட என்ன செய்ய வேண்டும்? நீதிபதி பாஷா ஆணையத்திற்குத் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பரிந்துரைகள்!
சாதி ஆணவப் படுகொலை களைத் தடுக்கச் சிறப்புச் சட்டம் உருவாக்குவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் ஆணையம் ஒன்றை கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்காக அரும்பாடுபட்டது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி. எனவேதான் வரவேற்பதோடு மட்டுமல்லாமல், சீரிய பரிந்துரைகளையும் உருவாக்கி ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. அரசியலமைப்புச் சட்டமும் சமூக எதார்த்தமும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு வருக்கும் சுதந்திரம்,
சமத்துவம், கண்ணியமான வாழ்க்கை ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது. ஆனால் அரசியலமைப்புச் சட்டத்திற்கே சவால் விடும் வகையில் இந்தியாவில் சாதியின் அடிப்படையில் வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் உரிமையைச் சாதி, மதம், ஆணாதிக்கம், நிலப்பிரபுத்துவம் போன்றவை பறிக்கின்றன. முற்போக்கு இயக்கங்களும், பொதுவுடை மை இயக்கங்களும், சுயமரியாதை இயக்கங்களும் சமூக நீதியை நிலைநாட்டக் களம் கண்ட தமிழக மண்ணில், இத்தகைய சாதி ஆணவப் படுகொலைகளும் குற்றங்களும் நடந்து வருவது அவமானகரமானது. இந்தியாவில் பல மாநிலங்களைக் காட்டிலும் ஒப்பீட்டு அளவில் பகுத்தறிவில் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு. பல சீர்திருத்தச் சட்டங்கள் வந்த மாநிலம் இது. ஆனாலும் ‘கௌரவம்’ என்ற பெயரில் குற்றங்களும் படுகொலைகளும் அரங்கேறி வருகின்றன. மறக்க முடியாத மரணங்களும் போராட்டங்களும் சூரக்கோட்டை மாரிமுத்து, உடுமலைப் பேட்டை சங்கர், கோகுல்ராஜ், இளவரசன், விமலா தேவி, சுபாஷ், நந்தீஸ் - சுவாதி எனத் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்த எண்ணற்ற இளைஞர்களும் இளம் பெண்களும் கௌரவம் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவியல் சட்டங்களும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டமும் இருந்தாலும், அவை சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்குப் போதுமானதாக இல்லை. எனவேதான் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடந்த 12 ஆண்டு காலமாகச் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்குச் சிறப்புச் சட்டம் கேட்டு எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளது. இந்த ஒற்றைக் கோரிக்கைக்காக 2017-இல் சேலம் முதல் சென்னை வரை 400 கிலோமீட்டர் நடை பயணம், ஆர்ப்பாட்டங்கள், சிறப்பு மாநாடுகள் மட்டுமல்லாது, இதுவரை தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட ஒவ்வொரு சாதி ஆணவப் படுகொலைகளுக்கும் நீதி கேட்டுத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி களத்திலே போராட்டங்களை நடத்தியுள்ளது. பரிந்துரைகளை உருவாக்குதல் ஒவ்வொரு படுகொலையின் போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, மறுவாழ்வு உள்ளிட்டவற்றைப் பெறுவதற்குத் துணை நின்ற அனுபவங்களின் சாரத்தில் இன்று பாஷா ஆணையத்திற்குப் பரிந்துரைகள் உரு வாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஜனநாயக இயக்கங்களோடு இணைந்து நடத்திய போராட்டங்கள் ஒரு சிறப்புச் சட்டத்தின் தேவை யையும், அச்சட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. மேலும் இதுவரை சாதி ஆணவப் படுகொலைகள் குறித்த வழக்கு களில் உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்றத் தீர்ப்பு களின் படிப்பினைகளும் பரிந்துரைகளை உருவாக்குவதற்குப் பெரும் உதவியாக அமைந்தன. தமிழ்நாடு தீண்டாமை
ஒழிப்பு முன்னணி 2025 டிசம்பர் 6 அன்று வழக்கறிஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கூட்டத்தைச் சென்னையிலும், டிசம்பர் 16 அன்று சமூக நீதி மற்றும் தலித் இயக்கங்களின் கூட்டத்தைத் தூத்துக்குடியிலும் நடத்தி, சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம் குறித்த கருத்துப் பரிமாற்றங்களைச் செய்து ஆலோசனைகளைத் தொகுத்தது. கருத்தியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், கள அனுபவங்கள் வாயிலாகவும் வடி வமைக்கப்பட வேண்டிய சட்டம் என்பதால் முப்பரி மாணங்களிலும் விவாதங்கள் அமைந்தன. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 20 அம்சப் பரிந்துரைகள் சட்டத்தின் பெயரும் நோக்கமும் 1. தமிழ்நாடு இணையர் தேர்வு உரிமை நிலை நாட்டல் மற்றும் கௌரவம் என்ற பெயரிலான கொலைகள், குற்றங்கள் தடுப்பு (பாதுகாப்பு & மறுவாழ்வு) சட்டம் 2026 எனப் பெயரிடப்பட வேண்டும். 2. இணையர் தேர்வு உரிமை என்பதில் சாதி, உட்சாதி, மதம், கோத்திரம், பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை கடந்தவையாகவும், கௌரவம் என்ற பெயரில் இணை யர்கள் அச்சுறுத்தப்படுவதை தடுப்பதாகவும் அது அமைந்திட வேண்டும். குற்றங்களின் தன்மையும் சமூகப் பொறுப்பும் 3. ஏற்கனவே உள்ள கிரிமினல் சட்டங்கள் குற்றங்களை தனிநபர் சார்ந்தவையாக அணுகுகிற தன்மை உடையதாக இருக்கின்றன. ஆனால் இந்தத் தனிச்சட்டம் குற்றங்களின் தனித்தன்மையை கணக்கில் கொள்வதாக சமூக அழுத்தம், சமூக நிர்ப்பந்தம், சமூக அடையாளங்களின் அடிப்படையிலான திரட்டல் - மிரட்டல்
- தாக்குதல் - கூட்டு வன்முறை - கொலைகள் - ஊர் விலக்கம் - குடிமை உரிமைகள் மறுப்பு - உடமைகள் சேதம் உள்ளிட்டவற்றை தடுப்ப தாகவும் தண்டிப்பதாகவும் அமைந்திட வேண்டும். 4. பாதிப்புகளுக்கு இலக்காக உள்ள பகுதிகளை அடையாளம் காணுதல், அச்சுறுத்தலுக்கு - தாக்குதலுக்கு ஆளாகும் சூழ்நிலையிலுள்ள இணையர்களை பாதுகாத்தல் - பாதுகாப்பு இல்லங்களை உருவாக்குதல் - முன் தடுப்பு நடைமுறைகள் பலப்படுத்தப்படுத்துதல் ஆகியனவற்றை உறுதி செய்ய வேண்டும். 5. திலீப் குமார் வழக்கில் நீதியரசர் இராமசுப்ர மணியன் அவர்களின் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு, சக்தி வாகினி வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் வழிகாட்டல்கள் ஆகியன தனிச் சட்டத்தில் சட்டப்பூர்வ அம்சங்களாக மாற்றப்பட வேண்டும். 6. பாதிக்கப்படுபவர்கள் என்ற வகையில் அவர்களது பெற்றோர், உறவினர்கள், சமூகக் குழுவினர், நண்பர்கள் உள்ளிட்டவர்களும் அச்சுறுத்தல்களுக்கும் தாக்குதல்களுக்கும், கொலைகளுக்கும் ஆளாவதால் அவர்களையும் உள்ளடக்கியதாக சட்டம் அமைய வேண்டும். 7. சாதிய அமைப்புகளின் கூட்டங்கள், கட்டப்பஞ்சாயத்துக்கள், ஊர் பெரியவர்கள் என்ற பெயரில் நடத்தும் கூட்டங்கள் ஆகியவற்றின் பின்புலத்தில்
குற்றங்கள் கொலைகள் நிகழும் போது கூட்டுப் பொறுப்பை உறுதி செய்கிற வகையிலும் தண்டனைக்கு ஆளாகிற வகையிலும் சட்டம் வலுவானதாக அமைய வேண்டும். 8. சாதி அமைப்புகளின் கூட்டங்களில் அகமண முறைக்கு உறுதி மொழி ஏற்கிற நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட வேண்டும். 9. சாதி விலக்கம் செய்து வெளியிடப்படும் திருமண விளம்பரங்கள் குற்றங்களாக வகைப்படுத்தப்பட வேண்டும். நீதி நிர்வாகம் மற்றும் தண்டனைகள் 10. காவல்துறை புகார் முறைமை வலுப்படுத்தப்பட வேண்டும். (ஜீரோ எப்.ஐ.ஆர், ஆன்லைன் புகார் ஏற்பு ஆகியன உள்ளிட்டு) 11. மாவட்ட அளவில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். 12. வழக்குகள் 6 மாதங்களுக்குள்ளாக விரைந்து முடிக்கப்பட வேண்டும். 13. சாதி ஆணவக் கொலைகள் “அரிதிலும் அரிதான குற்றங்களாக” கருதப்பட்டு கடுமை யான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால் நன்ன டத்தை விடுதலை, பரோல்கள் ஆகியன அனுமதிக்கப்படக்கூடாது. 14. குற்றவாளியே குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபிக்கும் பொறுப்புடையவர் (Burden of Proof). 15. அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகவும் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவும்,
அதற்கான செலவுகளை அரசே ஏற்பதுமாக சட்டம் அமைய வேண்டும். நிவாரணம் மற்றும் அரசு சலுகைகள் 16. பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 லட்சம் வரை இழப்பீடு உறுதி செய்யப்படுவதும், அவர் களின் எதிர்கால கல்வி மருத்துவம் நீண்ட கால சிகிச்சையின் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கூடுதல் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். குறித்த கால வரை யறைக்கு உட்பட்டு நிவாரணங்கள் உயர்த்தப்படுவதையும் சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும். 17. பதிவு திருமணங்களின் விதிமுறைகள் எளிதாக்கப்படுவதும், அவசியத் தேவையற்ற ஆவண கோரல்கள் காரணமாக இழுத்தடிப்பது, மறுப்பது கூடாது. 18. சாதி மத மறுப்பு திருமணங்களுக்கு அரசு ஊக்குவிப்பு வழங்க வேண்டும். சாதி மறுப்புத் திருமண தம்பதிகளுக்கு, சாதி மறுப்புத் தம்பதியர் குழந்தைகளுக்கு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்புகள், கல்வி உதவித்தொகை, திறன் ஊக்குவிப்பு, அரசு தொழிற்பேட்டைகள், அரசு கொள்முதல் ஆகியவற்றில்
முன்னுரிமை உள்ளிட்ட வகைகளில் உறுதி செய்ய வேண்டும். பண்பாட்டுத் தளமும் நிதி ஒதுக்கீடும் 19. பண்பாட்டு தளங்களில் சாதி பாகுபாடு களுக்கு எதிரான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். கலை வடிவிலான கருத்துரு வாக்கத்தை அரசு மேற்கொள்ள வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வை உருவாக்க முயற்சிகள் தேவை. 20. நிதி ஒதுக்கீடு போதுமான அளவில் பட்ஜெட் ஒதுக்கீடு, அபராத தொகைகள் வாயிலாக உறுதி செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட் டோர் கல்வி, மருத்துவம், பயிற்சி, வாழ்வா தாரம், சட்ட உதவி, மன நல ஆலோசனை உள்ளிட்ட அம்சங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். -மேற்கண்ட பரிந்துரைகள் உருவாக்கப் பட்டு நீதிபதி பாஷா ஆணையத்திடம் வழங்கப் பட்டுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பரிந்துரைகள் ஆணையத்திற்கு மிக உறுதி யான ஆவணமாக அமைந்திடும் என்று ஆணையத்தின் தலைவர் திரு . பாஷா அவர்கள் தெரிவித்தார்கள்.
