articles

img

துருக்கியின் வேண்டாத வேலையும் தெற்காசியாவில் செல்வாக்கு செலுத்தும் முயற்சியும்!

துருக்கியின் வேண்டாத வேலையும்  தெற்காசியாவில் செல்வாக்கு செலுத்தும் முயற்சியும்!

இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் டிரோன் போர்முறை, துருக்கியுட னான அதன் வளர்ந்து வரும் பாதுகாப்பு கூட்டு குறித்து கவனத்தை ஈர்த்துள்ளது. ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளின் தலைவனாக இருக்க  வேண்டும் என்ற துருக்கி ஜனாதிபதி எர்டோகனின் முனைப்பு,  அதற்கு அப்பாற்பட்ட திட்டங்களையும் கொண்டுள்ளது என்பதையே , இந்தியாவுக்கு எதிராக தனது டிரோன்களைப் பாகிஸ்தான் பயன்படுத்த அனுமதித்தது குறிக்கிறது என்று மூத்த  பத்திரிகையாளர் ஸ்வேதா தேசாய், தமது ‘நியூஸ் லாண்டரி’ கட்டுரையில் தெரிவித்துள்ளார்.  “கடந்த வாரம், பாகிஸ்தானில் இருந்து நூற்றுக்கணக்கான டிரோன்கள் இந்தியாவின் மேற்கு எல்லையில் ஊடுருவியபோது, எல்லை  நகரங்களில் வசிப்பவர்கள் இரவு வானத்தில் விநோதமான இரைச்சலுடன் மின்னும் சிவப்பு  விளக்குகளைப் பார்த்து அச்சத்துடன் இருந்தனர்”  என்று அக்கட்டுரை விவரிக்கிறது.  ஆளில்லா விமானங்கள் சர்வதேச எல்லை நெடுகிலும் பல இந்திய இராணுவ தளங்களை இலக்காகக் கொண்டு தாக்கின. இவை பெரும்பாலும் இந்தியாவின் எதிர்-டிரோன் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளால் குறுக்கிடப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.  “துருக்கி தயாரிப்பான பைகர் YIHA III மற்றும் ஆசிஸ்கார்ட் சோங்கர் டிரோன்களின் பெரிய அளவிலான பயன்பாடு இந்தியாவுக்கு எதிரான ஒருங்கிணைந்த டிரோன் போராக தொடுக்கப் பட்டது” என்று பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் முன்னாள் விமானப்படை விமானி மற்றும் டிரோன் நிபுணர் ஆர்.கே. நாரங் தெரிவிக்கிறார்.   முன்னதாக கொடூரமான பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னரும், இராணுவ நடவடிக்கைகள் வெடிப்பதற்கு சற்று முன்பும், துருக்கிய கடற்படைக் கப்பல் TCG பூயூக்கடா (F-512), ஒரு அடா- வகை கார்வெட், துருக்கிய C-130 ஹெர்குலஸ் இராணுவ போக்குவரத்து விமானத்துடன் சேர்ந்து ஏப்ரல் 27 அன்று கராச்சி துறைமுகத்தில் நங்கூர மிட்டது என்பது புருவங்களை உயர்த்த வைத்தது. துருக்கியின் பங்கு குறித்த ஊகங்களை தூண்டியது.  இதுவரை  பாகிஸ்தானின் முதன்மை ஆயுத வழங்குநராக சீனா உள்ளது எனக் கருதப்பட்டு வந்த நிலையில், இஸ்லாமாபாத் தனது  இராணுவ கொள்முதலை பலப்படுத்த அங்காராவையே - அதாவது - துருக்கி யையே அதிகம் சார்ந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான் நான்கு MILGEM-வகுப்பு கார்வெட்டுகள் (நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போர்க்கப்பல்கள்), T129 ATAK ரக ஹெலிகாப்டர்களை பெறவுள்ளது; மேலும் ஐந்தாம் தலைமுறை துருக்கிய ஏரோஸ்பேஸ் கான் போர் விமான திட்டத்திலும் பாகிஸ்தான் இணையக்கூடும்.  இதில் பாகிஸ்தானின் முக்கிய ஆர்வம் துருக்கியின் மேம்பட்ட டிரோன் தொழில்நுட்ப மாகும். “துருக்கி குறைந்த விலையில் டிரோன்களின் முன்னணி உற்பத்தியாளராக உள்ளது, மேலும் இவை பாகிஸ்தானுக்கு எல்லை கண்காணிப்பில் முக்கியமான இடைவெளிகளை நிரப்ப உதவியுள்ளன,” என்று புது தில்லி அமைதி மற்றும் மோதல் ஆய்வுகள் நிறுவனத்தின் ஆராய்ச்சி அறிஞர் சையத் ஈசார் மெஹ்தி குறிப்பிடுகிறார்.   பாகிஸ்தான் பஞ்சாப்பில் ஆயுதங்களை கொண்டு வந்து போடவும், காஷ்மீரில் உள்ள போராளிகளுக்கு எல்லையைக் கடந்து  ஊடுருவ உதவுவதற்கும் துருக்கிய டிரோன் களைப் பயன்படுத்தி வருகிறது என இந்திய பாது காப்புத் துறை நம்புகிறது. இந்த டிரோன்கள் இந்தியா-வங்கதேச எல்லையில் உளவு,  கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளுக்காக வங்கதேச இராணுவத்தாலும் பயன்படுத்தப் படுகின்றன.  “துல்லியமாக வழிநடத்தப்படும் பயராக்டர் டிரோன்கள், எதிர்ப்பு விமான அமைப்புகளையும் கூட அழிக்கும் திறன்  கொண்டவை; இவை போர்க்கள இயக்க வியல்களை மாற்றுவதற்கான நற்பெயரைப் பெற்றுள்ளன”  என்று தேசாய், கட்டுரையில் குறிப்பிடுகிறார்.  

நியோ-ஒட்டோமான் அடையாளம்  

அமெரிக்காவுக்குப் பிறகு இரண்டாவது பெரிய இராணுவக் கப்பற்படையைக் கொண்ட நேட்டோ உறுப்பு நாடான துருக்கி, புதிய கூட்டணி களை உருவாக்க தனது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப திறன்களைப் பயன்படுத்தி வருகிறது. பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் மோதல்களை, துருக்கி தனது மேம்பட்ட டிரோன் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தவும், அப்பகுதியில் புவிசார் அரசியல் செல்வாக்கை செலுத்துவதற்கான அதன் நலன்களை முன்னிலைப்படுத்தவும் ஒரு உத்திசார் தளமாக பயன்படுத்திக் கொள்ள முனைகிறது என்று ஐடிஎஸ்ஏவின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவர் டாக்டர் ஆதில் ரஷீத் கூறுகிறார்.  2019ல் தொடங்கப்பட்ட ‘ மீண்டும் ஆசியா’ எனும் முன்முயற்சியுடன், துருக்கி கிழக்கு மற்றும் மேற்கிற்கு இடையே ஒரு பாலமாக தனது பங்கை வலுப்படுத்த முயன்று வருகிறது. மாலத்தீவு, வங்கதேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற இந்தியாவின் அண்டை நாடுகளுடன் இராணுவம், பாதுகாப்பு மற்றும் வர்த்தக கூட்டு மூலம் துருக்கியின் கிழக்கு நோக்கிய உறவுகள் இந்தியாவின் உத்திசார் நலன்களை குறைக்கக்கூடும் என்பது கவலைக்குரியது என்று ரஷீத் கருதுகிறார்.  “துருக்கி ஜனாதிபதி ரெசெப் தய்யிப் எர்டோகனின் கீழ், ஒருகாலத்தில் ஒட்டோமான் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் துருக்கியின் செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கில் அனைத்து-இஸ்லாமிய மற்றும் புதிய-ஒட்டோமான் ராஜ்ஜியம் என்ற இலக்கு சார்ந்த  கைப்பற்றும் முனைப்பு ஏற்பட்டுள்ளது”  என்று ரஷீத் விளக்குகிறார்.  கடந்த ஆண்டு, துருக்கி,  மத்திய ஆசி யாவை அதிகாரப்பூர்வமாக ‘துர்க்கிஸ்தான்’ என்று குறிப்பிடத் தொடங்கியது, அப்பகுதி யுடனான அதன் வரலாற்று உறவுகளை வலியுறுத்துவதே இதன் நோக்கம். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், துருக்கியுடனான ‘சிறப்பு உறவுக்கு’ அடித்தளமாக இந்திய கிலாஃபத் இயக்கத்தை - (1920களில் ஒட்டோமான் பேரரசை ஆதரிக்க தொடங்கப்பட்டது) - குறிப்பிட்டார்.  எர்டோகனின் பதவிக்காலத்தில், துருக்கி யின் பாகிஸ்தான் ஆதரவு மற்றும் இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு - குறிப்பாக காஷ்மீர் தொடர்பாக - இந்திய இராஜதந்திரத்திற்கு சவாலாக இருந்து வருகிறது என்று ஆப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் உத்திசார் ஆய்வுகளின் துணை இயக்குநர் கபீர் தனேஜா குறிப்பிடுகிறார். இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் நிறுவன உறுப்பினராக, துருக்கி,  காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து பாகிஸ்தானை ஆதரித்து வருகிறது. எர்டோகன் ஐ.நா. பொதுச் சபையில் தொடர்ந்து காஷ்மீர் பிரச்சனையை எழுப்பி (2024ல் தவிர), உரையாடல் மூலம் அதைத் தீர்ப்பதற்கு ஆதரவளித்து வருகிறார்.  “காஷ்மீரை ஒரு சர்வதேச பிரச்சனை யாக்குவது என்பது,   முஸ்லிம் நலன்களின் பாதுகாவலராக தன்னை முன்னிறுத்தும் எர்டோகனின் அரசியல் பிராண்டிங்கின் ஒரு பகுதியாகும். சீனாவின் ஷின்ஜியாங்கில் உய்குர் மக்களின் உரிமைகள் மறுக்கப்படு வதாக பிரச்சனை எழுப்பிய ஒரே முஸ்லிம் தலைவரும் அவர்தான். ஆனால் பாசாங்கு செய்வதைத் தவிர, எர்டோகன், முஸ்லிம் மக்களுக்காக எதையும் செய்தது இல்லை; அவரது அக்கறையின் உண்மையான தாக்கம் குறைவு,” என்கிறார் தனேஜா.  இந்தியா-துருக்கி உறவில், துருக்கியின் டிரோன் ஆதரவு மற்றும் இந்தியாவுக்கு அங்காராவின் வன்மையான கண்டனம் என்பது பொதுமக்களிடையே எதிர்ப்பை தூண்டியுள்ளது. ‘துருக்கியை புறக்கணிக்க’ அழைப்புகள் மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களால் பயண திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால், துருக்கி ஒரு விரோத நாடாக இந்தியாவில் பொது வான உணர்வு ஆழமடைந்துள்ளது. பல  பல்கலைக்கழகங்கள் துருக்கிய நிறுவனங்களு டனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நிறுத்திவைத்ததிலும் இது தெளிவாகத் தெரிகிறது.  “சமீபத்திய நிகழ்வுகள் - குறிப்பாக பாகிஸ்தானுக்கான துருக்கியின் டிரோன் ஆதரவு மீதான கவனம் - பொதுமக்களின் உணர்வுகளை மாற்றியுள்ளது. இந்தியா-துருக்கி உறவுகளை ‘இயல்புநிலைக்கு’ கொண்டுவருவதற்கான முன்னைய முயற்சிகள் இருந்திருந்தாலும், அவை இப்போது, தற்போதைய சம்பவங்களால் பல ஆண்டுகள் பின்னோக்கி செல்கின்றன” என்று தனேஜா கூறுகிறார்.