உங்கள் ‘கனவு மாளிகை’யில் ஏழையின் தட்டு காலியாகக் கிடக்கிறது!
“நாங்கள் சொர்க்கத்தின் உண்மையை அறிவோம், ஆனால் இதயம் மகிழ்வதற்கு இந்த எண்ணம் நல்லது” - காலிப்பின் இந்த கவிதை வரிகள்தான் பாஜக அரசு தாக்கல் செய்திருக்கும் இந்த பட்ஜெட்டைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்று கிறது. காற்றில் சொற்களால் மாளிகை கட்டுவதை விட்டுவிட்டு, இவர்கள் எப்போதுதான் தரையில் நிலவும் எதார்த்தத்தைப் பேசப் போகிறார்கள்? தாராளமயம் எனும் பெயரில் ஒருதலைப்பட்சமான பேரங்கள் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தைப் பற்றிப் பெரிதாகப் பேசுகிறார்கள். 11 மாதங்கள் நம் தொழிலதிபர்களைக் காத்திருக்க வைத்துவிட்டு, இப்போது கொண்டு வந்திருக்கும் இந்த ஒப்பந்தம் ஒரு ‘டீல்’ (Deal) அல்ல, ‘தளர்த்தல்’ (Dheel). 500 பில்லியன் டாலர் வர்த்தகத்தை ஒருதலைப்பட்சமாகத் திறந்துவிட்டுவிட்டு, ‘சுதேசி’ என்றும் ‘தற்சார்பு இந்தியா’ (Self-reliant India) என்றும் கூவுவது என்ன நியாயம்? உங்கள் அகராதியில் தற்சார்பு என்ற சொல்லின் அர்த்தத்தை மாற்றியமைத்துவிட்டீர்களா? 18% என்பது உங்களுக்குச் சைபராகத் தெரியலாம், ஆனால் நாட்டின் வணிகர்களுக்கு அது பெரும் பாரம். எங்கே போனது வளர்ச்சி? ஜிடிபி 7 சதவீதம் என்கிறார்கள். ஆனால் பெயரளவு ஜிடிபி (Nominal GDP) வளர்ச்சி 8 சதவீதம்தான் இருக்கிறது. உண்மையில் இது 12 சதவீதமாவது இருக்க வேண்டும். மக்களின் கையில் பணம் இல்லை. தனியார் முதலீடுகள் வரவில்லை. உலக அரங்கில் தனிநபர் வருமானத்தில் இந்தியா 144-ஆவது இடத்தில் இருக்கிறது. 12 ஆண்டுகளாக பட்ஜெட் போட்டு என்ன சாதித்தீர்கள்? இலவச ரேஷன் வாங்கும் மக்களின் தனிநபர் வருமானத்தை இந்த அரசு சொல்லத் தயாரா? உத்தரப்பிரதேசத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் இரட்டை எஞ்சின் (Double Engine) அரசு என்று மார்தட்டிக்கொள்கிறீர்கள். ஆனால் 25 கோடி மக்கள் வாழும் உத்தரப்பிரதேசத்திற்கு இந்த பட்ஜெட்டில் என்ன இருக்கிறது? பிரதமர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு மாநிலத்திற்கு ஒன்றிய பட்ஜெட்டில் இருந்து ஒரு எக்ஸ்பிரஸ் சாலை கூட ஒதுக்கப்படவில்லை. அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் அறிவிக்கப்பட்ட சாலைகள் காகிதத்தில்தான் இருக்கின்றன. கட்டப்பட்ட சில சாலைகளும் ஊழலால் தரம் தாழ்ந்து கிடக்கின்றன. விவசாயிகளின் கண்ணீரும், எட்டாக்கனியாகும் தங்கமும் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று சொன்னீர்கள். ஆனால் இப்போது எல்லாவற்றையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போட்டுவிட்டீர்கள். இனி நம் விவசாயி நிலத்தில் எதை விளைவிப்பார்? குறைந்தபட்ச ஆதார விலை (MSP) என்பதற்குச் சட்டப்பூர்வ உத்தரவாதம் இல்லை. காய்கறி, பால் உற்பத்தியில் சாதனை என்கிறார்கள், ஆனால் அதை உற்பத்தி செய்யும் விவசாயி தன் மகளின் திருமணத்திற்கு ஒரு கிராம் தங்கம் கூட வாங்க முடியாத நிலையில் இருக்கிறார். தங்கம் விலையேறிவிட்டது; பாஜக அரசு இப்படியே போனால் ஏழைகள் தன் மகளுக்குப் பித்தளையில் முலாம் பூசித்தான் தர வேண்டியிருக்கும். புறக்கணிக்கப்பட்ட எளிய மக்கள் இந்த பட்ஜெட்டில் பி.டி.ஏ (PDA - பிச்சடே (பிற்படுத்தப்பட்டோர்), தலித், அல்பசங்கியக் (சிறுபான்மையினர்) ஆகியோருக்கான எந்தத் திட்டமும் இல்லை. சமூகப் பாதுகாப்பு என்பது வெறும் சொற்களாகவே முடிந்துவிட்டது. பணக்காரர்களுக்குச் சுற்றுலாவிற்கும் வணிகத்திற்கும் சலுகைகள் அள்ளித் தரப்படுகின்றன, ஆனால் ஏழையின் தட்டு காலியாக இருக்கிறது. இந்த பட்ஜெட் என்பது வெறும் 5 சதவீத செல்வந்தர்களுக்கான ‘1/20’ பட்ஜெட். சீரழியும் புனித நதிகளும், புல்டோசர் அரசியலும் “தாய் கங்கை என்னை அழைத்தார்” என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், கடந்த 11 ஆண்டுகளில் கங்கையை என்ன செய்தீர்கள்? கங்கை நதியில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிட்டது, மாசு அதிகரித்துவிட்டது. வாரணாசியில் புராணச் சிறப்புமிக்க 100க்கும் மேற் பட்ட கோவில்களை இடித்துவிட்டு எதைச் சாதித்தீர்கள்? நேபாள மன்னர் கொடுத்த பழமையான மணி கூட இப்போது காணவில்லை. புல்டோசர் கொண்டு மக்களின் வீடுகளை இடிப்பதும், முதிய வர்களைப் பொய் வழக்கில் சிறையில் அடைப்பதும் தான் உங்கள் ‘விகாஸ்’ (வளர்ச்சி)மாடலா? ஒரு எச்சரிக்கை அயோத்தியில் மக்கள் உங்களுக்குத் தகுந்த பாடம் புகட்டிவிட்டார்கள். நீங்கள் மதவாத அரசியலைச் செய்ய விரும்பினீர்கள், ஆனால் மக்கள் வளர்ச்சியைத் தேடினார்கள். ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஊழல்தான் நடக்கிறது. வளர்ச்சியடைந்த இந்தியா (Viksit Bharat) என்பது பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் சிறுபான்மையினருக்குச் சம உரிமை கிடைக்கும்போதுதான் சாத்தியமாகும். அவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நீங்கள் காணும் கனவு ஒருபோதும் நனவாகாது. இந்த பட்ஜெட் வெறும் காகித அலங்காரமே தவிர, ஏழையின் வாழ்வில் ஒளி ஏற்றாது. மக்களவையில் பட்ஜெட் விவாதத்தில் ஆற்றிய உரையின் பகுதிகள்
