articles

img

இடதுசாரி அரசின் இமாலய சாதனை - அ.அன்வர் உசேன்

இடதுசாரி அரசின் இமாலய சாதனை - அ.அன்வர் உசேன்

மே 2-இல் (வெள்ளி) கேரளத்தில் விழிஞ்ஞம் துறைமுகம் அதிகா ரப்பூர்வமாக  தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒன்றிய அரசும் பங்குதாரர். பிரதமர் மோடி இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடியால் விழிஞ்ஞம் துறைமுகம் கேரளாவின் தொழில்மய முயற்சியில் இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கத்தின் இமாலய சாதனை எனில் மிகை அல்ல. பினராயி விஜயன் அரசாங்கம் தொழில் முன் னேற்றத்துக்காக மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த துறைமுகம் மட்டு மல்லாது புத்தாக்கத் தொழில்கள்/மென் பொருள் நிறுவனங்கள் என பல முயற்சிகளை இடதுசாரி அர சாங்கம் சாதித்துள்ளது. தென்னிந்தியாவின் தொழில் மய வரைபடத்தில் கேரளா ஒரு ஆழமான முத்தி ரையை பதிக்கத் தொடங்கியுள்ளது எனில் மிகை அல்ல.  

துறைமுகத்தின் முக்கியத்துவம்

பினராயி அரசாங்கத்தின் தொழில்மய முயற்சி களின் நீட்சியே விழிஞ்ஞம் துறைமுகம் திட்டம். விழிஞ்ஞம் துறைமுகம் பல இயற்கை சாதகங்களை கொண்டுள்ளது. இதன் இயற்கை ஆழம் மிகவும் அதிகமானது. மேலும் கிழக்கு- மேற்கு கடல் வழியை இணைக்கும் சர்வதேசப் பாதையிலிருந்து இது மிகவும் குறைவான தூரத்தில் உள்ளது. இதனை கீழ்க் கண்ட விவரங்களிலிருந்து அறியலாம்: சர்வதேசத் துறைமுகங்களான துபாய்/ ஷாங்காய்/ ஹாங்காங்/ கொழும்பு/ சிங்கப்பூர் ஆகியவற்றுக்கு விழிஞ்ஞம் துறைமுகம் கடும் போட்டியை தரும் என்பது தெளிவு.  தோழர் இ.கே. நாயனார் அவர்கள் முதல்வராக இருந்த பொழுது இந்த திட்டம் உரு வானது. பின்னர் இடது ஜனநாயக முன்னணி அர சாங்கத்தின் பொழுது இந்த திட்டம் வலுவாக முன்னெ டுக்கப்பட்டு 11.08.2010 அன்று முதல்வர் தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக பணியை தொடங்கிவைத்தார். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் உம்மன்சாண்டியும் பங்கேற்றார். அப்பொழுது இந்த திட்டத்தின் முதல் பகுதி  முற்றிலும் அரசு நிறுவனமாகவே உருவாக்கப்பட்டது. கட்டுமா னப் பணிக்காக வெளியிடப்பட்ட டெண்டர் மூலம் சீனாவின் இரு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால் ஒன்றிய அரசு தேச பாதுகாப்பு காரணங்க ளை கூறி நிராகரித்தது. எனவே மறு டெண்டரில் ஆந்தி ராவைச் சேர்ந்த ஒரு உள்நாட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து டெண்டரை இழந்த ஒரு சிறிய நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனால் இந்த வழக்குக்கு பின்னால் விழிஞ்ஞம் துறைமுகத்தால் பாதிக்கப்படும் சில அந்நிய சக்திகளும் இருந்தன என செய்திகள் வெளியாகின.

உம்மன்சாண்டி அரசாங்கத்தின் தவறான அணுகுமுறை

2011ஆம் ஆண்டு பதவியேற்ற உம்மன்சாண்டி அரசாங்கம் நீதிமன்ற வழக்கை முடிவுக்கு கொண்டு வரவும் இந்த திட்டத்தை செயல்படுத்தவும் மூன்று ஆண்டுகள் எந்த அக்கறையையும் காட்டவில்லை. ஒருபுறம் விழிஞ்ஞம் துறைமுகம் தேவை என மக்கள் இயக்கங்கள் நடந்தன. மறுபுறத்தில் 2014இல் மோடி அரசாங்கம் அமைந்த பின்னணியில் அதானி குழுமம் துறைமுகங்களை கைப்பற்றுவதில் முனைப்புக் காட்டியது. மக்கள் இயக்கம் நிர்ப்பந்தம் காரணமாக 2015ஆம் ஆண்டு உம்மன்சாண்டி அரசாங்கம் மறு டெண்டர் வெளியிட்டது. ஆனால் திட்டம் அரசுக்கு சொந்தம் என்பதை மாற்றி PPP(Public Private Project) அதாவது - அரசு தனியார் கூட்டுத் திட்டம் என உம்மன்சாண்டி அரசாங்கத்தால்  மாற்றப்பட்டு அதானி குழுமம் பங்குதாரராக 2015இல் தேர்வு செய் யப்பட்டது. மேலும் பல பாதக அம்சங்களையும் உம்மன்சாண்டி அரசாங்கம் ஏற்றுக்கொண்டது கூடுதல் கொடுமை! 2016ஆம் ஆண்டு இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் அமைந்த பொழுது இந்த திட்டம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகி தொடக்கப்பணிகள் கணிச மாக நடந்திருந்தன. எனவே வேறு வழியின்றி அதானி குழுமத்தின் பணியை தொடர வைக்க வேண்டிய தேவை கீழ்க்கண்ட காரணங்களால் உருவானது: Hமோடி அரசாங்கம் தனது கூட்டாளிக்கு (அதானிக்கு) ஏற்படும் நட்டத்தை அனுமதிக்காது. Hஅதானி குழுமம் நீதிமன்றத்தை நாடினால் தீர்ப்பு சாதகமாக கிடைக்கும் சூழல்! Hநீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக திட்டம் மேலும் காலதாமதம்! Hகேரள மக்கள் விழிஞ்ஞம் துறைமுக திட்டத்தை தமது கனவுத் திட்டமாக உணர ஆரம்பித்தனர். எந்த ஒரு தாமதமும் மக்களிடம் அதிருப்தியை உருவாக்கும். எனவே இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் அதானி குழுமத்தின் பங்குடன் இந்த திட்டத்தை தொடர்ந்தது. இந்த திட்டத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 8867 கோடி. கேரள அரசாங்கம்-63%; ஒன்றிய  அரசாங்கம்-9%; அதானி குழுமம்-28% என பங்குதாரர்களாக உள்ளனர். இந்த திட்டத்தை எதிர்த்து சில தேவாலயங்களின் தலைமையில் மீனவர்க ளில் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தினர். தேவால யங்களை எதிர்த்து சங் பரிவாரத்தினர் எதிர் போராட் டங்களை நடத்தினர். முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நேரடியாக தலையிட்டு சமரசப் பேச்சு வார்த்தை நடத்தி மீனவர்களின் போராட்டத்தை முடி வுக்கு கொண்டுவந்தார்.  2018ஆம் ஆண்டே முடிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த திட்டத்தை ‘Force Majeure’ எனும்  கடவுளின் செயலால் நடக்கும் தாமதங்கள்(கனமழை/கோவிட்) எனும் பிரிவை பயன்படுத்தி அதானி குழுமம் திட்டத்தை தாமதப்படுத்தியது. எனவே இடது ஜன நாயக முன்னணி அரசாங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் அதானி குழுமத்துக்கு நிதி ஒதுக்குவதை பினராயி அரசாங்கம் நிறுத்தியது. அதற்கு பின்னர்தான் பணிகள் வேகமாக நடந்தன. திட்டங்களை காலத்தே முடிப்பதில் வல்லவர் என கருதப்படும் வி.என்.வாசவன் துறைமுக அமைச்ச ராக நியமிக்கப்பட்டார். 2024 ஜூலை மாதம் விழிஞ்ஞத் துக்கு முதல் தாய்க்கப்பல் வருகை தந்தது. செப்டம்பர் மாதம் முழு அளவில் இந்த துறைமுகம் செயல்படத் தொடங்கும். விழிஞ்ஞம் இந்தியாவின் முதல் தானி யங்கி துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துறைமுகம் கேரள மக்களின் கனவுத்திட்டம் மட்டு மல்ல; மாநிலத்தின் தொழில்மயத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சியில் வஞ்சிக்கப்பட்ட கேரளம்

தமிழ்நாடு/ தெலுங்கானா/ ஆந்திரா / கர்நாடகா  ஆகிய மாநிலங்களுடன் ஒப்பிடும் பொழுது தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய மாநிலமாக கேரளம் உள்ளது. கல்வி/ மருத்துவம்/ சுகாதாரம் உட்பட பல  சமூக குறியீடுகளில் கேரளம் இமாலய சாதனை படைத்திருந்தாலும் தொழில் வளர்ச்சியில் அத்தகைய சாதனைகள் கேரளாவுக்கு கை கூடவில்லை. அதற்கு மிக முக்கியக் காரணம் கடந்த கால மற்றும் இன்றைய ஒன்றிய அரசுகளின் மாற்றாந்தாய் அணுகுமுறையும் தவறான காரணங்களுக்காக புறக்கணிக்குமாறு வழிகாட்டப்பட்ட தனியார் துறையின் பாராமுகமும் ஆகும். பரம்பிகுளம்-ஆழியாறு திட்டம் தமிழ்நாட்டுக்கு கிடைக்க தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் முக்கிய பங்கும் இ.எம்.எஸ். அரசாங்கத்தின் அணுகுமுறையும் முக்கிய காரணங்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த திட்டம் குறித்தான ஒப்பந்தம் கையெ ழுத்தான பின்னர் இ.எம்.எஸ். அவர்கள் சென்னை யில் தமிழ்நாட்டு முதலாளிகளை சந்தித்தார். கேரளா வில் ரப்பர் பொருட்களுக்கான ஒரு தொழிற்சாலை அமைக்குமாறும் கேரள அரசாங்கம் முழு ஒத்து ழைப்பு நல்கும் எனவும் கூறினார். ஆனால் எந்த முதலாளியும் முன்வரவில்லை. 1950களின் இறுதியில் நேரு அரசாங்கம் மின் உற்பத்தி சாதனங்கள் செய்வதற்கு பெல்(BHEL) எனும் பெயரில் ஆலைகளை உருவாக்குவதற்கு திட்ட மிட்டது. அதில் ஒன்று தென்னிந்தியாவில் என முடி வானது. இந்த ஆலையை பெறுவதற்கு தமிழ்நாடு/ ஆந்திரா/ கேரளம்/கர்நாடகா ஆகியவை போட்டி யிட்டன. முதல் கட்டத்திலேயே இந்த பட்டியலிலிருந்து கேரளா நீக்கப்பட்டது. ஏனெனில் கேரளாவில் கம்யூ னிஸ்ட் இயக்கம் வலுவாக உள்ளது எனவும் அங்கு  போராட்டங்கள் நடத்தி தொழில் நடத்த கம்யூனிஸ்டு கள் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் பொய் கற்பிதம் பரப்பப்பட்டது. இன்று தமிழ்நாடு மூன்று ‘பெல்’ ஆலைகளையும், கர்நாடகா இரண்டு ‘பெல்’ ஆலைகளையும், ஆந்திரா ஒரு ‘பெல்’ ஆலையும் மிகப்பெரிய ஆராய்ச்சி பிரிவையும் பெற்றுள்ளன. பின்னர் ஜான்சி/ ஜெகதீஷ்பூர்/ ருத்ராபூர்/ கோவிந்த வால் என பல இடங்களில் பெல் ஆலைகள் தொடங்கப் பட்டன. ஆனால் கேரளாவுக்கு ஒரு ஆலை கூட ஒதுக்கப் படவில்லை.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பாலக்காடு ரயில்வே கோட்டத்தை பிரித்து சேலம் கோட்டம் உருவாக்க முயற்சிகள் நடந்தன. ஏற்கெனவே தொழில் வளர்ச்சி குறைவாக இருந்த காரணத்தால் அன்றைய தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் அர சாங்கம் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தது. பின்னர் சமரச முயற்சியாக சேலம் கோட்டம் உருவாக்குவது எனவும் கேரளாவுக்கு ரயில் பெட்டி தொழிற்சாலை ஒதுக்கீடு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. எனினும் இன்றுவரை ரயில் பெட்டி தொழிற்சாலை கேரளாவுக்கு வரவில்லை. பாலக்காடு ரயில்வே கோட்டத்தை மீண்டும் பிரித்து ஒரு பகுதியை மங்களூர் கோட்டமாக மாற்ற மோடி அரசாங்கம் முயற்சி செய்கிறது. இதற்கு கேரளா அரசாங்கம் கடு மையாக ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இவை யெல்லாம் தொழில் வளர்ச்சியில் கேரளா சந்திக்கும் சவால்களை வெளிப்படுத்தும் உண்மைகள் ஆகும்.  

4ஆம் தொழிற்புரட்சியின் மையமாக கேரளா

இத்தகைய சூழலில்தான் 2016இல் ஆட்சி அமைத்த பினராயி விஜயன் அரசாங்கம் கேரளாவின் தொழில்  முன்னேற்றத்துக்கு சில முக்கியமான முனைப்பு களை முன்னெடுத்தது. கேரளாவில் உள்ள மத்திய பொதுத்துறைகளான இந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட்/  இன்ஸ்ட்ருமெண்டேஷன் லிமிடெட் மூடப்படுவதை தடுத்து இடது ஜனநாயக முன்னணி அரசாங்கமே ஏற்றுக்கொண்டு புனரமைத்தது. மூடப்படும் தருவாயில் இருந்த ஒன்றிய அரசின் உரம் தயாரிக்கும் பாக்ட் (FACT) நிறுவனம் பினராயி விஜயன் அரசின் தொடர் முயற்சியால் மீண்டும் செயல்படத் தொடங்கி யுள்ளது. நட்டத்தில் இயங்கிய 20க்கும் மேற்பட்ட மாநில பொதுத்துறைகளை தொழிலாளர் ஒத்துழைப்போடு லாபத்தில் இயங்கவைப்பதில் இடதுசாரி அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது. ஒன்றிய அரசும் பல மாநில  அரசுகளும் தனியார்மய திசையில் பயணிக்கும் போது, கேரளாவின் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் பொதுத்துறைகளை வலுவாக்கியது.  ஏற்கெனவே கொச்சி விமான நிலையத்தை நடத்தி வரும் மாநில அரசாங்கம் கூடுதலாக கண்ணூர் விமான நிலையத்தையும் செயல்படுத்தியுள்ளது.  துபாயைச் சேர்ந்த ‘Zettfly’ எனும் நிறுவனத்தின் “ஏர் கேரளா” எனும் விமான சேவையும் விரைவில் தொடங்கப் படவுள்ளது. தனியார்துறையில் மூடப்பட்ட பல முந்திரி தொழிற்சாலைகளையும் பினராயி அரசாங்கம் திறக்க வைப்பதில் வெற்றி கண்டது. கடந்த 5 ஆண்டு களில் ரூ.91,575 கோடி முதலீடும் அதன் பயனாக 5 லட்சம் வேலை வாய்ப்புகளும் பினராயி விஜயன் ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ளன. பெரும் கார்ப்ப ரேட்டுகள் முதலீடு செய்ய முன்வராத சூழலில் சிறு/நடுத்தர தொழிற்சாலைகளை உருவாக்குவதில் கூடுதல் கவனத்தை கேரள அரசாங்கம் செலுத்து கிறது. மேலும் ரூ.72,000 கோடி மதிப்புள்ள பசுமை ஹைட்ரஜன் மற்றும் அம்மோனியா ஆலைகளுக்கான முதலீடு திட்டங்களும் அமலாக்கப்பட உள்ளன.  தொழிற்சாலைகளுக்கு  முக்கியத்துவம் தரும் அதே சமயம் புதிய தொழில்களில் கூடுதல் கவனம் செலுத்துவது என முடிவு செய்யப்பட்டது. உதார ணத்துக்கு கேரளாவில் உள்ள நீண்ட கடற்கரை யையும் நீர் நிலைகளையும் கணக்கில் கொண்டு “வாட்டர் மெட்ரோ” திட்டம் அமலாக்கப்பட்டது. இந்தி யாவிலேயே முதன் முதலாக உருவான இந்த திட்டம் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. தொ ழிற்சாலைகளை தொடங்க பெரும் கார்ப்பரேட்டுகள் முன்வராத சூழலில் கேரள அரசாங்கம் தகவல் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தியது. ஸ்டார்ட்-அப் எனும் புத்தாக்க தொழில்களில் கேரளா இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்றுள்ளது. ஐ.பி.எம். நிறுவனத்துடன் இணைந்து கேரள அரசாங்கம் செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாட்டை கொச்சி யில் நடத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் ரோபோ தொழில்நுட்ப மாநாடும் நடத்தப்பட்டுள்ளது.  கேர ளாவை 4ஆவது தொழிற்புரட்சியின் தேசிய மையமாக மாற்றுவது என்பது கேரள இடது ஜனநாயக முன்னணி  அரசின் இலக்கு ஆகும். கேரளாவின் தொழில்மய முயற்சிகள் குறித்து சமீபத்தில் நடந்த கட்சியின் மாநில மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.  மாநில அரசாங்கத்தை எதிரிபோலப் பார்க்கும் ஓர் ஒன்றிய அரசின் கீழ் மிகக்குறைந்த அதிகாரங்க ளைக் கொண்ட ஒரு இடதுசாரி மாநில அரசாங்கம் தொழில் வளர்ச்சிக்கு எத்தகைய சிரமங்களையும் சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது என்ப தற்கு கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் அனுபவம் ஓர் உதாரணம். இந்த சவாலை பினராயி விஜயன் தலைமையிலான அரசாங்கம் மக்களின் துணையுடன் வெல்லும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.