ஸ்கேன் இந்தியா
அவலம்
குழந்தை அழுகிறது. ஆனால், முனகலாகக் கேட்கிறது. ஒரு பிஞ்சுக்கை அந்த ஈர மண்ணில் இருந்து வெளியே நீட்டி துடித்துக் கொண்டிருந்ததை ஓடிச் சென்று பார்த்த, ஒரு இளைஞர் அலறி ஊரைக் கூட்டியிருக்கிறார். வேகமாக மண்ணை விலக்கிப் பார்த்தால் பிறந்து 15 நாளே ஆன அந்தக்குழந்தை மூச்சுவிடத் திணறிக் கொண்டி ருந்தது. ஆடு, மாடுகளை ஓட்டிச் சென்ற அந்த இளை ஞர் பார்த்ததால் குழந்தையைக் காப்பாற்றி விட்டார்கள். உத்தரப்பிரதேச மாநிலம், ஷாஜகான்பூருக்கு அருகில் உள்ள கோஹவார் கிராமத்தில்தான் இந்த அவலம் நேர்ந்துள்ளது. பெண் குழந்தைகளைக் குடும்ப அவ மானமாகக் கருதும் நிலை இன்னும் உத்தரப்பிரதேசத்தில் நிலவுகிறது. மாநில அரசு திட்டங்களை அறிவிக் கிறதே யொழிய, அவற்றால் என்ன நடந்தது என்று சொல்வதில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
புலம்பல்
இறால் ஏற்றுமதியில் மட்டும் 25 ஆயிரம் கோடி ரூபாய் போச்சு என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புலம்பியுள்ளார். 50 விழுக்காடு ஆர்டர்கள் ரத்தாகிவிட்டன. உங்கள் ஆதரவில்தான் ஆட்சி உள்ளது என்று சிலர் இவரைத் தூண்டி விட்டுப் பார்த்திருக்கிறார்கள். அதான்.. கடிதம் எழுதி யிருக்கிறேனே என்று சமாளிக்கிறார். நாட்டின் இறால் ஏற்றுமதியில் 80 விழுக்காடு ஆந்திராவில் இருந்துதான் செய்யப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள் ஏற்றுமதியில் 34 விழுக்காடு ஆந்திராவுடையதாகும். 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தொழிலை நம்பியுள்ளனர். முதல்வர் இன்னும் கொஞ்சம் சத்தமாகப் பேசலாமே என்றதற்கு, ஜன்னல் வழியாகப் பார்த்தால் போகிறவர், வருகிறவர் எல்லாமே சிபிஐ, ஈ.டி., மாதிரியே இருக்குனு மூடியே வெச்சுருக்குறார் என்று தலைமைச் செயலக ஊழியர்கள் கிசுகிசுத்து சிரித்துக் கொள்கிறார்கள்.
“பவுன்சர்கள்”
மாணவர் பேரவைத் தேர்தலில் “பவுன்சர் களுக்கு” என்ன வேலை? என்று தில்லி உயர்நீதிமன்றம் விளாசியிருக்கிறது. செப்டம்பர் 18 ஆம் தேதி தில்லி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பு என்.எஸ்.யூ.ஐ மற்றும் பாஜக சார்பு ஏ.பி.வி.பி. ஆகிய இரண்டு அமைப்புகளும் பணத்தை வாரியிறைத்து வருகின்றன. பெரிய, பெரிய நட்சத்திரங்கள் தங்களின் பாதுகாப்புக்காக வைத்திருக்கும் “பவுன்சர்களை” அழைத்துக் கொண்டு பல்கலைக்கழக வளாகத்தில் பிரச்சாரம் நடக்கிறது என்று ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கை விசாரிக்கையில், ஆள்பலம், பணபலம் என்று மாணவர் அரசியல் இருக்கிறது. இதைத்தடுக்க ஏதாவது செய்ய வேண்டும். கடந்த ஆண்டும் இப்படித்தான் இருந்தது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மாற்றாக, இடதுசாரிகள் மாணவர் அமைப்புகள் களத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“வேகம்..?”
வேலைக்கான சந்தை நல்ல நிலையில் உள்ளது. வாய்ப்புகள் வேகம் பிடித்துள்ளன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் புள்ளிவிபரங்களோ வேறு கதையைச் சொல்கின்றன. வேலையின்மை விகிதம் குறைந்திருப்பதாகச் சொன்னாலும், பெண்களின் வேலையின்மை பெருகி யிருக்கிறது. கடந்த நான்கு மாதங்களில் மூன்று முறை, பெண்களின் வேலை யின்மை அதிகமாகியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், 15 வயது முதல் 29 வயது வரையிலான இளம் பெண்களில் 21.4 விழுக்காட்டினர் வேலையில்லாமல் உள்ளனர். நகர்ப்புறத்தில் 25.7 விழுக்காடாக இருப்பது, அவர்கள் சந்திக்கும் பெரும் நெருக்கடியைக் காட்டுகிறது. சந்தை வேகம் பிடித்திருப்பதே இவ்வளவு நெருக்கடியைக் கொடுக் கிறது என்றால், மந்தமானால் என்ன ஆகும் என்று சில ஆய்வாளர்கள் கேட்கிறார்கள்.