தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் : சில குறிப்புகள்! - அ. அன்வர் உசேன்
1 தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்றால் என்ன? வாக்காளர் பட்டியலில் உள்ள ஒவ்வொருவரது தக வல்களையும் தீவிரமாக சரிபார்ப்பது தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என வரையறுக்கப்பட்டுள்ளது.
2 இதற்கு முன்பு எத்தனை முறை இதுநடந்துள்ளது? பீகார் திருத்தம் உட்பட 8 முறை நடந்துள்ளது.
3 இப்பொழுது மட்டும் ஏன் இவ்வளவுஎதிர்ப்புகள்? முன்பெல்லாம் தேர்தல் ஆணைய அலுவலர்கள் வீடுகளுக்கு வந்து இறந்தவர்கள் அல்லது வீடு மாறியவர்கள் போன்ற விவரங்களை கேட்டு பதிவு செய்து கொள்வார்கள். பட்டியலைச் சரி செய்யும் பணி அலுவலர்களுடையதாக இருந்தது. ஆனால் இப்பொழுது புதிதாக வாக்காளர்கள் தம்முடைய விவரங்கள் பலவற்றையும் தெரிவிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். மேலும் குடியுரிமையும் சரிபார்க்கப்படும் என ஆணையம் அறிவித்துள்ளது. எனவேதான் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
4 தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஏன் எதிர்க்கின்றனர்? பீகாரின் அனுபவத்திலிருந்து தமிழ்நாட்டில் மட்டுமல்ல; கேரளா போன்ற பல மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சட்டமன்றத் தேர்தல்கள் மிக சமீபத்தில் உள்ளபொழுது, இப்பொழுது ஏன் அதீத அவசரத்துடன் இது அமலாக்கப்பட வேண்டும் எனும் கேள்வியும் உள்ளது. இந்த காலகட்டத்தில் பருவமழை, அரையாண்டு தேர்வுகள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளும் குறுக்கிடுகின்றன. எனவேதான் தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தேர்தலுக்குப் பின்பு அமலாக்கப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் கோருகின்றன.
5 இந்த பட்டியல் திருத்தம் அல்லது புதிய பட்டியலுக்கு தேர்தல் ஆணையம் சொன்ன காரணம் என்ன? * வேகமான நகரமயமாக்கல் * இடப்பெயர்தல் * தகுதியுள்ள புதிய வாக்காளர்கள் சேர்த்தல் * இறந்தவர்களின் பெயரை நீக்குதல் * சட்ட விரோதமாக குடிபுகுந்த வாக்காளர்களைக் கண்டறிதல் - ஆகிய காரணங்களுக்காக இது அமலாக்கப்படுகிறது என தேர்தல் ஆணையம் கூறுகிறது.
6 வாக்காளர் பட்டியல் திருத்தமா? புதிய பட்டியலா? “விசேட தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்” பல பிரச்சனைகளை எழுப்பியுள்ளது. அதில் மிக முக்கியமானது, இது பட்டியல் திருத்தமா அல்லது புதிய பட்டியலா என்பதாகும். ஏனெனில் இதுவரை இத்தகைய முன்னெடுப்பை தேர்தல் ஆணையம் நடத்தியது இல்லை. “விசேட வாக்காளர் பட்டியல் திருத்தம்” நடந்துள்ளது. “தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்” நடந்துள்ளது; ஆனால் “விசேட தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்” நடந்தது இல்லை. உண்மையில் இது திருத்தம் இல்லை. மாறாக புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு ஆகும். SIR பணி தொடங்கியவுடன் ஏற்கெனவே உள்ள பட்டியல் பயன்படுத்த முடியாதவாறு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய படிவம் தரப்படுகிறது. ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது பெயர்/ முகவரி போன்றவை அச்சிடப்பட்டு வாக்காளருக்குத் தரப்பட்டு அவர்கள் அந்தப் படிவத்தில் கையெழுத்திடக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எனவே இது திருத்தம் இல்லை; புதிய பட்டியலுக்கு இணையானது ஆகும்.
7 SIRஐ நாம் அடிப்படையில் எதிர்க்கிறோமா? நிச்சயமாக இல்லை. தேர்தல் வாக்காளர் பட்டியல் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது. ஆனால் அதனை நிதானமாகவும், வயது பூர்த்தி செய்த அனைத்து குடிமக்களும் வாக்காளர்களாக ஆக வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையிலும் அமலாக்கப்பட வேண்டும் என்பதுதான் கோரிக்கை. அதீத அவசரம் தேவையில்லை. SIR என்பது வாக்காளர்களை இணைப்பதை மைய நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்; வாக்காளர்களை நீக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது.
8 ஒரு வாக்காளர் என்ற முறையில் நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் SIRஐ அதீத அவசரத்துடன் அமலாக்குவதை எதிர்க்கிறோம். எனினும் அதே சமயத்தில் நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்வது மிக அவசியம். மேலும் இதில் மற்ற வாக்காளர்களுக்கு உதவுவதும் அவசியம்.
9 அரசியல் கட்சியின் வாக்குச் சாவடி முகவரும் இதில் உதவ முடியுமா? ஆம். அங்கீகாரம் பெற்ற முகவர் உதவ முடியும்.
10 SIR தற்போதைய வடிவில் ஏன் நியாயமற்றது? வாக்குரிமையை நிரூபிக்கும் பொறுப்பு அரசிடமிருந்து குடிமக்களுக்கு மாற்றப்படுகிறது. ஏற்கெனவே அந்தப் பொறுப்பு அரசிடம் இருந்தது. அரசு அதிகாரி ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து பட்டியலைச் சரிபார்த்துச் செல்வார். ஆனால் இப்பொழுது வாக்காளர் முழு விவரங்களையும் பூர்த்தி செய்து தர வேண்டும். தவறினால் வாக்குரிமை பறிபோகும்.
11 வேறு நாடுகளில் என்ன நிலைமை? அமெரிக்கா போன்ற நாடுகளில் பொறுப்பு குடிமகனுக்கு என வரையறுத்துள்ளது. அதனால்தான் அங்கு ஏராளமான கருப்பின மற்றும் ஏனைய சிறுபான்மை மக்கள் வாக்குரிமை இழக்கின்றனர். அந்த நிலை இங்கு இருக்கக் கூடாது என்பதற்காகவும், வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை இருப்பதை உத்தரவாதப்படுத்துவதற்காகவும் வாக்குரிமை நிரூபிக்கும் பொறுப்பு அரசுக்கு என நிர்ணயிக்கப்பட்டது. இப்பொழுது அது குடிமக்களின் பொறுப்பு என மடைமாற்றப்படுகிறது.
12 வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் போனால் அதன் மோசமான விளைவு என்ன? ஒரு குடிமகன் தேர்தல் ஆணையம் கோரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிடில் நீங்கள் வாக்குரிமை மட்டுமல்ல; குடியுரிமையையும் இழக்கும் அபாயம் நேரிடும்.
13 இதனை விளக்க முடியுமா? நீங்கள் ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாவிட்டால் அல்லது நீங்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் அதிகாரிகளுக்குத் திருப்தியை ஏற்படுத்தாவிட்டால் உங்கள் குடியுரிமை கேள்விக்குள்ளாக்கப்பட்டு உள்துறை அமைச்சகத்துக்குத் தகவல் தரப்படும். பின்னர் உள்துறை அமைச்சகம் சார்பாக உங்களது குடியுரிமை மீண்டும் சரிபார்க்கப்படும். நீங்கள் நிரூபிக்காவிட்டால் குடியுரிமை இழப்பீர்கள். இந்தியாவை விட்டு வெளியேறுமாறு சொல்லப்படும் அபாயமும் உண்டு.
14 இது அதீத பயமுறுத்தல் இல்லையா? இதுதான் இன்று அசாமில் நடந்து கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கானவர்கள் குடியுரிமை இழந்துள்ளனர். குறிப்பாக தலித்/ பழங்குடியினர்/ சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் பங்களாதேஷ் மற்றும் மியான்மர் எல்லைகளுக்குள் துரத்தப்பட்டுள்ளனர்.
15 அப்படியானால் இது வாக்குரிமையும் குடியுரிமையும் இணைந்த பிரச்சனையா? அப்படியேதான் ஒன்றிய அரசாங்கம் தேர்தல் ஆணையம் மூலம் இந்தச் சிக்கலை உருவாக்கியுள்ளது.
16 குடியுரிமையைத் தீர்மானிக்கும் உரிமை தேர்தல் ஆணையத்துக்கு உண்டா? நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அந்த உரிமை தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. உள்துறை அமைச்சகம்தான் அதனைச் செய்ய வேண்டும். இதனை கடந்த ஜூன் மாதம் நடந்த வழக்கு விசாரணையின் பொழுது உச்ச நீதிமன்றமும் வாய்மொழியாக உறுதி செய்துள்ளது. 1993 ஆம் ஆண்டு ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக, குடியுரிமையைத் தீர்மானிக்கும் பணி தேர்தல் ஆணையத்தினுடையது அல்ல எனக் கூறியுள்ளது. 2003 ஆம் ஆண்டு SIR அமலாக்கப்பட்ட பொழுது தேர்தல் ஆணையமே குடியுரிமை தீர்மானிக்கும் வேலை தன்னுடையது அல்ல எனத் தெளிவுபடுத்தியது. ஆனால் இப்பொழுது தனது நிலையை மாற்றிக்கொண்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் பொழுது வாக்காளர்கள் தமது குடியுரிமையை நிரூபிப்பது அவர்கள் கடமை எனவும், குடியுரிமைக்கான நிரூபணத்தைக் கோரும் உரிமை தமக்கு உண்டு எனவும் தேர்தல் ஆணையம் கூறியது. அப்பொழுது குறுக்கிட்ட நீதியரசர் துலியா, “அந்த வாதத்தை நீங்கள் தொடர விரும்புகிறீர்களா; குடியுரிமையைப் பரிசோதிக்கும் பணி உங்களுடையது அல்ல” என வாய்மொழி எச்சரிக்கை செய்தார். எனினும் இதனை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.
17 உச்சநீதிமன்ற வழக்கு என்னஆனது? நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும் தமிழ்நாடு, கேரளா உட்பட பல மாநிலங்களில் SIR அமல்படுத்தப்படுகிறது.
18 இதனை ஆதரிக்கின்ற கட்சிகள் எவை?அவர்களின் நோக்கம் என்ன? பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க. மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இதனை ஆதரிக்கின்றன. அவர்களின் நோக்கம் என்பது ஒன்றிய ஆளும் கட்சிக்கு தமிழ்நாட்டில் சாதகமான சூழலை உருவாக்குவதுதான்! ஆனால் தேர்தல் ஜனநாயகம் ஒட்டு மொத்தமாகச் சிதைவுக்கு உள்ளாவது குறித்து அவர்கள் கவலை கொள்ளவில்லை.
19 SIRஐ நாம் எதிர்ப்பதால் படிவங்கள் பூர்த்தி செய்வதைப் புறக்கணிக்கலாமா? இல்லை. அப்படிப் புறக்கணிக்கக் கூடாது. SIRஐ கடுமையாக எதிர்ப்பது ஒருபுறம். மற்றொருபுறம் நமது வாக்குரிமையைக் காக்க வேண்டியுள்ளது. எனவே நாம் இதனைப் புறக்கணிப்பது சரியான அணுகுமுறை அல்ல.
20 தேர்தல் ஆணையம் ஆதார் அட்டையை ஆதாரமாக ஏற்றுக் கொள்கிறதா? தொடக்கத்தில் ஆணையம் ஆதார் அட்டையை முற்றிலும் ஏற்கவில்லை. உச்ச நீதிமன்றம் ஆணைக்குப் பின்னர் ஏற்றுக் கொள்கிறது. இப்பொழுதும் அது உங்களின் அடையாளத்துக்காக மட்டுமே ஏற்றுக் கொள்கிறது எனவும், அது குடியுரிமைக்கோ அல்லது அதில் குறிப்பிடப்படும் பிறந்த தேதியோ அங்கீகரிக்கப்படாது எனவும் சொல்கிறது.
21 பீகாரில் SIRக்கு பின்னர் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்? சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டனர் எனவும், 36 லட்சம் பேர் நிரந்தரமாக இடம் மாறிவிட்டனர் அல்லது கண்டு பிடிக்க இயலவில்லை எனவும், 7 லட்சம் பேர் வாக்களராகப் பதிவு செய்ய விருப்பம் இல்லை எனக் கூறினர் எனவும் ஆணையம் கூறுகிறது.
22 இந்தத் தரவுகளில் தவறு உள்ளதா? ஆம் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இறந்தவர்களின் எண்ணிக்கை பொதுவான இறப்பு விகிதாச்சாரத்தைவிட அதிகமாக உள்ளது. மேலும் இடம் மாறிய 36 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்படுவதற்கு முன்பு முறையான ஆய்வு செய்யப்பட்டதா எனும் கேள்வியும் முன்வந்துள்ளது. ஒரு வாக்காளரின் பெயர் நீக்கப்படுவதற்கு முன்பு அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும். அதற்கான முயற்சி எதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரே மாதத்தில் எப்படி 36 லட்சம் பேரிடம் விளக்கம் கேட்டு ஒரு முடிவுக்கு வர இயலும் என்பது மிகப்பெரிய கேள்வி.
23 வாக்காளர் பட்டியலில் பெயர்கள்நீக்கம் தேர்தல் முடிவுகளைப் பாதிக்குமா? ஆம். நிச்சயமாக. உதாரணத்துக்கு கடந்த தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்யும் பொழுது பீகாரில் குறைந்தபட்சம் 24 தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை, வெற்றியை நிர்ணயித்த வாக்கு வித்தியாசத்தைவிட அதிகம். இதில் 16 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது.
24 பீகார் SIRல் எத்தனை வெளிநாட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்? வெறும் 0.012% மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டனர். இதற்காக அவ்வளவு ஆர்ப்பாட்டங்களையும் பெருமுயற்சிகளையும் ஆணையம் நடத்தியது.
25 பீகாரில் SIR குழப்பத்தை உருவாக்கியதா? ஆம். பல குழப்பங்களை உருவாக்கியது. * 2,92,048 வாக்காளர்களுக்கு இல்ல முகவரி பூஜ்யம் என இருந்தது. * ஒரே வீட்டில் 230 வாக்களர்கள் பதிவு செய்யப்பட்டனர். * சில இடங்களில் பூனை அல்லது நாய் புகைப்படம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
26 நீக்கப்பட்டவர்களில் குறிப்பிட்ட பிரிவினர் அதிகமாக உள்ளனரா? ஆம். உதாரணத்துக்கு வரைவுப் பட்டியலில் நீக்கப்பட்டவர்களில் 24% இஸ்லாமியர்கள். பீகாரில் அவர்களின் மக்கள் தொகை 17%. அதே போல இறுதிப் பட்டியலின் பொழுது நீக்கப்பட்டவர்களில் 36% இஸ்லாமியர்கள். அதே போல ஆண்- பெண் விகிதாச்சாரம் SIRக்கு முன்பு இருந்ததைவிட SIRக்கு பின்பு மோசமாகியுள்ளது. அதாவது பெண்களின் எண்ணிக்கை கூடுதலாகக் குறைந்துள்ளது. இதன் பொருள் என்னவெனில் நீக்கப்பட்டவர்களில் பெண்களின் விகிதாசாரம் அதிகம் என்பதாகும்.
27 பீகார் SIRலிருந்து தமிழ்நாட்டில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவா? சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு பூத் மட்ட அதிகாரி வரும் பொழுதே ஆவணங்களைத் தர வேண்டியது இல்லை; எந்தக் குடும்ப உறுப்பினராவது வேலை நிமித்தமாக அல்லது வேறு காரணத்துக்காக வீட்டில் இல்லை எனில் மற்ற உறுப்பினர்கள் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்; 2003 அல்லது 2004 SIRல் உங்களது வாக்கு இருந்தால் உங்களுக்கு மட்டுமல்ல, குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆவணங்கள் தருவதிலிருந்து விலக்கு உண்டு. இவையெல்லாம் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள். எனினும் ஏதாவது ஒரு காரணத்தால் ஆவணங்களைத் தர இயலாவிட்டால் வாக்குரிமை பறிபோவதும், அதனைத் தொடர்ந்து குடியுரிமை சிக்கலுக்கு உள்ளாகும் ஆபத்தும் அப்படியே உள்ளது.
28 இது என்ன பிரச்சனைகளை உருவாக்கும்? 1987 முதல் 2003 வரை பிறந்தவர்களுக்கு பெற்றோர் இருவரில் ஒருவரின் பிறப்புச் சான்றிதழும், 2003க்கு பின்னர் பிறந்தவர்களுக்கு இரு பெற்றோரின் பிறப்புச் சான்றிதழும் கேட்கப்படுகிறது. பெற்றோர்களின் பிறப்புச் சான்றிதழ் குழந்தைகளுக்கு எப்படி கிடைக்கும்? ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர்தான் பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. இதனையே நீதியரசர் துலியா, தன்னிடம் கூட தனது பெற்றோரின் சான்றிதழ்கள் இல்லை; அவற்றை ஆணையம் கேட்டால் உடனடியாகத் தர இயலாது; எனக்கே இந்த நிலை எனில் சாதாரண மக்களின் நிலை என்ன என நீதிமன்றத்தில் கேட்டார்.
29 ஏன் தேர்தல் ஆணையம் இப்படித் தானடித்த மூப்பாக செயல்படுகிறது? இதுதான் அனைவரும் எழுப்பும் கேள்வி. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய அமைப்பு தேர்தல் ஆணையம். தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்தும் கடமை ஆணையத்துக்கு உண்டு. ஆனால் சில ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக வலுவான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்று தேர்தல் ஆணையமும் ஒன்றிய அரசின் பணியாளாக மாறிவிட்டதோ எனும் கேள்வி முன்வைக்கப்படுகிறது.
30 தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசின் பணியாளாக மாறிவிட்டது என்பதற்கு என்ன அடிப்படை? கடந்த பல தேர்தல்களில் நடத்தை விதிகளை அமலாக்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டியது. பிரதமரும் உள்துறை அமைச்சரும் மத அடிப்படையில் பேசிய பொழுது ஆணையம் அதனை கண்டுகொள்ளவில்லை. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் புல்வாமா தாக்குதலைத் தேர்தல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திய பொழுதும் ஆணையம் மௌனம் காத்தது. மேலும் ஆணையர்களை நியமிக்கும் அதிகாரம் பிரதமரின் கையில் மடைமாற்றப்பட்டுள்ளது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்து பல சந்தேகங்களுக்கு ஆணையம் பொருத்தமான விளக்கம் தர மறுக்கிறது. ஆயிரக்கணக்கான மின்னணு இயந்திரங்கள் எங்கு உள்ளன எனும் தகவல்கள் இல்லை. பழுதுபார்க்க உற்பத்தி செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு அவை அனுப்பப்படவில்லை. அவை எங்கு உள்ளன எனும் தகவல்கள் ஆணையத்திடம் இல்லை; ஆணையம் தெளிவாகப் பதில் அளிக்க மறுக்கிறது. தேர்தல் வாக்காளர் பட்டியலில் பல முறைகேடுகள் அம்பலப்பட்டு வருகின்றன. இவைபற்றி ஆணையம் சரியான விளக்கங்களைத் தர இயலவில்லை. இவையெல்லாம் ஆணையத்தின் பாரபட்சத் தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது. இதன் காரணமாக ஆணையத்தின் நம்பகத்தன்மை சரிவுக்கு இட்டுச் சென்றுள்ளது.
31 வெளி மாநில வாக்காளர்கள் இங்கு சேர்க்கப்படும் அபாயம் உள்ளதா? அத்தகைய அபாயம் இல்லாமல் இல்லை; குறிப்பாக பல வட மாநிலத்தவர்கள் இங்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வசிக்கின்றனர். அவர்களில் கணிசமானவர்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பவர்கள். அவர்கள் வாக்குகளை இணைப்பதன் மூலம் பா.ஜ.க. பலன் பெற முயல்கிறதா எனும் கேள்வி உள்ளது.
32 இத்தகைய சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும்? நமது மற்றும் நம்முடைய குடும்பத்தினர் மற்றும் கட்சித் தோழர்களின் வாக்குகள் அனைத்தும் சேர்க்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். மேலும் நமது வெகு மக்கள் அமைப்புகளில் உறுப்பினராக உள்ளவர்கள் உட்பட சாதாரண மக்கள் அனைவரின் வாக்குகள் சேர்க்கப்படுவதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். எந்த ஒரு தகுதி வாய்ந்த வாக்காளரும் பட்டியலில் விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் வாக்காளர் பட்டியலில் எவ்வித முறைகேடும் நடக்காமல் இருக்க விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
