articles

img

செவ்வணக்கம் தோழர்.ஜி.மணி...

செங்கொடி இயக்கத்தின் மகத்தான செயல்வீரர் தோழர்.ஜி.மணி மறைந்துவிட்டார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அவருடைய சொந்த ஊர். படிக்கும் காலத்திலேயே இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்து 1972ல் சென்னை வந்த பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். பொன்னேரி தாலுகா செயலாளராகவும் பின்னர் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளராகவும் திறம்பட செயல்பட்டவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்ற முறையில் அரசியல், ஸ்தாபன விஷயங்களில் தனது கருத்துக்களை அழுத்தமாக வெளிப்படுத்துவார். ஏறத்தாழ 40 ஆண்டு காலம் கட்சியின் முழுநேர ஊழியராக செயல்பட்டவர்.

1991ம் ஆண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலமாநாடு கோவில்பட்டியில் நடைபெற்றது. இதில் மாநிலசெயலாளர்களில் ஒருவராக தோழர்.மணி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000ம் ஆண்டில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது. அதில் அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளராக தோழர். மணி தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 2010ம் ஆண்டு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில மாநாடு வேலூரில் நடைபெற்றது. அதில் மாநில பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2018 திருவாரூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக விடுவிக்கப்பட்டார். மரணமடையும் வரை மாநில நிர்வாகிகளில் ஒருவராக செயல்பட்டு வந்தார். அனைத்துப் பொறுப்புகளிலும் அவர் முத்திரை பதித்தார். கரும்பு விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து ஆழமான ஞானமுள்ளவராக அவர் விளங்கினார். அத்தொழில் குறித்த அனைத்து விபரங்களையும் சேகரித்து ஊழியர்களுக்கு போதித்தது மட்டுமல்லாமல் அது குறித்து சிறு நூல் ஒன்றையும் எழுதினார். தமிழ்நாடு முழுவதும் கரும்பு விவசாயிகளை திரட்டுவதில் தனிக்கவனம் செலுத்தினார். 30க்கு மேற்பட்ட சர்க்கரை ஆலைகளில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் உயிரோட்டமாக செயல்பட அவர் அயராது உழைத்தார். இன்று தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகள் மத்தியில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலுமிக்க முதன்மையான அமைப்பாக விளங்குகிறது என்று சொன்னால் அதில் முக்கியப் பங்கு தோழர்.மணி அவர்களுக்கு உண்டு. கரும்பு வெட்டும் தொழிலாளர்களை திரட்டுவதிலும், அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்திற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்று முடிவு செய்த அடிப்படையில் விவசாயிகள் மத்தியில் பணியாற்றிக் கொண்டிருந்த தோழர் ஜி.மணி விவசாய தொழிலாளர் சங்கப் பணிக்கு மாற்றப்பட்டார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. அத்திட்டம் குறித்த விபரங்கள் அனைத்தையும் சேகரித்துமாநிலம் முழுவதுமுள்ள ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க முன்முயற்சி எடுத்தார். அச்சட்டம் குறித்தும் விரிவான நூல் ஒன்றை எழுதி இன்று வரை ஊழியர்களுக்கு வழிகாட்டும் கையேடாக அது விளங்குகிறது. பழமொழியை பயன்படுத்தாமல் அவரால் பேச முடியாது. ஒரு நிமிடம் பேசினாலும் அதில் ஒரு பழமொழி கட்டாயம் இடம் பெறும். எப்போதாவது அரிதிலும் அரிதாக அவர் பழமொழியை சொல்லாமல் சென்றுவிட்டால் அனைவருமே அவரை, ஏன் இன்று என்ன ஆயிற்று என்று கேட்கும் அளவுக்கு பழமொழிகளை இயல்பாகபயன்படுத்தும் திறமை வாய்ந்தவராக இருந்தார். கூட்டங்கள், வகுப்புகள் எதுவாக இருப்பினும் அவரைப்  போலவே எளிமையாக பேசும் வல்லமை படைத்தவர். எந்தவொரு தலைப்பாக இருந்தாலும் அது குறித்து குறிப்புகளை தயார் செய்து சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அவரால் வகுப்பு எடுக்க முடிந்தது. அவருடைய வகுப்பில் பங்கேற்ற தோழர்கள் அனைவருக்கும் இது தெரியும். சிறந்த மொழிபெயர்ப்பாளர். ஏராளமான ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளார்.

தாம்பரத்தில் விவசாய இயக்கத்திற்கு அலுவலகம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து தோழர்.மணி அவர்களுடன் சுமார் 22 ஆண்டு காலம் சேர்ந்து பணியாற்றும் அருமையான வாய்ப்பு கிடைத்தது. அவர் பொன்னேரி தாலுகா செயலாளராக இருந்த போது இந்திய மாணவர் சங்கத்தின் முன்னணி ஊழியர்களுக்கான வகுப்பு பொன்னேரியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. தோழர்.வி.பி.சிந்தன் உள்ளிட்டவர்கள் ஆசிரியர்களாக வந்திருந்தனர். அந்த அரசியல் வகுப்பை சிறப்பாகவும், சிக்கனமாகவும், எதையும் வீணாக்காமல் ஒவ்வொன்றையும் அருகிலிருந்து பார்த்துப் பார்த்து அவர் நடத்தி கொடுத்த பாங்கு என்றென்றும் என் நினைவை விட்டு அகலாது. அப்போதே அவர் ஒரு முன்னுதாரணமான கம்யூனிஸ்ட் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.தமிழக விவசாயிகள் அரங்கத்தின் முக்கிய தூண்களாக விளங்கிய தோழர்.கோ.வீரய்யன், கே.வரதராசன் ஆகிய தோழர்கள் விவசாய அரங்கத்தின் மாநில மையத்திற்கு பொருத்தமான தோழர்களை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தனர்.

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல்” 

- என்ற குறளுக்கொப்ப அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததில் ஒருவராக தோழர்.மணி விளங்கினார்.மணி என்றால் கடும் உழைப்பு, முன்முயற்சி, தேடுதல், ஏற்றுக் கொண்ட பணியை செவ்வனே செய்து முடித்தல், ஊழியர்களை உருவாக்குதல், பயிற்றுவித்தல் - இவை அனைத்தின் மொத்த உருவமாக திகழ்ந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு சிறுநீர் வெளியேற அவருக்கு குழாய் பொருத்தப்பட்டது. கடந்த 5 ஆண்டு காலமாக அதையும் சுமந்து கொண்டு தான் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஒருவார காலமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளித்த போதிலும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது பெரும் துயரம்.தோழர் மணியின் மறைவு தமிழக கிராமப்புற இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. இயக்கத்திற்காக, மக்கள் பணியில் நம்மை நாம் முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வோம். அதையே தோழர். மணி விரும்புவார். உங்கள் இடத்தை இட்டு நிரப்புவோம் தோழர். என்னென்றும் தோழர்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். செவ்வணக்கம் செலுத்துகிறோம்.

கட்டுரையாளர் : பெ.சண்முகம், பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்