வெயில் போற்றி
மாமழைக்கு பிந்தி பூக்கிற பிஞ்சு வெயில் புத்தம் புது ரத்தப்பூவைப் போல பூப்பெய்திய பெண்ணைப் போல அத்தனை அழகாய் இருக்கிறது. புதிய காதலனைப் போல மெல்ல கன்னம் வருடுகிறது குழந்தையைப் போல முத்தமிடுகிறது உலகிலுள்ள அத்தனை வாசனைத் திரவியங்களின் வாசனையை விஞ்சுகிற வாசனையை விசும்பு முழுக்க பரவவிடுகிறது. வெயில் ஒரு வெள்ளையானையாக மழை பரவிய பிரபஞ்சமெங்கும் தன் பிரவாகத்தால் ஒத்தடம் கொடுக்கிறது வெயில் ஒரு பேரன்னை தன் கோடி முலைகளால் செடி கொடி ஓருயிர் ஈருயிர் எறும்பு மீன் தவளை பறவை மிருகம் மனிதன் மன்னன் கடவுள் கர்த்தர் அல்லா என எந்த பாகுபாடுமின்றி அனைவருக்கும் அமுதம் ஈகிறது வெயில் என் தெய்வம் வெயில் நம் தெய்வம் தெய்வத்துக்கெல்லாம் தெய்வம்.
