பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டை எழுச்சியுடன் கொண்டாடுவோம்!
சிறைக் கொட்டடியில் கைதியாக இருந்த அவர் சிங்கம்போல கர்ஜித்தார்: “அந்தக் கொடுங் கோலனின் கோபத்தைக் கண்டு நான் எவ்வாறு அஞ்ச வில்லையோ, அதே போன்று இந்தச் சிறை வாசத்தையும் கண்டு நான் அஞ்சப் போவதில்லை. என்னை தண்டியுங்கள். அது எனக்கு பொருட்டல்ல. வரலாறு என்னை விடுதலை செய்யும்.” வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வாக்கியங் களுக்கு சொந்தக்காரர் தோழர் பிடல் காஸ்ட்ரோ. ஹவானா நீதிமன்றத்தில், ஆட்சிக்கு எதிரான கலகம் என்ற குற்றச்சாட்டுக்கு எதிராக அவர் பேசிய வார்த்தைகள் இவை. அந்த வார்த்தைகள் இன்றும் உலகெங்கும் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களுக்கு உத்வேகம் அளித்து வருகின்றன.
மன்கடா தாக்குதல் - புரட்சியின் துவக்கம்
120 தோழர்களுடன் ஜூலை 26, 1953 அன்று மன்கடா ராணுவ முகாமைத் தாக்கி கியூபா ஆட்சிக்கு எதிராக கலகம் செய்ததாக, கொடுங்கோலன் பாடிஸ்டாவின் அரசு குற்றம் சாட்டியது. இந்தத் தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட வீரத் தோழர்கள் கொல்லப்பட்டனர். மீதமுள்ளோர் சிறைப்பட்டனர். சிறையிலும் கொடூரமான சித்ரவதை தொடர்ந்தது. எந்த வழக்கறிஞரையும் இவர்களுக்கு ஆதரவாக வாதிட அனுமதிக்காத கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து பிடல், ஒரு குடிமகன் என்ற முறையில் தன் வழக்கை தானே வாதிட நீதிமன்றத்தில் போராடினார். நீதிமன்றம் நிய மித்த வக்கீலை கூட அவர்கள் மிரட்டி ஆஜராகா மல் தடுத்துவிட்டனர். இந்த நிலையில் அந்த அனுமதியைப் பெற்று, புரட்சியின் நோக்கங் களையும், வெற்றி பெற்றிருந்தால் மக்களுக்கு வழங்கியிருக்க முடிகிற சீர்திருத்தங்களையும் வலுவாக விளக்கினார். புரட்சிகர சீர்திருத்தங்களின் அறிவிப்பு “ஒரு நியாயமான லட்சியம் அது எவ்வளவு ஆழத்தில் புதைக்கப்பட்டிருப்பினும் ஒரு ராணு வத்தை விட அதிக செயலூக்கம் உண்டு. அதைத்தான் இந்த புரட்சியில் நாங்கள் செய்தோம்” என்று பிடல் வாதிட்டார். “ஒருவேளை எங்களது புரட்சி வெற்றி பெற்றி ருந்தால் எங்களது முதல் புரட்சிகர சட்டம் முழு அதிகாரத்தையும் மக்களுக்கே வழங்கியிருக்கும்” - அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்கே என்று லெனின் முழங்கிய வழியில் இந்த வாதத்தை பிடல் முன்வைத்தார். பிடல் நீதிமன்றத்தில் அறிவித்த ஐந்து புரட்சிகர சட்டங்கள்: முதலாவது: 1940 அரசியலமைப்புச் சட்டத்தை, மக்கள் தீர்மானிக்கும் வரை நாட்டின் உயர்ந்த சட்டமாக அறிவித்தல். இரண்டாவது: குத்தகை நிலம் வைத்திருப்ப வர்களுக்கும், வாரத்திற்கு சாகுபடி செய்வோர் களுக்கும் நில உரிமை வழங்குதல். மூன்றாவது: சர்க்கரை ஆலைகள், சுரங்க நிறுவனங்கள், பெரும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு லாபத்தில் 30% பங்கு வழங்குதல். நான்காவது: அரசு நிலத்தில் கரும்பு உற்பத்தி செய்வோர்களுக்கு உற்பத்தியில் 50% பங்கு வழங்குதல். ஐந்தாவது: தவறான வழியில் பொருள் ஈட்டியவர்கள், ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்து தேசவுடமையாக்குதல். “இந்த நாட்டு மக்களின் ஜனநாயக கோரிக்கை களான அடிப்படை உரிமைகள், வாழ்வுரிமை, கல்வி உரிமை, மருத்துவ உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் இந்த புரட்சி வெற்றி பெற்றிருந்தால் கியூப மக்களுக்கு வழங்கப் பட்டிருக்கும்” என்று பிடல் காஸ்ட்ரோ உறுதியளித்தார். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான நியாயம் மத்திய காலப் பகுதியில் ஜான் சாலிஸ்பரி தனது “ராஜதந்திரியின் நூல்” என்ற புத்தகத்தில் “சட்டத்திற்கு ஏற்ப ஒரு அரசன் ஆட்சி செய்யாது கொடுங்கோலனாக மாறும்போது, அவனை பலாத்காரமாக தூக்கி எறிவது சட்டரீதியானதோடு மட்டுமல்லாமல் நியாயமானதும் ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார் என்பதை தன்னுடைய நீதிமன்ற உரையில் பிடல் காஸ்ட்ரோ விளக்கினார். கூடவே செயின்ட் தாமஸ் அக்வினாஸ், மார்ட்டின் லூதர் கிங், பிலிப் பெஸ்ட்ஸ், ஜூசைட் பாதிரியார் ஜூன் மரியானா, பிரான்சுவா, ஹாட் மேன், ஜூலியஸ் புருட்டஸ் போன்ற பல்வேறு நாடு களைச் சேர்ந்த சமகால அரசியல் செயல்பாட்டா ளர்கள் கொடுங்கோலர் பற்றிய அதே கருத்தை எவ்வாறெல்லாம் வெளிப்படுத்தினார்கள் என்பதையும் விரிவாக எடுத்துரைத்தார். புரட்சிகர தோழர் சேகுவேராவின் உறுதி கியூபப் புரட்சிக்கான வெற்றியில் புரட்சியாளர் சேகுவேரா ஆரம்பத்திலேயே உறுதி கொண்டி ருந்தார். பிறப்பால் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பகுதியான அர்ஜெண்டினாவைச் சேர்ந்த சேகுவேரா 1954இல் கௌதமாலாவில் சிறிது காலம் தங்கியிருந்தபோது அமெரிக்க உளவு ஸ்தாபனமான சிஐஏ-வின் கூலிப்படைக்கு எதிரான போராட்டத்தை துவங்கினார். அங்கு கியூபாவில் இருந்து நாடு கடத்தப்பட்டிருந்த கியூபா நாட்டு தேசபக்தர்களுடன் நட்பு செய்தார். அவர்கள் மூலமாக கியூப விடுதலையில் தானும் பங்கேற்க வேண்டும் என்ற உறுதி அவருக்கு ஏற்பட்டது. பின்னர் அவர் கியூபாவுக்கு வந்து பிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தார். அவரின் நம்பிக்கை யை வென்றெடுத்தார். புரட்சி நோக்கங்களுக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். அவர் நாடு கடத்தப்பட்ட புரட்சியாளர் குழுக்களுக்கு மருத்துவராக பணியைத் தொடங்கினார். பின்னர் விரைவில் புரட்சி ராணுவத்திற்கு தலைமை தாங்கும் கமாண்டராக பதவி உயர்வு பெற்றார். கொரில்லா யுத்தத்தில் முன்னுதாரணமானவராகவும், கோட்பாடு ரீதியாக அதை போராளிகளுக்கு விளக்கியவரும் ஆக விளங்கினார்.
வரலாற்றின் தீர்ப்பும் புரட்சியின் வெற்றியும்
மன்கடா தாக்குதல் புரட்சியின் உடனடி வெற்றி யைக் குறிக்கவில்லை. ஆனால் அந்தக் கலகத்து க்காக அவர் மீது வழங்கப்பட்ட தண்டனையும், சிறைவாசமும் அதை வழங்கக்கூடியவர்களின் நோக்கங்களை அம்பலப்படுத்தியது. மேலும், அது புரட்சிகர சக்திகளிடையே ஒற்றுமையை உருவாக்கியது. அவர்களுக்கு போக வேண்டிய திசையை காட்டியது. வெற்றியின் மீதான நம்பிக்கையை தோற்றுவித்தது. இறுதி வெற்றியை நோக்கிய போராட்டத்தை தொடர வேண்டியதன் அவசியத்தையும் உருவாக்கியது. இவ்வாறாகத்தான் கியூபப் புரட்சி இறுதியாக 1959 ஜனவரி ஒன்றாம் தேதி வெற்றி பெற்று புரட்சிகர ஆட்சி நிறுவப்பட்டது. பிடலின் பாதுகாப்பு அரண் ஏகாதிபத்தியம் பலமுறை பிடலை கொலை செய்ய முயன்றது. சிறையில் கூட மருத்துவர்களை அனுப்பி கொலை செய்ய முயன்றது. ஆனால் அந்த மருத்துவர்களே பிடலின் வசீகரமான வாதங்களையும், விளக்கங்களையும் கேட்ட பின்னர், என்ன நோக்கத்திற்காக வந்தார்களோ அதை தெரிவித்துவிட்டு பிடலை வாழ்த்திவிட்டு திரும்பிச் சென்றனர். இவ்வாறு அவரை கொலை செய்ய ஏகாதிபத்தியம் குறிவைத்த போதெல்லாம் கியூபா மக்கள் பாதுகாப்பு அரணாக நின்று பிடலைக் காப்பாற்றினர். என்றென்றும் உத்வேகம் கியூப புரட்சியின் வெற்றிக்குப் பின் சேகுவேரா கியூப அரசாங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து பல நாடுகளுக்குச் சென்று கியூபாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய மூன்று கண்டங்களில் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களுக்கு உத்வேகத்தை ஊட்டினார். இது பிடல் காஸ்ட்ரோ வுக்கு மிகப்பெரிய பலமாகவும், சர்வதேச அள வில் கியூபாவுக்கு ஆதரவை திரட்டுவதிலும் முக்கியப் பங்காற்றியது. ஜூலை 26 வரலாறு அவரை விடுதலை செய்ததோடு மட்டுமல்லாமல், உலகளாவிய அளவில் எங் கெல்லாம் குடியுரிமைக்காகவும், ஜனநாயகத்திற் காகவும், சோசலிசத்திற்காகவும் எழுச்சிகள், கிளர்ச்சிகள் நடைபெறுகின்றனவோ அவற்றிற் கெல்லாம் பிடல் காஸ்ட்ரோவின் பங்களிப்பு என்றென்றும் உத்வேகத்தை வழங்கி வருகிறது. ஜூலை 26ல் நடைபெற்ற மன்கடா புரட்சி உலக விடுதலை இயக்கங்களின் துவக்கப்புள்ளியாக அமைந்தது என்று சொன்னால் அது மிகை யாகாது. இன்றும் ஜூலை 26 மன்கடா தினமாக கியூப புரட்சியின் ஆரம்ப தினமாக கியூபாவின் தேசிய நாளாக மிகச்சிறப்பாக ஆண்டுதோறும் கியூபா மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1959ல் வெற்றி பெற்ற கியூப புரட்சி இன்றும் உலக சோசலிச இயக்கத்திற்கு வழிகாட்டியாக விளங்குகிறது.
புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோ
பிடல் அலெக்சாண்ட்ரோ கேஸ்ட்ரோ ரஸ் (ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவின் புரட்சித் தலைவர். 1959-1976 வரை பிரதம மந்திரியாகவும், 1976-2008 வரை ஜனாதிபதியாகவும் பணியாற்றினார். ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றபோது அரசியலில் ஈடுபட்டார். 1953 மன்கடா தாக்குதல், 1955 விடுதலை, மெக்சிகோ தலைமறைவு, 1956 கியூபா திரும்புதல், 1959 புரட்சி வெற்றி என்ற பயணத்தின் மூலம் சோசலிச கியூபாவை நிறுவினார். சிஐஏவின் 600க்கும் மேற்பட்ட கொலை முயற்சிகளில் இருந்து தப்பினார். அமெரிக்க பொருளாதார தடையை எதிர்த்து கியூபாவை வெற்றிகரமாக வழிநடத்தினார்.
கியூபா ஆதரவு நிதி வழங்கிவிட்டீர்களா?
A/C Name: NATIONAL COMMITTEE FOR SOLIDARITY WITH CUBA A/C No: 07621000431741 / IFSC Code: PSIB0000762 MICR Code: 110023052 Bank: Punjab and Sind Bank, BhaiVir Singh Marg, Sahityasadan Branch New Delhi – 110 001. நெப்ட் அல்லது ஆர்டிஜிஎஸ் மூலமாக பணம் அனுப்பலாம். பணம் அனுப்புகிற தோழர்கள் அவர்களுடைய பெயர் /தொலைபேசி எண் /அனுப்பிய தொகை, ஆகியவற்றை தமிழக அமைப்பின் இமெயில் 3apcsc@gmail.com மற்றும் மொபைல் 8072299431 என்ற மொபைல் நம்பருக்கு விபரம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.