articles

img

மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடகத்தின் சட்டவிரோத நடவடிக்கையை மத்திய அரசு தடுத்திட வேண்டும்....

காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்ந்து நீடித்துவரும் பிரச்சனையாகவே இருக்க வேண்டுமென மத்திய ஆட்சியானர்கள் விரும்புகின்றனர். தான் நூற்றாண்டுகளை கடந்த பின்பும் இன்றும் தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் சட்டரீதியாக இறுதி உத்தரவுகள் வந்த பின்பும் அதை செயல்படுத்துவதற்கு கர்நாடக அரசு முன்வருவதில்லை. மாறாக புதிய, புதியகட்டுமானப்பணிகளையும் பாசனத்தை விரிவுபடுத்துவதையும் வாடிக்கையாக கர்நாடகம் செய்து வருகிறது. 

காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு இடைக்கால தீர்ப்பு, பின்பு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இவை எதையும் ஏற்றுக்கொள்ளாத கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. உச்சநீதிமன்றமும் நீண்ட விசாரணை, விவாதங்களுக்கு பிறகு இறுதித் தீர்ப்பை வழங்கியது. காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை விட தமிழகத்திற்கு தண்ணீர் பகிர்வு குறைவாக உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், தற்போது கர்நாடக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில்  மேகதாதுவில் காவிரியின் குறுக்கே 9000 கோடி ரூபாயில் புதிய அணைகட்டுவதற்கான பணிகள் துவங்கிவிட்டதாக அறிவித்துள்ளது. இது மிகுந்த கண்டனத்திற்கு உரியது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பிற்கு எதிரான நடவடிக்கையாகும். மத்திய பாஜக அரசு இதற்கு எந்தஎதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பது தமிழகத்திற்கு செய்யும் துரோகமாகும்.

காவிரி ஆற்றில் ஒகேனக்கலிருந்து மேலே 15 கிலோ மீட்டர் தொலைவில் தான் மேகதாது உள்ளது. இரண்டு புறமும் உயர்ந்த பெரிய மலைகள் அமைந்துள்ள இடம். விரிந்து பரந்து பாய்ந்து வரும் காவிரி இந்த இடத்தில் மிக குறுகியதாக இருக்கும் “மே” என்றால் கன்னடத்தில் ஆடு. “தாட்” என்றால் தாண்டு என பொருள்படும். மேகதாதுஎன்றால் “ஆடு தாண்டும் காவிரி” என பொருள். எனவே கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கும் தமிழக எல்லையாகஉள்ள பிலிகுண்டுலுக்கும் இடையில் உள்ளமேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் தடுத்து நிறுத்தப்படும். தமிழக பாசனமும், குடிநீர் தேவையும் எதிர்காலத்தில் கேள்விக்குறியாக்கப்படும். 1980ல் அப்போதைய கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவ் தான் மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான திட்டத்தை முதலில் தீட்டினார். அதன்பின் கர்நாடக அரசு ஒவ்வொரு கால கட்டத்திலும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போது தமிழக அரசும், தமிழக விவசாயிகளும் சட்டரீதியாக கர்நாடகத்தின் முயற்சிகளை தடுத்துவந்த நிலையில் தற்போது கர்நாடகஅரசு பணிகள் துவங்கி விட்டதாக அறிவித்துள் ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

கர்நாடகத் தரப்பில் காவிரி நடுவர் மன்றமே புதிய அணைகள் கட்ட தடை விதிக்கவில்லை என மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திலும், மக்கள்மத்தியிலும் சொல்வது உண்மைக்கு புறம்பானது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தொகுதி5ல் பாகம் 9ல் பிரிவு XIII ல் கூறப்பட்டுள்ளதில் முன்பகுதியில் உள்ளதை மட்டும் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு பின்பகுதியில் உள்ளதை கர்நாடக அரசு சாமர்த்தியமாக மறைக்க முயற்சிக்கிறது:“ஒரு மாநிலம் தனது எல்லைக்குள் தண்ணீர்பயன்பாட்டை ஒழுங்குபடுத்திக் கொள்ளவும், தன்மாநிலத்திற்குள் தண்ணீரை பயன்படுத்தி அனுபவித்துக் கொள்ளவும் இந்தத் தீர்ப்பாயத்தின் உத்தரவு இடையூறு செய்யவில்லை. ஆனால் அவ்வாறான பயன்பாடுகள் அனைத்தும் இந்த தீர்ப்பாயம் ஏற்கனவே வழங்கியுள்ள உத்தரவுக்கு முரணாக இருக்கக்கூடாது” என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் XI ஆவது பிரிவில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:

“மேல் பாசன மாநிலம் கீழ் பாசன மாநிலங்களுக்கு அட்டவணையில் ஒதுக்கியுள்ள தண்ணீரின் அளவைப் பாதிக்கும் செயலைச் செய்ய கூடாது. ஆனால் தொடர்புடைய மாநிலங்கள் தங்களுக்குள் கலந்துபேசி ஒழுங்குமுறைக் குழுவின் ஒப்புதலைப் பெற்று மேல் பாசன மாநிலம் தண்ணீர் திறந்துவிடும் முறையில் மாறுதல் செய்து கொள்ளலாம்”.இவ்வாறு தெளிவாக உத்தரவுகள் உள்ள நிலையில் கர்நாடகம் தனது விருப்பப்படி புதிய அணைகள் கட்டிக் கொள்ள கர்நாடகத்திற்கு நடுவர் மன்றம் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் கர்நாடகம் மேகதாதுவில் புதிய அணை கட்டுமானம் துவங்கப்பட்டதாக அறிவிப்பது நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்கு எதிரானது மட்டுமல்ல; மீண்டும் காவிரி நதிநீர் பிரச்சனையில் இரண்டு மாநிலத்திலும் பதட்டத்தை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் கர்நாடக பாஜகஅரசு ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதோடு மத்திய மோடி அரசு, கர்நாடகத்தின் இச்செயலை உடன் தடுத்து நிறுத்த வேண்டும். 

கட்டுரையாளர் : சாமி.நடராஜன், மாநிலச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.