பிரதமருக்கு ஆபத்தா? பெண்களின் குரலை ஒடுக்க முயலும் மனுவாதிகளின் கூப்பாடு
இந்திய நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் அவைக்கு வந்தால் “அசம்பாவித சம்பவம்” நிகழலாம் என்ற தகவலின் அடிப்படையில், பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியதாகக் கூறியது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளை அவமதிப்பதாகும். இந்தப் பேச்சு, குறிப்பாகப் பெண் எம்.பி.க்கள் பிரதமரைத் தாக்க முயற்சித்ததாகச் சமூக ஊடகங்களிலும் அரசியல் மேடைகளிலும் திரிக்கப்பட்டுப் பரப்பப்படுவது, பெண்களை இழிவுபடுத்தும் அபாயகரமான அரசியலாகும். சபாநாயகர் பதவியின் நம்பகத்தன்மை சபாநாயகரின் முக்கியப் பொறுப்பு, நாடாளுமன்ற ஒழுங்கையும் உறுப்பினர்களின் பேச்சு உரிமையையும் சமநிலையுடன் பாதுகாப்பதே. ஆனால், “எதிர்க்கட்சியினர் ஏதோ செய்யக்கூடும்” என்ற ஆதாரமற்ற தகவல்களைப் பொதுவெளியில் பேசுவது, அந்தப் பதவியின் நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாக்குகிறது. நாடாளுமன்றம் என்பது மக்களின் பிரதிநிதிகள் அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் ஜனநாயக மேடை. எம்.பி.க்களுக்கு உள்ள பேச்சுரிமை, இந்திய அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமை. பொறுப்பிலிருந்து தப்பிக்கும் பிரச்சாரம் “பிரதமர் ஏன் அவைக்கு வரவில்லை?” என்று கேள்வி எழுப்புவது குற்றமல்ல. ஆனால், அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, “பிரதமர் வந்தால் தாக்கப்படுவார்” என்ற பொய் பிம்பத்தை உருவாக்குவது, அரசியல் பொறுப்பிலிருந்து தப்பிக்க மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பிரச்சாரமாகவே தெரிகிறது. பெண் எம்.பி.க்களின் போராட்டக் குரல் “அட்டகாசம்”, “தாக்குதல்”, “ஆபத்து” என்று சித்தரிக்கப்படுவது மனுவாதத்தின் உச்சம். ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவா, பாஜக வகையறாக்கள் பெண்களின் உரத்த குரலை எப்போதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதற்கான சான்றே இது. பிரதமரின் மவுனம் எங்கே போனது? நரேந்திர மோடியின் ஆட்சியில் நாடு முழுவதும் பெண்கள் மீது தொடர்ச்சியாக வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. அப்போதெல்லாம் பிரதமரின் குரல் எங்கே இருந்தது என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. உத்தரப் பிரதேசம், மணிப்பூர், ஹாத்ரஸ், பில்கிஸ் பானு என நாட்டையே உலுக்கிய பல கொடூரச் சம்பவங்களின் போது, அந்தப் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் உரத்த குரலில் பேசினாரா? இல்லை. மணிப்பூர் எரிந்தபோது, அங்கு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ நாடு முழுவதும் பரவிய பின்னரும், பல நாட்கள் பிரதமர் கள்ள மவுனம் காத்தார். அது “ஆபத்து” இல்லை; அது “பிரதமர் பாதுகாப்பு” விவகாரமும் இல்லை. நீதி கேட்ட வீராங்கனைகளும் அதிகாரத்தின் அமைதியும் தேசத்திற்காகப் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீராங்கனைகள், பாலியல் தொந்தரவுக் குற்றச்சாட்டுகளுடன் தில்லி வீதிகளில் போராடினார்கள். அவர்கள் கேட்டது நீதி, விசாரணை மற்றும் பாதுகாப்பு. ஆனால், பிரதமர் அவர்களைச் சந்திக்கவில்லை. குற்றச்சாட்டுக்குள்ளானவர் ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதால், அரசும் அதன் முழு அமைப்பும் மௌனம் காத்தது. அப்போது பெண்கள் மீது நடந்த அநீதி “தேசத்திற்கு ஆபத்தாக”த் தெரியவில்லை. கேள்வி கேட்டால் அலறுவது ஏன்? நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினால், அது உடனே “ஆபத்து” ஆகிவிடுகிறது. பிரதமர் அவைக்கு வந்தால் தாக்கப்படுவார் என்றும், பெண் எம்.பி.க்கள் ஏதோ செய்துவிடுவார்கள் என்றும் ஆதாரமற்றுக் குற்றம் சாட்டுவது, அதிகாரத்தைக் காப்பாற்றப் பயன்படுத்தும் பாஜகவின் மோசமான அரசியலாகும். பெண்கள் மீதான வன்முறைகள் நடந்தபோது மவுனம் காத்த பிரதமர், உங்களைக் கேள்வி கேட்டபோது மட்டும் அலறுவது ஏன்? இது வன்முறை அல்ல, ஜனநாயகம்! பெண்கள் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படும்போது வேடிக்கைப் பார்த்த அதிகாரம், பெண்கள் நாடாளுமன்றத்தில் பேசினால் அவர்களை “ஆபத்து” என்று சித்தரிக்கிறது. இது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் அரசாக இல்லாமல், பெண்களின் குரலை அடக்கும் அரசாகவே இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் பேசுவது அவர்கள் உரிமை; அது வன்முறை அல்ல, அதுதான் ஜனநாயகம்!
