இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்
கிரிக்கெட் உலகில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் தொடரின் 9ஆவது சீசன் பாகிஸ்தான் நாட்டில் புதன்கிழமை அன்று தொடங்கியது. இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறும் நிலையில், இந்த தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் (குரூப் பி) அணிகள் வியாழக்கிழமை அன்று மோதுகின்றன. வெற்றியுடன் துவங்கி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் முனைப்பில் இரு அணிகளும் தீவிர பயிற்சியுடன் களமிறங்குவதால், இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போர் விமானங்கள் சாகசம்
வண்ணமயமாக ஒளிர்ந்த கராச்சி மைதானம்
தல் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக டாஸ் போடப்பட்டப் பின் மினி உலகக்கோப்பையின் தொடக்கத்தை குறிக்கும் விதமாக பாகிஸ்தான் விமானப்படை சாகச நிகழ்ச்சியை நடத்தியது. பயங்கரச் சத்தத்துடன் 7 போர் விமானங்கள் வண்ணப் பொடிகளைத் தூவியவாறு பறந்தன. இதனால் கராச்சி மைதானம் வண்ணமயமாக காட்சி அளித்தது. ஆனால் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடக்கும் என யாருக்கும் தெரியாததால், போர் விமானங்கள் திடீரென பறந்த போது நியூஸிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் வில் யங் மற்றும் கான்வே பதற்றமடைந்தனர். பிறகு விமானத்தில் இருந்து வண்ணப்பொடிகள் தூவப்பட்டதால் சிரித்தனர். இந்த விமான நிகழ்ச்சி தொடங்கியபோது சில பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் பதற்றமடைந்து தங்களது காதுகளை மூடிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\
முதல் போட்டியிலேயே நியூஸி., வீரர் சதம்
9ஆவது சீசன் மினி உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூஸி லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து நிதானமாக ரன் குவித்தது. மிதமான அதிரடியுடன் அசத்தலாக விளையாடிய நியூஸிலாந்து தொடக்க வீரர் வில் யங் 107 பந்துகளில் சதமடித்தார். நசீம் ஷா பந்துவீச்சில் 107 ரன்கள் எடுத்து வில் யங் ஆட்டமிழந்தார். மினி உலகக்கோப்பையின் முதல் போட்டி யிலேயே சதமடித்து அசத்திய வில் யங்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. வில் யங்கிற்கு இது 4ஆவது ஒருநாள் சதமாகும்.