ஏழையின் வீடு கனவு நிறைவேறாவிட்டால் பொருளாதாரக் கனவு நிறைவேறாது!
சென்னையில் டிசம்பர் 16 (இன்று) குடியிருப்பு உரிமை, வாழ்விடக் கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் இயக்கம் நடைபெறுகிறது. மனுக்களை சமர்ப்பிக்க இலட்சம் மக்கள் அணி திரள்கின்றனர். சென்னையில் மூன்றில் ஒரு வீட்டிற்கு பட்டா இல்லை. வீடு இல்லாதவர்கள் பிரச்சனை ஆழ மான நகர்ப்புற நெருக்கடியாக சென்னையில் உருவெடுத்துள்ளது. சென்னை மட்டுமல்லாது நாட்டின் அனைத்து நகரங்களிலும் குடியிருப்பு பிரச்சனை முக்கியமான வாழ்வாதார பிரச்ச னையாக இன்று உருவெடுத்துள்ளது ஆட்சி யாளர்கள் திட்டங்கள் எனும் பெயரில் பலவற்றை அறிவித்தாலும் நகர்ப்புறங்களில் பெரும்பான்மை மக்கள் குடியிருப்புச் சிக்கல்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
இடதுசாரி இயக்கங்களும் பல மக்கள் இயக்கங்களும் குடியிருப்பு உரிமைக்கான போராட்டத்தில் இலட்சக்கணக்கான மக்களை அணி திரட்டி வருகின்றனர். இது மேலும் வலுப்பெற்று மாபெரும் மக்கள் இயக்கமாக மலர வேண்டும். வீடு கனவாக உள்ளது! நாட்டின் நகர்ப்புற மக்கள் தொகை தற்போது சுமார் 38கோடி என்பது தற்போது சொல்லப்படும் புள்ளி விவரம். மொத்த மக்கள் தொகையில் 31%. ஆனால் உண்மை எண்ணிக்கை அதிகமாக இருக்கக் கூடும். 2030-ஆம் ஆண்டுக்குள் இது 63 கோடி ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான நகர்ப்புற மக்களுக்கு வீடு என்பது கனவாகவே உள்ளது. இன்றைய நிலையில் நகரத்தில் ஒருவருக்கு சராசரியாக கிடைக்கும் இடம், வெறும் 117 சதுர அடி மட்டுமே உள்ளது. இந்த உண்மை எந்த அளவிற்கு ஏழை நடுத்தர மக்களின் குடி யிருப்பு உரிமை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.மேல் தட்டு வர்க்கத்தினருக்கும் கார்ப்பரேட்டுக் களுக்கும் தான் நகரங்களின் நிலங்கள் தாரை வாரக்கப்படுகின்றன.
சுமார் 6.5 கோடி மக்கள் (நகர மக்கள் தொகையில் 17%) குடிசைகளில் வாழ்கின்றனர். இந்தியாவின் பெரிய தொழில் நகரமான மும்பையில் மட்டும் 42% மக்கள் குடிசைகளில் வசிக்கின்றனர் என்பது அவமானகரமான உண்மை. கடந்த 10 ஆண்டுகளில் வீட்டு விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. 2025-ல் வாடகை 5-8% உயர்வு. ஏழை குடும்பங்களுக்கு இஎம்ஐ (EMI) மாத வருமானத்தில் 2020-ல் 43% ஆக இருந்தது. தற்போது 60% ஆகிவிட்டது. 60% வரு மானத்தை இஎம்ஐ செலுத்திவிட்டு இதர செலவு களுக்கு குடும்பங்கள் தவிக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில்தான் பிரதமர் முதற்கொண்டு ஆளும் கட்சியினர் உலகில் இந்தியா மூன்றாவது பொருளாதாரமாக மாறிவிட்டது என்று பம்மாத்து செய்து வருகின்றனர். அரசின் திட்டங்கள் ஒன்றிய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புறம் (PMAY-U) 2022-க்குள் “அனைவருக்கும் வீடு” என்ற ஆரவாரத்துடன் அறிவித்தனர். இந்தத் திட்டத்தின் கீழ் 2015 முதல் இதுவரை 1.18 கோடி வீடுகள் அனுமதி அளித்துள்ளதாகவும் 90.25 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது யானைப் பசிக்கு சோளப் பொறி என்ற கதையாகத்தான் உள்ளது. ஆனால் வாக்குறுதிகள் தொடர்கின்றன 2024 செப்டம்பரில் தொடங்கிய PMAY-U 2.0 அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 1 கோடி குடும் பங்களுக்கு வீடு உறுதி என்று அறிவித்துள்ளனர்.
சென்னையில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மறு குடி அமர்த்தப்பட்டவர்களுக்கு 120 சதுர அடியில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடம் ஒரு குடும்பம் வாழ எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல. ஸ்மார்ட் சிட்டி என்ன செய்தது என்பதற்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு ஒரு சோறு பதம் இது. பிரம்மாண்டமான பங்களாக்களும் ஸ்கை டவர்களும்தான் நகரங்கள் என்ற மேட்டிமைத்தன மனப்பான்மை அகற்றப்பட வேண்டும்.சமானியர்களுக்கான வீட்டு வசதியை உறுதிப்படுத்துவதுதான் சீர்மிகு நகரங்களுக்கான இலக்கணம். வீட்டை “முக்கிய உள்கட்டமைப்பு” என்று அங்கீகரித்து கொள்கைகளை உருவாக்க வேண்டும். குடிசை மறுவாழ்வு, வாடகை வீட்டுத் திட்டங்கள், பெண்களுக்கான வீடு என்ற வகையில் மக்கள் நலனை முன்னிறுத்தி கொள்கைகளை உருவாக்கிட வேண்டும். அவற்றை விரைவாக செயல்படுத்த வேண்டும். இதனைச் செய்யாவிட்டால் இந்தியாவின் 7 டிரில்லியன் பொருளாதாரக் கனவு வெறும் கனவாகவே இருக்கும்;நகர்மயமாதல் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியமாகாது. நகர்ப்புற வாழ்வாதாரத்தை ஒடுக்கும் கொள்கைகள் பிரதமர் நரேந்திர மோடி 2014இல் பதவி ஏற்றதிலிருந்து நகர்மயமாதல் கொள்கைகள் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாக அமைந்துள்ளது. உண்மையில், கார்ப்பரேட் நலன் காக்கும் நவீன தாராளமய நகரமயமாதல் கொள்கைகளையே ஒன்றிய அரசு அமலாக்கி வரு கிறது. பொருளாதாரம், தொழில், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் அமலாகி வருகிற அதே மக்கள் விரோத கொள்கைகள் நகர்மய மாதலிலும் தொடர்கிறது.
இதனால் நகர்ப்புறங் களில் ஏழைகளின் வாழ்வாதாரம் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. குடிநீர், வீட்டுவசதி, தூய்மைப் பணிகள், போக்குவரத்து ஆகிய அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு, இந்த சேவைகள் ஏழை மக்களுக்கு எட்டாத உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஏராளமான திட்டங்கள் பொது-தனியார் கூட்டு ( PPP)என்ற பெயரில் தனியாரின் கட்டுப்பாட்டில் முன்னெடுக்கப்படுகின்றன. நிலப் பயன்பாடு விசயத்தில் ரியல் எஸ்டேட் தொழில் ஊக்கப்படுத்தப்பட்டு ஏழைகள் நிலங்களிலிருந்தும் , குடியிருப்புகளிலிருந்தும் விரட்டப்படுகிற நிலை நாடு முழுவதும் நடந்து வருகிறது. வளர்ச்சி என்கிற பெயரில் முறை சாராத் தொழிலாளர்களும் நகர்ப்புற ஏழைகளும் தங்கள் குடியிருப்புக்களிலிருந்து சாரை சாரையாக வெளியேற்றப்படுகின்றனர். இந்திய ஏகபோக முதலீட்டாளர்கள், உலக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் போன்றவர்களின் கட்டளைகளுக்கேற்ப நகர்ப்புற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.அடிமட்டத்தில் வாழ்கிற நகர்ப்புற ஏழைய எளிய மக்களின் வாழ்க்கைத் தேவைகளை மையமாக வைத்து திட்டங்கள் உருவாக்கப்படுவதில்லை.இதில் அரசு மேலும் மேலும் தன்னுடைய பொறுப்பை தட்டிக்கழித்து வருகிறது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் கண்டுபிடிப்புக்களும் மக்கள் வாழ்க்கை வசதி களை மேம்படுத்துவதற்கு பதிலாக கார்ப்பரேட் லாபக் குவிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. அதே போன்று நகர்மயமாதலும் வேகமான நகர்ப்புற வளர்ச்சியும் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான கதவுகளை திறந்து விடு கின்றன, ஆனால் முதலாளித்துவ அமைப்பில் இந்த வாய்ப்புகளை கார்ப்பரேட்டுகள் மூலதன வேட்டைக்கு பயன்படுத்துகின்றனர் . இதற்கு அரசாங்கங்கள் துணை நிற்கின்றன. மக்கள் பங்கேற்பு மறுப்பு ஸ்மார்ட் சிட்டி என்கிற திட்டம் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அனைவரை யும் உள்ளடக்கிய நகர்ப்புற வளர்ச்சியை அவை ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட பகுதி, குறிப்பிட்ட மேல் தட்டு மக்க ளுக்கு வசதிகளை செய்து கொடுக்கிற விசேட உலகமாக இவை உள்ளன. சில குறிப்பிட்ட வளர்ந்த நகரங்களையும் நக ரங்களுக்குள் சில குறிப்பிட்ட பகுதிகளை யும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் உருவாக்கி யுள்ளன, இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறவில்லை என்பது மட்டுமல்லாது பல இடங்களில் அவர்கள் நகரங்களின் மையப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர் என்பதே உண்மை. நகர வளர்ச்சி திட்டமிடலுக்கு அதிகாரம் படைத்த தேர்ந்தெடுக் கப்பட்ட உள்ளாட்சிகளுக்கு இந்த திட்டங்களில் எந்தப் பங்கும் இல்லை. ‘பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி’ என்கிற திட்டமும் இதே போன்றுதான் அமலாகி வருகிறது. ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதாக விளம்பரப்படுத்தப்பட்டு ,ரியல் எஸ்டேட் தொழில் தேவைக்கு இவை பயன்படுகின்றன. பொது சொத்துக்களான நிலங்கள் தனியார்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. சென்னை உட்பட ஏராளமான நகரங்களில் குடிசைகளை அப்புறப் படுத்துவதற்கு இந்த திட்டங்கள் வழிவகை செய்துள்ளன. ஏழை மக்களை குடிசைப் பகுதி யில் இருந்து வெளியேற்றி அவர்களது வாழ்வ தாரத்தினை பறிக்கும் கொடூரங்கள் அன்றாடச் செய்திகளாக தொடர்கின்றன. சட்ட ரீதியான இழப்பும் ஏழைகளுக்கு மாற்று இடம் போன்ற வையும் இவர்களுக்கு முறையாக கிடைப்பதில்லை.
அம்ருத், தூய்மை பாரதம் திட்டம் போன்ற திட்டங்கள், நகரத்தை அழகு படுத்துவதற்கும் உலக சந்தைக்கான மையங்களாக பெரு நகரங்களை முன்னிறுத்துவதற்கும் முன்னு ரிமை அளிக்கின்றன. நியாயமான மக்கள் பங்கேற்பு இல்லாததால்,இந்தத் திட்டங்கள் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவில்லை. தனியார்கள் தங்களது சுயநல நோக்கில் கொள்ளையடிக்க இது போன்ற திட்டங்கள் வழிவகை செய்துள்ளன. அதாவது “நகரம் உழைப்பாளி மக்களுக்கே” என்கிற மக்கள் முழக்கத்திற்கு பதிலாக “நகரம் பெரும்பணக் காரர்களுக்கே” என்கிற நிலை உருவாகியுள்ளது. நகரங்களில் ஏற்றத்தாழ்வு மோடியின் ஆட்சிக் காலத்தில் மிக அதிக அளவில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங் களின் செல்வாக்கு நகர்ப்புற திட்டமிடலில் அதி கரித்துள்ளது. நிலம், வீடு, சேவைத்துறைகள் என அனைத்துமே கார்ப்பரேட் இலாபத் தேவைகளுக்கான சந்தை பொருட்களாக மாற்றப்பட்டுள்ளன.வளர்ச்சி திட்டங்களில் மக்கள் தேவைகளை பிரதிபலிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.மேல்தட்டு வர்க்கங்களின் தேவைகளுக்கு ஏற்ப நகர்ப்புற வளர்ச்சி திட்டமிடப்படுகிறது. நகர்ப்புற ஏழை மக்கள்,தொழிலாளர்கள் நலன்கள் மேலும் மேலும் புறக்கணிக்கப்படும் நிலை தொடர்கிறது. இதனால் நகரங்களில் சமூகஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது.
சுற்றுச்சூழல் இந்த கொள்கைகளால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.நகர்ப்புற இந்தியா ஒவ்வொரு நாளும் 75,000 டன்களுக்கு மேல் கரிமக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது.இந்தக் கழிவுகளை சரியாக மேலாண்மை செய்வதில் உரிய முன்னேற்றம் இல்லை . இதனால் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் தொடர்புடைய சுகாதாரக் கேடுகள் அதிகரித்து வருகின்றன. உண்மையில் 75,000 டன்களுக்கு மேல் கரிமக் கழிவுகள் என்பது நல்ல வாய்ப்பாக நிபுணர்கள் கருது கின்றனர். புவி வெப்பமயமாதல் விளைவு களை ஏற்படுத்தும் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை குறைத்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியான உயிர்-சிஎன்ஜி உற்பத்திக்கு ஒரு மகத்தான வாய்ப்பாக உள்ளது. மக்களின் தேவைகளை பிரதிபலிப்ப தற்கான தளங்களாக உள்ளாட்சி மன்றங்கள் உள்ளன.
ஆனால் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு மேலும் மேலும் மையப்படுத்தப்பட்டு வருகின்றன. ஜனநாயக விவாதத்திற்கு உட்படுத்தப்படாத பல திட்டங்கள் முறைகேடுகளின் கூடாரங்களாக இருந்து வருகின்றன. நகரங்கள் அனைத்தும் நகர்ப்புற உழைப்பாளி மக்களால் உருவானவை. முறை சாரத் தொழிலாளர்கள், குடிசை வாழ் மக்கள், சாலையோர வியாபாரிகள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோர்தான் பெரும் பான்மை நகரவாசிகள்.நகர்ப்புறங்களில் வாழும் உரிமை படைத்தவர்கள் உழைக்கும் மக்களே. ஆட்சியாளர்கள் இந்த அணுகு முறையை பின்பற்றாவிட்டால் மாபெரும் நகர்ப்புற இயக்கம் மாற்றத்தை சாதிக்கும்.
