நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க போராட்ட அறிவிப்பு
கோவை, ஜூலை 12 - தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஞாயிறு அன்று கோவை ரயில்நிலையம் அருகிலுள்ள தாமஸ் கிளப்பில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி செயற்குழு பல்வேறு போராட்ட முடிவுகளை எடுத்துள்ளது. ஜூலை 29 அன்று அனைத்து கோட்டப் பொறியாளர் அலுவலகங்கள் முன்பு தீப்பந்த ஒளியேந்தி மாலை நேர தர்ணா போராட்டத்தை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 12 அன்று முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் கோரிக்கை மனு வழங்கி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 8-ஆவது ஊதிய மாற்றம் அமல்படுத்த வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கைகளாக உள்ளது. சங்கத்தின் 9-ஆவது மாநில மாநாடு அக்டோபர் 4, 5 தேதிகளில் எடப்பாடியில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலச் செயலாளர் சு.செந்தில்நாதன், மாநில துணைத் தலைவர் து.சிங்கராயன், மாநில செயலாளர்கள் கோ.ஹரிபாலகிருஷ்ணன், செ.சையதுயூசுப்ஜான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில பொருளாளர் இரா.தமிழ் நன்றி கூறினார்.