articles

img

45 ஆண்டுகளாக நீடிக்கும் பாரதியார் பல்கலைக்கழக நில இழப்பீடு விவகாரம் சிபிஎம் தலைமையில் ஆக. 4 முதல் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

45 ஆண்டுகளாக நீடிக்கும் பாரதியார் பல்கலைக்கழக நில இழப்பீடு விவகாரம்

சிபிஎம் தலைமையில் ஆக. 4 முதல் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கோயம்புத்தூர், ஜூலை 13- பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு 350 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆகஸ்ட் 4 முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நான்கு தசாப்தங்களாக...

1980ஆம் ஆண்டு மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக்கழகம் அமைக்க தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது. கோவை மாவட்டத்தில் உள்ள வடவள்ளி சோமையாம்பாளையம், பொம்மன் பாளையம், கல்வீரம்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 600 சிறு குறு விவசாயிகளிடமிருந்து 926 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இந்த நிலத்திற்கு அரசு வழங்கிய இழப்பீடு தொகை மிகவும் குறைவாக இருந்தது. விவசாயிகள் தங்களுக்கு கிடைத்த இழப்பீடு தொகை போதுமானதல்ல என்று கருதி, அதை உயர்த்தி வழங்க அரசிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தமிழக அரசு அந்த கோரிக்கையை ஏற்க மறுத்தது. இதையடுத்து, நியாயமான இழப்பீடு பெறுவதற்காக பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீதிமன்றப் போராட்டம் மற்றும் வெற்றி 25 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில், 2007ஆம் ஆண்டு கோவை மாவட்ட நீதிமன்றம் சுமார் 160 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. ஆனால் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் அரசு இதுவரை முழு இழப்பீடு தொகையையும் வழங்கவில்லை. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலையீடு 2009ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தில் முறையிட்டனர். இதைத் தொடர்ந்து சங்கத்தின் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் பல முறை அரசிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன. மனுக்கள் மூலம் அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பலகட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனால் இவை அனைத்தும் பயனளிக்கவில்லை. பல்கலைக்கழக வளாகத்தில் வரலாற்றுப் போராட்டம் 2012ஆம் ஆண்டு இந்தப் பிரச்சனை ஒரு திருப்புமுனையை எட்டியது. அன்றைய சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் அன்றைய தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தனர். “எங்கள் நிலம் எங்கள் உரிமை” என்றும் “இழப்பீட்டு தொகை கொடு அல்லது நிலத்தை கொடு” என்றும் கோரிக்கை வைத்து அவர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அன்றைய அதிமுக அரசு நிர்வாகம் 3 மாதங்களுக்குள் பணம் வழங்குவதாக ஒப்புதல் அளித்தது. இந்த உறுதிமொழியின் பின்னர் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதன் பிறகு இந்த பிரச்சனையை அரசு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை அரசின் அலட்சியம் தொடர்ந்ததால், மீண்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த போராட்டம் மிகவும் தீவிரமானதாக இருந்தது. போராட்டத்தில் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உட்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கைதுகள் மற்றும் பொதுமக்களின் அழுத்தத்தால் அரசு முதல் தவணை என்று கூறி 43 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கியது. மேல்முறையீட்டு நீதிமன்றப் போராட்டம் 43 கோடி ரூபாய் கிடைத்த பின்னர், மீதமுள்ள இழப்பீடு தொகை வழங்குவதற்கு பதிலாக தமிழக அரசு ஏழை விவசாயிகளுக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சென்றது. இது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. 10 ஆண்டுகள் நடைபெற்ற இந்த மேல்முறையீட்டு வழக்கில், 2022ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியது. இது விவசாயிகளுக்கு மீண்டும் பெரிய வெற்றியாக அமைந்தது. தற்போதைய இழப்பீடு அளவு நீதிமன்ற தீர்ப்பின்படி வட்டி சேர்த்து தற்போது சுமார் 350 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். இந்த பெரும் தொகை பல விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றக்கூடிய அளவுக்கு முக்கியமானதாக உள்ளது. இந்த விஷயத்தில் பல முறை தமிழ்நாடு அரசு மற்றும் அமைச்சர்களிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இழப்பீடு தொகை உடனடியாக பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டு, கடந்த பிப்ரவரி 21 அன்று கோவை நகருக்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அவர்களை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகள் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது விவசாயிகள் தங்களின் பிரச்சனைகளை விரிவாக எடுத்துக் கூறினர்.  மாநில செயலாளர் அவர்கள் இந்த பிரச்ச னையை தீர்ப்பதற்காக தனது முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தார். போராட்ட ஆலோசனை கூட்டம் இந்தப் பின்னணியில் இந்த பிரச்சனை தொடர்பாக சனிக்கிழமை அன்று (ஜூலை 12) பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகள் சார்பாக போராட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ..சண்முகம், மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ஆறுச்சாமி, ஒன்றிய செயலாளர் வி.மணி ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேலான பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.  அடுத்தகட்ட போராட்ட முடிவு கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி முதல் இழப்பீடு தொகை முழுவதும் கிடைக்கும் வரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. இந்த போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறும் என்றும், அதில் அனைத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளும் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் விவசாயிகள் சங்க நிர்வாகிகளான காளப்பன், சங்கரன், தங்கவேல், கணேசன் மற்றும் நூற்றுக்கும் மேலான பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.