22 சதவீத ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்திடுக! ஒன்றிய அரசுக்கு விவசாயிகள் சங்கம் மீண்டும் வலியுறுத்தல்
சென்னை, நவ. 20 - தமிழக அரசும் விவசாயிகளும் விடுத்த கோரிக்கையின்படி நெல்லின் ஈரப்பதம் 22 சதவீதம் வரை கொள்முதல் செய்வதற்கு ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு: நடப்பாண்டு காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழகம் முழுவதும் குறுவை நெல் அறுவடை பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட நெல் மழையில் நனைந்தும், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட நெல்மணிகளும் மழையில் நனைந்து பல இடங்களில் நெல் முளைத்து விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தி அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று பல்வேறு விவசாய சங்கங்களும், விவசாயிகளும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்தோம். தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இந்த கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிற்கு 22 சதவீதமாக ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்வதற்காக அனுமதி கோரியிருந்தது. அதன் அடிப்படையில் ஒன்றிய அரசினுடைய அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தனர். ஆய்வு செய்து பல நாட்கள் கடந்த பின்பு 20.11.2025 அன்று ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்வதற்கு ஒன்றிய அரசு மறுத்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். நவம்பர் 19 அன்று கோவையில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று சென்றுள்ள நிலையில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கக் கூடிய வகையில் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்வதற்கு அனுமதி மறுத்துள்ளது தமிழக விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு செய்யும் துரோகமாகும். எனவே தமிழக அரசும் விவசாயிகளும் கோரியபடி நெல்லின் ஈரப்பதம் 22 சதவீதம் வரை கொள்முதல் செய்வதற்கான அனுமதியை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.