articles

img

இப்போதும் கூட காலம் கடந்து விடவில்லை...

58 வயதான ராஜேஸ்வரி தேவியின் உயிர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிந்தது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மருத்துவமனையில் படுக்கை, அவசர ஊர்தி மற்றும் ஆக்சிஜன் ஆகிய வசதிகள் சரியான நேரத்தில் கிடைக்காததால் உயிரிழந்தார்.

முடிந்தவரை மூச்சு விட்டுக் கொண்டு காத்திருந்த ராஜேஸ்வரிக்கு உதவி வந்து சேரும்போது, எல்லாம் கைமீறிப் போயிருந்தது. கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி, ஆக்சிஜன் அளவு குறைந்ததால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு `நீண்டகால நிமோனியா’ இருப்பதை சி.டி ஸ்கேன் உறுதிப்படுத்தியது. ஆனால், அவரின் கோவிட் பரிசோதனை முடிவுகள் வராததால், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் மறுத்தனர். ராமர்கஞ்ச் பகுதியில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சை அறையில், 36 மணி நேரம்ஆக்சிஜன் வசதியுடன் அவர் இருந்தார். மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைந்துவிட்டது என்றும் அவரை பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று மருத்துவர்கள் கூறினாலும், அவரை அழைத்துச்செல்ல அவசர வாகனம் இல்லை. மருத்துவமனையில் அவருக்கு படுக்கை ஒதுக்கப்படும் என்ற உத்தரவாதமும் இல்லை.

செய்வதறியாது அவரின் குடும்பத்தினர் காரில் வைத்துராஜேஸ்வரியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஒரு அரசியல்வாதியின் தலையீட்டிற்குப் பிறகு, அவருக்கு மருத்துவமனையில் படுக்கை கிடைத்தது. காரில் ஆக்சிஜன் வசதி இல்லாததால், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவரின் உயிர் பிரிந்தது. சரியான நேரத்தில் அவருக்கு சிகிச்சை கிடைத்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார் என்று கூறுகிறார் அவரின் மகன் அஷிஷ் அக்ரஹாரி.
இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலையின் பரவல்அதிகரித்துள்ள இந்த நிலையில், இதுபோன்ற சோகக்கதைகள் நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் வருகின்றன. இந்தியாவில் உயிரிழப்போரின் விகிதம் குறைவாகவே உள்ளதுஎன்றாலும், இந்த முறை வந்துள்ள கோவிட் தொற்றுஎன்பது, கூடுதல் பரவும் தன்மையுடனும், அபாயகரமானதாகவும் பல மாநிலங்களில் உள்ளது என்று தரவுகள் கூறுகின்றன. ஆனால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளதால், இந்தியாவின் சுகாதாரத்துறை ஆட்டம் கண்டுள்ளது. இது மிகவும் கடினமாக உள்ளது என்று கூறும் மருத்துவர்கள், இம்முறை, இதெல்லாம் முடிந்து நாம் இந்த துயரிலிருந்து மீள்வோம் என்று நம்பிக்கை அளிக்கும் வெளிச்சத்தை பார்க்க முடியவில்லை என்கின்றனர்.

அதிகரிக்கும் நோயாளிகள்
இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி, இந்தியாவில் பதிவான நோயாளிகள் எண்ணிக்கை 11,000 ஆகும். அடுத்த 60 நாட்களில், இந்த எண்ணிக்கை சராசரியாக 35,000ஆக இருந்தது. ஆனால், இரண்டாம் அலை காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி 11,000 பேர் பாதிக்கப்பட்டதாக பதிவானது. அடுத்த 50 நாட்களில் இந்த சராசரி 22,000ஆக உயர்ந்தது. அதற்கு அடுத்த 10 நாட்களில் இது விரைவாக உயர்ந்து, சராசரியே 89,800 ஆக மாறியது.

இரண்டாம் அலை அதிவேகமாக பரவுகிறது என்பதற்கு இந்த தரவுகளே சாட்சி என்கின்றனர் நிபுணர்கள். கேரளாவின் கோவிட் செயல் நடவடிக்கை குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர் ஃபதாஹுதீன், நோயாளிகள் எண்ணிக்கை திடீரென உயருவது எதிர்பாராத ஒன்று இல்லை என்று கூறுகிறார். கடந்த செப்டம்பர் மாதம் ஒரே நாளில் 90,000 எண்ணிக்கை பதிவான நாட்டில், ஜனவரி மாதம் 20,000 மட்டுமே பதிவானது, அப்போது இந்தியா சற்றே இதை கவனிக்காமல் இருந்ததுதான் இதற்கு காரணம் என்கிறார் அவர்.

மத ரீதியான பெரிய கூட்டங்கள், பொது இடங்கள் மீண்டும் திறக்கப்பட்டது, கூட்டமான தேர்தல் பிரச்சாரங்கள் ஆகியவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது. `இதற்கான எச்சரிக்கை குறிகள் நமக்கு பிப்ரவரி மாதமேவந்தன, நாம்தான் அதை கவனித்து தயார் ஆகவில்லை.` என்கிறார் அவர். “கோவிட் நம்மை விட்டு எங்கும்செல்லவில்லை, அவசரகால நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் சுனாமி போல நம்மை வந்து தாக்கும் என்று நான் பிப்ரவரி மாதமே கூறினேன். இப்போது அந்த சுனாமி தாக்கியுள்ளது. எல்லாம் இயல்புநிலைக்கு திரும்பிவிட்டது போன்ற ஒரு மாயை மக்களிடமும், அதிகாரிகளிடமும் உருவானதால், இரண்டாம் அலையை தடுக்க யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை.”

படுக்கைகள் பற்றாக்குறை
இந்தியாவின் பல நகரங்கள், மருத்துவமனையில் படுக்கைகள் தட்டுப்பாடு இருப்பதாக தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் உதவி கேட்டு வரும் பல காணொலிகளும் இதற்கு சான்றாக உள்ளன. சரியான நேரத்தில் உதவி கிடைக்காமல் இறப்போர் குறித்த வருத்தமளிக்கும் விவரங்கள் இந்தியா முழுவதிலிருந்தும் வந்து கொண்டு இருக்கின்றன. பல மாநில அரசுகள், புதிய மருத்துவ மையங்களை உருவாக்குவதாக தெரிவித்தாலும், கொரோனா பரவி வரும் வேகத்திற்கு இந்த நடவடிக்கைகளால் ஈடு கொடுக்க முடியாது என்கின்றனர் நிபுணர்கள்.

இந்தியாவில் கடந்த சில நாள்களாக தினமும் கிட்டத்தட்ட3 லட்சம் பேர் என்ற அளவில் கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. புதன்கிழமை (ஏப்ரல் 21) அன்று மட்டும் இந்தியாவில் நோய்த் தொற்றியவர்கள் எண்ணிக்கை சுமார் 3.14 லட்சம் பேர். உலகிலேயே ஒரே நாளில் கொரோனாதொற்றுக்கு இலக்காணவர்களின் அதிக பட்ச எண்ணிக்கைஇது. இந்த பெருந்தொற்று தொடங்கிய நாட்களிலிருந்து பதிவான ஒரு நாள் நோய் பாதிப்பு விகிதத்திலேயே இதுதான் அதிகம். தில்லி, மும்பை, அகமதாபாத் ஆகிய நகரங்களில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் நிலைமைமோசம் அடைந்துள்ளது. லக்னோ, போபால், கொல்கத்தா,அலகாபாத், சூரத் ஆகிய நகரங்களிலும் இதே நிலைதான். பொது சுகாதார நிபுணரான ஆனந்த் பான், நோய்வாய்ப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்த காலத்தை அதிகாரிகள் பயன்படுத்திக் கொண்டு தங்களைதயார்படுத்திக்கொள்ளவில்லை என்கிறார். “முதல் அலையிலிருந்து நாம் பாடம் கற்கவில்லை. பல நகரங்களில் படுக்கைகள் இல்லை என்ற செய்தி அப்போதே வந்தது. நாம் அப்போதே இரண்டாம் அலைக்கு தயாராகி இருக்க வேண்டும்” என்கிறார் அவர். ஆக்சிஜன் தேவை மற்றும் அத்தியாவசிய மருந்துகள் விவகாரத்தில் மத்திய - மாநில அரசுகள் இடையே சரியாக ஒருங்கிணைப்பு இல்லை என்கிறார் அவர். இதற்கு சரியான செயல்பாடு வேண்டும். இருக்கும் பொருட்களை மாநிலங்களுக்கு முறையே பிரித்துக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

அவசரகால சிகிச்சைப்பிரிவு படுக்கைகள் என்பது இதைவிட மோசமான நிலையில் உள்ளன. பல மாநிலங்களில் சில டஜன் படுக்கைகள் மட்டுமே மிச்சம் உள்ளன. பல விடுதிகள் மற்றும் அரங்கங்களை மருத்துவ முகாம்களாக மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால், அவசரகால சிகிச்சை படுக்கைகளை பெற்று உடனடியாக செயல்படுத்துவது சுலபமான காரியம் அல்ல. இதில் படுக்கைகளை சேர்ப்பதே சுலபம் இல்லை என்கிறார் மருத்துவர் ஃபதாஜ்தீன். “பெரும்பாலான படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளதை உறுதி செய்ய வேண்டும். இவற்றை சமாளிக்க நமக்கு மருத்துவர்களும், செவிலியர்களும் தேவை. இத்தகைய மருத்துவ சேவையை அமைத்து இயக்குவது என்பது அரசுக்கு மிகவும் கடினமான விஷயமாக இருக்கப்போகிறது. அதையும், இத்தகைய குறைவான நேரத்தில், சிறந்த தரத்தில் உருவாக்குவது கடினம்” என்கிறார்.

பதிவு செய்யப்படாத மரணங்கள்
இரண்டாம் அலையில், உயிரிழப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1761 ஆகும். இதன்மூலம், பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180,000ஆக அதிகரித்துள்ளது. பல நகரங்களில் இடுகாடுகள் இரவு பகலாகஇயங்கி வருகின்றன. இறந்தவர்களின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ மக்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும் என்பதை இது காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.கடந்த வாரம், போபாலில் புகைப்பட செய்தியாளராக பணியாற்றும் சஞ்சீவ் குப்தா, ஒரு இடுகாட்டை அடைந்தார். தினமும் அவர் சேகரிக்கும் செய்திகளைப்போலதான் இந்த நாளும் இருக்கும் என்று அவர் நினைத்தார். அன்றையநாள், கோவிட் காரணமாக இறந்தவர்கள் வெறும் 4 பேர் மட்டுமே என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,மயானத்தில் டஜன்கணக்கான உடல்கள் எரிக்க வைக்கப்பட்டிருந்தது அவருக்கு அதிர்ச்சியை அளித்தது. மேலும் பல உடல்கள் மின்சார மயானத்தில் கிடத்தப்பட்டிருந்தன.

அங்கிருக்கும் சிம்னியிலிருந்து வரும் கரும்புகையை புகைப்படம் எடுக்குமாறு ஒரு இளைஞர் கேட்டபோது, மனம் உடைந்துவிட்டதாக அவர் கூறுகிறார். “அந்த புகை, தனது தாயை குறிப்பதாக அந்த இளைஞர் கூறினார். இதுவரை நான் கேட்டதிலேயே மனம் உடையும் விஷயம் இதுதான்”என்கிறார் சஞ்சீவ் குப்தா.இதேபோன்று, லக்னோவில் பணியாற்றும் மற்றொரு புகைப்பட செய்தியாளர், ஒரு மயானத்தில் மட்டும் கிட்டத்தட்ட 100 உடல்களை தான் எண்ணியதாக கூறுகிறார். ஆனால், அன்று அரசு தரவுகள்படி அந்த மாநிலத்திலேயே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85தான். “மயானத்தின் மேலுள்ள மேகம் ஆரஞ்சு நிறமாக மாறியது.அதை கூறினாலே எனக்கு ஏதோ போல் உள்ளது. அரசிடமிருந்து நமக்கு சரியான தரவுகள் வரவில்லை என்று நிச்சயம் கூறுவேன்.’’ என்கிறார் அவர்.இதே போன்ற நிலையை விளக்குகிறார் வாரணாசியைச் சேர்ந்த மற்றொரு புகைப்பட செய்தியாளர்.

இதற்கு பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமலோ, கோவிட் சோதனை செய்யாமலேயோ பலர் வீட்டிலேயே இறக்கின்றனர். அவர்களின் மரணம் குறித்த தரவுகள் அரசின் கோவிட் தளத்தில் சேர்க்கப்படுவதில்லை. சிறு ஊர்களிலும், சில நகரங்களிலும் கோவிட் சோதனை மையங்கள் இன்னும் மோசமான நிலையிலேயே இருப்பதால்கூட, நாம் கோவிட் தொடர்பாக இறப்போரின் எண்ணிக்கையை தவறவிட வாய்ப்புள்ளது என்கிறார் ஆனந்த் பான்.சில மாநிலங்களில் கோவிட் மரணங்களை பதிவு செய்வதில் சிக்கல்கள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அரசு அதிகாரிகளின் அலட்சியம் ஒரு காரணமாக கூறப்பட்டாலும், அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டை மறுக்கின்றனர்.

கோவிட் திரிபுகள்
கடந்த மார்ச் 25ஆம் தேதி, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், இரட்டை உருமாற்றம்பெற்ற வைரஸை கண்டறிந்ததாக இந்திய அரசு தெரிவித்தது.வைரஸ் நிபுணரான ஷஹித் ஜமீல், இரட்டை உருமாற்றத்தின் மூலம், வைரஸின் ஸ்பைக் புரதம் அதிகரிக்கக்கூடும் என்றும், இதன்மூலம், இந்த வைரஸ் விரைவாக பரவும் தன்மைகொண்டதாக மாறவும், நம் உடலின் நோய்எதிர்ப்பு சக்தியிலிருந்து அது தப்பிக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்.வைரஸில் ஏற்பட்ட மாற்றமே, இத்தகைய வேகமான பரவலுக்கு சரியான விளக்கமாக இருக்கக்கூடும் என்கிறார்.இரட்டை உருமாற்றம் பெற்ற வைரஸ், மிக எளிதாக பரவி, தடுப்பூசிகளை தாண்டி செயல்படுமா என்பதை பிரிட்டனில் உள்ள சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.இந்த திரிபை இந்தியா `மிகவும் தாமதமாகவே` கவனித்தது என்கிறார் மருத்துவர் ஜமீல். “கடந்த டிசம்பர் மாதம், இந்தியா வெறும் 5,000 மாதிரிகளுக்கு மட்டுமே மரபணு வரிசைப்படுத்தலைச் செய்திருந்தது. இது போதுமான நடவடிக்கை இல்லை” என்கிறார் அவர்.

கடந்த ஜனவரி மாதம், பல ஆய்வுக்கூடங்களை ஒன்று திரட்டி, இந்த செயலை விரைவுபடுத்த அரசு முடிவு செய்தது. அவை, பிப்ரவரி மாதம்தான் செயல்பாட்டிற்கு வந்தன. “துரதிருஷ்டவசமாக, இரண்டாம் அலை தொடங்கிவிட்டது. மொத்த மாதிரிகளில் 5 சதவீதம் மாதிரிகளின் மரபணு வரிசைப்படுத்தலை முடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் நடக்கவில்லை.”இந்த செயல்பாடு வைரஸில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க விஞ்ஞானிகளுக்கு உதவுவதால், முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. “விரைவாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு திரிபை நீங்கள் ஒரு பகுதியில் கண்டறிவீர்கள் என்றால், உடனடியாக பொது சுகாதார பணிகளை மேற்கொண்டு, அது பெரும்சமூகத்தை சென்று சேராமல் பார்த்துக்கொள்ள முடியும்” என்று ஜலீல் விளக்குகிறார்.ஆனால், நடவடிக்கைகளை மேற்கொள்ள இப்போதும்கூட காலம் கடந்துவிடவில்லை. “பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் துரிதப்படுத்த வேண்டும், மக்களுக்கு விரைவாகதடுப்பு மருந்து அளிப்பதோடு, வைரஸ் உருமாற்றத்தின்மீது ஒரு கண் எப்போதும் இருக்க வேண்டும். இப்படி செய்தால்,பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறையும்” என்கிறார் மருத்துவர் ஜமீல்.

கட்டுரையாளர் : விகாஸ் பாண்டே - ஷதாப் நஸ்மி

நன்றி : பிபிசி