articles

img

எப்ஸ்டீன் பைல்ஸ்! அமெரிக்காவின் ‘ஜனநாயகமும்’ அநாகரிகத்தின் உச்சமும்

எப்ஸ்டீன் பைல்ஸ்! அமெரிக்காவின் ‘ஜனநாயகமும்’ அநாகரிகத்தின் உச்சமும்

ஜனநாயகம் என்றால் அமெரிக்கா, சுதந்திரம் என்றால் அமெரிக்கா, பெண்ணுரிமை என்றால் அமெரிக்கா என்றுதான் எல்லோருக்கும் இங்கே பிம்பங்கள் காட்டப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, ஒரு ரஷ்யா, சீனா அல்லது வடகொரியாவைச் சேர்ந்த  நபர்கள் கெட்டவர்களாக வருவார்கள்; அவர் களை வீழ்த்தி உலகைக் காக்கும் ‘நல்லவர்கள்’ அமெரிக்கர்களே என்று ஜேம்ஸ் பாண்ட் முதல் அவெஞ்சர்ஸ் வரையிலான ஹாலிவுட் படங் களில் தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. கம்யூனிஸ்டுகள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஆளும் நாடுகளில் சர்வாதிகாரம் நடக்கிறது, ஊழல் நடக்கிறது எனச் சாடி, அங்கு ஜனநாயகத்தைக் காப்பாற்றப்போவதாகக் கூறி ராணுவத்தை அனுப்பி அந்த நாடுகளைச் சூறையாடுவதே அமெரிக்காவின் குணம். கடந்த ஜனவரி மாதம் வெனிசுலாவிலும் அதுதானே நடந்தது? உலக அரசியலின் ஒவ்வொரு நகர்வும் அமெரிக்காவின் இழிவான முகத்தை அம்பலப்படுத்தியே வருகிறது. அந்த வரிசையில், ‘எப்ஸ்டீன் பைல்ஸ்’ விவகாரம் இப்போது அமெரிக்காவின் போலி ஜனநாயகத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது.  ‘எப்ஸ்டீன் பைல்ஸ்’ என்றால் என்ன?  அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் அவரது தோழி கிஸ்லேன் மேக்ஸ்வெல் ஆகியோர், ஏராளமான சிறுமிகளைப் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள். அமெரிக்க அரசியலில் வலம் வரும் பெரும் கோடீஸ்வரர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய நட்பு வைத்திருந்த எப்ஸ்டீன், அவர்களின் பாலியல் தேவைக்காகச் சிறுமிகளைக் கடத்தி வந்து தனது ரகசியத் தீவில் சப்ளை செய்து வந்தார். 2024 தேர்தலில், தான் மீண்டும் ஜனாதிபதியானால் இந்த ரகசிய ஆவணங்களை வெளியிடுவேன் என டிரம்ப் வாக்குறுதி அளித்தார். ஆனால் வெற்றிக்குப் பிறகு அவர் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றினார். எனினும் நாடாளுமன்ற அழுத்தத்தின் காரணமாக 2025 நவம்பர் 18 அன்று ‘எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டம்’ நிறைவேற்றப்பட்டு, தற்போது 30 லட்சத்திற்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.  மர்ம மரணமும் போலி உடல் நாடகமும் 2005-லேயே எப்ஸ்டீன் மீது புகார்கள் வந்தாலும், அன்றைய அமெரிக்க அரசுக்கும் தனக்கும் இருந்த ரகசிய உறவின் மூலம் அவர் தண்டனையிலிருந்து தப்பினார். 2008-இல் ஒரு வழக்கில் சிறையில் இருந்தபோது கூட, பகலில் வேலைக்குச் சென்று வர அரசு அனுமதி அளிக்கும் அளவுக்கு அவர் செல்வாக்கு பெற்றிருந்தார். 2019-இல் மீண்டும் கைது செய்யப்பட்ட எப்ஸ்டீன், சிறையில் மர்மமான முறையில் இறந்தார். இது தற்கொலை எனச் சொல்லப்பட்டாலும், அதில் பெரும் மர்மம் நீடிக்கிறது. எப்ஸ்டீனின் உடலை ஊடகங்களுக்குத் தெரியாமல் கொண்டு செல்ல, சிறை ஊழியர்கள் துணிகளை வைத்து ஒரு ‘போலி உடலை’ உருவாக்கி, அதை மருத்துவ வாகனத்தில் ஏற்றியுள்ளனர். செய்தியாளர்கள் அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து செல்ல, எப்ஸ்டீனின் உண்மை யான உடல் ஒரு கறுப்பு வாகனத்தில் யாருக்கும் தெரியாமல் வெளியே கொண்டு செல்லப் பட்டது. உயர்மட்டப் புள்ளிகளைக் காப்பாற்றவே அவர் சிறையிலேயே கொல்லப்பட்டி ருக்கலாம் என்ற சந்தேகம் இப்போதும் வலுவாக உள்ளது. அனில் அம்பானி – மோடி தொடர்பு இந்த அதிர்ச்சிகரமான ஆவணங்களில் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் அனில் அம்பானி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அனில் அம்பானி ராணுவம் தொடர்பான ஒப்பந்தங்களைப் பெற வெள்ளை மாளிகையில் லாபி செய்ய எப்ஸ்டீனின் உதவியை நாடியுள்ளார். “இதற்குப் பதிலாக எனக்கு என்ன கிடைக்கும்?” என எப்ஸ்டீன் கேட்டதற்கு, “இந்திய சந்தை உட்பட எதுவாக இருந்தாலும் சரி” என அனில் அம்பானி கூறியுள் ளார். பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது கூட அனில் அம்பானி தனது பிசினஸ் டீல்களைப் பெற எப்ஸ்டீன் மூலம் லாபி செய்துள்ளார். இதில் மிக முக்கியமாக, 2017-இல் மோடி மேற்கொண்ட இஸ்ரேல் பயணம் என்பது அமெரிக்காவைத் திருப்திப்படுத்து வதற்காகத்தான் செய்யப்பட்டது என எப்ஸ்டீன் தனது ஆவணங்களில் ‘ஒரே போடாகப்’ போட்டுள்ளார். இது இந்திய வெளியுறவுக் கொள்கையின் ரகசிய முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. கிழியும் முகத்திரைகள் உலகிற்கு ரோல் மாடலாகக் காட்டப்பட்ட பல கோடீஸ்வரர்கள் மற்றும் ஜனாதிபதிகளின் மறுபக்கம் இதில் அம்பலமாகியுள்ளது. தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், பெரும் தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், மவுண்ட்பேட்டன் பிரபுவின் பேரனான இளவரசர் ஆண்ட்ரூ, ஒபாமாவின் ஆலோசகர் கேதி ரூம்லர் எனப் பலரும் எப்ஸ்டீனுடன் பாலியல் வணிகத் தொடர்பில் இருந்துள்ளனர். எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், தனக்கு 14 வயதாக இருந்த போது மார்-ஏ-லாகோ விடுதியில் டிரம்ப்பிற்கு அறிமுகம் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். எலான் மஸ்க் 2012 மற்றும் 2013-இல் எப்ஸ்டீனுக்கு மின்னஞ்சல் அனுப்பி, “உன் தீவில் எப்போது மிகவும் பிரம்மாண்ட மான பார்ட்டி நடக்கும்?” எனக் கேட்டுள்ளார். இதன் மூலம் சிறுவர்களைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தும் இவர்களது குரூர முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அநாகரிகத்தின் உச்சம் ஆவணங்களின் சில பகுதிகளில் பில் கிளிண்டன் ஆடையின்றி நீச்சல் குளத்தில் பெண்களுடன் இருக்கும் புகைப்படங்களும், இளவரசர் ஆண்ட்ரூ ஐந்து பெண்கள் மீது படுத்திருக்கும் படங்களும் வெளியாகி அதிரவைத்துள்ளன. பெண்ணுரிமை பேசும் நாடுகளின் ஆட்சியாளர்கள், 14 வயதிற்கும் குறைவான சிறுமிகளைத் தங்களின் பாலியல் இச்சைக்காகச் சுரண்டியது கொடிய பாலியல் தாக்குதலே ஆகும். இத்தகைய நபர்களுக்குச் சப்ளை செய்வதற்காகவே உலகம் முழுவதிலிருந்து சிறுமிகளைக் கடத்தி வந்து எப்ஸ்டீன் தனது தீவில் அடைத்து வைத்துள்ளார். எப்ஸ்டீன் தான் தற்போதைய டிரம்ப்பின் மனைவியான மெலனியாவை டிரம்ப்பிற்கு அறிமுகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. எப்ஸ்டீன் பைல்ஸ் என்பது வெறும் பாலியல் வழக்கு அல்ல; அது அமெரிக்கா போற்றும் போலி ஜனநாயகத்தின் உண்மை முகமாகும். இந்த ஆவணங்கள் உலகுக்கு  உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான்: அமெரிக்க ஜனநாயகம் என்பது மனித அநாகரிகத்தின் மொத்த வடிவம்.