பொருளியல் அரங்கம் - க.சுவாமிநாதன்
அமெரிக்காவின் கண்களை சீனா உறுத்துவது ஏன்? அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கையில் சீனாவை தனிமைப்படுத்துவது என்ற குறிக்கோளைக் கொண்டிருப்பது ஏன்? அமெரிக்கா, ஆஸ்திரேலியா - ஜப்பானுடன் இந்தியாவையும் இழுத்து சீனாவைக் கட்டுப்படுத்த நாற்கரக் கூட்டணியை உருவாக்குவது ஏன்? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை சீனா ஒரு சோசலிச நாடாக முன்னேறுவதும், பொருளாதாரத்தில் பெரும் பாய்ச்சல் காண்பிப்பதுமே ஆகும். ஏற்கனவே மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் (ஜி.டி.பி) உலக நாடுகளில் இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. அமெரிக்கா 30 டிரில்லியன் டாலர் ஜி.டி.பி உடன் முதல் இடம் என்றால், சீனா 19 டிரில்லியன் டாலர் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடம் என்பதே சீனாவை தனது தீவிரப் போட்டியாளராக அமெரிக்காவைக் கருத வைக்கும் என்பது மட்டுமல்ல காரணம். மொத்த உள்நாட்டு உற்பத்தி, வாங்கும் சக்தி சமன்பாட்டின் அடிப்படையில் (GDP - Purchasing Power Parity) பார்த்தால் சீனா அமெரிக்காவை விஞ்சி நம்பர் 1 இடத்திற்கு வந்து விடுகிறது. மொத்த உள் நாட்டு உற்பத்தியின் மூன்று அங்கங்களில்- தொழில், விவசாயம், சேவை - தொழில் துறையை மட்டும் எடுத்துக் கொண்டால் அப்போதும் சீனா அமெரிக்காவை விஞ்சி நம்பர் 1 இடத்திற்கு வந்து விடுகிறது. தி இந்து ஆங்கில நாளிதழின் நவம்பர் 26, 2025 “டேட்டா பாயிண்ட்” தரும் கூடுதல் தகவல்கள் அமெரிக்காவின் வயிறு எரிவதற்கான கூடுதல் காரணங்களை நமக்கு சொல்கிறது. * 2000 - 23 க்கு இடைப்பட்ட காலத்தில் சீனா உலகில் உள்ள 217 நாடுகளில் 179 நாடுகளுக்கு கடன் கொடுத்துள்ளது. அதாவது 80% நாடுகள் சார்ந்த நிறுவனங்கள், சீனாவின் அரசு வங்கிகளிடம் இருந்து கடன்களை பெற்றுள்ளன. * சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், கடன் வாங்கிய நாடுகளில் நம்பர் 1 ஆக இருப்பது அமெரிக்கா தான். அமெரிக்க நிறுவனங்கள் சீனாவிடம் இருந்து 202 பில்லியன் டாலர்களை 2500 திட்டங்களுக்காக வாங்கியுள்ளன. சீனாவின் வெளிநாட்டுக் கடனில் இது 9%. * அமெரிக்க நிறுவனங்கள் 2000 ஆம் ஆண்டில் 320 மில்லியன் டாலர் கடன்களை சீனாவிடமிருந்து பெற்று இருந்தன. 2023 இல் இது 202 பில்லியன் டாலர்கள். 631 மடங்கு அதிகரிப்பு. * சீனாவிடம் கடன் வாங்கிய நாடுகளில் ரஷ்யா 172 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடம். ஆஸ்திரேலியா 130 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடம். ஐரோப்பிய இணையத்தின் 27 நாடுகள் சேர்ந்து 1800 திட்டங்களுக்கு 161 பில்லியன் டாலர்கள். இது போதாதா அமெரிக்காவின் எரிச்சலுக்கு!
