டிச.3-இல் மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்குஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் மாற்றுத் திறனாளிகள் சங்க மாநிலக் குழு கோரிக்கை
சென்னை, நவ.19 - டிச.3 அன்று மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலக் குழு கூட்டம் நவ.18 அன்று சென்னை கிண்டியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன் தலைமை வகித்தார். தென் சென்னை மாவட்டச் செயலாளர் எம்.குமார் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி, பொருளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி, துணைத் தலைவர் பா.சு.பாரதி அண்ணா ஆகியோர் பேசினர். டிசம்பர் மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெற உள்ள இச்சங்கத்தின் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்திட திட்டமிடப்பட்டது. குறிப்பாக, டிசம்பர் 19 அன்று திருச்சி மாநகரில் நடைபெறும் மாநாட்டு பேரணி மற்றும் பொதுக் கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்கள் பங்கேற்க உறுதி செய்யப் பட்டது. மேலும் உலக ஊனமுற்றோர் தினமான டிசம்பர் 3 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிளைகளிலும் சங்க கொடியேற்றி, மாநில மாநாட்டிற்கான பிரச்சாரத்தை துவங்கவும் முடிவு செய்யப்பட்டது. ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்-2016 இல் வலியுறுத்தப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு உரிமைகளை அமல்படுத்திட ஒரு சிறப்பு நிதியத்தை உருவாக்கிட இச்சட்டத்தில் வலியுறுத்தியுள்ளது. இருந்த போதிலும், சட்டம் நிறைவேற்றப்பட்டு 9 ஆண்டுகள் ஆனபின்னரும், ஒன்றிய பாஜக அரசு இதுவரை இந்த நிதியத்தை ஏற்படுத்தாதது மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் செயலாகும். இதனால் இச்சட்டத்தின் மூலம் கிடைக்க வேண்டிய பல்வேறு உரிமைகள் மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைக்கப் பெறாமல் உள்ளன. எனவே, இதனை வலியுறுத்தி உலக ஊனமுற்றோர் தினமான டிச.3-ஐயொட்டி, டிசம்பர் 1 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், ஒன்றிய மோடி அரசை கண்டித்து கண்களில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் 3 அன்று போக்குவரத்துத் துறை உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கிட வேண்டும். அதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
