பண்பாட்டுத்துறை ஆளுமைகளே, நீங்கள் எந்தப் பக்கம்?
“வெறுப்பின் கொற்றம் வீழ்க; அன்பே அறமென எழுக” என்ற முழக் கத்தை முன்வைத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் 16-ஆவது மாநில மாநாடு தஞ்சை மாநகரில் டிசம்பர் 4-7 தேதிகளில் நடைபெற உள்ளது. வெறுப்பை விதைத்து விபரீத விளைவுகளை திட்டமிட்டு உருவாக்கிடும் நோக்கத்தோடு இயங்கி வரும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் நடவடிக்கைகளை எதிர்த்தே இந்த முழக்கத்தை தமுஎகச முன்வைத்திருக்கிறது.
அனைத்தையும் கட்டுப்படுத்த முயலும் ஆர்எஸ்எஸ் இந்துத்துவத்தை அரசின் சித்தாந்தமாக ஆக்குவ தற்கும்; மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை இந்துத்துவா ராஷ்டிரமாக மாற்றுவதற்குமான ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தை பாஜக தலைமையி லான ஒன்றிய அரசு பல வடிவங்களில் அமலாக்கி வரு கிறது. கல்வி, கலாச்சாரம், வரலாறு, அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்ட - அரசமைப்பு உருவாக்கிய அனைத்து நிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஆட்களை ஊடுருவச் செய்து, அதன் கட்டுப்பாட்டிற் குள் கொண்டுவந்து, கருத்தியல் ரீதியில் மக்களை ஏற்க வைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வரு கின்றது. இத்தகைய தங்களது திட்டத்தை அமலாக்கு வதற்கு திரைப்படத்துறை, தொலைக்காட்சி சேனல் கள், ஓடிடி தளங்கள், வெகுஜன இசை, உயர்நுண் கலைகளிலும் ஊடுருவி, அவைகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறது. ஆபத்தான கல்விக் கொள்கை உதாரணமாக, ஒன்றிய அரசின் கல்விக்கொள்கை 2020 மூலமாக, இந்துத்துவ கருத்தியலை மாண வர்கள் மத்தியில் பரப்பிட முயற்சிக்கிறது. ஒரு மாண வர் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றால், தகுதித் தேர்வு எழுதிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.
அதே நேரத்தில் ‘சேது பந்த வித்துவான் யோஜனா’ என்ற திட்டத்தின் அடிப்ப டையில் குருகுலக் கல்வியை ஐந்தாண்டுகள் கற்றி ருந்தால், ஒருவர் நேரடியாக எந்தத் தேர்வும் இல்லா மல், உலகத் தரத்தில் சிறந்து விளங்கும் ஐ.ஐ.டி நிறு வனங்களில் ஆராய்ச்சி மாணவராக சேரலாம்; மாதம் 65,000 ரூபாய் உதவித்தொகையும் பெறலாம் என்கி றது. ஐந்தாண்டு காலம் குருகுலக் கல்வி என்பது வேத சாஸ்திரங்கள் சம்பந்தப்பட்ட போதனைதான். தேசிய கல்விக்கொள்கையின் இன்னொரு முக்கிய அம்சமாக, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ‘இந்திய அறிவமைப்பு’ (Indian Knowledge System) பாடமாக்கப்படுகிறது. இந்திய அறிவ மைப்பின் பாடத்திட்டம் என்பது, வேதம் மனப்பாடம் செய்வது, பாராயணம் செய்வது, மந்திரங்களை உச்ச ரித்தல் வாஸ்து, ஜோதிடம் உள்ளிட்டவற்றைக் கற்பது போன்ற மூடநம்பிக்கை குப்பைகளைக் கொண்டது. இத்திட்டம் அறிவியலுக்குப் புறம்பானது. குலத் தொழில் திட்டம் கல்வியில் மட்டுமல்லாமல், வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலமாகவும் (விஸ்வகர்மா யோஜனா) தங்கள் சித்தாந்தமான வர்ணாசிரம தர்மத்தை பாஜக திணிக்கிறது. கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் அறிவித்த இந்த திட்டத்திற்காக ரூ.15,000 கோடி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கி இருக்கிறது.
இந்த திட்டத்தின்படி சாதிகளின் அடிப்படையில் குலத்தொ ழிலை செய்திட கடன் வழங்கப்படுகிறது. முடிதிருத் தம், துணி வெளுத்தல், மண்பாண்டம் செய்தல், காலணி செய்தல் உள்ளிட்ட சாதி அடிப்படையிலான குலத்தொழில்களை ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்திட அரசு கடன் வழங்குகிறது. இத்திட்டத் தின் நோக்கத்தினை “இந்தத் திறமைகள் அல்லது தொழில்கள் தலைமுறை, தலைமுறையாக குடும்பங் களுக்குள் அல்லது ஏனைய உதிரி உடல் உழைப்பாளி களுக்கு குரு-சிஷ்யன் தன்மையில் போதிக்கப்படு கிறது” என்று கூச்சமில்லாமல் குறிப்பிடுகிறது. துவக்ககால ஆர்.எஸ்.எஸ் தலைவரால் முன் மொழியப்பட்ட, அம்பேத்கர் மற்றும் அரசியல் நிர்ணய சபையால் நிராகரிக்கப்பட்ட ‘மனுநீதியை’ கல்வி, வேலை வாய்ப்பின் மூலமாக மோடி அரசு புகுத்து கிறது. இத்தகைய பிற்போக்குத்தனமான இந்துத்துவ நிகழ்ச்சி நிரலைத் திணிக்கிற அழுத்தமும், எதிர்க்கட்சி களையும், ஜனநாயகத்தையும் ஒடுக்குகிற எதேச்சதி கார உந்துதலும் ஒன்றிய பாஜக அரசினுடைய நவ- பாசிச குணங்களைக் காட்டுகின்றன. இத்தகைய நவ-பாசிசப் போக்கை எதிர்க்கும் கடமை கலை ஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு உள்ளது. பாசிசத்தைத் தோலுரித்த எழுத்தாளர்- கலைஞர்கள் ஹிட்லர் மற்றும் முசோலினியின் பாசிச வெறியை எதிர்த்து உலகம் முழுவதும் கலைஞர்களும், எழுத்தாளர்களும் கிளர்ந்தெழுந்து தங்களது படைப்பு கள் மூலமாக பாசிசத்தைத் தோலுரித்தார்கள்.
பிக்காசோவின் கோர்னிகா, சார்லி சாப்ளினின் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ உள்ளிட்ட படைப்புகள் குறிப்பி டத்தக்கவை. 20-ஆம் நூற்றாண்டில் மட்டுமல்ல, அதற்கும் முன்னதாக பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் வால்டேர், ரூசோவின் படைப்புகள் பாஸ்டைல் சிறை தகர்ப்பு (ஜூலை 14, 1789)மக்கள் எழுச்சிக்கு உந்துசக்தியாக இருந்தது. அமெரிக்காவில் வெள்ளைக்காரப் பெண்மணி ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் எழுதிய அங்கிள் டாம்ஸ் கேபின் நாவல் இனவெறிக்கு எதிராக கருப்பின மக்களை கிளர்ந்தெழச் செய்தது. கடந்த நூற்றாண்டில் ரஷ்யாவில் டால்ஸ்டாய் படைப்புக ளும், மக்சிம் கார்க்கியின் தாய் நாவலும் சமூகத்தின் தலைகீழ் மாற்றத்திற்கான நியாயத்தை மக்க ளுக்குப் போதித்தன. தமிழ்நாட்டின் உதாரணங்கள் தமிழகத்தில் காலனி ஆதிக்கத்தை எதிர்த்த மகாகவி பாரதியின் படைப்புகள், மொழி உரிமைகள் குறித்த பாரதிதாசனின் எழுத்துகள், பொதுவுடை மைக் கருத்துகளை பட்டிதொட்டிகளில் எல்லாம் கொண்டு சென்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்த ரத்தின் பாடல்கள், தமிழ்ஒளியின் முற்போக்கு எழுத்து கள் உள்ளிட்ட படைப்புகள் நமக்கு சிறந்த உதார ணங்களாகத் திகழ்கின்றன. முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் துவக்கம் கலைஞர்கள், படைப்பாளிகளின் பங்களிப்புக ளைப் பற்றிப் பேசுகிறபோது, அமைப்புரீதியில் மக்களை முற்போக்குப் பாதைக்கு இட்டுச்செல்லும் செயல்பாட்டு இயக்கங்கள் குறித்து குறிப்பிட்டாக வேண்டும். இத்தகைய பணியை இன்று நேற்று அல்ல, சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கலை ஞர்களும், எழுத்தாளர்களும் அமைப்பு ரீதியில் துவக்கினார்கள். ஆம்! 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் லக்னோ நகரத்தில் நடைபெற்ற மாநாட்டில் “முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்” என்ற அமைப்பு உருவானது. அம்மாநாட்டில் தேசத்தின் தலைசிறந்த கலை ஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் கலந்து கொண்டனர். மகாகவி ரவீந்திரநாத் தாகூர், சரோஜினி நாயுடு, முன்ஷி பிரேம்சந்த், கே.ஏ. அப்பாஸ், முல்க்ராஜ் ஆனந்த் உள்ளிட்ட கலை இலக்கியத் துறையைச் சேர்ந்த பல ஜாம்பவான்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
அந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் ஒரு பகுதி அன்றைக்கே தேசத்து மக்களை பின்வருமாறு எச்சரிக்கை செய்துள் ளதோடு, பண்பாட்டுத் துறையில் கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை சுட்டிக்காட்டியுள்ளது: “இந்தியர்களின் வாழ்வில் நிகழும் மாற்றங்களை வெளிப்படுத்துவதும், இலக்கியத்தில் அறிவியல் பூர்வமான பகுத்தறிவை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவுவதும், இந்திய எழுத்தாளர்களின் கடமையாகும். குடும்பம், மதம், பாலினம், போர் மற்றும் சமூகம் போன்ற பிரச்ச னைகளை ஊக்குவிக்கும் பொதுவான பிற்போக்குத் தனமான மற்றும் திருத்தல்வாதப் போக்குகள் மீதான இலக்கிய ரீதியிலான விமர்சனங்களை உருவாக்க படைப்பாளிகள் முயற்சி செய்ய வேண்டும். வகுப்பு வாதம், இன விரோதம் மற்றும் மனிதரை மனிதர் சுரண்டும் முறையை எதிர்க்கும் இலக்கியப் போக்கு களை உருவாக்கிட போராட வேண்டும்” சர்வதேச மாநாட்டில் தீர்மானம் லக்னோ நகரில் நடந்த மாநாட்டிற்கு சில வாரங்களு க்குப் பிறகு லண்டனில் சர்வதேச எழுத்தாளர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் நிறைவேற்று வதற்காக தீர்மான நகல் ஒன்றை இந்தியாவில் இருந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அனுப்பியது.
அதில், “இன்று உலகப் போர் என்கிற பேய் உலகையே ஆட்டிப்படைக்கிறது. உணவுக்கு பதிலாக துப்பாக்கிகளையும், கலாச்சார வாய்ப்புகளுக்குப் பதிலாக சாம்ராஜ்ஜிய வெறியையும் உமிழ்வதன் மூலமாக, பாசிச சர்வாதிகாரம் தன்னுடைய கோர முகத்தைக் காட்டத்துவங்கி உள்ளது” என்று அன்றைய சூழலை இந்திய முற்போக்கு எழுத்தா ளர்கள் சங்கம் சர்வதேச மாநாட்டில் பதிவு செய்தது. இந்தக் காலகட்டத்தில், ஹிட்லரின் பாசிசத்துக்கு எதிராக உலகம் முழுவதும் கலைஞர்கள் எழுத்தாளர்கள் குரல் எழுப்பத் துவங்கினார்கள். பாசிச எதிர்ப்புக் கலை களும், இலக்கியப் படைப்புகளும் உருவாகின. அதேபோல, பாசிசத்திற்கு எதிராகவும், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராகவும் கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு ‘இப்டா’ (IPTA) என்று புகழ்பெற்ற இந்திய மக்கள் நாடக இயக்கம். இந்த அமைப்பை அன்றைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த பி.சி.ஜோஷி துவக்கினார்.
கைஃபி ஆஸ்மி, பால்ராஜ் சஹானி, ஜோரா செகால், ரவிசங்கர், சலீல் சவுத்ரி, கே.ஏ.அப்பாஸ் மற்றும் ஹோமி ஜஹாங்கீர் பாபா உள்ளிட்ட கலை, கலாச்சாரம், அறிவியல் மற்றும் சட்டத்துறை சார்ந்த மகத்தான ஆளுமைகள் ஒன்று சேர்ந்து இந்திய மக்கள் நாடக அமைப்பை உரு வாக்கினர். மக்கள் பிரச்சனைகளை நாடு முழுவதும் வீதி நாடகக் கலை மூலமாக கொண்டு சென்றனர். ஆட்சியாளர்களை துணிச்சலுடன் விமர்சித்தனர். 90 ஆண்டுகளுக்கு முன்பு லக்னோ நகரில் துவங்கிய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் இந்திய மக்கள் நாடக இயக்கம் ஆகியவற்றின் எழுச்சிமிகு பாரம்பரியத்தில் உதித்து செயல்படும் அமைப்புதான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம். டிசம்பர் 4-7 தேதிகளில் நடைபெற உள்ள 16-ஆவது மாநில மாநாட்டில் தமிழ்நாட்டின் முற்போக்கு எழுத்தாளர் கள், கலைஞர்கள் கூடுகிறார்கள்.
இம்மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ்.சின் நூறாண்டுகால நிகழ்ச்சி நிரலான இந்தியாவை இந்துத்துவ ராஷ்டி ரமாக மாற்றும் திட்டத்தை எதிர்த்து படைப்பாளிகள் என்ன செய்ய வேண்டும் என்ற செயல்திட்டத்தை உருவாக்க இருக்கிறார்கள். மக்சிம் கார்க்கியின் அழைப்பு இன்றைக்கு மனுநீதி, கார்ப்பரேட் சுரண்டல் மூலமாக நாட்டில் ஜனநாயகத்தை ஒழித்திட ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள் முனைப்புடன் செயல் படும் சூழலில், மக்சிம் கார்க்கியின் புகழ்பெற்ற கேள்வி யான கலாச்சாரத்தின் வல்லுநர்களே, நீங்கள் எந்தப் பக்கம்? (“On which side are you, Masters of Culture!”) என்ற கேள்வியை- திரைத்துறை உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து கலைப்படைப்பா ளிகளிடமும் தமுஎகச எழுப்ப இருக்கிறது. நவ பாசிசப் போக்கை ஆதரித்து, உழைக்கும் மக்களைச் சுரண்டும் சக்திகள் பக்கமா அல்லது அதை எதிர்த்து சுரண்டப்படும், ஒடுக்கப்படும் மக்கள் பக்கமா; என்ற கேள்வியை எழுப்ப உள்ளது. சமத்துவம், ஜனநாய கத்தை மீட்டெடுத்து சோசலிசத்திற்கு இட்டுச்செல்லும் கலை இலக்கிய போராட்டத்தை வலுப்படுத்த இருக்கி றது. அத்தகைய மகத்தான மாநாடு வெல்லட்டும்!
