இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பு நான்காவது தொழில்நுட்ப புரட்சி யுகத்தில் உள்ளது. அறிவியல் தொழில்நுட்பங்களில் வியக்க வைக்கும் முன்னேற்றத்தை உருவாக்கிக் கொண்டேவருகிறது. ஆனால் இதே முதலாளித்துவ சமூக அமைப்பு கோவிட் 19 பெருந்தொற்றை எதிர்கொள்ள திண்டாடிக் கொண்டிருக்கிறது. அதேவேளையில் சோசலிச நாடுகள் கோவிட் 19 பெருந்தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகின்றன.
இதை எப்படி புரிந்து கொள்வது?
முதல் தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் உருவெடுத்த முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்குகளை பிரடெரிக் ஏங்கல்ஸ் ஆய்வு செய்தார். அதை “இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை” என்கிற புத்தகமாக கொண்டுவருகிறார். இந்நூலில் ஏங்கெல்ஸ் எழுப்பிய கருத்தோட்டங்கள், சிந்தனைகள் பல்வேறு நபர்களை சுண்டி இழுக்க ஆரம்பித்தது. அத்தகைய சிந்தனைகளுக்கு ஆட்பட்ட ரூடால்ப் விர்சோவ் (Rudolf Virchow) எழுதிய “Typhus epidemic in Upper Silesia” மருத்துவ ஆய்வுக் கட்டுரை பொதுச் சுகாதாரத்தில் அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகளை எடுத்துரைக்கிறது.
பொது சுகாதாரத்தில் அரசியல் பொருளாதாரம்
1848ல் அன்றைய பிரஷ்ய மாகாணத்தில் சில்சியா என்கிற பகுதியில் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட போலிஷ் சிறுபான்மை மக்கள் வசித்துவந்தனர். திடீரென அவர்களது உடலில் சிவந்த புள்ளிகளோடு விஷக் காய்ச்சல் உருவாகிறது. அது டைப்பஸ் எனப்படும் தொற்று நோய். இந்நோயின் பாதிப்பால் பல்வேறு இடர்களுக்கு அம்மக்கள் உள்ளாகின்றனர். இந்தத் தொற்று நோய் குறித்து ஆய்வு செய்வதற்காக 26 வயது மருத்துவர் ரூடால்ப் விர்சோவ் அப்பகுதிக்கு அனுப்பப்படுகிறார். மூன்று மாதங்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வுப் பணியில் ஈடுபடுகிறார். சமூக பொருளாதார பண்பாட்டு அடிப்படையில் பேரிடரை உருவாக்கும் பெருந்தொற்றை ஆய்வுக்கு உட்படுத்தி உடனடி மற்றும் நீண்டகால பரிந்துரைகளை முன்வைக்கிறார்.
தொற்றுநோய்யை எதிர்கொள்ள “அதிகமான மருத்துவர்கள், மருத்துவமனை, இவற்றோடு அனைத்து மக்களுக்கும் முழுமையான வேலைவாய்ப்பு, உயர் ஊதியம், விவசாய கூட்டுறவு, அனைவருக்கும் கல்வி மற்றும் பழமைவாத மத நம்பிக்கை பிடிப்பிலிருந்து அரசு தன்னை விடுவித்து செயலாற்றுவது அவசியம்” என்கிறார் விர்சோவ்.
உலகளவில் ‘நோயியல் மருத்துவர்’ என புகழப்படும் ரூடால்ப் விர்சோவ் மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அதற்கு ஈடாக சுகாதாரத் துறை சார்ந்து எழுதிய கட்டுரைகள், உழைக்கும் வர்க்கத்திற்கு இன்றளவும் உறுதுணையாக உள்ளன. முதலாளித்துவசமூகத்தின் இயக்கப் போக்குகளை, போதாமைகளை எடுத்துரைத்து உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்கான நிகழ்ச்சி நிரலை மருத்துவத்துறையில் வடிவமைத்தவர் ரூடால்ப் விர்சோவ். இதன் காரணமாகவே பெருந்துயரை உருவாக்கும் பேரிடர் தொற்றை எதிர்கொள்ளும் காலங்களில் மருத்துவ அறிஞர்களால் அவரது எழுத்துக்கள், ஆய்வு அறிக்கைகள் புரட்டிப் பார்க்கப்படுகிறது.
பொது சுகாதாரம் - நவீன முதலாளித்துவம்
இடதுசாரி சிந்தனையாளர்கள் அமைப்புகளின் முன்முயற்சியால் “2020ல் அனைவருக்கும் ஆரோக்கியம்” என்ற கருத்தோட்டம் முன்னெடுக்கப்பட்டது. இம்முழக்கத்தை முன்வைத்து தேசிய அளவில் மக்கள் நல்வாழ்வில் அக்கறை கொண்ட இயக்கங்கள் செயல்படத் தொடங்கின. இத்தகைய செயல்பாடுகளுக்கு எதிர்நிலையில் நின்று 1980ல் உலக வங்கி “பொது சுகாதாரம் குறித்த முதல் கொள்கை அறிக்கையை வெளியிட்டது. அதில் மருத்துவம், மருத்துவ சேவை, மருந்து உற்பத்தி ஆகியவற்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் ஈடுபடுவதைத் தவிர்த்து தனியார்மயமாக்கி லாபமீட்டும் துறையாக மாற்ற வழிகாட்டியது. இறையாண்மைமிக்க அரசுகளை வலியுறுத்தத் தொடங்கியது.
சுகாதாரம் என்பது அடிப்படை உரிமையாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தாலும் கடந்த 40 ஆண்டுகளில் சுகாதாரம் லாபமீட்டும் சரக்காக முதலீடுகளை ஈர்க்கும் துறையாக முதலாளித்துவ நாடுகளில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறையில் தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், நிதி மயமாக்கல் கோட்பாடுகளால் தீவிரப்படுத்தப்பட்டன. உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவமனைகள் மருத்துவ உபகரணங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளின் இலாபம் ஈட்டும் தளமாக மாற்றப்பட்டது. சுகாதாரத் துறையில் இத்தகைய போக்குகள் முதலாளித்துவ நாடுகளே கொரோனா பேரிடரை எதிர்கொள்ள திண்டாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்திய அரசின் சுகாதாரக்கொள்கை
உலகிலேயே அனைத்து நாடுகளை விட மருந்துக்கு அதிக விலை கொடுத்து வாங்கும் நாடு என்ற நிலையில் இந்தியா இருந்தது. இந்த நிலை நாடு விடுதலை அடைந்த பிறகு மாறுதலுக்கு உள்ளானது. திட்டமிட்டு அரசு முதலீட்டுடன் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் மருந்து உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.இந்திய மக்களுக்கு ஒரு மருத்துவக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டு அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில், 1978ல் இந்திய மருந்துக் கொள்கை, 1979ல் மருந்து விலைக் கட்டுப்பாடு ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. மருந்து உற்பத்தி மட்டுமல்ல மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய தளங்களில் விடுதலை அடைந்த முதல் பத்து ஆண்டுகளில் கவனம் செலுத்தப்பட்டது. தாராளமயமாக்கல் யுகத்தில் நாடு அடியெடுத்து வைத்தவுடன் சுகாதார கொள்கைகளும் செயல்பாடுகளும் வணிகம், சந்தை சார்ந்து நிர்ணயிக்கப்பட்டன.“2020ல் அனைவருக்கும் ஆரோக்கியம்” என்கின்ற அல்மா அடா (1979) பிரகடனத்தை நிறைவேற்றும் வகையில் முதலாவது தேசிய சுகாதாரக் கொள்கை 1983ல் உருவாக்கப்பட்டு இலக்குகள் நிச்சயிக்கப்பட்டன. பேச்சு பேச்சாகவே இருந்தது. 2000 ஆம் ஆண்டில் திட்டமிட்டபடி இலக்குகளை அடையவில்லை. இரண்டாவது தேசிய சுகாதாரக் கொள்கை 2002 ல் அப்போதைய வாஜ்பாய் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டது. இலக்குகளை சரிசெய்வதாக வாயளவில் சொல்லிக்கொண்டு சுகாதார துறையில் தனியார்மயமாக்கலை சட்டரீதியாக மாற்றியது.
அடுத்துவந்த மோடி அரசு காலத்தில் தேவைக்கேற்பசுகாதாரக் கொள்கை உருவாக்குவதாக சொல்லிக்கொண்டு மூன்றாவது தேசிய சுகாதாரக் கொள்கை 2017ல் நிறைவேற்றியது. “அனைவருக்கும் ஆரோக்கியம்” என்ற தேசிய சுகாதார கொள்கையின் இலக்கு “சுகாதாரத்துறையில் சந்தைப் பொருளாதாரம் ஆரோக்கியமாக” செயல்படுவதற்கு ஏற்ற வகையில் முழுமையாக மாற்றப்பட்டு விட்டது. விளைவு, அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மருந்து உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் என அனைத்தையும் திட்டமிட்டு சீரழிக்கும் வேலையை பலபலக்கும் வார்த்தை ஜாலங்களால் திட்டங்களின் பெயரால் செயல்படுத்தி வருகின்றனர். ஆட்சியாளர்களின் இத்தகைய செயல்பாடுகளுக்கு எதிராக மருத்துவர்கள் மருத்துவ மாணவர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், மருந்து விற்பனையாளர்கள் ஆகியோர் நடத்திய போராட்டங்களும் நடத்திவரும் இயக்கங்களும் மிகுந்த முக்கியத்துவம் உடையவை.
போராட்டங்களின் வழி பாதுகாக்கப்பட்ட தமிழக சுகாதாரத் துறை
தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பல்வேறு மாநிலங்களோடு ஒப்பிடும்போது வலுவான அடித்தளம் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இதற்கான காரணத்தை மாநில அரசுகள் சுகாதாரத்துறையில் மேற்கொண்ட கொள்கை, அக்கொள்கைகள் மக்கள் நலன் சார்ந்து வடிவமைக்க மக்கள் இயக்கங்கள் நடத்திய செயல்பாடுகள் இவற்றோடு இணைத்து புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.உதாரணத்திற்கு மருத்துவக் கல்லூரிகளை தனியார்மயமாக்க எம்ஜிஆர் ஆட்சியில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக மருத்துவ மாணவர்கள் நடத்திய போராட்டம் - மருத்துவ மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து அரசியல் கட்சிகளும் திரண்டது- அடுத்தகட்ட தனியார்மயமாக்கலுக்கு தடை போட்டது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசுகள் பொறியியல் கல்லூரிகளை தனியார் லாபத்திற்கு அனுமதித்தது போல் மருத்துவக் கல்லூரியை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக தமிழக மருத்துவ மாணவர்கள் இந்திய மாணவர்சங்கம் வழிகாட்டுதலில் நடத்திய தொடர் போராட்டங்கள் அடிப்படையாக இருந்தன. போராட்டங்களில் உருவெடுத்தவர்கள் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளை பாதுகாக்க மருத்துவர் நலன் சார்ந்து அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து நடத்திய இயக்கங்கள் தமிழக மருத்துவத் துறையை மக்கள் நலன் சார்ந்து நிற்க வைத்ததில் முக்கிய பங்கு வகித்தன. மற்றொரு உதாரணம், அறிவொளி இயக்கம், அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புகள், இடதுசாரி இயக்கங்கள் மக்களிடம் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை.“அனைவருக்கும் ஆரோக்கியம்” முழக்கத்தை மையமாக வைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமைப்புகளை ஒருங்கிணைத்து மக்கள் நல்வாழ்வு இயக்கம் தமிழகத்தில் மேற்கொண்ட பிரச்சாரங்கள் பொதுமக்கள் மத்தியிலும், அறிவுசார் துறையிலும் குறிப்பிடத்தகுந்த செல்வாக்கை இன்றுவரை செலுத்தி வருகிறது.
சுகாதாரத்துறையில் நமது செயல்பாடு
அனைவருக்கும் சமச்சீரான இலவச தடுப்பூசி கிடைப்பதற்கு காப்புரிமை சட்டங்கள் இடர்பாடுகளாக இருப்பதை சுட்டிக்காட்டி அதை ரத்து செய்யக்கோரி 32 கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் வலியுறுத்திய கூட்டறிக்கையின் முழக்கம் அனைத்துத் தளங்களிலும் பரவலாக்கப்பட வேண்டும்.ஒன்றிய அரசு சுகாதாரத் துறையை சந்தை பொருளாதாரத்திற்கும் உகந்த வகையில் கார்ப்பரேட்மயமாகும் அனைத்து நடவடிக்கைகளுக்கு எதிராக பரந்துபட்ட மக்கள் இயக்கங்களை கட்டமைக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் கார்ப்பரேட் நிறுவனங்களை லாபம் ஈட்டுவதற்கு வழிவகை செய்யும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும்.
“அனைவருக்கும் ஆரோக்கியம் - அதைக் கொடுப்பது அரசின் கடமை” என்கிற முழக்கம் வலுப்படுத்தப்பட வேண்டும். சுகாதாரம் என்பது ‘உடல், மனம் மற்றும் சமூக ரீதிகளிலான ஆரோக்கியத்துக்கான முழுமையான மருத்துவம்’ என்பதற்கு மாறாக ‘வெறும் நோய் தீர்க்கும் மருத்துவமாக’ சுருக்கப்படும் கருத்துக்களுக்கு எதிராக வலுவாக களமாட வேண்டும். தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி,மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட சுகாதாரத் துறை சார்ந்த அனைத்து இடங்களிலும் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.தலைநகர் சென்னையில் அரசு மருத்துவமனைகளில் இருக்கும் கட்டமைப்பு வசதிகள் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் உருவாக்கப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் சாராத பணியிடங்கள் அவுட்சோர்சிங், காண்ட்ராக்ட் முறையில் தொடர்வது கைவிடப்பட்டு அரசே நேரடியாக ஈடுபட வேண்டும். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் அரசு ஊழியர்களாக மாற்றப்பட வேண்டும். இதற்கேற்ற வகையில் சுகாதாரத்திற்காக மாநில அரசு செலவிடும் தொகையை மூன்று மடங்காக உயர்த்த வேண்டும்.
மக்கள் அமைப்புகள் சுகாதாரத் துறையின் செயல்பாடுகளை உற்றுநோக்கி தவறுகளை கலைவதற்கு துணை புரிய வேண்டும். குடியிருப்புகளின் அருகாமையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அவற்றின் செயல்படும் தன்மை குறித்து அவ்வப்போது கண்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்பட வேண்டும்.குடிநீர், சத்தான உணவு, கழிவு நீர் வெளியேற்றம், சுகாதாரமான வாழ்விடம், மக்களிடம் பணம் புழங்குவதற்கு ஏற்றவகையில் வேலைவாய்ப்பு அதற்கேற்ற அரசின் கொள்கை போன்றவையே மக்களின் நல்வாழ்வுக்கு அடிப்படையானவை. உழைக்கும் மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்காக உலகெங்கும் கிடைக்கும் அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு, நமக்கான களத்தில் களமாட வேண்டிய தருணம் இது.
கட்டுரையாளர் : ஜி.செல்வா, சிபிஐ(எம்), மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்