articles

img

அர்ப்பணிப்பு உணர்வின் அடையாளமாய் தோழர் ஜவஹர் - பி.சம்பத்

அர்ப்பணிப்பு உணர்வின் அடையாளமாய் தோழர் ஜவஹர் 

தோழர் ஜவஹர் காலமாகிவிட்டார் என்ற செய்தி நமக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. அவர் குறித்த நினைவுகள் நெஞ்சில் கிளர்ந்து எழும்பின. சிபிஐ(எம்) மற்றும் இடதுசாரி இயக்கத்திற் காக அவரது 60 ஆண்டு காலப் பணிகள் எவராலும் மறுக்க முடியாததாகும். தனது இளமைப் பருவத்திலேயே மார்க்சியக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர் அவர். முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பணியைத் துவக்கிய அவர் அப்பணியின் துவக்க காலத்திலிருந்தே ஆசிரியர் இயக்கத்தை பலப்படுத்துவதில் பெரும் கவனம் செலுத்தினார். குறிப்பாக, இன்றைய நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அவரது ஆசிரியர் இயக்க பணிகள் அபாரமானது. தோளில் சிவப்பு நிற ஜோல்னா பையை போட்டுக் கொண்டு பல்வேறு பள்ளிகளுக்கு அலைந்து திரிந்தார்.  ஆசிரியர் இயக்கத்தில்... ஆசிரியர்களை அணி திரட்டுவதிலும் அவர்களது கோரிக்கைகளுக்காக போராட்டங்களை திட்டமிடுவ திலும் அவரது செயல்பாடு திறன்மிக்கதாக இருந்தது.  தனது விடுப்பு மற்றும் விடுமுறை நாட்கள் முழுவதை யும் அக்காலத்தில் அவர் ஆசிரியர் இயக்கப் பணிக் காக செலவிட்டார் என்பது மட்டுமல்ல; அவரது விடுப்பு  காலாவதியான போதும், ஊதியம் இல்லாத விடுப்பு எடுத்துக் கொண்டு தொய்வின்றி அப்பணிகளைத் தொடர்ந்தார். தென்மாவட்டங்களில் ஆசிரியர் இயக்கம் பலமாக உருவானதில் அடித்தளமாக செயல் பட்ட முதன்மையானவர்களில்  ஜவஹரும் ஒருவர். இதனால், ஆசிரியர் இயக்கத்தின் மாநில பொறுப்புக்கு உயர்த்தப்பட்டு அப்பொறுப்பையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவேற்றியவர் ஜவஹர். இது மட்டுமல்ல; கோவில்பட்டி நகரில் இடதுசாரி இயக்கத்திற்கு வலுவான செல்வாக்கு உண்டு. இந் நகரில் இடதுசாரி அறிவுஜீவிகள் குழு ஒன்றும் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்தது. தோழர்கள் பால் வண்ணன், ஜவஹர், ச. தமிழ்ச்செல்வன், சுப்பிரமணி யம் (திண்டுக்கல்), இசக்கிமுத்து, தேவப்பிரகாஷ், போஸ்டல் பாலு என இன்னும் பலர். இப்பட்டியல் மேலும் கூட நீளும். இக்குழுவினரால் ஈர்க்கப்பட்டு பிற் காலத்தில் முன்னுக்கு வந்தவர்கள் தான் நாறும்பூ நாதன், உதய சங்கர் மற்றும் பல முற்போக்கு எழுத்தாளர்கள். மத்திய தர வர்க்கத்தின் மத்தியில் இடதுசாரி இயக்க கருத்துக்களை பரப்புவதிலும், அப்பிரிவினரிடமிருந்து இடதுசாரி கண்ணோட்ட முடைய இயக்க ஊழியர்களை உருவாக்குவதிலும் இவர்கள் மகத்தான பங்கு வகித்தார்கள். மத்திய தர வர்க்கத்திற்கு வெளியேயும் பல இளைஞர்களுக்கு மார்க்சிய போதம் அளித்து பல புதிய ஊழியர்களை யும் இவர்கள் உருவாக்கினார்கள். இவர்களில் பலர் கோவில்பட்டி வட்டாரத்தில் சிறந்த அரசியல் ஊழியர்க ளாகவும், தலைவர்களாகவும் பிற்காலத்தில் உயர்ந்தார்கள். இப்பணிகளில் எல்லாம் தோழர் ஜவஹருக்கும் முக்கியப் பங்கு இருந்தது. முழு நேர ஊழியராக... தோழர் ஜவஹரின் அரசியல் உணர்வு, செயல் திறன், அர்ப்பணிப்பு உணர்வுகளை கவனித்த சிபிஐ (எம்) மாவட்டத் தலைமை அவரை கட்சியின் முழுநேர ஊழியராகச் செயல்பட முன்வருமாறு அழைத்தது. இதனை கேட்ட ஜவஹர் எவ்வித தயக்க முமின்றி “அவ்வாறு கட்சி முடிவு செய்தால் வி.ஆர்.எஸ். மூலம் வேலையை கைவிட்டு வரத் தயாராக உள்ளேன்” என உறுதிபடத் தெரிவித்தார். ஆம்!. அவ்வாறு கட்சி முடிவு செய்த போது ஆசிரியர் வேலையை உதறி எறிந்து விட்டு முழுநேர ஊழியராக பரிணமித்தார் ஜவஹர். நெல்லை மாவட்டம், நெல்லை, தூத்துக்குடி என பிரிக்கப்பட்ட காலம் அது. தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னணி கட்சித் தலைவர்களில் ஒருவராக மாவட்ட செயற்குழுவிலும் செயல்பட்டார் ஜவஹர். பின்னர் இடதுசாரி இயக்கம் செல்வாக்கு பெற்றிருந்த கோவில்பட்டி பகுதிக்குழுவிற்கு செயலாளராகவும் அவர் தேர்வு பெற்றார். கோவில்பட்டி பகுதியில் நூற் றுக்கணக்கான கட்சி உறுப்பினர்களையும் பல முன் னணி ஊழியர்களையும் ஒருங்கிணைந்து செயல் படுத்துவதில் அவர் வெளிப்படுத்திய ஆற்றல் அபாரமானது. இக்காலம் கோவில்பட்டி பகுதியில் இயக்கம் மேலும் விரிவுபடுத்தப்பட்ட காலமாக இருந்தது. மாநில மைய ஊழியராக... ஜவஹரின் செயல்பாடு, அரசியல் உணர்வு, ஆற்றல் கட்சியின் மாநிலத் தலைமையும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் தோழர் ஜவஹரை கட்சியின் மாநில பணிக்கு ஒப்படைக்குமாறு மாநிலத் தலைமை, மாவட்டத் தலைமையை கேட்டுக் கொண்டது. தோழர் ஏ. நல்லசிவன் இதற்கான முன்முயற்சியை மேற்கொண்டார். கட்சியின் மாவட்டப் பணிக்கும், கோவில்பட்டி நகரத்திற்கும் அவரது பங்களிப்பு தேவை என மாவட்டத் தலைமை வலியுறுத்திய போதும் மாநிலத் தலைமை விடுவதாக இல்லை. தோழர்கள் ஏ. நல்லசிவன், அப்துல் வஹாப் இருவரும் இணைந்து உணர்ச்சிகரமான வாதங்களை முன்வைத்து ஜவஹரை விடுவிக்க வலியுறுத்தினர். மாநிலத் தலை மையின் அழுத்தமான வலியுறுத்தலை புரிந்து கொண்ட தூத்துக்குடி மாவட்டத் தலைமை வேறு வழி யின்றி அவரை மாவட்ட பணியிலிருந்து விடுவிக்க வும், மாநில பணிக்கு அனுப்பி வைக்கவும் ஒப்புக் கொண்டது. இவ்வாறு கட்சியின் மாநில மையத்தின் முழுநேர ஊழியராக மாறினார் ஜவஹர். முதலில் தீக்கதிர் நிர்வாகப் பொறுப்பில் அவர் அமர்த்தப்பட்டார். அங்கும் அவரது பணி தீக்கதிர் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக அமைந்தது. இதற்கிடையே தீக்கதிருக்கு சில புதிய ஊழியர்களும் இணைந்தார்கள். இப்பின்னணியில் தோழர் ஜவஹர் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு மாநிலக்குழுவின் அலுவலகச் செய லாளராக பொறுப்பேற்றார். பல ஆண்டுகள் மாநி லக்குழு அலுவலகத்தில் அவரது பணிகள் செயல்திறன் மிக்கதாக அமைந்தன. மாநிலக்குழு அலுவலக ஊழியர்களை ஒருங்கிணைத்து செயல் படுத்துவது, கட்சியின் மாநிலத் தலைவர்களின் அரசியல், இயக்கப் பணிகளுக்கு உதவுவது, அவர்க ளது உடல்நிலை குறித்து கூட தனிக் கவனம் செலுத்துவது என அவரது பணிகள் பன்முகத் தன்மையில் அமைந்தன. இதனால் பலனடைந்தவர்க ளில் நானும் ஒருவன் என்பது இன்றளவும் என்னை உணர்ச்சிவசப்படுத்துகிறது. எனது முதுகுத் தண்டில் (ஸ்பைனல் கார்டு) இரண்டுமுறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது அவர் காட்டிய அக்கறை ஈடுபாடு மறக்க முடியாததாகும். தஞ்சை மாவட்டத்தில்... பல ஆண்டுகள் மாநிலக்குழு அலுவலகச் செயலா ளராக திறம்படச் செயல்பட்ட பிறகு தஞ்சையில் ஆசி ரியராகப் பணி மாற்றம் செய்யப்பட்ட அவரது துணைவி யாருக்கு உதவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு தஞ்சை யில் குடியேறினார். அங்கும் அரசியல் இயக்கப் பணி கள் அவரை விடுவதாக இல்லை. தஞ்சை மாவட்டக்குழு வுடன் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். தஞ்சை மாவட்ட செயற்குழுவிலும் இடம்பெற்றார். தஞ்சை மாவட்டத்தில் அவர் ஆற்றிய பணிகள் குறித்து தஞ்சை தோழர்கள் இன்றளவும் நினைவு கூர்கிறார்கள். குடும்பத்தில் சாதி மறுப்பு,  காதல் திருமணங்கள் கட்சிப் பணிகளில் மட்டுமின்றி தனது சொந்த வாழ்க்கையிலும் தனது மகன், மகளின் சாதி மறுப்பு - காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டு அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றியவர். அவரது துணைவியார் பணி ஓய்வுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் குடியமர்ந்தார். சென்னை மாநிலக்குழு அலுவலகத்தில் மீண்டும் தனது இயக்கப் பணிகளைத் தொடர்ந்தார். இம்முறை மாநிலக்குழு அலுவலகத்தில் அமைந்துள்ள தோழர் ஏ. நல்லசிவன் நூலகப் பொறுப்பாளராக சில காலம் செயல்பட்டார். ஓயாத உழைப்பு காரணமாக உடல் சற்று தளர்ந்த பிறகு அவரது சொந்த ஊரான கோவில்பட்டிக்கு துணைவியாருடன் திரும்பினார். அவரது உடல்நிலைக்கு மத்தியிலும் கோவில்பட்டி பகுதியில் உள்ள கட்சி கமிட்டிகளுக்கும், ஊழியர்க ளுக்கும் உதவிகள் செய்வதிலும், ஆலோசனைகள் கூறுவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார் என்பது இயக்கத்தின் பால் அவருக்கிருந்த விசுவாசம் மற்றும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சி நடத்தும் பேரவைக் கூட்டங்கள் பலவற்றிலும் அவர் கலந்து கொண்டார் என்பது குறையாத அவரது அரசியல் தேடலின் ஆர்வத்தை வெளிப்படுத்தியது. நோய் பாதித்த நிலையிலும்... அவரது இறுதிக்காலத்தில் வயிற்றில் புற்றுநோய் அவரை பெரிதும் பாதித்தது. நோயின் பாதிப்பு கடுமை யானது என மருத்துவர்கள் தெரிவித்தனர். உணவுக் குழாயில் ஏற்பட்ட அடைப்பால் உணவு உட்கொள் வது கூட பெரும் பிரச்சனையாக இருந்தது. தோழர் க.கனகராஜ் தலையிட்டு மதுரையில் மருத்துவம் செய்ய ஆலோசனை வழங்கினார். உணவு உட் கொள்ள வழிசெய்யும் வகையில் செயற்கை உண வுக்குழாய் மூலம் வயிற்றில் உள்ள அடைப்பை பைபாஸ் செய்து அறுவை சிகிச்சை செய்ய மருத்து வர்கள் பரிந்துரை செய்தனர். இதனை ஏற்க அவர் மறுத்தார். இயக்கத்திற்கோ, குடும்பத்திற்கோ எந்த உதவியும் செய்ய முடியாத நான் இனியும் உயிர்  வாழ்ந்து என்ன பயன் என்று உணர்ச்சி பொங்க வினாவி னார். கட்சித் தலைவர்கள், குடும்ப உறுப்பினர்களின் பலத்த வற்புறுத்தலுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்ய ஏற்றுக் கொண்டார். அவ்வாறே அறுவை சிகிச் சையும் நடந்தது. இதனால் மேலும் சில ஆண்டுகள் அவர் வாழ்வார் என நினைத்தோம். ஆனால், அந்தோ  அவர் சில நாட்கள் மட்டுமே அறுவை சிகிச்சைக்கு பிறகு வாழ முடிந்தது. 2025 செப்டம்பர் 9 அன்று அதிகாலை அவர் மரணத்தை தழுவினார். உடல் தானத்தில் உறுதி அவரது உடலை மருத்துவ ஆய்வுக்கு தானமாக வழங்க வேண்டுமென வாழும்போதே உறுதிபட தெரி வித்து பதிவு செய்தார். அதன்படி அவரது உடல் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செப்டம்பர் 9 மாலை ஒப்படைக்கப்பட்டது. அவரது துணைவியார் பெ.தேவகி, மகன் சுர்ஜித்சிங், மகள் கிருத்திகா வாலண்டினா ஆகியோரும், கட்சித் தலை வர்களும் இணைந்து தோழர் ஜவஹரின் உடலை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர். அவர் வாழ்ந்த காலம் மட்டுமல்ல; மறைந்த பிறகும் அவரது உடல் மக்கள் பணிக்கான மருத்துவ சேவைக்கு சென்றுவிட்டது. அவர் மறைந்தாலும் அவரது இயக்க உணர்வு, தியாகப்பூர்வமான செயல்பாடுகள் என்றென்றும் நம் நெஞ்சில் நிலைத்திருக்கும். அந்த நினைவுகள் செங்கொடி இயக்கத்தை பலப்படுத்த உதவும். அர்ப் பணிப்பின் அடையாளமாக தோழர் ஆர். ஜவஹர் நம் நெஞ்சங்களில் நிலைத்திருப்பார். தோழர் ஜவஹ ருக்கு வீர வணக்கம்.