articles

img

ஸ்கேன் இந்தியா

உள்குத்து

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக  தேதிக்கு முன்பாக நடக்கவிருக்கிறது. இந்நிலையில், கூட்டணிக்கட்சியான பாஜகவின் உத்திகளால் கலக்கமடைந்துள்ள ஐக்கிய ஜனதா தளம், மேலும் கூடுத லாகப் பதற்றமடைந் திருக்கிறது. அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான சஞ்சீவ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைந்திருக்கிறார். அவர் ஏற்கனவே எதிர்க்கட்சி முகாமுக்குத் தாவி விட்டார் என்று ஐக்கிய ஜனதா தளத்தினர் கூறினாலும், குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் வாக்குகளை ஒருங்கிணைப்பவராக இருந்த அவரின் கட்சித்தாவலை பெரும் இழப்பாகப் பார்க்கிறார்கள். ககாரியா மாவட்டத்தில் மட்டுமின்றி, அருகில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் அவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு மேலும் பலவீனமாவதால், பாஜகவின் தாக்குதல் அதிகரிக்கும் என்பதே ஐக்கிய ஜனதா தளத்தினரின் கலக்கத்திற்குக் காரணமாகும்.

தகிடுதத்தம்

கட்சித் தாவல்களை ஏற்படுத்தி சண்டிகர் மேயர் பொறுப்பைப் கைப்பற்றிய பாஜக, சில கவுன்சிலர்களை வெளியேற்றிவிட்டு அதிகாரத்தைத் தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. மாநகராட்சிக் கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தியதற்காக மூத்த துணை மேயர் ஜஸ்பீர் சிங் பன்டி மற்றும் துணை மேயர் தருணா மேத்தா ஆகிய இருவரோடு மேலும் இரண்டு கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு மேயர் பரிந்துரைத்துள்ளார். பன்டி மற்றும் தருணா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். ஒவ்வொரு ஆண்டும் புதிய மேயர் தேர்வு செய்யப்படுவார். மீண்டும் ஜனவரியில் தேர்தல் நடக்கும். அதற்குள் நான்கு பேரை வெளியேற்றி விட்டால், மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட முடியும் என்று தனது வழக்கமான தகிடுதத்த வேலையில்  பாஜக இறங்கியுள்ளது.

கோட்சே யிஸ்ட்?

தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்த 25 வயது இளைஞரைக் கொலை செய்த விவகாரத்தில் பூஜா சிக்கியிருக்கிறார். 48 வயதாகும் இவர் ஏற்கனவே திருமணமானவர். இந்தக் கொலை விவகாரம் அம்பலமானவுடன் பூஜா தலைமறைவாகி விட்டார். அவருடைய கணவரும் இதில் கூட்டாளி. அவர் மற்றும் சில கூலிப்படையினர் கைதாகியுள்ளனர். இந்தப் பூஜா, இந்து மகா சபை அமைப்பின் தேசிய செயலாளராவார். ஒவ்வொரு ஜனவரி 30ஆம் தேதியன்றும் மகாத்மாவின் பொம்மை ஒன்றை வைத்து அதைத் துப்பாக்கியால் சுட்டு வன்மத்தைக் கக்கும் செயலில் இவர்தான் ஈடுபட்டு வந்தார். அந்த நாளில் கோட்சேயின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் வழக்கத்தையும் வைத்திருந்தார். இவருடைய ஆதரவாளர்கள் “கோட்சேயிஸ்ட்” என்று அழைப்பார்களாம்.

உடைசல்

திரிபுராவில் ஆளும் கூட்டணி உடையும் அபாயத்தில் உள்ளது. பழங்குடிப் பகுதி சுயாட்சிக் கவுன்சிலில் பாஜகவின் கூட்டாளியான திப்ரா மோதா பொறுப்பில் உள்ளது. அந்த கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 37 மசோதாக்களுக்கு ஆளுநர் இதுவரையில் ஒப்புதல் தரவில்லை. தமிழ்நாடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில்  வரம்பற்ற தாமதத்தைப் பற்றிக் குறிப்பிட்டி ருந்ததை திப்ரா மோதா தலைவர் பிரத்யோத் கிஷோர் தேப்பர்மன் சுட்டிக்காட்டியுள்ளார். கவுன்சிலில் கடந்த முறை பொறுப்பில் இருந்த இடது முன்னணி நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களும் ஆளுநர் வசமே இன்னும் இருப்பதையும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார். பரிசீலனை பண்ண வேண்டாம் என்றெல்லாம் நாங்கள் சொல்லவில்லை. ஆனால், கால வரம்பு மற்றும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் அல்லவா என்றும் அவர் வினா எழுப்பியிருக்கிறார்.