அமெரிக்காவில் ஜனாதிபதி பைடன் ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு மாதங்களிலேயே அதன் பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் இந்தியாவிற்கு வந்திருப்பது, இந்தியாவிற்கு அதன் ராணுவக் கூட்டாளியாகவும், கூட்டணி நாடாகவும் அமெரிக்கா இருப்பதன் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. ஆஸ்டின் இந்தியாவிற்கு வருவதற்கு முன், ஆசியாவில் அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளிகளாக விளங்கும் ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு, இந்தியாவிற்கு வந்திருக்கிறார். அமெரிக்காவின் பயணத்திட்டத்தில் ஜப்பான், தென் கொரியாவிற்கு அடுத்ததாக இந்தியாவை வைத்திருப்பதிலிருந்து பெண்டகன் (அமெரிக்க ராணுவத் தலைமையகம்), இந்தியாவை ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு அளித்துவரும் அதே அந்தஸ்தில் வைத்திருப்பதையே காட்டுகிறது.
லாயிட் ஆஸ்டின் தன் வருகையின்போது, இந்திய - அமெரிக்க ராணுவக்கூட்டு என்பது இந்திய-பசிபிக் பிராந்தியத்தில், அமெரிக்காவின் கொள்கையின் “மையத் தூணாக” விளங்குகிறது என்று சித்தரித்திருப்பதன் மூலம், அதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டி இருக்கிறார். இதன்மூலம் இந்திய-அமெரிக்க கூட்டணி என்பது ராணுவ உறவுகளை மையமாக வைத்தே உள்ளது என்பது நன்கு தெரிகிறது.அமெரிக்காவின் ஜனாதிபதிகள், கிளிண்டனிலிருந்து, புஷ், பின்னர் ஒபாமா, பின்னர் டிரம்ப் என தொடர்ந்து வந்த அத்தனை ஜனாதிபதிகளுமே இந்திய-பசிபிக் பிராந்தியத்தில், (தற்போது இந்தோ-பசிபிக் என அழைக்கப்படுகிறது) இந்தியாவை அதன் கூட்டணி நாடாக சேர்த்துக்கொள்ளும் குறிக்கோளைப் பின்பற்றி வந்திருக்கிறார்கள்.
ஆஸ்டின், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் மேற்கொண்ட கூட்டத்தில், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள மூன்று அடிப்படை ஒப்பந்தங்களாகக் கூறப்படும், “கடல்வழி மற்றும் வான்வழி பரிவர்த்தனை ஒப்பந்தக் குறிப்பாணை(LEMOA-Logistics Exchange Memorandum of Agreement)”, தகவல் தொடர்பு பொருந்தக்கூடிய தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (COMCASA-Communications Compatibility and Security Agreement) மற்றும் “அடிப்படைப் பரிவர்த்தனை மற்றும் தகவல் ஒப்பந்தம்: (“BECA-Basic Exchange and Cooperation Agreement”) ஆகிய மூன்று ஒப்பந்தங்களையும் வலுப்படுத்திட ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. இது, இந்தியாவின் ஆயுதப் படைகள், அமெரிக்காவின் ராணுவத்தைச் சார்ந்தே செயல்படக்கூடிய அளவிற்கு இட்டுச் செல்லும். ராஜ்நாத் சிங் கூறியுள்ளபடி பார்ப்போமானால், இந்தியா, அமெரிக்காவுடன் இந்தோ-பசிபிக் கட்டளை (Indo-Pacific Command), மத்திய கட்டளை (Central Command) மற்றும் ஆப்ரிக்கக் கட்டளை (Africa Command) ஆகியவற்றுடன் ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்ளவும், அதன் மூலம் கூட்டு நடவடிக்கைகளையும், ஒருங்கிணைப்பையும் அதிகரித்துக் கொள்ளவும் ஒப்புக் கொண்டிருக்கிறது.
இவற்றின் மூலம் மோடி அரசாங்கம், மேற்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலும்கூட அமெரிக்காவின் மேலாதிக்கக் குறிக்கோள்களுக்குச் சேவகம் செய்திட இந்தியா மனமுவந்து ஒப்புக்கொண்டிருப்பது போன்றே தோன்றுகிறது. ஆஸ்டின் வருகை தருவதற்கு முன்பு, ‘குவாட்’ (Quad) எனப்படும் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகளின் தலைவர்களின் முதல் உச்சி மாநாடு மார்ச் 12 அன்று நடந்துள்ளது. இந்த நான்கு நாடுகள் கூட்டணி அதிகாரப்பூர்வமாக எது சொன்ன போதிலும், இவற்றின் சூழ்ச்சியான குறிக்கோள் என்பது சீனாவிற்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்பதேயாகும்.
2020 ஏப்ரல்-மே மாதங்களில் லடாக்கில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை மோதல்கள் ஏற்பட்டதற்குப்பின்னர், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாத்திட, சீனாவிற்கு ஒரு வலுவான எதிர்சக்தியாக விளங்க ‘குவாட்’ (நான்கு நாடுகளின் கூட்டணி) அவசியம் என்று பார்ப்பவர்களுக்கு, இதற்கு முன்பே கூட, 2017இல் இந்தியாவிற்கு ஒபாமா வந்த பயணத்தின்போது இந்தியா, அமெரிக்காவுடன் இந்தோ-பசிபிக் ராணுவ சூழ்ச்சிக் கூட்டணியில் மனப்பூர்வமாக இணைந்துகொள்வதாக கூட்டு தொலைநோக்கு அறிக்கை (Joint Vision statement) வெளியிட்டதைக் கவனிக்க வேண்டும். அப்போதே இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படத் துவங்கிவிட்டன. லடாக்கில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வருவதற்கு முன்பே ‘குவாட்’ (நான்கு நாடுகளின் கூட்டணி) புதுப்பிக்கப்பட்டுவிட்டது.
அயல்துறைக் கொள்கையும் மற்றும் அதனையொட்டிய சூழ்ச்சியான அணுகுமுறையும், நாட்டில் கடைப்பிடிக்கப்படும் உள்நாட்டுக் கொள்கையின் ஓர் விரிவாக்கமேயாகும். மோடி அரசாங்கம், நவீன தாராளமயக் கொள்கைகளை முழுமையாக முடுக்கி விட்டிருக்கிறது. இதற்காக சர்வதேச நிதி மூலதனத்தின் நுழைவுக்கு நாட்டின் அனைத்துத்துறைகளையும் அகலத் திறந்துவிட்டிருக்கிறது. வங்கிகளையும் இன்சூரன்ஸ் துறைகளையும் தனியாரிடம் தாரை வார்ப்பதற்காக மேற்கொண்டுள்ள சமீபத்திய நடவடிக்கைகள், அமெரிக்கா நீண்ட நாட்களாகவே கோரி வந்த கோரிக்கையாகும்.
பொதுத்துறை நிறுவனங்களில் பெரும்பாலானவற்றில் தனியார்மய நடவடிக்கைகள் முடுக்கிவிடப் பட்டிருக்கின்றன. இவ்வாறு தனியார்மயத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் துறைகளில் பாதுகாப்பு உற்பத்தியும் ஒரு பகுதியாகும். 2020 செப்டம்பரில் பாதுகாப்பு உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டில் 74 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. அதுமட்டுமல்ல, முன் அனுமதியுடன் இதில் 100 சதவீதம் வரை அனுமதிக்கவும் முடியும். இந்தியக் கார்ப்பரேட்டுகள் ஏற்கனவே பாதுகாப்பு உற்பத்தியில் நுழைந்துவிட்டார்கள். மோடி அரசாங்கம் இந்தியக் கார்ப்பரேட்டுகளுடன் அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்களும் இணைந்து கூட்டு நிறுவனங்களை ஏற்படுத்திக்கொள்வார்கள் என்று நம்புகிறது. அல்லது அமெரிக்க நிறுவனங்கள் உற்பத்திப் பிரிவுகளை இந்தியாவில் நேரடியாகவே அமைக்கக் கூடும். இந்தியாவில் உள்ள பெரு முதலாளிகள் தனியார் துறையில் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து, ராணுவ தொழில் உற்பத்தி வளாகங்களை வளர்த்தெடுக்கலாம் என நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் அமெரிக்கா, இந்தியாவை தங்களுடைய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுக்கான சிறைப்பிடிக்கப்பட்ட சந்தையாக (captive market) மாற்றப்படுவதை உத்தரவாதப்படுத்திட அனைத்து வழிகளிலும் நிர்ப்பந்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்கா, மோடி அரசாங்கத்தைத் தன்னுடன் ராணுவக் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டிருப்பதன் மூலம் வேறெந்தநாட்டுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளாத விதத்தில் கிடுக்கிப்பிடி போட்டு வைத்திருக்கிறது. இதன் காரணமாக நம் நாடு தன்னுடைய போர்த்தந்திர சுயாட்சியை மிக ஆழமான அளவில்இழக்கும் நிலையை எதிர்கொண்டிருக்கிறது. இந்தியா, ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்பினை வாங்கினால் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தின்படி, பொருளாதார முற்றுகைக்கு உட்படும் என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறது. ஆஸ்டின், இந்தத் தகவல்களை, தன்னுடைய இந்திய வருகையின்போது மோடி அரசாங்கத்திடம் சொல்லியிருக்கிறார். இவ்வாறு அவர் சொல்லிவிடவேண்டும் என்று அமெரிக்காவின் அயல் உறவுகளுக்கான செனட் கமிட்டியின் தலைவர், பாப் மெனன்டெஸ், ஆஸ்டினை வலியுறுத்தி இருந்தார்.
டிரம்ப் நிர்வாகம், இவ்வாறு எஸ்-400 ஏவுகணை அமைப்பை வாங்கியதற்காக நேட்டோ நாடுகளின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் துருக்கிக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்திருந்தது. இப்போது பைடன் நிர்வாகமும் ரஷ்யாவுக்கு எதிராக கடும் நிலைபாட்டினை எடுத்திருக்கிறது. இந்தியா, ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை எதிர்ப்பு முறையை வாங்குவது தொடர்பாக கனிவுடன் பார்க்கும் என்று சொல்ல முடியாது.ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தன் மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தலையாட்டும் பொம்மையாக இந்தியாவை மாற்ற மோடி அரசாங்கம் அனுமதித்துக் கொண்டிருக்கிறது.
நான்கு நாடுகளின் கூட்டணியில் உள்ள ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் இந்தியாவைப் போல் அல்லாமல், சீனாவுடன் பல்வேறு அம்சங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், சீனாவுடன் மிகவும் விரிவான அளவில் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவை, சீனாவுடன் இணைந்து, மண்டல ஒருங்கிணைந்த பொருளாதாரக் கூட்டு ஏற்படுத்திக் கொள்வதிலும் ஓர் அங்கமாக இருக்கின்றன. இதில் ஆசிய-பசிபிக் நாடுகளில் 15 நாடுகள் கையெழுத்திட்டிருக்கின்றன.
பைடன் நிர்வாகம், மார்ச் 18-19 தேதிகளில் அலாஸ்காவில் சீன அரசாங்கத்தின் தலைவர்களுடன் உயர்மட்ட அளவில் பேச்சு வார்த்தைகள் நடத்தி இருக்கிறது. அமெரிக்கா, சீனாவுடன் சில பிரச்சனைகளில் எதிர்மறை நிலை எடுத்தபோதிலும், சாத்தியப்படும் இதர அம்சங்கள் அனைத்திலும் நெருக்கமாக இருந்திட நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது.மோடி அரசாங்கம், ஆசியாவில் அமெரிக்கா மேற்கொள்ளும் மேலாதிக்க நடவடிக்கைகளுக்குக் கீழ்ப்படிந்து செயல்பட தன் விருப்பத்தைத் தெரிவிப்பதென்பது அதன், ஏகாதிபத்திய ஆதரவு, வெறிபிடித்த கம்யூனிச எதிர்ப்பு ஆர்எஸ்எஸ்-இந்துத்துவா கண்ணோட்டத்திலிருந்தே உருவாகி இருக்கிறது. இத்தகைய அணுகுமுறை இந்தியாவின் நலன்களுக்கும், இறையாண்மைக்கும் கேடுபயக்கக்கூடியவைகளாகும்.
மார்ச் 24, 2021, தமிழில் : ச.வீரமணி