articles

img

அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் பரந்த அளவில் அணிதிரட்டுவோம்!

கட்சியின் சுயேச்சையான பலத்தை வலுப்படுத்துவோம்;  இடதுசாரி ஒற்றுமையை வலுவாக கட்டுவோம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  23ஆவது அகில இந்திய மாநாட்டிற்குப் பின்னர் கடந்த மூன்றாண்டுகளில், தேசிய நிலைமையின் சில முக்கிய அம்சங்கள் வருமாறு: 

(i) கடந்த மூன்றாண்டுகளில் பாஜக அரசாங்கத்தின் இந்துத்துவ வெறிச்செயல்கள் கொடூரமான முறையில் தொடர்ந்து நடந்து வந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. 2024 ஜனவரியில் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு, பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தில் ஒரே விதமான சிவில் சட்டம் (Uniform Civil Code), பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான எண்ணற்ற சட்டங்கள் நிறைவேற்றல், மதக்கலப்பு திருமணச்சட்டங்களுக்குத் தடை மற்றும் நாடாளுமன்றத்தில் கொண்டுவர உத்தேசித்துள்ள வக்ஃப் (திருத்த) சட்டமுன்வடிவு போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதைப் பார்த்தோம். கள மட்டத்தில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைச் செயல்கள் அடுத்தடுத்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாறு சிறுபான்மையினருக்கு எதிராக நிரந்தரமாக வெறியுணர்வை உருவாக்கி, ஒரு பரந்த இந்து அடையாளத்தை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

ii) பாஜக அரசாங்கம் பின்பற்றிவரும் பொருளாதாரக் கொள்கைகள் பிரதானமாக நாட்டின் வளங்களையும் சொத்துக்களையும் பெரும் முதலாளிகளுக்கு கைமாற்றி விடுவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எரிசக்தித் திட்டங்கள் மூலமாக சில குறிப்பிட்ட பெரும் நிறுவனங்கள் மிகையான லாபம் ஈட்டியுள்ளன. இந்தக் கொள்கைகள் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலைமையையும், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பதையும், வேலையின்மையையும், பணவீக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன. 

மீதும், குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும் தாக்குதல்கள் உச்சத்திற்குச் சென்றதையும் பார்த்தோம். ஒன்றிய அரசின் புலனாய்வு முகமைகளைப் பயன்படுத்தி, மிகவும் கொடூரமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், கடுமையான பணமோசடி தடுப்புச் சட்டம் முதலானவற்றைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து, சிறையில் அடைப்பது மிகவும் துணிவான முறையில் மாறியிருக்கிறது. சுதந்திரமான ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் இலக்காக்கப்பட்டனர். நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் மீதான கட்டுப்பாடுகளும் கடுமையாகின. 

(iv) ஒன்றிய அரசாங்கம் அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே எடுத்துக்கொள்வதற்கான ஒற்றை ஆட்சி முறையை நோக்கி வீரியமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்காக அது மாநிலங்களின் உரிமைகளின் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்தியிருக்கிறது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அளிக்கவேண்டிய நிதி மற்றும் வள ஆதாரங்களை அளிக்க மறுக்கிறது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசாங்கங்களின் விவகாரங்கள் மீது ஆளுநர்கள் வெளிப்படையாகவே தலையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

(v) அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான ஒன்றிய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையும், ஏகாதிபத்திய ராணுவ சூழ்ச்சித் திட்டங்களுடனான தொடர்புகளும் வலுப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனினும், அதிகரித்துவரும் பல்துருவக் கோட்பாட்டின் எதார்த்த நிலைமைகள், மோடி அரசாங்கத்தை, இந்தியாவை பிரிக்ஸ் நாடுகள் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஒரு சுறுசுறுப்பான பங்காளியாகவும் இருந்திடக் கட்டாயப்படுத்தியிருக்கிறது. 

(vi) இந்தக் காலகட்டத்தில் தனியார்மயமாக்கல், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் திணிக்கப்பட்டிருந்தல், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சங்கங்கள் அமைப்பதற்கான உரிமைகளுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தின் பல போராட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன. ஒன்றுபட்ட விவசாய இயக்கம், குறைந்தபட்ச அடிப்படை விலையை சட்டரீதியாக உத்தரவாதப்படுத்துவதற்காகவும், மற்றும் பல கோரிக்கைகளுக்காகவும் தன் போராட்டத்தைத் தொடர்ந்தது. மத்தியத் தொழிற்சங்கங்களுக்கும் (CTU)  ஐக்கிய விவசாயிகள் முன்னணிக்கும்  (SKM) இடையே கூட்டு முயற்சிகள் அதிகரித்துள்ளன. 

(vii) 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாஜக-விற்கு ஒரு பின்னடைவாக அமைந்தது. மக்களவையில் அது பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது. எனவே அக்கட்சி தன்னுடைய கூட்டணி அரசாங்கத்தில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பங்காளிகளைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. எனினும், பாஜக-வானது தனது இந்துத்துவா-கார்ப்பரேட் மற்றும் எதேச்சதிகார நிகழ்ச்சிநிரலை உந்தித்தள்ளுவதன் மூலம் இந்தப் பலவீனத்தைக் கடக்க முயல்கிறது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை  மேலும் வலுப்படுத்துவோம்!

2.79 - 18ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுயேச்சையான பலத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது. கட்சியின் வெகுஜன அடித்தளமும் செல்வாக்கும் வளரவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ள நிலையில், இதை அடைய, பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்: 

(1) நம்முடைய அடிப்படை வர்க்கங்களுக்கு இடையே கட்சியின் வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கிராமப்புற பணக்காரர்கள் இடையே உள்ள கூட்டின் சுரண்டல் முறைக்கு எதிராக கிராமப்புற ஏழைகளின் போராட்டங்களில் உள்ள பலவீனங்கள் களையப்பட வேண்டும். கிராமப்புற மக்கள் இடையே உள்ள பிரச்சனைகள் மீது போராட்டங்களை எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று துல்லியமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உற்பத்தி மற்றும் முக்கியமான தொழில்களில் (Manufacturing and Strategic Industrial)  அணி திரட்டப்பட்ட துறைகளின் தொழிலாளர்கள் மத்தியில் கட்சி தன் செல்வாக்கை விரிவுபடுத்த வேண்டியிருக்கிறது. மேலும் அமைப்புரீதியான தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கட்சி, தொழிலாளி-விவசாயி ஒற்றுமையை வளர்த்திடவும் மற்றும் அவர்கள் இடையே ஒருங்கிணைந்த முயற்சிகளை வளர்த்திடவும் கவனம் செலுத்த வேண்டும். அடிப்படை வர்க்கங்களுக்கு இடையே இந்துத்துவா எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், அந்தப் போராட்டங்களுக்குப் பின்னால் அணிதிரள்பவர்களை அரசியல்மய மாக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

(2) கட்சி, சுயேச்சையான  அரசியல் பிரச்சாரத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். கட்சியின் அரசியல் செயல்பாடுகளைச் சுற்றி மக்களை அணிதிரட்ட வேண்டும். தேர்தல் புரிந்துணர்வு அல்லது கூட்டணி என்ற பெயரில் நம்முடைய சுயேச்சையான  அடையாளத்தையோ அல்லது நம்முடைய சுயேச்சையான நடவடிக்கைகளையோ குறைத்துக்கொள்ளக் கூடாது. ஆர்எஸ்எஸ்/இந்துத்துவா சக்திகளின் சித்தாந்தத்தையும், நடவடிக்கைகளையும் எதிர்த்து தோற்கடிக்கக்கூடிய விதத்தில் நம் சித்தாந்தம் மற்றும் பிரச்சாரத்திற்கு சிறப்புக் கவனம் கொடுத்திட வேண்டும். 

(3) களப் போராட்டங்களுக்காக வெகுஜன மற்றும் வர்க்கப் பிரச்சனைகளை எடுத்துக்கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும். இதுதொடர்பாக நம்மிடையே காணப்படும் பின்னடைவை சரிசெய்திட வேண்டும். இதனை மையப்படுத்தி ஸ்தலக் குழுக்களையும், கிளைகளையும் உயர் கமிட்டிகள் ஒருங்கிணைத்திட வேண்டும். ஒரே மாதிரியான போராட்ட வடிவங்களுக்குப் பதிலாக, புதுமையான மற்றும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களும் இயக்கங்களும் நடத்தப்பட வேண்டும். 

(4) கட்சி, சமூக மற்றும் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பாலினப் பாகுபாடு முதலான பிரச்சனைகள் மீது நேரடியாக பிரச்சாரங்களை மேற்கொண்டு, போராட்டங்களை நடத்திட வேண்டும். சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள், வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும். 

(5) கட்சியின் அரசியல் மேடையும் கோரிக்கைகளும் இளைஞர்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும். ‘சோசலிசமே மாற்று’ (‘Socialism is the alternative’) என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும் விதத்தில் பிரச்சாரம் அமைந்திட வேண்டும். 

(6) மேற்குவங்கம் மற்றும் திரிபுராவில் கட்சி மற்றும் இடதுசாரி இயக்கத்தை மீண்டும் கட்டமைத்தல் மற்றும் விரிவுபடுத்துதல் என்பது, கட்சியின் பலத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு அவசியமாகிறது. மேற்குவங்கத்தில், வெகுஜனப் போராட்டங்கள் மற்றும் இயக்கங்களை நடத்தும் அதே வேளையில், கிராமப்புற ஏழைகளிடையே பணியாற்றுவதற்கும் அவர்களை அணிதிரட்டுவதற்கும் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும். வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டையும் எதிர்க்கும் அதே சமயத்தில், பாஜகவுக்கு எதிரான அரசியல் மற்றும் கருத்தியல் போராட்டத்தில் கட்சி அதிக கவனம் செலுத்த வேண்டும். திரிபுராவில், கட்சி அடிமட்ட அமைப்பை வலுப்படுத்த வேண்டும், மேலும் பழங்குடி மக்களின் சிறப்புத் தேவைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அதே சமயத்தில் உழைக்கும் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு திட்டத்தையும் மேற்கொள்ள வேண்டும்.

(7) கேரளாவில், கட்சி வலுவான மக்கள் அடித்தளத்துடன் செயல்படும் மிகப்பெரிய தளமாகும். இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் தன்னுடைய இரண்டாவது தொடர்ச்சியான ஆட்சிக்காலத்தில் ஒன்றிய அரசின் விரோத அணுகுமுறைக்கும் மாநிலத்தில் இயங்கும் அனைத்து கம்யூனிஸ்ட் விரோத சக்திகளின் தொடர்ந்த பிரச்சாரங்களையும் எதிர்கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அங்கு மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாஜக-வை எதிர்த்து முறியடிப்பதில் நம்முடைய அரசியல் மற்றும் சித்தாந்த வேலைகளில் உள்ள பலவீனங்களைக் காட்டியிருக்கின்றன. இவை களையப்பட வேண்டும். இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் தீவிரமாக, வறுமையை ஒழிக்கவும், அனைவருக்கும் வீடு வழங்கவும் உறுதிபூண்டுள்ளது. ஒன்றிய அரசாங்கத்தின் பாரபட்சமான அணுகுமுறை காரணமாக மாநிலம் நிதிநெருக்கடியை எதிர்கொண்டபோதிலும், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் ஏழைகள் மற்றும் உழைக்கும் மக்களுக்கான நலத்திட்டங்களுக்கான செலவினங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. 

அரசியல் நிலைபாடு 

  2.83 - சுமார் பதினொரு ஆண்டு கால மோடி அரசாங்கத்தின் ஆட்சியில் வலதுசாரி, மதவெறி, எதேச்சதிகார சக்திகள் நவீன பாசிச குணங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்திருப்பதைக் காட்டுகிறது. மோடி அரசாங்கம் இந்துத்துவா சக்திகள் மற்றும் பெரும் முதலாளிகளின் கூட்டணியைப் பிரதிபலிக்கிறது. எனவே, நமது பிரதான கடமை என்பது ஆர்எஸ்எஸ்/பாஜக மற்றும் அதற்கு அடித்தளமாக இருக்கும் இந்துத்துவா/கார்ப்பரேட் கள்ளப்பிணைப்பை எதிர்த்துப் போராடி முறியடிப்பதேயாகும். 

2.84  - பாஜக மற்றும் இந்துத்துவா சக்திகளைத் தனிமைப்படுத்தி தோற்கடிக்க, இந்துத்துவா சித்தாந்தத்திற்கும், மதவெறி சக்திகளின் செயல்பாடுகளுக்கும் எதிரான தொடர்ச்சியான போராட்டம் அவசியம். இந்துத்துவா மதவெறிக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் பரந்த அளவில் அணிதிரட்டுவதற்கு கட்சி திட்டமிட்ட உறுதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 2.85 - இந்துத்துவா நவீன தாராளமய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களின் வெற்றிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுயேச்சையான பலத்தின் வளர்ச்சி மற்றும் இடதுசாரி சக்திகளின் வளர்ச்சி அவசியத் தேவையாகும். மேலும் இந்துத்துவா மதவெறிக்கு எதிரான போராட்டத்துடன் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தையும் இணைக்க வேண்டியதும் அவசியத் தேவையாகும்.

 2.86 - மோடி அரசாங்கம் மற்றும் பாஜக-விற்கு எதிரான போராட்டத்தை உழைக்கும் மக்களை ஒட்டச்சுரண்டிவரும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்களையும் வாழ்க்கை நிலைமைகளையும் கடுமையாகப் பாதித்திடும் கார்ப்பரேட் ஆதரவு மற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்களுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். கூட்டுக் களவாணி முதலாளித்துவம், தேசிய சொத்துக்களைக் கொள்ளையடித்தல் மற்றும் மிகப்பெரிய அளவில் தனியார்மயம் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களில் கட்சி முன்னணியில் இருந்திட வேண்டும்.  

2.87  - மார்க்சிஸ்ட் கட்சி, நாடாளுமன்றத்தில் ‘இந்தியா’ அணி சேர்க்கையில் உள்ள கட்சிகளுடன் ஒத்துழைப்பு நல்கியும் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒப்புக்கொள்ளப்பட்ட பிரச்சனைகளுடனும் ஒத்துழைத்தும் கட்சி செயல்படும். ஜனநாயகத்திற்கு எதிராக நடைபெற்றுவரும் எதேச்சதிகார தாக்குதல்கள், ஆட்சிக்கு எதிராக கருத்துக் கூறுபவர்களை நசுக்கிடவும் மற்றும் எதிர்க்கட்சியினர்மீதும் கொடுங்கோன்மைமிக்க சட்டங்களைப் பயன்படுத்துதல் மற்றும் அரசமைப்புச்சட்டத்தையும் அரசின் நிறுவனங்களையும் சீர்குலைத்திடும் முயற்சிகளுக்கு எதிராக, அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் மார்க்சிஸ்ட் கட்சி கைகோர்த்திடும்.

2.88      பாஜக-வை உறுதியுடன் எதிர்த்திடும்  பிராந்தியக் கட்சிகளுடன் மார்க்சிஸ்ட் கட்சி ஒத்துழைத்திடும். அங்கெல்லாம் மக்களுக்கு நன்மை பயக்கும் எந்தவொரு கொள்கையையும் கட்சி ஆதரிக்கும். ஆனால் அதே சமயத்தில் உழைக்கும் மக்களைக் கடுமையாகப் பாதித்திடும் கொள்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டும்.  

2.89  - கட்சி, வர்க்க மற்றும் வெகுஜன ஸ்தாபனங்களின் கூட்டு மேடைகள் மற்றும் கூட்டு நடவடிக்கைகளை ஆதரித்திடும். முதலாளித்துவ கட்சிகளின் பின்னே உள்ள வெகுஜன மக்களை ஈர்த்திட ஒன்றுபட்ட நடவடிக்கைகளுக்கான அனைத்து முயற்சிகளையும் கட்சி மேற்கொள்ளும்.

2.90  -  கட்சியின் சுயேச்சையான பலத்தை  வளர்ப்பதற்கு முன்னுரிமை அளித்திடும் அதே சமயத்தில், இடதுசாரி ஒற்றுமையை மீட்டெடுத்து வலுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஒன்றுபட்ட இடதுசாரிக்கட்சிகளின் பிரச்சாரம் மற்றும் போராட்டங்கள் இடதுசாரிகளின் மாற்றுக்கொள்கைகளை உயர்த்திப்பிடித்திட வேண்டும். ஓர் இடதுசாரி மற்றும் ஜனநாயக மேடை மற்றும் திட்டத்துடன் அணிதிரளும் விதத்தில் அனைத்து இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளையும் அவற்றில் செயல்படும் வெகுஜன ஸ்தாபனங்கள் மற்றும் சமூக இயக்கங்களையும் அணிதிரட்டவும் கட்சி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

 2.91  - மேலே கூறப்பட்டுள்ள அரசியல் நிலைபாட்டின் அடிப்படையில் பாஜக-விற்கு எதிரான வாக்குகளை மிக அதிகபட்சமாக குவிக்கும் விதத்தில் பொருத்தமான தேர்தல் உத்திகளைப் பின்பற்றிட வேண்டும்.  இலக்குகள்  

2.92 - (1) கட்சி நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள், இந்துத்துவா மதவெறி மற்றும் ஜனநாயகத்தின் மீதான எதேச்சதிகாரத் தாக்குதல்களுக்கு எதிராக தன்னுடைய பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் கட்சி முடுக்கிவிட வேண்டும்.

 (2) வாழ்வாதாரப் பிரச்சனைகள், நிலம், உணவு, ஊதியம், வீட்டு மனைகள், சமூகப் பாதுகாப்புப் பயன்பாடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் மீது கிராமப்புற ஏழை மக்கள், உழைக்கும் வர்க்கம் மற்றும் நகர்ப்புற ஏழைகள் மேற்கொண்டுவரும் போராட்டங்களை வளர்த்தெடுத்து, தீவிரப்படுத்திட வேண்டும்.

 (3) இந்துத்துவா மதவெறிக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் விரிவான ஒற்றுமையைக் கட்ட கட்சி முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.  

(4) ஜனநாயகம், ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உறுதியான நிலைபாட்டை கட்சி மேற்கொண்டிட வேண்டும். மேலும் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கருத்து கூறுபவர்களை நசுக்கிட மேற்கொள்ளப்படும் எதேச்சதிகாரத் தாக்குதல்களுக்கு எதிராகவும், ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் புலனாய்வு முகமைகளைத் துஷ்பிரயோகம் செய்வதையும்; மற்றும் அரசமைப்புச்சட்ட அமைப்புகளை நாசமாக்கிவருவதையும் எதிர்த்து பரந்த அளவில் ஒற்றுமையை உருவாக்க ஒத்துழைத்திட வேண்டும்.

 (5) அனைத்துவிதமான சாதிய ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராகவும் போராட்டங்களைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் மதச் சிறுபான்மையினர் உரிமைகளுக்கான போராட்டங்களையும் ஆதரித்திட வேண்டும். மேலும் பழங்குடியினர் பகுதிகளில் பணியாற்றுவதில் கட்சி சிறப்புக் கவனம் செலுத்திட வேண்டும்.

 (6) இந்திய மக்கள் மத்தியில் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை அதிகரித்திட வேலை செய்திட வேண்டும்; மற்றும் மோடி அரசாங்கத்தின் அமெரிக்க ஆதரவு வெளிநாட்டுக் கொள்கை மற்றும் அமெரிக்காவுடனான ராணுவ சூழ்ச்சிக் கூட்டணிக்கு எதிராக வெகுஜனக் கருத்தை அணிதிரட்டவும் கட்சி வேலை செய்திட வேண்டும்.

 (7) மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஆதரவாகவும், மக்களை அணிதிரட்ட வேண்டும். கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கும், மக்கள் நலக் கொள்கைகளை அமல்படுத்துவதற்கான அதன் முயற்சிகளை ஆதரிக்கவும் மக்களைத் திரட்ட வேண்டும்.

(8) இடது ஜனநாயக முன்னணியைக் கட்டி எழுப்பவும், இடது ஜனநாயக முன்னணியே மாற்று என்பதை முன்னிறுத்தவும் கட்சி பாடுபட வேண்டும். இது, இந்தியாவின் நிலைமைகளுக்குப் பொருந்திப்போகும் விதத்தில் “சோசலிசமே மாற்று” (“Socialism is the alternative”) என்ற பிரச்சாரத்துடன் இணைக்கப்பட வேண்டும். 

தமிழில்: ச.வீரமணி