விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் 1951 இல் பிறந்தவர் பொன்னுசாமி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர், வறுமை காரணமாக 5 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. இவரது 10-வது வயதில் தந்தை இறந்துவிட்ட நிலையில், அப்போது முதல் குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டார் பொன்னுசாமி.
கிராமத்தில் உள்ள சிறிய மளிகைக் கடையை நடத்துவதே இவரது பிரதான தொழிலாக இருந்தது. 5 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாவிட்டாலும், நூல்களை வாசிப்பதை நிறுத்தவில்லை. கையில் கிடைக்கிற புத்தகங்களையெல்லாம் வாசிக்கத் தொடங்கினார். குறிப்பாக இலக்கியம் சார்ந்த நூல்களை அதிகம் படித்தார். சோவியத் மொழிபெயர்ப்பு நூல்கள் அவரது வாசிப்புக்கு பெரிய உந்துதலைத் தந்தன.
அவரது கதைக்களன் அசலானது. அன்றாடம் அவர் சந்தித்த மனிதர்கள்தான் அவரது கதைமாந்தர்கள். ஆனாலும், ஒரு நாட்டின் சமூக, பொருளாதாரக் காரணிகள் எப்படி எளிய மனிதர்களின் வாழ்வைப் பாதிக்கிறது என்பதைத் தனது எளிய விவரிப்புகள் மூலம் ஆழமாகப் பதிவுசெய்தார்.
முதன் முதலாக செம்மலர் இதழில் ‘பரிசு’ என்ற சிறுகதையை எழுதினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்த பொன்னுசாமி, 22 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், 6 குறுநாவல்கள் என மொத்தம் 36 புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது கதைகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.
இவர் எழுதிய ‘மின்சாரப் பூ’ என்ற சிறுகதைத் தொகுப்பு 2007 இல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. எளிய உழைப்பாளிகளின் வாழ்வை தனது எழுத்துக்கள் மூலம் பதிவு செய்த மேலாண்மை பொன்னுசாமி, 2017 அக்டோபர் 30 அன்று காலமானார்.