articles

img

எங்கள் இளைஞர்கள் விடுதலை செய்யப்படும் வரை பேச்சுவார்த்தைக்கே இடமில்லை.... காஸிப்பூர் விவசாயிகள் உறுதி.....

புதுதில்லியை நோக்கி வரும் தில்லி-மீரட் நெடுஞ்சாலையில், காஸிப்பூர் எல்லையில் விவசாயிகள் போராடிவரும் தளத்தில், போலீசார் பல்வகை தடுப்பரண்களை ஏற்படுத்தி இருக்கின்றனர். முள் கம்பிகளுடன் அமைத்திருக்கும் தடுப்பரண்களில் பல்வேறு இடங்களில் மின் இணைப்பும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. விவசாயிகள் போராடும் இடத்தை நோக்கிச் செல்லும் குறுகிய சந்துகளும் காவல்துறையினரால் அடைக்கப்பட்டுள்ளன. சாலைகளின் வழியே மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும்கூட சென்று வர அனுமதிக்கப்படுவதில்லை.

இங்கேயுள்ள ஒன்பது சந்துகளில் ஒரேயொரு சந்தினை மட்டுமே போராடும் விவசாயிகள் ஆக்கிரமித்திருந்தார்கள். இதர எட்டு சந்துகளின் வழியாகவும் மக்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டுமிருந்தார்கள். இப்போது போலீசார் அனைத்து சந்துகளையும் அடைத்துவிட்டார்கள். இதனால் மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்வதில் மிகவும் சிரமத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரும், மேக்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரும் தில்லி போலீசாரிடம் வாக்குவாதம் புரிந்துகொண்டிருந்ததைப் பார்த்தோம்.

“நான் தொழில்ரீதியாக ஒரு டாக்டர். நோயாளிகளின் உடல்நலத்தைக் கவனிக்க வேண்டியது என் கடமை. நீங்கள் அனுமதி அளிக்கவில்லையென்றால், நான் எப்படி என் மருத்தவமனைக்குச் செல்ல முடியும்? பலருடைய உயிருடன் நீங்கள் விளையாடிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லையா?” - இவ்வாறு மருத்துவர் தன்னை மேலே செல்லவிடாது தடுத்திடும் போலீசாரிடம் கேட்டுவிட்டு, மேலதிகாரியிடம் இது குறித்துப் பேசுமாறும் கேட்டுக்கொண்டார்.

மற்றொரு மருத்துவர் தடுப்பரண்களுக்கு இடையே இருந்த குறுகிய இடைவெளி வழியாக நுழைந்து சென்றுள்ளார். அவரைப் போலீசார் மீளவும் பிடித்துத் தள்ளியுள்ளனர். அப்போது, “நீங்கள் குடிமக்களுக்குத் சுதந்திரமாக இயங்குவதற்கான உரிமையை மறுத்துக் கொண்டிருக்கிறீர்கள். எவ்விதக் காரணங்களுமில்லாமல் சாலைகளை அடைத்து வைப்பது கேலிக்கூத்தாகும். மக்களின் உரிமைகளைப் பறிப்பதைப்போன்று கொடூரமான செயல் வேறெதுவும் இருக்க முடியாது. குடிமக்களுக்கு இவ்வாறு அசவுகரியத்தை அளித்திட எந்த சட்டம் உங்களை அனுமதிக்கிறது?” என்று கோபத்துடன் போலீசாரைப் பார்த்து அவர் கேட்டார். 
நோயாளிகளை ஏற்றிச்செல்லும் ஆம்புலன்ஸ் வேன்களைக் கூட செல்லவிடாது போலீசார் தடுத்தனர். அக்சர்தம், ஆனந்த் விகார் போன்று பிரதான இடங்களுக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் திருப்பிவிடப்பட்டுள்ளன. இதனால் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகியிருக்கிறது. 

அரசாங்கம், போராடும் விவசாயிகளுக்கு அளித்துவந்த தண்ணீர் மற்றும் மின் விநியோகத்தை மறுத்தது தொடர்பாக பல்வேறு முனைகளிலிருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து இப்போது மீண்டும் அவை அளிக்கப்பட்டிருக்கின்றன.மேற்கு உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் உத்தர்காண்ட் மாநிலங்களிலிருந்து ஆயிரமாயிரமாய் விவசாயிகள் தொடர்ந்து காஸிப்பூர் நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றனர். ஜனவரி 26க்குப்பின் சற்றே குறைந்திருந்த மக்கள் வெள்ளம், இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. அரசாங்கம் மேற்கொண்டுவரும் ஒவ்வொரு சூழ்ச்சி நடவடிக்கைகளையும் எதிர்த்து முறியடித்திடக்கூடிய விதத்தில் விவசாயிகளும் உருக்குபோன்று தங்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

“நாங்கள் அமைதியானமுறையில் எங்கள் போராட்டத்தைத் தொடர்வோம். ஆனால் இந்த அரசாங்கம் எங்களுக்கு எதிராக அதிதீவிர (adventurism) நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறோம். நாங்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் எங்கள் தலைவர்களின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் எங்கள் தலைவர்களை இந்த அரசாங்கம் குறிவைத்திருக்கிறது. எங்கள் தலைவர்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் எது செய்தாலும் நாங்கள் பார்த்துக்கொண்டு வாளா இருந்துவிடுவோம் என்று நினைத்துக்கொள்ளக்கூடாது,” என்றும் அவர்கள் கூறினார்கள்.காஸிப்பூரில் முகாமிட்டுள்ள பாரதிய கிசான் யூனியன் தேசிய செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத், எங்களிடம் கூறுகையில் “நாங்கள் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்வரை இந்த இடத்தை விட்டுத் திரும்பப்போவதில்லை, எவ்வளவு மாதங்களானாலும் சரி.” என்று கூறினார்.

விவசாயிகளும், அரசாங்கமும் தங்கள் நிலையில் உறுதியாக இருக்கும்பட்சத்தில் இந்த முட்டுக்கட்டையை எப்படிப் போக்குவது என்று அவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

“பேச்சுவார்த்தைகள் நடத்த விவசாய சங்கங்கள் எப்போதுமே தயங்கியது இல்லை. ஆனால், எங்கள் இளைஞர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு, அவர்களுக்கு எதிராக வழக்குகள் புனைந்துவிட்டு, பேச்சுவார்த்தை நடத்த வாருங்கள் என்றால் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும்? எங்கள் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவர்களுக்கு எதிரான வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும். இரண்டாவதாக, இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக சட்ட உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். இப்போது எங்கள் நிகழ்ச்சிநிரலில் புதிதாக, கரும்பு விவசாயிகளுக்கும் காலத்தே தொகையை அளித்திட வேண்டும் என்று சேர்த்திருக்கிறோம். அரசாங்கம் தன்னுடைய மூர்க்கத்தனத்தை கைவிட்டுவிட்டு, எவ்வித முன் நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தை நடத்த முன்வராவிட்டால், எங்கள் கோரிக்கைகளும் வளர்ந்துகொண்டே இருக்கும்,” என்று அவர் உறுதியுடன் கூறினார்.

“இது மக்கள் இயக்கம். இது மக்கள் இயக்கமாகத் தொடரும். இதனை ஒடுக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் அதிகரிக்க அதிகரிக்க, அரசாங்கத்தின் முரட்டுத்தனத்திற்கு எதிராக எங்கள் மன உறுதியும் அதிகரித்து வலுப்படும். இங்கேயுள்ள மக்கள் எங்களுக்கு அளித்துவரும் ஆதரவு நாளும் வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்தச் சட்டங்கள், விவசாயிகளுக்கு விரோதமானவை மட்டுமல்ல, சாமானிய மக்களுக்கும், நுகர்வோருக்கும் கூட விரோதமானவை என்பதை இப்போது மக்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள். இந்தச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுவிட்டால், அத்தியாவசியப் பொருள்களைப் பதுக்கி வைப்பது, விண்ணைத்தொட்டுவிடும். எனவேதான் இவற்றுக்கு எதிராக உறுதியுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். இது, மிகவும் வேகமான முறையில் நம் சமூக அமைப்பையே மாற்றி அமைத்துக்கொண்டிருக்கிறது,” என்று அவர் கூறினார்.

செங்கோட்டைக்கு அழைத்து வந்தது யார்?
குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் சீக்கிய மதக் கொடி ஏற்றப்பட்டது தொடர்பாக சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பான பட்டியல் ஒன்றை தில்லிப் போலீசார் வெளியிட்டுள்ளார்கள். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்த நிகழ்வு தொடர்பாக பாரபட்சமற்ற முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்., ஆனால், அதே சமயத்தில், ஆட்சியாளர்கள் “அப்பாவி” விவசாயிகளுக்கு எதிராக சதி வலைகளைப் பின்னக்கூடாது,” என்றும் குறிப்பிட்டார். 

“நாட்டுப்பற்று குறித்து ஆட்சியாளர்கள் எங்களுக்கு ஒன்றும் பிரசங்கம் செய்ய வேண்டிய தேவை இல்லை. அநேகமாக நாள்தோறும் எங்கள் இளைஞர்கள் இந்தப் போராட்டத்தில் தங்களைத் தியாகப்படுத்திக்கொண்டு, மூவர்ணக் கொடிகளுடன் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேற்கு உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் நாட்டுக்காகத் தியாகம் செய்திடும் இளைஞர்கள் எண்ணிக்கை தொடர்ந்துகொண்டிருக்கிறது. எங்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்துவரும் காவல்துறையினரும், விவசாயிகள் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான். எனவே, இத்தகைய அரசின் அடாவடித்தனமான நடவடிக்கைகள் எல்லாம் எங்களைக் கட்டுப்படுத்திட முடியாது,” என்றார்.

“இப்போது அரசாங்கம் போலீசாரின் கெடுபிடிகள் அதிகமாகியிருப்பதற்கு, ஜனவரி 26 அன்று நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைக் காரணமாகக் கூறிக்கொண்டிருக்கிறது. உண்மையில் இந்த வன்முறையாளர்களை, இருபக்கமும் மோட்டார்பைக்குகளில் சீருடைகள் அணியாத போலீசார்தான் பாதுகாப்புடன், அழைத்து வந்தார்கள். அவர்களைச் செங்கோட்டைக்கு அழைத்துச் சென்று வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட வைத்தார்கள். அதன் மூலம் எங்கள் இயக்கத்தை மதிப்பிழக்கச்செய்துவிட முடியும் என்று நினைத்தார்கள். அரசாங்கம் தங்கள் இந்த இழிவான உத்தியில் வெற்றி பெற்றுவிட்டது. எனினும் மக்கள் அரசாங்கத்தின் இத்தகைய இழிவான சூழ்ச்சியை நன்கு புரிந்துகொண்டுவிட்டார்கள். செங்கோட்டையில் என்ன நடைபெற்றிருந்தாலும் அது கண்டிக்கப்படத்தக்கதாகும். சட்டம்-ஒழுங்கைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களிடமிருந்து நாங்கள் ஏற்கனவே எங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு விட்டோம்,” என்றார். 

“நாட்டின் சட்டங்கள் மிகவும் முக்கியமானவைதான். அதைவிட இந்தக் கடும் குளிரில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ள எங்கள் 170 விவசாயிகளின் உயிர்களும் எங்களுக்கு மிகவும் முக்கியமாகும். அரசாங்கம் தன் அரக்கத்தனத்தைக் கைவிட்டுவிட்டு, எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

தில்லியிலிருந்து ச.வீரமணி
 

;