புதுதில்லி:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை மத்திய பாஜக அரசின் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
விவசாயிகளுக்கு விரோதமான வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தில்லி மாநில எல்லைகளில் பல்வேறுமாநில விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தைநடத்தி வருகின்றனர். மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்கவில்லை. கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதாயம் பெறும் வகையிலும் விவசாயிகளை வஞ்சிக்கும் வகையிலும் வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய பாஜக அரசைக் கண்டித்து நாடாளுமன்றக் கூட்டத்தொடர் துவங்கிய நாளில் குடியரசுத் தலைவரின் உரையை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியகம்யூனிஸ்ட் கட்சி, திமுக, விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. அன்று நாடாளுமன்ற வளாகத்தில் இடதுசாரிக்கட்சி களின் எம்.பி.க்கள் ஊர்வலம் மற்றும்ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மார்க்சிஸ்ட்கட்சி எம்.பி.க்கள் பி.ஆர்.நடராஜன்,சு.வெங்கடேசன், ஏ.எம்.ஆரிப் ஆகியோர் பங்கேற்றனர். மாநிலங்களவையில் திமுக எம்.பி.திருச்சி சிவா உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தியதைத் தொடர்ந்து வேளாண் சட்டங்கள் குறித்த விவாதம் நடைபெற்றது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பிவருகின்றனர். மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
காஸிப்பூர் எல்லையில்...
இந்நிலையில் பிப்ரவரி 4 வியாழக்கிழமையன்று தில்லி அருகே காஸிப்பூரில் போராடும் விவசாயிகளைச் சந்திப்பதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் தில்லியில் இருந்து பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர்.இக்குழுவில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், ஏ.எம்.ஆரிப், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. எம்.செல்வராசு, திமுக எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவன், ரவிக்குமார், அகாலிதளம் சார்பில் ஹர்சிம்ரத்கவுர் பாதல், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரியா சுலே, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சுகதா ராய் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.எதிர்க்கட்சி எம்.பிக்கள் காஸிப்பூர்எல்லையை அடைந்ததும் காவல்துறை யினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். சாலைகளில் தடுப்புகள் மற்றும் முள் கம்பிகள் போடப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டன.
எம்.பி.க்கள் முழக்கம்
அப்போது எம்பிக்கள், “காப்போம்... காப்போம்... ஜனநாயகம் காப்போம். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறு... நசுக்காதே நசுக்காதே...விவசாயிகளை நசுக்காதே” என்று முழக்கமிட்டனர்.காஸிப்பூர் புறப்படும் முன்பு சுப்ரியா சுலே எம்.பி. செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் விவசாயி களைச் சந்திக்கச்சென்று கொண்டிருக்கிறோம். நாங்கள் அனைவரும் விவசாயிக ளுக்கு ஆதரவளிக்கிறோம், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.
இந்திய எல்லையில் கூட இத்தனை தடுப்புகள் இல்லை சிரோமணி அகாலி தள் எம்பி
ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறுகையில், நாங்கள் விவசாயிகளின் போராட்டக் களத்திற்கு வந்துள்ளோம். இதனால் இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியும். விவசாயிகள் குறித்த பிரச்சனையை எழுப்ப சபாநாயகர் எங்களை அனுமதிக்கவில்லை. இப்போது இங்கு என்ன நடக்கிறது என்பதுகுறித்த விவரங்களை அனைத்துக்கட்சி களும் இந்திய மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்போம் என்று தெரிவித்தார். போராடும் விவசாயிகளை சந்திக்கச் சென்ற மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், முள்கம்பிகள், தடைக்கற்கள் என 14 அடுக்குகள் கொண்ட தடுப்புகளை மத்திய பாஜக அரசின் காவல்துறை வைத்துள்ளது. இந்திய எல்லையில் கூட இதுபோன்ற தடுப்புகள் வைக்கப்படவில்லை. இந்த தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஜனநாயக ரீதியாக போராடிக்கொண்டிருக்கக்கூடிய விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்திற்குள் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராடும் விவசாயிகளை சந்திக்க போராட்டக்களத்திற்கு வந்துள்ளோம் என்று தெரிவித்தார்.