நேற்றைய தொடர்ச்சி....
‘பதுக்கல்’ என்பதை ‘சேமிப்பு’ என்று புதிய அத்தியாவசியச் பொருட்கள் திருத்தச் சட்டம் வர்ணிக்கிறது. இதனால் சட்டப்படி எந்த நடவடிக்கையும் அரசு எடுக்க முடியாது. பெரும் வர்த்தகர்கள் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அபரிமிதமான விலை உயரும் போது விற்றுக் கொள்ளை லாபமடிப்பார்கள். அதிக விலைகொடுத்து வாங்க முடியாத ஏழை மக்கள் பட்டினி கிடந்து சாகநேரிடும். மத்திய தர வருவாய் உள்ளவர்கள் கூட உணவுக்காகவே தங்களது மொத்த வருமானத்தையும் செலவழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர். எப்படி மக்களுக்கு தாராளமாக பொருட்கள் கிடைக்கும் என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள்?
ஒருவேளை என்ன விலை விற்றாலும் வாங்க சக்தி படைத்தவர்களுக்கு தாராளமாக பொருட்கள் கிடைக்கும் என்று சொல்கிறார்களோ! மத்திய அரசு,அரசிதழில், இந்தப் பொருட்களெல்லாம் அத்தியாவசியமானவை என்று யுத்தம், பஞ்சம், அபரிமிதமான விலைவாசிஉயர்வு, இயற்கை பேரழிவு போன்ற காலங்களில் அறிவிக்கலாம். அறிவிக்க வேண்டுமென்று கட்டாயமில்லை. சேமித்து வைக்கும் அளவில் மற்றும் அபரிமிதமான விலைஉயர்வு என்பதில் அரசு எப்போது தலையிடும்? தோட்டக்கலை பயிர்களாக இருந்தால் மொத்த விற்பனையின் விலை100 சதம் உயர்ந்தால், உணவு தானியங்களாக இருந்தால் மொத்த விலையில் 50 சதம் உயர்ந்தால்! இதை எப்படி தீர்மானிப்பார்கள்? கடந்த 12 மாதங்களில் விற்ற விலையின் சராசரிஅல்லது கடந்த ஐந்தாண்டுகளில் இருந்த விலையின் சராசரியைக் கொண்டு தீர்மானிப்பார்களாம். இதில், சேமித்து வைத்திருப்பது, மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றுவதற்கோஅல்லது ஏற்றுமதி செய்வதற்கோ என்றால் இந்த சட்டம் அதற்கு பொருந்தாது.
ரேசன் கடைகள் என்ன ஆகும்?
தற்போது கடைபிடித்து வரும் உணவுக் கொள்கை மூன்றுஅமைப்புகளில் சங்கிலித் தொடர் போல் செயல்படுத்தப்படுகிறது.முதலாவது, கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் விளைபொருள் விலை நிர்ணய கமிஷன் (சி.ஏ.சி.பி).இவ்வமைப்பு விளைபொருட்களுக்கு அடக்கவிலையைவிட குறைவாகத்தான் விலையை பரிந்துரைக்கிறது. அதையும் மத்திய அரசு ஏற்று அறிவிப்பதில்லை. இரண்டாவது, இந்திய உணவுக்கழகம் (எப்.சி.ஐ) கொள்முதல் செய்துஇருப்பு வைத்தல் மற்றும் மாநிலங்களுக்கு உணவு தானியங்களை வழங்குதல், மாநில அளவில் நுகர்பொருள் வாணிபக் கழகம், மூன்றாவது ரேசன் கடைகள். இனி இவற்றுக்கெல்லாம் எந்த அவசியமும் இருக்காது. இந்தத் துறைகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையிழப்பர்.விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்யாது என்றால் ரேசன் கடைகளுக்கு பொருட்கள் எங்கிருந்து வரும்? வியாபாரிகளிடம் அதிக விலை கொடுத்து வாங்கிமலிவு விலையில் ரேசன் கடையில் அரிசி, கோதுமைவழங்குவார்களா? நிச்சயமாக அரசு செய்யாது. பிறகெப்படி? ரேசன் கடைகள் மூடப்படும். வெளிக்கடைகளில் மட்டும்தான் மக்கள் அரிசி, சர்க்கரை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அவர்கள் விலையை ஏற்றிவிடுவார்கள். தற்போது ஒரு கிலோ அரிசி 50ரூ விற்கிறது. அதுவே, கிலோ 200 ரூபாய் விற்றால் என்ன ஆகும்? கற்பனை செய்துபாருங்கள்.
தமிழகம் மட்டும் பாதிக்கப்படாதா?
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் விரோத சட்டங்களை நியாயப்படுத்தி தொடர்ந்து பேசி வருகிறார். ராஜாவை விஞ்சிய ராஜ விசுவாசி என்று சொல்வார்கள் அல்லவா, அது வேறு யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, தமிழகமுதலமைச்சருக்குத்தான் சாலப் பொருந்தும்.கறை நல்லது என்று ஒரு விளம்பரம் போடுவார்கள். யாருக்கு நல்லது? சோப்பு பவுடர் விற்கக்கூடிய கம்பெனிகாரனுக்கு அது லாபத்தை தரக்கூடியது. மக்களுக்கு கூடுதல் செலவு, வேலை. இது போலத்தான் முதலமைச்சர் அவர்கள், வேளாண் சட்டங்கள் நல்லது, லாபம் தரக்கூடியது என்று ஆரம்பத்தில் பேசினார். யாருக்கு என்பதில்தான் வேறுபாடு. இப்போது தமிழ்நாடு விவசாயிகளுக்கு இந்தசட்டத்தால் எந்த பாதிப்பும் வராது என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார். அப்படியென்றால், மற்ற மாநில விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை முதலமைச்சர் ஏற்றுக் கொள்கிறாரா? மற்ற மாநில விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது உண்மையென்றால் அதிலிருந்து தமிழக விவசாயிகளை பாதுகாப்பதற்கு என்ன தனித்த சிறப்பான சட்டங்களையும், திட்டங்களையும் நமது முதல்வர் வைத்திருக்கிறார் என்பதை விபரமாக வெளியிடலாமே?
மத்திய அரசால் நிறைவேற்றப்படும் ஒரு சட்டத்தால் ஒருமாநிலம் மட்டும் பாதிக்காது என்றால், “அந்த சட்டத்தை எங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம்” என்ற நிலைபாட்டை சம்பந்தப்பட்ட மாநிலம் மேற்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட அதிசயமெல்லாம் அதிமுக ஆட்சியில் நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை முதல்வரே ஏற்றுக்கொள்வார். பிறகு எப்படி பாதிக்காது?கார்ப்பரேட் கம்பெனிகளோ, பன்னாட்டு கம்பெனிகளோ தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்றகொள்கை முடிவு ஏதாவது அதிமுக அரசுக்கு இருக்கிறதா? இல்லையே! வேளாண் விளை பொருட்களில் நெல் மட்டும் தான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதுவும் தமிழ்நாடு முழுவதும் இல்லை. பெருமளவு காவிரி டெல்டாவில் மட்டும் தான் நடக்கிறது. இதர மாவட்டங்களில் வியாபாரிகளிடம் தான், விவசாயிகள், அரசு அறிவித்துள்ள விலையை விட குறைவான விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். மற்ற வேளாண் விளை பொருட்களை கொள்முதல் செய்வதற்கு எடப்பாடியிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா?
மற்றொன்று, இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது என்ற புரிதல்முதல்வருக்கு இருந்தால் இதை நிச்சயமாக ஆதரிக்க முடியாது. அரசு கொள்முதல் செய்வது குறித்து இச்சட்டத்தில் எங்குமே குறிப்பிடப்படவில்லை. அப்படியென்றால், பொதுவிநியோகத்திற்கான உணவு தானியங்கள், பருப்பு, எண்ணெய் ஆகியவற்றை அரசு எவரிடம் வாங்கி மக்களுக்கு வழங்கும்? கார்ப்பரேட் கம்பெனிகள் என்ன கூடுதல்விலைக்கு விற்றாலும் வாங்கி மக்களுக்கு வழங்குவோம் என்று அறிவிக்க முதலமைச்சர் தயாரா? தமிழகம் பொதுவிநியோகத்துறையில் நீண்ட கால தொடர் முயற்சியின் விளைவாக ஓரளவுக்கு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. அதை ஒரேயொரு சட்டத்தின் மூலம் தகர்த்தெறிகிறது மத்திய பாஜக அரசு. இதை உணர முடியாதவராகத்தான் இருக்கிறாரா நமது முதல்வர்?
சாகுபடியை துவங்குவதற்கு முன்பாகவே விலையைதீர்மானித்துக் கொள்வது விவசாயிகளுக்கு சாதகமானதுதானே! இதை ஏன் எதிர்க்கிறார்கள் என்று ‘விவசாயி’ எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். விலை தீர்மானித்துக் கொள்ளலாம் என்பதை மட்டும் சொல்லும் முதல்வர் அதற்கான நிபந்தனைகளைச் சொல்ல ஏன் மறுக்கிறார்? தமிழ்நாட்டில் “விஷ வெள்ளரி”, ஒப்பந்த சாகுபடி அடிப்படையில் தான் மேற்கொள்ளப்பட்டது. அந்த வெள்ளரி சுண்டுவிரல் அளவு (size) இருந்தால் கம்பெனி எடுத்துக் கொள்ளும்.அதுவே நடுவிரல் அளவு பெரிதாகி விட்டால் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் கொடுத்த விதை, மருந்து, உரம் ஆகியவற்றை போட்டு இப்போது அந்த நிலங்களெல்லாம் தரிசாக கிடப்பது முதலமைச்சருக்கு தெரியுமா? ஒப்பந்தப்படி அதே அளவு வெள்ளரியை தரமுடியாத விவசாயிகள்ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து மீளமுடியாத கடன் வலையில் சிக்கிச் சீரழிந்தது தனிக்கதை. இப்போது வந்துள்ள ஒப்பந்த சாகுபடி பாதுகாப்பு சட்டம் நாடு முழுவதும் இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே தான், விவசாயிகள்உயிரை துச்சமென மதித்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய விவசாயிகளுக்கு அதிமுக இழைத்த பச்சைத் துரோகம்
நாடாளுமன்றத்தில் மிருக பல மெஜாரிட்டி இருக்கிறது என்பதற்காக நாட்டுக்கும், மக்களுக்கும் விரோதமான எந்தவொரு சட்டத்தையும் அரசு நிறைவேற்ற முடியுமா? எதிர்க்கட்சிகள் சொல்லும் எதையும் காது கொடுத்து கூட கேட்க மாட்டோம் என்ற பாஜக அரசின் எதேச்சதிகார போக்கை அதிமுக ஏற்கிறதா? அரசியல் உறவுக்காகவும், சுயநல நோக்கோடும் பாஜக அரசு செய்யும் அனைத்தையும் தாங்கள்ஆதரிப்பது மக்களுக்கு செய்யும் துரோகமல்லவா? மாநிலங்களவையில், அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்த சட்டமும் நிறைவேறி இருக்காது. இந்த போராட்டத்திற்கான அவசியமும் ஏற்பட்டிருக்காது. எனவே, சட்டத்தை ஆதரித்து இந்திய விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் இழைத்த குற்றத்திற்காக தமிழக முதலமைச்சர் இந்தியவிவசாயிகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். சட்டத்திற்கு அளித்த ஆதரவையும் திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும். இதுதான் அதிமுக அரசுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பதற்கான ஒரே வழி. மத்தியஆளும் கூட்டணியில், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தகட்சிகளே, தங்களது நிலைபாட்டை மாற்றிக்கொண்டு சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகளின் போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளனர். எனவே, அதிமுக தொண்டர்கள், அதிமுக ஆதரவு விவசாயிகள் இக்கோரிக்கையை அதிமுக தலைமையிடம் வலியுறுத்த வேண்டுமென்று போராடும் விவசாயிகள் சார்பில் வலியுறுத்துகிறோம். இல்லையேல் வரலாறு உங்களை மன்னிக்காது. அதற்கான விலையை நீங்கள் கொடுத்தே ஆக வேண்டும்.
500 சங்கங்கள்... ஒரே மனிதனாக
மத்திய ஆட்சியாளர்கள் 15 நாட்களாக நடைபெற்று வரும் விவசாயிகளின் பேரெழுச்சியை கண்டு நடுநடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வழக்கமானதந்திரங்கள் எதுவும் இப்போராட்டத்தை சீர்குலைப்பதற்கு அவர்களுக்கு உதவவில்லை. ஏனென்றால், 500க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒரே மனிதனாக திரண்டுநின்று இந்தப் போராட்டத்தை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதைத்தவிர வேறு கோரிக்கைகள் எதையும் விவசாயிகள் சங்கங்கள்முன்வைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை திரும்பப் பெறக்கோருவது சரியா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. எத்தனையோ சட்டங்கள் அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. எத்தனையோ சட்டங்கள் குடியரசு தலைவர் ஒப்புதல் தராததால் கிடப்பிலே போடப்பட்டிருக்கிறது. ஒரு ஆட்சியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் மற்றொரு ஆட்சியில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. எனவே, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பதற்காக அதற்கு இல்லாத புனிதத்தையெல்லாம் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஆகவே, சட்டங்களை திரும்பப் பெறுவதால் புதிதாக எந்தவொரு பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை. அரசு கௌரவம் பார்க்காமல் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை உணர்ந்து கொண்டு திரும்பப் பெறுவது என்ற நிலைக்கு இறங்கி வரவேண்டும். கார்ப்பரேட் நலன்களை விட நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் நலனே முக்கியம் என்ற நிலையிலிருந்து இந்தப் பிரச்சனையை மத்திய அரசு அணுகினால் போராட்டம் முடிவுக்கு வரும். போராட்டம் தொடருவதும் - முடிவுக்கு வருவதும் அரசின்கைகளில்தான் இருக்கிறது.
===பெ.சண்முகம்===
பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
....முற்றும்...