articles

img

குழந்தைகளை வம்புக்கு இழுப்பானேன், பிரதமரே?-எஸ்.வி.வேணுகோபாலன்

ஒன்றே போல் ஒலித்தாலும் நுட்ப மான வேறுபாடு உள்ள சொற்களை ஆங்கில ஆசிரியர்கள் விளக்கிச் சொல்வது வழக்கம். மறக்க முடியாத அப்படியான இணை சொற்களில் ஒன்று குழந்தைகள் பெயரால் வழங்குவது. child-like,  childish  என்பன தான் அந்த சொற்கள். ஒன்று குழந்தையைப் போல் இருக்கிறாய் என்பது. மற்றது, குழந்தைத் தனமாக இருக்கிறாய் என்பது. முதலாவது, வெகுளித் தன்மையைக் குறிப்பது. மற்றது, வயதுக்கேற்ப நடந்துகொள்ள வில்லை என்பது. நடைமுறையில் அதை இன்னும் குரூரமாக்கிக் கொச்சைப்படுத்தி மிகவும் இழிவாகப் பயன்படுத்தும் தன்மைக்கு அந்தச் சொல்லைக் கொண்டு போய்விட்டனர்.

தமிழில் சிறுபிள்ளைத்தனம் என்பது நீண்ட காலச் சொல்வழக்கு.  வைகைப் புயல்  வடிவேலு நகைச்சுவையில் இருந்து ‘சின்னப்பிள்ளைத்தனமா இல்ல இருக்கு’ என்பது இப்போது சொல் வழக்காகிவிட்டது.  யாரையும் என்னமும் கேள்விக்கு உட்படுத் தட்டும்.  ஆனால், குழந்தைகளை வம்புக்கு இழுக்காதீர்கள் என்பது தான் சொல்ல வேண்டியது.

மனிதர்களில் சிலருக்கு ஒரு குறிப்பிட்ட பிரச்சனை உண்டு. தாங்கள் குழந்தை களாகப் பார்த்தவர்களை, எத்தனை ஆண்டுகள் கடந்தபின்னும் வயது முதிராதவர்களாகவே பார்ப்பது, ஏதும் அறியாதவர்கள் போலவே பேசுவது. அவர்களுக்கு யாதொன்றும் விளங் காது என்று நிறுவத் துடிப்பது. இந்திய தேசிய அரசியலில் இதன் நேரடி சாட்சியங் களை அண்மைக் காலத்தில் நிறைய பார்க்க முடியும்.

பிரதமரின் மலிவான ஆயுதம்

ராகுல் காந்தியின் கருத்துகளோடு எதிர் வாதம் செய்வதற்கு மாறாக பிரதமர் மோடி கொஞ்சம் மலிவான ஆயுதத்தையே திரும்பத் திரும்பக் கையிலெடுக்கிறார். நடப்பு நாடாளு மன்றக் கூட்டத் தொடரில் ‘பாலக் புத்தி’ என்ற சொல்லால் ராகுலை அடித்திருக்கிறார்.

அந்தப் பார்வை பரிமாறும் பொருள்கள் மிகவும் கொச்சையானவை.  ‘நீ எல்லாம் ஒரு ஆளா...உனக்கு எல்லாம் நான் பதில்  சொல்ல வேண்டுமா .....நீ எல்லாம் எனக்கு  எம்மாத்திரம்’  என்பதையெல்லாம் வெளிப்படுத்தும்  சொல்லாட்சி தான் இந்த பாலபுத்தி!  ‘சிறு பிள்ளைத் தனமாக’ என்று சாடி மொத்த உரையாடலையும் இந்தப் புள்ளியில் நிறுத்தி எந்தப் பதிலும் சொல்லாமல் கடந்து போவது அவருக்கு வசதியானது.

அது மட்டுமல்ல,  எதிர்தரப்பு எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் பட்டி மன்றப் பேச்சு ஒன்றை நிகழ்த்தும்போது, பிரத மர் மோடி மூன்று கதைகள் சொன்னதாக ஊட கங்களில் செய்தி வந்திருந்தது. மூன்று கதை களுமே சிறார்களை மையப்படுத்தியது. எதிர்க் கட்சித் தலைவரை எள்ளி நகையாடுவதாக நினைத்துக் கொண்டு சொல்லப்பட்ட கதைகள்,  குழந்தைகளது உளவியல் பற்றிய இந்தக் ‘கதை சொல்லி’யின் அறியாமையைத் தான் வெளிப்படுத்துகின்றன.

எத்தனை அபத்தம், பாருங்கள்..!

முதல் கதையில் மிதி வண்டி பழகும் சிறுவன் ஒருவன் கீழே விழுந்து அழும்போது, அவனை சமாதானப்படுத்த  ‘எறும்பு உயிரிழந்தது, பறவையொன்று இறந்து போனது’ என்று பெரியவர்கள் சொல்கிறார்களாம், உடனே சிறுவன் மகிழ்ச்சி அடைகிறானாம், எத்தனை அபத்தமான பார்வை!

இரண்டாம் கதையில், 99 மதிப்பெண்கள் பெற்று குதிக்கிறான் ஒரு சிறுவன், ஆனால் அது  நூற்றுக்கு வாங்கிய மதிப்பெண் இல்லை, 543க்கு என்று ஆசிரியர் திருத்தி மண்டையில் குட்டு வைக்கிறாராம்.  400 வாங்குவேன் என்று பந்தயம் கட்டிவிட்டு 240 வாங்கி பெரும்பான்மை எட்டாமல் தோல்வி அடைந்த வருக்கு இந்தக் கதை சொல்லும் துணிவு எப்படி வந்தது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். காங்கிரஸ் 543 இடங்களில் போட்டியிடவில்லை என்பதும் கூட இன்னொரு பக்கம் இருக்கட்டும். உள்ளபடியே மதிப்பெண் பற்றிய பார்வையைத் தேர்வுக்கு முன்பாகவே  சிறார்களுக்கு சொல்லி விடுவார்கள் ஆசிரியர்கள்.  இதெல்லாம் அறியாத இந்த விஸ்வகுரு தான் தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு ‘பரீக்சா பே சர்ச்சா’ என்ற பேரில் வழிகாட்டுதல் சொல்லிக் கொண்டிருப்பவர்!

மூன்றாவது கதை ஆகக் கொடுமை யானது. இந்தக் கதையில் வரும் குழந்தை பள்ளியில் புத்தகம் திருடுகிறது, அடுத்தவரது உணவைத் திருடுகிறது. பிறகு பள்ளியில் யாரோ தன்னை அடித்ததாக வீட்டில் வந்து ரகளை  செய்கிறது. ‘உள்ளத்தால் உள்ளலும் தீதே’ என்று வள்ளுவர் வேறிடத்தில் சொல்லும் சொல்லாட லை இங்கே பிரதமருக்கு எடுத்துச் சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு குழந்தை பள்ளியில் இப்படித் திருடும் என்ற சிந்தனை வருவதே மோசமானது. தன்னை விமர்சிப்பவரைத் திருடன் என்று சொல்ல வேண்டும் என்பதற்காக மானசீகமாக ஒரு குழந்தைக்குத் திருட்டுப் பட்டம் சுமத்துபவர் எப்படி பல கோடி மக்களை வழி நடத்தும் உயர்ந்த பொறுப்பில் இயங்க முடியும் என்பதை நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.

மத ஏமாற்று அரசியல்

தங்களை மத உணர்வுள்ளவர்களாக காட்டி மக்களை ஏமாற்றி அரசியல் செய்பவர்கள்  உள்ளபடியே ஆன்மீகப் புத்தகங்களில் எழுதப்படும் கதைகளை வாசிப்பது இல்லை என்பது வெளிச்சமாகிறது. கருத்துகளுக்கு எதி ராகக் கருத்துகளே ஆயுதமாக இருக்க முடியும். நேர்மையான கருத்துகளுக்குப் பற்றாக்குறை இருக்கும்போது தான் இப்படி யான விபரீத சிந்தனைகள் தோன்றும். 

பிரகலாதன் கதையை மறுவாசிப்புக் கதையாகப் படைத்த எழுத்தாளர் சார்வாகன், இரண்ய கசிபுவை வீழ்த்தி இரத்தம் குடித்து  நிமிரும் நரசிம்மத்தைப் பார்த்து, ‘நீ ஏன்  என் தந்தையைக் கொன்றாய்?’ என்று பிரக லாதன் கேட்பதாகப் புனைவு செய்திருந்தார். ‘எனக்கும் அவருக்கும் தானே பிரச்சனை, நீ இடையில் புகுந்தாய், உன்னிடம் அவரது வாதங்களுக்கு எதிர் வாதங்கள் இல்லை. அதனால் அவரைக் கொன்றுவிட்டாய். அது உன் தோல்வியைத் தான் காட்டுகிறது’ என்று பிரகலாதன் பேசுமிடம் முக்கியமானது.

இவர்களுக்கு கேள்விகள் பிடிக்காது

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாகத் தங்களை நினைத்துக் கொள்பவர்களுக்கு, பதில் சொல்லப் பிடிப்பது இல்லை. கேள்விகள் இலட்சியமில்லை. கேள்வி கேட்போர் மீது மரி யாதை இல்லை. சுருக்கமாக, ஜனநாயகத்தின் இயங்குதன்மை அவர்களுக்கு ஒவ்வாததாகத் தோன்றிவிடுகிறது. கடந்த காலத்தில் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடக்கையில் உள்ளிருந்து மதிப்போடு அவற்றை செவி மடுக்கக் கூட விருப்பமின்றி இருந்தவர் மோடி.  அதே வளாகத்தில் தனது கட்சி அலுவலகத்திற்குள் மட்டும் எட்டிப் பார்த்துவிட்டு நாடாளு மன்ற அவையைப் புறக்கணித்துப் போய்க் கொண்டிருந்தவர். அது 303 என்ற எண்ணிக்கை கொடுத்திருந்த ஆணவம். இப்போது எண்ணிக்கை 240! அவரது விருப்பத்திற்கு மாறாக 18வது நாடாளு மன்றத்தை மக்கள் சக்தி இப்படியாகக் கட்டியெழுப்பியது  அவருக்கும் அவரது தொண்டரடிப் பொடிகளுக்கும் பெரும் அசதியை ஏற்படுத்தி இருப்பதை அவர்கள் முகங்களே காட்டிக் கொடுத்துக் கொண்டி ருக்கின்றன.

ஜனநாயக அமைப்பில் மக்களது குரலாக ஒலிக்க வேண்டியது நாடாளுமன்றத்தின் அடிப்படைக் கோட்பாடு. மக்கள் பக்கத்தி லிருந்து எதிர்க்கட்சித் தரப்பு எழுப்பும் கேள்வி களுக்கு மக்கள் பக்கத்தில் இருப்பதான உணர்வுகளோடு விளக்கமும், தவறுகளைச் சரி செய்தலுக்கான உறுதிமொழியும் அளிக்க வேண்டியது ஆட்சியில் இருப்போரது கடமை. இதில் குழந்தைகள் எங்கே வந்தார்கள்?

கதைகள் சொல்வது பிரதமரின் உரிமை. உதவியாளர்களிடம் உருப்படியான கதைகள் எழுதிக் கேட்டு வந்து சொல்லட்டும். அதோடு கருத்துகளும் சொல்லட்டும். கருத்துள்ள கதைகள் சொல்லட்டும். ஆனால், குழந்தை களை, சிறார்களை எல்லாம் இழுக்க வேண்டாம்.  இழிவுபடுத்தவும் வேண்டாம். 

;