articles

img

மக்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட.... - பெ.சண்முகம்

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் 23வது மாநில மாநாடு மார்ச் 30, 31 ஏப்ரல் 1 ஆகிய மூன்று நாட்கள் மதுரை மாநகரில் எழுச்சியுடன் நடைபெற்றது. இம்மாநாட்டில் அறுபதுக்கும் மேற்பட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து பிரிவு மக்களின் பிரச்சனைகள் குறித்தும் மாநாடு விவா தித்து தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தி மக்களை ஒட்டச் சுரண்டுவது, அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்வதற்கு காரணமான வகையில் செயல்படுவது, மாநில உரிமைகளை பறிப்பது, மத மோதல்களை உரு வாக்குவது, மக்கள் ஒற்றுமையை சீர்குலைப்பது, தாராளமய கொள்கைகள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தையே அழித்தொழிப்பது போன்ற ஒன்றிய பா.ஜ.க அரசின் கொள்கைகளுக்கு எதிராக வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்த மாநாடு உறுதிபூண்டுள்ளது.

வேலைவாய்ப்பு: அரசின் கடமை

மக்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டுமென்றால், அதற்கு வேலையும், வரு மானமும் வேண்டும். இன்று சமூகத்தில் ஆக  முக்கியமான பிரச்சனையாக இருப்பது வேலை. உழைக்கத் தயாராக இருக்கும் ஒவ்வொருவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டியது ஆட்சி யாளர்களின் கடமை. ஆனால், இருக்கிற வேலையை யும் பறிக்கக்கூடிய வகையில் ஆளுகிறவர்களின் கொள்கை இருக்கிறது. நவதாராளமயக் கொள்கை அமலாக்கத்தின் காரணமாகத்தான் இத்தகைய மோச மான நிலை ஏற்பட்டிருக்கிறது. பொதுத்துறை நிறு வனங்களை தனியாருக்கு தாரைவார்த்து, சிறு - குறு தொழில்களை நலிவடையச் செய்து, பல்லாயிரக் கணக்கான நிறுவனங்களை மூடச் செய்து அதன் உரிமையாளர்களையும், அதில் பணியாற்றிய பல லட்சக்கணக்கான தொழிலாளர்களையும், நடுத்தெரு வில் நிறுத்தியது, புதிய தொழில்களை ஏகபோக முத லாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகள் துவங்கு வதும், அதில், நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கை யை குறைத்து ஒப்பந்த தொழிலாளி, அவுட்சோர்சிங் என்று பல புதிய உத்திகளை பயன்படுத்தி தொழிலாளர் களை மேலும் சுரண்டுவது, தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுப்பது, இதன் விளைவாக வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொள்வது என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதிகமானோருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் முறைசாரா தொழில், சிறு - குறு தொழில்கள் பாது காக்கப்பட வேண்டும். அதற்குரிய நிதி உதவி, வேலை  உத்தரவுகளை அரசு வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும். திருச்சி பிஎச்இஎல் போன்ற நிறுவனங் களுக்கு வேலை உத்தரவு (Job order) உறுதி செய்யப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 21000 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும். 

மனைப்பட்டா வழங்குக!

அன்றாடம் கூலிக்கு உழைத்து வாழும் பல லட்சம் குடும்பங்கள் சாலையோரங்கள், சாக்கடையோரங் கள், நீர்நிலை, மயானம் ஆகிய இடங்களில் மிகச்சிறிய குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எந்த நேரத்திலும் அங்கிருந்து விரட்டப்படலாம் என்பது தான் நிலை. அதிலும், உயர்நீதிமன்றம் நீர்நிலை புறம்போக்குகளில் வசிக்கும் மக்களை காலவரைமுறை தீர்மானித்து வெளியேற்றியே தீர வேண்டுமென்று அடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டே இருக்கிறது. கஷ்டப்பட்டு, கடன்பட்டு கட்டிய வீட்டை இடித்தே தீர வேண்டும் என்று அரசுக்கு கட்டளை இடுகிறது. அரசே, நீண்ட காலமாக வாழ்பவர்கள் என்ற அடிப்படையில் பட்டா வழங்கலாம் என்று முடிவெடுக்க முற்பட்டால் அதுவும் கூடாது என்று குறுக்கிடுகிறது நீதிமன்றம்.  உண்மையில் தற்போது நீர்நிலைகளாக இருந்தால் அது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை. ஆனால், கான்கிரீட் கட்டிடங்கள் கட்டி, எல்லாவிதமான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை காலி செய்து அங்கே மீண்டும் ஏரியோ, குளமோ உருவாக்க முடியுமா? இருக்கிற நீர்நிலைகளை இனிமேல் ஆக்கிரமிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது, மீறி ஆக்கிரமித்தால் உடனே தடுப்பது போன்றவை தான் சாத்தியமானதாக இருக்கும். வாழும் வீட்டை இடித்து மக்களை நடுத்தெருவில் நிறுத்தினால் என்னதான் தீர்வு? எனவே, நீர்நிலை புறம்போக்கு மற்றும் பல்வகை புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசிப்ப வர்களுக்கு மனைப்பட்டா வழங்கவேண்டும். கோயில், மடம் ஆகியவற்றிற்கு சொந்தமான இடங் களில் வசித்தும், வியாபாரம் செய்து வருபவர்களுக்கு முன்தேதியிட்டு வாடகையை உயர்த்தி வசூலிப்பது, வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகள்  கை விடப்பட வேண்டும். நியாயமான வாடகை நிர்ணயிக்க குழு அமைத்து முறைப்படுத்திட வேண்டும். பட்டா வழங்கவும் அரசு முன்வர வேண்டும்.

நகர்ப்புற வேலைவாய்ப்பை விரிவுபடுத்துக!

விவசாயம் நவீனமாகவும், இயந்திரமயமாகியும் விட்ட சூழலில், விவசாயத்தில் வேலை என்பதே அபூர்வ மாகி விட்டது. இப்போது கிராமப்புற மக்களுக்கு இருக்கிற ஒரே வேலை வாய்ப்பு ஊரக வேலை உறுதி  திட்டம் தான். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டத்தை சீரழித்து மெல்ல ஒழித்து கட்டுகிற வேலையில் ஈடுபட்டுள்ளது. இதனால் 100 நாள் வேலை  வழங்கப்படுவது இல்லை. போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாதது, பல மாதங்களுக்கு சம்பளபாக்கி, இந்த வேலையிலிருந்து மக்களை விரட்டிவிடும் வகையில் பலவிதமான உத்தரவுகளை பிறப்பிப்பது என்று பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றது. இவையனைத்தும் சரி செய்யப்பட்டு 100 நாள் வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழைகளுக்கு வேலை வழங்கும் வகையில் திட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதை மாநாடு வரவேற்கிறது. அது மேலும் கூடுதலான நகரங்களுக்கு விஸ்தரிக்கப்படவும், அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு அதிகப்படுத்தப்பட வேண்டும். 

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம்

பட்டியலின மக்களுக்கு எதிரான தீண்டாமை உள்ளிட்ட சாதிய கொடுமைகள் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கறாராக நடைமுறைப்படுத்த வேண்டும். வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றமிழத்தவர்களை தண்டிக்க வேண்டும், சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட தனிச்சட்டம் இயற்ற வேண்டும், பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகை மற்றும் திட்டநிதிகளை வேறு பணிகளுக்கு மாற்றக்கூடாது. 

பழங்குடியினர் நலன் காத்திட...

வனஉரிமைச் சட்டம் 2006 ஐ அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். பழங்குடியினருக்கான இனச்சான்றிதழ் வழங்குவதில் உள்ள இடையூறுகள் களையப்பட வேண்டும். தமிழக பழங்குடி ஆராய்ச்சி  மையத்தால் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்ட பிரிவினரை தாமதமின்றி பழங்குடி  பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலி யுறுத்த வேண்டும். மூடப்பட்டுள்ள கூட்டுறவு சர்க்கரை  ஆலைகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும். பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை, நீதித்துறை குற்ற வாளிகளுக்கு ஆதரவான போக்கை கடைப்பிடிக் கிறார்கள். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை யும், சட்டப்படியான உரிமைகளையும் நிலைநாட்ட வேண்டும்.  திருநர்கள் சமூகத்தில் மரியாதையுடன் நடத்தப்படு வதை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து சுயமரியாதையுடன் வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றாதீர்

ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் முழுமையாக அமல்படுத்த வேண்டும். அவர்களுக்கான மாதந்திர உதவித்தொகை உயர்த்தி தர வேண்டும். கடவுளின் குழந்தைகள் என்று சொல்லி ஏமாற்றும் ஒன்றிய அரசு  மாற்றுத்திறனாளிகள் துறைக்கு தேவையான நிதி  ஒதுக்கீட்டையும், உபகரணங்களுக்கு வரிச்சலுகை யும் அளிக்க வேண்டும்.

கல்வித்துறையில்...

அரசுப் பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கை தேவைக்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும். நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டுமென்று சட்டப் பேரவை தீர்மானத்தை தமிழக ஆளுநர் தாமதமில்லா மல் ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும். தனியார் கல்லூரி, பள்ளிகளின் கட்டணக் கொள்ளை தடுக்கப் பட்டு கட்டணம் முறைப்படுத்தப்பட வேண்டும்.  பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர்  பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அரசு ஊழியர் - ஆசியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். நிலுவையிலுள்ள வழக்கை விரைந்து முடித்து மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி நிய மனம் வழங்கிட வேண்டும். 

பாரம்பரியத் தொழில்களைக் காத்திடுக!

தமிழ்நாட்டின் பாரம்பரியமான தொழில்களான நெசவு, பட்டாசு தொழில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பட்டாசு உற்பத்தியை தடை செய்ய வேண்டு மென்ற உச்சநீதிமன்ற வழக்கில் தமிழ்நாடு அரசு தன்னை இணைத்துக் கொண்டு பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும். நூல் விலை உயர்வை கட்டுப் படுத்தி நெசவு தொழிலை பாதுகாக்க வேண்டும்.  எட்டாவது அட்டவணையிலுள்ள அத்துணை மொழி களுக்கும் அதன் விகிதாச்சாரத்திற்கேற்ப நிதி ஒதுக்கீடு, ஆட்சி மொழி, அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட வேண்டும். இந்தி திணிப்பு, சமஸ்கிருத ஊக்குவிப்பு, மொழிகளுக்கிடையே பாகுபாடு நிறுத்தப்பட வேண்டும். தமிழ் ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் ஆக்கப்பட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. கொரோனோ பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகள் இல்லாமல் போயி ருந்தால் மேலும் மக்கள் கொத்து கொத்தாய் செத்து  மடிந்திருப்பார்கள். இந்த காலத்தில் தான் மருந்து களின் விலையை உயர்த்த ஒன்றிய அரசு அனுமதி யளித்திருக்கிறது. உயிர் காக்கும் மருந்துகள் மலிவான  விலையில் மக்களுக்கு கிடைக்கவும், அரசு மருத்துவ மனைகளை மேம்படுத்த, நவீனப்படுத்த போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதும் அவசியம்.

உள்ளாட்சிகளை பலப்படுத்துக!

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நியாயமான குரலை எதிரொலிக்கும் அதே நேரத்தில், உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திமுக  அரசு ஏற்று, அதிக நிதி ஒதுக்கீடும் செய்திட வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கேரளாவைப் போல் மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும். பெண்  பிரதிநிதிகள் கணவர்களின் தலையீடுயின்றி சுயேட்சை யாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய நிதி பாக்கிகளை பெற்றுத்தர மாநில அரசு முனைப்பு காட்ட வேண்டும். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் சிறு பான்மை மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. முஸ்லீம்களும், கிறிஸ்துவர்களும் அச்சத்தில் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. வகுப்புவாத தன்மை  கொண்ட அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மதச்சார்பற்ற, ஜனநாயக இயக்கங்கள் வலுவாக குரல் எழுப்ப வேண்டும். சிறுபான்மையினர் துறைக் கென்று தனிச் செயலகம், மற்றும் செயலாளர் நியமனம் செய்யப்பட வேண்டும். நீண்ட காலம் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதில் மதப்பாகுபாடு கடைபிடிக்கப்படக் கூடாது. கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங் களில் ஓரிரு உலைகளுக்கு மேலாக அணு உலைகள் நிறுவுவதை தடை செய்ய வேண்டும். ஸ்டெர்லைட்  ஆலையை நிரந்தரமாக மூடவும், தூப்பாக்கிச்சூட்டி ற்கு காரணமான காவல்துறை மற்றும் வருவாய்த்துறை யினருக்கு தண்டனை பெற்றுத்தரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி...  விரைந்து முடித்திடுக!

50 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் தற்போது நகர்ப்புறத்தில் வாழும் நிலை உள்ளது. எனவே, அதற்கேற்ப நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பெரு  நகரங்களில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களை அமைத்திட வேண்டும். மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது டன் இப்பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழக அரசின் நகைக்கடன் தள்ளுபடியில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து, தகுதியுள்ள அனை வருக்கும் நகைக்கடன் தள்ளுபடி கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உப்பு உற்பத்தி கார்ப்பரேட்டுகளிடமா?

தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் குமரி, நீலகிரி மாவட்ட மக்களின் வாழ்வா தாரத்தையும், நிலஉரிமையையும் பாதிக்கும் வகையில்  உள்ள நிலையை மாற்றிட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உப்பு உற்பத்தியை கார்ப்பரேட்டு கள் கைப்பற்றும் முயற்சியை தடுத்து நிறுத்திட வேண்டும். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு எதிராக  உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு போட்டுள்ள வழக்கை திரும்பப் பெற்று உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோகத்தை அந்நிய நிறுவனமான சூயஸ்க்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய  வேண்டும். கோவை ஈஷா யோகா மையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனத்தை அழித்து சட்டத்திற்கு புறம்பாக கட்டியுள்ள கட்டிடங்களை, ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். - இப்படி தமிழகமும், தமிழக மக்களும் இன்று எதிர்நோக்கியிருக்கும் முக்கியமான பிரச்சனைகள் மீது மாநாடு ஆழமாக விவாதித்து தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறது. இத்தீர்மானங்கள் செயல்வடிவம் பெற வேண்டுமானால், இவை மக்கள்  மத்தியிலும், ஆட்சியாளர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். இதை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவோம். தமிழக மக்களின் ரத்தமும் சதையுமாக, அவர்களின் உணர்வுகளுடன் கலந்து செயல்படும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி இத்தீர்மானங்களை கள அனுபவத்தி லிருந்து வடித்தெடுத்திருக்கிறது. இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதன் மூலமே மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படும். அதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம்.