articles

img

இயற்கை வளக் கொள்ளைக்கு துணைபோகும் நீதிமன்ற நடவடிக்கைகள் - க.கனகராஜ்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு முனீஸ்வர்நாத் பண்டாரி செப்டம்பர் 1ஆம் தேதியன்று தாது மணல் குறித்து ஒரு இடைக்கால தீர்ப்பளித்திருக்கி றார். அந்த தீர்ப்பின்படி தற்போது முடக்கி வைக் கப்பட்டுள்ள தாது மணலை மாநில அரசு விரும்பி னால் இந்த வழக்கில் இறுதி தீர்ப்புக்கு காத்திருக்கா மல் ஏற்கனவே எடுக்கப்பட்ட மணலை சம்பந்தப் பட்டவர் விற்பதற்கு அனுமதித்து அரசு ராயல்டியைப் பெற்றுக் கொண்டு விடுவிக்கலாம். 

கமிட்டிகளின் அறிக்கைகள்

2010ஆம் ஆண்டுகளில் கிரானைட், ஆற்று மணல், தாது மணல் ஆகிய இயற்கை வளங்கள்  தனி நபர்களால் தங்கு தடையின்றி கொள்ளைய டிக்கப்படுவதை தடுக்கக் கோரி மக்கள் போராட்டங்க ளும், இயக்கங்களும் நடைபெற்றன. நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டிருந்தன. இதையொட்டி 2013ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலும், 2017ஆம் ஆண்டு சத்தியப் பிரதா சாஹூ தலைமையிலும் இரண்டு கமிட்டிகள் அமைக்கப்பட்டன.  சத்தியப்பிரதா சாஹூ கமிட்டியின் அறிக்கை தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கிடங்குகளில் இருந்த மணல் மலை களுக்கும், கணக்கில் அள்ளப்பட்டதாக சொல்லப்பட்ட மணல் அளவுகளுக்கும் இடையே மிகப்பெரிய வேறு பாடு இருப்பதை வெளிக்கொணர்ந்தது. 85.6 லட்சம் டன் தாது மணலை அள்ளியதாக அவர்கள் கணக்கில்  காட்டியிருந்த நிலையில் 1.55 கோடி டன் தாது மணல் கிடங்குகளில் இருந்ததை அது வெளிக்கொணர்ந்தது. இந்த மணல் திருட்டு சம்பந்தமாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

இதற்கிடையில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமிக்கஸ் கியூரி டாக்டர் வி. சுரேஷ் குறைந்தபட்சம் 4.69 முதல் 4.93 கோடி டன்கள் வரையிலான தாது மணல்கள் எடுக்கப்பட்டிருந்தால் தான் 23,461 டன் மோனோசைட் உற்பத்தி செய்திருக்க முடியும். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் 2001 முதல் 2016 வரை சுமார் 1 கோடி டன் தாது மணல் மட்டுமே அள்ளியதாக சொல்லியிருக்கிறார். உண்மையில் அள்ளியதாக சொல்லப்பட்ட மணலைப் போல 4 1/2 மடங்கு அள்ளியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டி ருந்தார். மேலும் பல்வேறு நிறுவனங்கள் 5832.44 கோடி ரூபாய் ராயல்டி பணம் அரசுக்கு கட்டாமலி ருக்கிறார்கள் என்றும் சொல்லியிருந்தார். 

முற்றிலும் நியாயமற்றது முரணானது

சம்பந்தப்பட்ட கிடங்குகளில் இருக்கும் மணல் முழுவதுமே சட்டவிரோதமாக அள்ளப்பட்டவை. அதாவது, திருட்டு மணல் தான் என்று அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தான் ஓய்வு பெறவிருந்த நிலையில் இப்படியொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார். இது முற்றிலும் நியாயமற்ற தீர்ப்பாகும். மணல் சட்டப்படி அள்ளப்பட்டால் என்ன தொகையை ராயல்டியாக செலுத்தினால் போதுமோ, அதே ராயல்டி தொகையினை திருட்டு மணலுக்கும் கொடுத்து விட்டு அதை விற்றுக் கொள்ளலாம் என்று சொல்வது, “திருட்டை நியாயப்படுத்தும் செயலன்றி வேறென்ன?”. ஒரு நீதிமன்றம் சட்டத்தின்படி அல்லா மல் கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்று நடந்து  கொள்வது முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கையா கும். இதைத்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தனது தீர்ப்பாக வழங்கியிருக்கிறார்.  அதாவது, மக்களின் நலனுக்கு பயன்பட வேண்டிய இயற்கை வளத்தை தனிநபர்கள் சட்டத்திற்கு விரோத மாக கொள்ளையடித்துவிட்டால் சட்டப்படியான கட்ட ணம் என்னவோ அதை கட்டிவிட்டு தப்பித்து விடலாம்  என்று நீதிமன்றம் நினைப்பது முற்றிலும் தவறானது. அதுவும் தான் ஓய்வு பெறுவதற்கு முன்பாக அதுவும் தலைமை நீதிபதியே இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியி ருப்பது அநேகமாக நீதித்துறையின் நடைமுறைக ளுக்கு முற்றிலும் மாறானதாகும். 

உ.சகாயம் அறிக்கை வெளியிடப்படாததேன்?

இதேபோன்று, கிரானைட் கொள்ளையை விசா ரிப்பதற்கு நீதிமன்றமே நியமித்த கமிசன்தான் உ.சகாயம் தலைமையிலான கமிசன். இது 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது அறிக்கையை சமர்ப் பித்துவிட்டது. அந்த அறிக்கை இன்று வரை வெளி யிடப்படவில்லை. ஒரு நீதிமன்றம் தான் நியமித்த கமிசன் அறிக்கையை இன்றுவரையிலும் வெளியிடா மல் இருப்பது எந்தவிதமான தர்க்க நியாயங்களுக் கும் உட்பட்டதல்ல. இதற்கிடையில் ஃபிரண்ட்லைன் பத்திரிகையின் இளங்கோவன் ராஜசேகரன் 2017 மார்ச் 15 தேதியிட்ட தனது கட்டுரையில் இந்த அறிக்கை யின் சில முக்கியமான பகுதிகளை வெளியிட்டிருந் தார். அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பு  ஏற்பட்டிருக்கிறது. 2012ஆம் ஆண்டு அரசு கைப் பற்றிய 1.62 லட்சம் கிரானைட் தொகுப்பை விற்று விட வேண்டும். ஒரு விரிவான விசாரணைக்கு உத்தர விட வேண்டும். தவறிழைத்த அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். சில பேர் அதிக லாபம் குவிப்பதற்காக நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று திடுக்கி டத்தக்க வகையில் பல விபரங்கள் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்திருப்பதாக ஃபிரண்ட்லைன் கட்டுரை வெளிப்படுத்தியிருந்தது. ஆனால், இன்று வரையிலும் அந்த அறிக்கை வெளியிடப்படவும் இல்லை, அதன் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்ட தாகவும் தெரியவில்லை. 

இத்தனைக்கும் உ.சகாயத்திற்கு அப்போதைய அரசாங்கம் ஏராளமான துன்புறுத்தல்களை செய்த தோடு அவரது பணியைச் செய்வதற்கு ஒத்துழைக்க வும் மறுத்தது. இதையெல்லாம் மீறி ஒரு அறிக்கை வந்த பிறகு அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நீதிமன்றம் அதை மறந்துவிட்டதுபோல இருப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. ஒரு அதிகாரி அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி இத்தகைய கால தாமதம் செய்தால், அதில் எல்லாம் கடுமையாக கடிந்து கொள்கிற உயர்நீதிமன்றம் இப்படி இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்பதை இந்திய ஆளும் வர்க்கம் ஏற்றுக் கொண்ட பிறகு அதற் கேற்றபடி தாளம் போடுவதற்கு இந்தியாவின் பல்வேறு அமைப்புகளும் தயார் செய்யப்பட்டுவிட்டன. நீதி மன்றம் இதற்கு விதிவிலக்காக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது நியாயமானது. ஆனால் நீதிமன்றங்கள் அப்படியிருக்கின்றனவா? என்ற கேள்வி எழுகிறது. 

நிதி நெருக்கடியைச்  சமாளிக்க...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 2021 சட்ட மன்றத் தேர்தலின் போது வருவாய் ஈட்டலுக்கான வழிகளில் ஒன்றாக இயற்கை வளங்கள் முறையாக பயன்படுத்தப்பட வேண்டுமென்றும், உ.சகாயம் அறிக்கையின் அடிப்படையில் ரூ. 1 லட்சம் கோடியை வசூலிக்க வேண்டுமென்றும் கீழ்க்கண்டவாறு வலியுறுத்தி இருந்தது.  “மாநிலத்தின் நிதிநெருக்கடியை சமாளித்திட நிறுத்தப்பட்டுள்ள தாது மணல் வியாபாரத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். வரம்புக்குட்பட்ட ஆற்று மணல் வியாபாரத்தை அரசு நேரடியாக நடத்துவதன் மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் மணல் கிடைப்பதோடு, அரசும் வருவாய் ஈட்ட முடியும்.   சுற்றுச்சூழலுக்கு கேடு நேராத வகையில் கிரானைட் தொழிலை டாமின் மூலம் அரசே நேரடியாக நடத்த வேண்டும். இதன் மூலம் அந்நியச்செலாவணி அதிகரிப்பதோடு, வேலை வாய்ப்பு பெருகும், மாநில அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். தமிழகத்தில் எடுக்கப்படும் கனிமங்களுக்கான ராயல்டி விகிதத்தை கூடுதலாக பெறுவதற்கு மாநில அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய பெருநிறுவனங்கள் போன்று அரசு நிலங்களில் நீண்ட கால குத்தகைக்கு இருப்போரிடம் இன்றைய சந்தை மதிப்பிற்கு உகந்தவாறு குத்தகை நிர்ணயம் செய்திடல் வேண்டும். உ.சகாயம் கமிசன் அறிக்கை யின்படி தமிழக அரசுக்கு வரவேண்டிய ரூபாய் 1 லட்சம் கோடியை வசூலிப்பதற்கு உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வற்புறுத்துவோம்.”

கட்டண உயர்வு, வரி உயர்வு  பல ஆண்டு தேவையில்லை

தற்போது, மாநில அரசு நிதி நெருக்கடியின் காரணமாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. சொத்துவரியை உயர்த்தியுள்ளது. இவையெல்லாம் மக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றியுள்ளது. சொத்துவரி உயர்வின் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,750 கோடியும், மின்கட்டணம் உயர்வின் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.20,700 கோடியும் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. கிரானைட் ஊழலில் உ.சகாயம் அறிக்கையின்படி அரசுக்கு ஏற்பட்ட 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பை மட்டும் வசூலிக்க முடியும் என்றால் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை குறைந்தபட்சம் 5 ஆண்டுக ளுக்கு ஒத்திப்போட முடிந்திருக்கும். 

இதேபோன்று, தாதுமணல் முறைகேட்டில் மட்டும் வசூலிக்காத தொகை ஆகியவற்றையும் வசூலித்திருந் தால் இன்னும் சில வருடங்கள் இந்த உயர்வுகளை தள்ளிப்போட முடியும். ஒருவேளை கொள்ளையடிக்கப் பட்ட தாது மணல் மொத்தத்தையும் அரசு கைப்பற்றி விற்றால் சில லட்சம் கோடிகள் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்கிறார்கள். இதில் இன்னொரு துயரம் என்னவெனில் ஆற்று மணல், தாது மணல், கிரானைட் ஆகியவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ராயல்டி தொகை மிக, மிக குறைவானதாகும். இயற்கை வளம் முழுமையாக கொள்ளையடிக்கப்பட்டு சில தனிநபர்கள் கொழுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறதே தவிர வறுமையில் துயருறும் சாதாரண மக்களுக்கு இது பயனளிப்பதில்லை.  இந்தப் பின்னணியில் தான், உயர்நீதிமன்றத்தின் மேற்கண்ட இரண்டு நடவடிக்கைகளும் இயற்கை வளங்கள் தனியாரால் கொள்ளையடிப்பதற்கு கொடுக்கப்பட்ட லைசன்சாகவே அமைந்திருக்கிறது. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பது வார்த்தைகளில் இருக்கிறதே தவிர, நடவடிக்கைகளி லும், நீதிமன்றத் தீர்ப்புகளிலும் அவை காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. 

கட்டுரையாளர்: மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) 
 

;