articles

img

மதச்சார்பற்ற சக்திகளைப் பரந்த அளவில் அணி திரட்டுவோம்!

2024 நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலை எதிர்கொள்வதற்கான உத்திகளை வகுப்பதில் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. இது தொடர்பாக சிஎன்என்-நியூஸ் 18 ஊடகத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நேர்காணல் அளித்துள்ளார். அதன் சாராம்சம் வருமாறு:

கேள்வி: 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண் டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு அல்லது பாஜக-விற்கு ஒரு மாற்றை அளித்திட வேண்டியி ருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் நினைக் கிறார்கள். இதில் இடதுசாரிகளின் பங்கு எப்படி இருக்கும்? எதிர்க்கட்சிகளின் உத்திகள் என்னவாக இருக்கும்?

சீத்தாராம் யெச்சூரி: இடதுசாரிகள் பங்களிப்பி னைப் பொறுத்தவரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, ஏப்ரலில் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட்டில், இந்துத்துவா மதவெறியை எதிர்கொள்ள அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் விரிவானமுறையில் அணிதிரட்ட வேண்டும் என்றும் அதற்கான பணி களில் ஈடுபட வேண்டும் என்றும் தீர்மானித்திருக்கி றோம். இன்றையதினம் உள்ள மிகவும் முக்கியமான பிரச்சனை நம் இந்திய அரசமைப்புச்சட்டத்தால் வரை யறுக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடி யரசாக உள்ள இந்தியக் குடியரசின் குணாம்சத்தைப் பாதுகாப்பதேயாகும். இவை அனைத்தும் இப்போது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பாதுகாத்திட, ஆட்சி அதிகாரத்திலிருந்து பாஜக-வை அப்புறப்படுத்த வேண்டியது அவசிய மாகும்.  அதற்காக மதச்சார்பற்ற சக்திகளைப் பரந்த அளவில் அணிதிரட்ட வேலை செய்வோம். அதுவே எங்களுடைய இப்போதைய குறிக்கோளாகும்.

கேள்வி: உங்கள் கண்ணோட்டத்தின்படி மதச்சார்பற்ற சக்திகள் என்று யாரை நீங்கள் கருதுகிறீர்கள்? யார் யாருடன் இதுதொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?

பதில்: நம்முடைய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்ப டைத் தூண்களாக விளங்கும் மதச்சார்பற்ற ஜனநாய கம், பொருளாதார இறையாண்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகிய விழுமியங்களை மதித்து அவற்றின்படி செயல்பட வேண்டும் என்று கருதுகிற அனைவருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகி றோம். அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாத்து, வலுப் படுத்த வேண்டும் என்று நினைக்கிற அனைவருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

ஒப்பிடக்கூடாது

கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றபோது எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதற்கான முயற்சி நடந்தது. எனினும் அவற்றால் ஒரு போட்டியை அளித்திட முடியவில்லை. ஆகையால், பாஜக-விற்கு மாற்றை அளிப்பதற்காக ஆழமான சிந்தனையை நாட்டு மக்கள் மத்தியில் அளிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: இந்தியாவின் குடியரசுத் தலைவரையோ அல்லது குடியரசுத் துணைத் தலைவரையோ மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கவில்லை. அவர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதனை இதனுடன் ஒப்பிட முடியாது, ஒப்பிடக்கூடாது. மக்களிடையே நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் கணிசமான அளவிற்கு செல்வாக்கை செலுத்துகின்றன. அவை மக்களிடம் சென்று தங்கள் கருத்துக்களை எடுத்துரைக் கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதற்கான பணி கள் நடைபெறும்.

வரலாற்றைப் பாருங்கள்

கேள்வி: பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சமீபத்தில் தில்லியில் தங்களைச் சந்தித்தார். எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராகத் தன்னைச் சித்தரித்திட லாம் என அவர் கருதுவதாகத் தெரிகிறது. இதுதொடர் பாகத் தங்கள் கருத்து என்ன? அவரிடம் அதற்கான திறமை இருக்கிறதா? தனக்குச் சாதகமாக அனைத் துக் கட்சிகளையும் அவரால் கொண்டுவர முடியுமா?

பதில்: தனிப்பட்ட ஒரு தலைவரின் கீழ் தேசிய அளவில் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. இந்தியா வில் அதுபோல் எப்போதும் நடந்ததில்லை. அவ்வாறு எப்போதும் நடக்கப்போவதுமில்லை. கடந்த கால அனுபவங்களைப் பாருங்கள். … ஜனதா கட்சி ஆட்சி அமைத்த காலத்திற்கோ அல்லது அவசர நிலைப்  பிரகடனம் செய்யப்பட்ட பிந்தைய காலத்திற்கோ கூட செல்ல வேண்டியதில்லை. 1996இலிருந்தே பாருங்கள்.  பிரதமராக தேவ கவுடா இருந்திருக்கிறார், அப்போது நடைபெற்ற தேர்தலுக்குப்பின் அமைந்த ஐக்கிய முன்னணி அவரைப் பிரதமராக்கியது. 1998இல் வாஜ்பாயி பிரதமாக மாறினார். தேர்தலுக்குப்பின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அவரைப் பிரதம ராக்கியது. 2004இல் மன்மோகன் சிங் பிரதமரானார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அவரைப் பிரதம ராக்கியது. இவ்வாறு நம் அரசியல் வரலாற்றைப் பாருங்கள். நம்முடைய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பை, ஒரு ஜனாதிபதியின் கீழான அரசு வடிவ மாக மாற்றாதீர்கள். (Don’t convert our parlia mentary democracy into a presidential form.)

தேசிய அளவில்  ஒன்றிணைய முடியும்

கேள்வி: தேர்தலுக்குப் பின் அமையும் கூட்டணியே சாத்தி யம், தேர்தலுக்கு முன் அமையாது என்று கூறுகிறீர்களா?

பதில்: மாநில அளவில் தேர்தலுக்கு முன் கூட்டணி கள் சாத்தியமாக இருக்கும். உதாரணமாக தமிழ் நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒருங்கிணைந்து மாநிலத்தி லேயே ஒரு பெரிய அரசியல் சக்தியாக அமைந்தி ருக்கிறது. மாநில அளவில் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுபட்டு, கூட்டணிகளை அமைத்துப் போட்டியிட முடியும். இவ்வாறு அமைந்தபின் அவை தேசிய அளவிலும் ஒன்றிணைய முடியும்.

கேள்வி : மதச்சார்பற்ற கட்சிகளின் ஒரு கூட்டணி குறித்து நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். சமீபத்தில் ராகுல் காந்தி நடத்திய சுற்றுப்பயணத்தில் அவர் கேரளாவிற்கு 12 நாட்கள் ஒதுக்கியது குறித்தும், ஆனால் அதே சமயத்தில் அவர் உத்தரப்பிரதேசத்திற்கு வெறும் 2 நாட்கள் ஒதுக்கியது குறித்தும் சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும்  இடையே ஒரு மோதல் போக்கு உருவாகியிருக்கி றதே. இது தொடர்பாக என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: காங்கிரஸ் கட்சி, தன்னுடைய யாத்திரையை எப்படிக் கொண்டு செல்லவேண்டும் என்பது குறித்து அந்தக் கட்சிதான் தீர்மானித்திட முடியும். நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. அதில் முரண்பாடுகள் (inconsistencies) இருக்கின்றன என்று மட்டுமே நம்மால் சுட்டிக்காட்ட முடியும். கேரள அரசியலில் போட்டி என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்கி ரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்ன ணிக்கும் இடையிலான ஒன்றாகும். இம்மாநிலத்தில் பாஜக எங்குமே கிடையாது. அதற்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட கிடையாது. எனவே, இயற்கையாக இந்தப் பிரச்சனை எழுகிறது. இதற்கு எங்கள் கட்சி யின் கேரளப் பிரிவு சரியான பதிலைக் கூறிடும்.  கேரள மக்கள் எங்களை ஆதரித்துக் கொண்டிருக்கி றார்கள்.  கடந்த 50 ஆண்டு கால கேரள வரலாற்றில் ஒரு கூட்டணி தொடர்ந்து இரு முறை ஆட்சியிலிருப்பது என்பது, இப்போதுதான் நடந்திருக்கிறது. கேரள மக்கள் எங்கள் மீது நம்பிக்கையை மீண்டும் உறுதி படத் தெரிவித்திருக்கிறார்கள்.

அவரிடம் கேளுங்கள்

கேள்வி: காங்கிரஸ் கட்சி கேரளாவில் அதிக நாட்கள் செலவழித்திருக்கிறது. ஆனால்  தேர்தல் நடைபெற விருக்கும் குஜராத், இமாசலப்பிரதேசங்களில் அந்த அளவிற்கு அது செல்லவில்லை. உத்தரப்பிரதேசத்தில் இரண்டே நாட்கள்தான். மேலும் ஜெய்ராம் ரமேஷ், இடதுசாரிகளை, பாஜக-வின் ஏ-டீம் என்று கூறி யிருக்கிறார்.  இதுகுறித்து என்ன கூறுகிறீர்கள்?

பதில்: இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் நீங்கள் ஜெய்ராம் ரமேஷிடம்தான் கேட்க வேண்டும். தயவு செய்து அவரிடம் கேளுங்கள்.

கேள்வி: காங்கிரசாரின் இத்தகைய விமர்சனங்கள் எல்லாம் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபடுவதற்கு உதவுமா?

பதில்: காங்கிரசாரின் விமர்சனங்களுக்கு கேரளா வில் பதில் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கேரள மக்கள் ஏற்கனவே பதிலளித்திருக்கிறார்கள், எதிர் காலத்திலும் பதில் அளிப்பார்கள்.

மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை தீர்மானிக்கும்

கேள்வி: நிதிஷ் குமார் பிரதமர் பதவிக்குத் தகுதியான வரா என்று நான் கேட்டதற்கு நீங்கள் பதிலளிக்க வில்லை. இதுதொடர்பாக என்ன கூறுகிறீர்கள்?

பதில்: ஒவ்வொருவரும் திறமைகள் பெற்றிருக்கி றார்கள், ஒரு நல்ல பிரதமராக இருக்க முடியும். இந்தி யாவும் அதனைப் பார்த்திருக்கிறது. நாம் தேவ கவுடா வைப் பெற்றிருக்கிறோம், ஐ.கே.குஜ்ராலைப் பெற்றி ருக்கிறோம், அதே போன்று சந்திரசேகரைப் பெற்றி ருக்கிறோம். முன்னதாக சரண்சிங்கைப் பெற்றிருந் தோம். மன்மோகன் சிங் பத்தாண்டுகள் (தொடர்ந்து  இரண்டு முறை), ஜவஹர்லால் நேருவுக்குப்பின் பிரதம ராக இருந்தார். எனவே, இதில் பிரச்சனையே கிடை யாது. ஒவ்வொருவரும் திறமைசாலிகள்தான்.  ஒவ்வொருவரும் பிரதமராக முடியும். எந்தமாதிரியான அமைப்பு வரும் என்பது தேர்தலுக்குப்பின்னர்தான் தெரியவரும். மாநில அளவிலான கூட்டணிகள் மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை இவற்றைத் தீர்மானித்திடும்.

கேள்வி: மேற்கு வங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சிப் போக்குகள் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்? பாஜக-வின் பேரணி தலைமைச் செயலகத்தை நோக்கிச் சென்றபோது அதற்கும், திரிணாமுல் காங்கி ரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து என்ன கூறுகிறீர்கள்?

பதில்: உங்கள் ஊடகத்திற்கும் இதர ஊடகங்களுக் கும் இருக்கக்கூடிய கட்டாயநிலை (compulsions) குறித்து நாங்கள் நன்கறிவோம். ஒரு மாதத்திற்கு முன்  மிகப்பெரிய அளவில் இடதுசாரிகளின் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. அவையெல்லாம் உங்கள் பார்வைக்கு வரவில்லை. ஆனால் அவை மக்களின் பார்வைக்குச் சென்றிருக்கின்றன. நீங்கள் எல்லாம் எங்கே நிற்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆயினும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் துஷ்பிரயோகங்களுக்கு எதிராகவும்,  பெரிய அளவிலான ஊழல்களுக்கு எதிராகவும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும்.

கிளர்ச்சிப் போராட்டங்களை  2 மாதங்களாக நடத்துகிறோம்

கேள்வி: எந்த நடவடிக்கையை நீங்கள் குறிப்பிடு கிறீர்கள்? உங்கள் எதிர்ப்பு நடவடிக்கையையா அல்லது பாஜக-வின் எதிர்ப்பு நடவடிக்கையையா?

பதில்: எங்கள் எதிர்ப்பு நடவடிக்கை குறித்துத்தான் கூறுகிறேன். பாஜகவின் எதிர்ப்பு இன்றுதான் ஆரம் பித்துள்ளது. நாங்கள் கடந்த இரண்டு மாதங்களாகவே கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கி றோம். இவை மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டி ருக்கின்றன. பாஜகவைப் பொறுத்தவரை அது ஊழல் குறித்தோ, ஆட்சியின் துஷ்பிரயோக நடவடிக்கை குறித்தோ கவலைப்படவில்லை. ஏனெனில் நாட்டில் அவர்கள் நடத்திவரும் துஷ்பிரயோக ஆட்சி குறித்து ஒவ்வொரு வரும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் தலைமை பீடத்தில் அமர்வ தற்கு, தனக்குள்ள விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறா ரே, இது தொடர்பாக என்ன கூறுகிறீர்கள்?

பதில்: மீண்டும் நான் கூறுகிறேன். இவை அனைத் தும் தேர்தல் முடிந்தபின்னர்தான் விவாதிக்கப்பட்டு, தீர்மானிக்கப்படும். நிதிஷ்குமார் குறித்து நீங்கள் கேட்டபோது நான் என்ன பதில் அளித்தேனோ அது அனைவருக்கும் பொருந்தும். எனவே, பாஜக-வை முறியடித்திட மாநிலங்களில் உள்ள அனைவரையும் முதலில் ஒருங்கிணைத்து வலுப்படுத்திடுவோம்.

இந்தியாவுக்காக... அரசமைப்புச் சட்டத்துக்காக... மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசுக்காக...

கேள்வி: நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், கே.சந்திரசேகர ராவ்…என ஒவ்வொரு வரும் தாம்தான் அடுத்த பிரதமர் என்று கூறிக்கொண் டிருக்கிறார்களே, எல்லாருக்கும் இதே பதிலைத் தான் கூறுகிறீர்களா?

பதில்: எனக்குத் தெரியாது. நீங்கள்தான் இவ்வாறு கூறுகிறீர்கள். அவர்கள் அவ்வாறு கூறவில்லை. நிதிஷ் குமார் இங்கே வந்திருந்தபோது, நான் பிரதமருக்கான வேட்பாளர் இல்லை என்று கூறினார். ஆனால் ஊடகவியலாளர்களாகிய நீங்கள்தான் இதுபோன்று எதையாவது பாஜகவிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கூறி ஒருவிதமான விஷயத்தை உருவாக்க விரும்புகிறீர்கள். எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்தியா விற்காகவும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்காகவும் நிற்கின்றன. இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசைக் கட்டிக் காக்க வேண்டிய மகத்தான பொறுப்பு நம்முன் உள்ளது.

ஏழு ஆண்டுகள் காத்திருந்ததேன்?

கேள்வி: தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்க ளைக் கலைத்திடவும், எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்தும், பாஜக அமலாக்கத்துறையையும், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தையும் துஷ் பிரயோகம் செய்வதாக எதிர்க்கட்சிகள் எப்போதும் கூறிக்கொண்டிருக்கின்றன.  சமீபத்தில் மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து என்ன கூறுகிறீர்கள்? ஏராளமான பணம் ஒருசில தினங்களில் கைப்பற்றப்பட்டிருக்கிறதே!

பதில்: இதனைச் செய்வதற்கு ஏன் ஏழு ஆண்டுக ளாகக் காத்துக்கொண்டிருந்தீர்கள் என்றே நாங்கள் கேட்க விரும்புகிறோம். சாரதா ஊழல், நாரதா ஊழல் மற்றும் பல ஊழல்கள். இவை குறித்த குற்றச் சாட்டுகள் அனைத்தும் உங்களிடம் ஏழு ஆண்டுகளா கவே இருந்து வந்தன. எனினும் ஏன் இவற்றின்மீது நட வடிக்கை எடுப்பதற்காக ஏழு ஆண்டுகள் காத்துக் கொண்டிருந்தீர்கள்? பாஜக பதில் சொல்ல வேண்டும்.

ஆனாலும் பாஜக நாட்டின் இதர பகுதிகளில் எதிர்க் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் குறிவைத்து, மத்திய ஏஜன்சிகள் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றன. வங்கத்தில் நடந்திருப்பது மிகவும் காலங்கடந்த செயல். அங்கே நடைபெற்றுள்ள ஊழல் கள் குறித்து மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம், அம லாக்கத்துறை, மோடி அரசாங்கத்தைத் தவிர மற்றபடி வங்கத்தில் உள்ள  அனைவருக்கும் தெரியும்.

மக்களே தீர்மானிப்பார்கள்

கேள்வி: மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்ட மன்றத் தேர்தல்களின் தாக்கம் எப்படி இருக்கும்?

பதில்: பொறுத்திருந்து பார்ப்போம். இன்னும் கொஞ்சம் காலம் இருக்கிறது.

கேள்வி: பல அரசியல் கட்சிகள் காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்துவிட்டது என்று கூறிக்கொண்டிருக் கின்றன. ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்துவிட்டது என்றும் தான்தான் பிரதான எதிர்க்கட்சி என்று கூறுகிறது….

பதில்: யார் வேண்டுமானாலும் எது வேண்டுமா னாலும் கூறலாம். இறுதியாக மக்களே தீர்மானிப்பார் கள். அதற்காகக் காத்திருப்போம்.

நன்றி: சிஎன்என்-நியூஸ் 18,  தமிழில்: ச.வீரமணி