articles

img

அமித்ஷா - குருமூர்த்தியின் சரடுகளும் ஆர்எஸ்எஸ்-பாஜக திரித்த வரலாறும்!

புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு நூறு மீட்டர் தூரத்தில் அமைதியான முறையில் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீராங்கனைகள் காவல்துறையினரால் கொடூரமான முறையில் இழுத்துச்செல்லப்பட்டு, கைது செய்யப்பட்டதன் மூலம் செங்கோல் தர்மத்தின் சின்னம் என்ற பாஜகவினரின் கூற்றும் மிகவும் மோசமான முறையில் பொய்த்துப் போனது. 

மோடி அரசாங்கம் குடியரசின் தலை வராகவும், நாடாளுமன்றத்தின் தலைவராகவும் இருக்கின்ற திரௌபதி முர்முவை ஓரங்கட்டிவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைப்பார் என்று அறிவித்ததன் காரணமாக, மே 28  அன்று புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா விற்குச் செல்லாமல் 20 எதிர்க்கட்சிகள் அதனைப் புறக்கணித்தன. நாடாளுமன்றத்தைக்காட்டிலும் பிரதமர் உயர்வானவர் என்று காட்டும் விதத்தில் நடைபெற்ற இந்நிகழ்வானது,  அரசமைப்புச் சட்டத்தின்படி முறைகேடானது என்பதால் எதிர்க்கட்சி கள் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தது நியாயமான தாகும். மேலும் நாடாளுமன்றக் கட்டடம் திறப்புவிழா நடை பெற்ற அன்று அங்கே நடைபெற்ற சங்கதிகள், உண்மையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காது விலகி இருந்ததை சரி என்று உறுதிப்படுத்தி இருக்கின்றன.

அமித்ஷாவின் புதுச்சரடு

திடீரென்று, ஒன்றிய உள்துறை அமைச்சர், அமித் ஷா, சுதந்திரம் பெற்ற காலத்தில், ஆட்சி அதி காரம் மாறுவதைக் குறிக்கும் விதத்தில்  வைஸ்ராய் மவுண்ட் பேட்டன் பிரபுவால் ஜவஹர்லால் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த ‘செங்கோல்’ தற்போது நாடாளுமன்றத்தின் உள்ளே நிறுவப்படும் என்று அறிவித்தார். இது தொடர்பாக அமித்ஷா கூறியது பின்வருமாறு: ‘‘இந்தியாவின் அதிகார மாற்றம் பண்டிட் ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் ஒப்ப டைத்ததன் மூலம் நடந்தது.’’  இவ்வாறு பிரிட்டிஷாரி டமிருந்து புதிய அரசாங்கத்திற்கு ‘அதிகார மாற்றத்தை’ அடையாளப்படுத்தும் விதத்தில் இந்து மத கலைப்பொருளான செங்கோல் கொடுக்கப்பட்டதாக புதுச் சரடு அவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. இவர்கள் அதிகாரப்பூர்வமாக கூறியிருப்பது வரு மாறு: அதிகார மாற்றத்தை அடையாளப்படுத்தும் விதத்தில் இந்தியாவில் விழா ஏதேனும் உண்டா என்று மவுண்ட்பேட்டன் பிரபு ஜவஹர்லால் நேருவிடம் கேட்டாராம், நேரு பின்னர் இது குறித்து சி. ராஜ கோபாலாச்சாரி (ராஜாஜி)யிடம் கலந்தாலோசனை செய்தாராம், அவர் பின்னர் அது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள மடாதிபதிகளிடம் விசாரித்து விட்டு, மாற்றத்தின் அதிகாரமாக செங்கோல் இருந்தி டும் என்று அறிவுரை பகன்றாராம். மேலும், மவுண்ட் பேட்டன் பிரபுவே, அரசியல் நிர்ணயசபையின் அதிகா ரப்பூர்வ கூட்டத்திற்கு முன்னால், ஆகஸ்ட் 14 அன்று இரவு, ஜவஹர்லால் நேருவிடம், செங்கோலை  ஒப்படைத்தாராம்.

மவுண்ட் பேட்டனிடம்  செங்கோல் செல்லவில்லை

ஆனால், செங்கோல் குறித்த உண்மை வரலாறு என்ன? மவுண்ட்பேட்டன், ஜவஹர்லால் நேருவிடம் மேலேகூறியவாறு அதிகார மாற்றத்திற்காக அடை யாளம் ஏதாவது பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்டதுகுறித்து எவ்விதமான பதிவுகளோ  சாட்சியங்க ளோ கிடையாது. அதேபோன்றே இந்தப் பிரச்ச னையில் ராஜாஜியின் பங்கு குறித்தும் எவ்விதமான சாட்சியமும் கிடையாது. உண்மையில், மவுண்ட் பேட்டன் நேருவிடம் செங்கோலை ஒப்படைக்க வில்லை. அவர் ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று மாலை கராச்சிக்குப் போய்விட்டு, 14ஆம் தேதி பின்னிர வில்தான் திரும்பியிருந்தார். செங்கோல் ஒன்று தமிழ்நாட்டில் உள்ள சைவ மடம் ஒன்று கேட்டுக்கொண்டதற்கிணங்க தயார் செய்யப்பட்டு, பின்னர் அது தில்லிக்குக் கொண்டு வரப்பட்டு, 14ஆம் தேதி அன்று இரவு நேருவிடம் அவருடைய இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அது ஒன்றும் அதிகாரப்பூர்வ நிகழ்வு அல்ல. அது தனிப்பட்ட ஒருவரின் விருப்பமாகும்.  இதுபோன்று பலர் பல வெகுமதிகளை நேருவிடம் அளித்தனர். அவற்றை அவர் பெற்றுக்கொண்டதைப்போல இதனை யும் அவர் பெற்றுக்கொண்டார் என்பதே உண்மை. இவை அனைத்தும் அலகாபாத்தில் உள்ள அருங் காட்சியகத்தில் அவர் வைத்திருக்கிறார் என்பதி லிருந்தே, நேரு இதனை எப்படிப் பார்த்தார் என்பதைக் காட்டும்.

குருமூர்த்தியின் 2021- சரடு

ஆகஸ்ட் 14 அன்று இரவு செங்கோலை ஒப்படைப்ப தன்மூலம் ‘அதிகார மாற்றம்’ ஏற்பட்டது என்று போலி யான முறையில் சரடுதிரிப்பது, பலநூறு ஆண்டு காலமாக இருந்த அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, இந்து ராஜ்ஜியம் மீட்டெடுக்கப்பட்டு விட்டதாக, ஆர்எஸ்எஸ்-பாஜகவினர் கூறி வரும் சரடுக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. இவ்வாறு அதிகார மாற்றம் ‘இந்துமயப்படுத்தப்பட்டி ருப்பது’ வரலாறு படைத்திருக்கிறது என்று இந்த செங்கோல் தொடர்பாக சரடுகளை அவிழ்த்துவிட ஏற்பாடு செய்யப்பட்ட நடிகர்கள் கூறிக்கொண்டி ருக்கிறார்கள். இதேபோன்று ஒரு சரடு ஆர்எஸ்எஸ்-இன் சித்தாந்தவாதியான எஸ். குரூமூர்த்தி என்பவ ரால் 2021இல் தமிழ் இதழ் ஒன்றில் எழுதப்பட்டது. 28ஆம் தேதி அன்று காலை நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்திற்கு பிரதமர், சைவ மடாதிபதிகள் பின்தொடர,  செங்கோலை எடுத்துவந்து, மக்களவை சபாநாயகரின் இருக்கைக்குப்பின்னால் நிறுவியி ருப்பது, இவர்கள் கூறிவரும் இந்து ராஷ்ட்ரத்தைப் பிரதிபலித்திடும் புதிய இந்தியா அடையாளத்தின் ஒரு பகுதியாகும். இது ஒரு மதச்சார்பற்ற ஜனநாய கக் குடியரசின் தன்மைக்கு எதிரானதாகும்.

மதச்சார்பின்மையின்  மாண்புக்கு எதிரானது

செங்கோல் என்பது பாரம்பரியமாக மன்னராட்சிக் காலத்தில் ராஜகுருவால் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற் கும் மன்னருக்கு அளிக்கப்படுவதாகும். ஒரு ஜன நாயகக் குடியரசில் இதற்கு முற்றிலும் வேலை கிடை யாது. இங்கே குடிமக்கள் அவர்களுடைய அரசாங்கங்க ளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.  மேலும் இது நம் குடியரசின் மதச்சார்பின்மை மாண்புக்கும் எதிரான தாகும். இவ்வாறு மதச்சார்பின்மைத் தன்மைக்கு எதிராக ஒரு மதத்தின் அடையாளம், நாடாளுமன்றத்தில் பிரதான இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறப்பதற்கு மே 28 ஆம் தேதியைத் தெரிவு  செய்ததற்குக் கார ணம், அன்றையதினம் வி.டி.சாவர்க்கரின் பிறந்த தினமாகும். இதுவும் இவர்களின் புதிய இந்தியா கதைக்கு சேவை செய்கிறது. சாவர்க்கர் ஆரம்பத் தில் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு போராளியாக இருந்தபோதிலும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகத் தன் போராட்டத்தைக் கைவிட்டு, தன்னை அந்தமான் செல்லுலர் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று பல கருணை மனுக்கள் மூலம் பிரார்த்தித்து வெள்ளையரின் தயவில் விடுதலை யானார். அதன்பின்னர் அவர் இந்துத்துவா என்னும் சித்தாந்தத்தை நிறுவி, முஸ்லீம்களுக்கு எதிராகப் போராடுவதில் தன் கவனத்தைச் செலுத்தினார். பாஜக-வினர் இவரது இந்துத்துவா கொள்கையை ஏற்றுக்கொண்டதுடன், இதன் அடிப்படையில் இந்து ராஷ்ட்ரம் அமைந்து ஆயிரமாண்டு கால அடிமைத் தனம் முடிவுக்கு வரும் என்று பார்த்தார்கள்.

பொய்த்துப்போன  தர்மத்தின் சின்னம்

புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு நூறு மீட்டர் தூரத்தில் அமைதியான முறையில் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீராங்கனை கள் காவல்துறையினரால் கொடூரமான முறையில் இழுத்துச்செல்லப்பட்டு, கைது செய்யப்பட்டதன் மூலம் செங்கோல் தர்மத்தின் சின்னம் என்ற பாஜகவி னரின் கூற்றும் மிகவும் மோசமான முறையில் பொய்த்துப் போனது. நரேந்திர மோடியால் கூறப்பட்டுவரும் புதிய இந்தியாவின் அடையாளங்களான, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, சென்ட்ரல் விஸ்டா மற்றும் புதிய நாடாளுமன்றக் கட்டடம் ஆகிய அனைத்துமே இவர்களின் ஒரு புதிய எதேச்சதிகார இந்துத்துவா அரசின் அடையாளங்களேயாகும். இவர்களின் புதிய சரடுகளுக்கேற்ற விதத்தில் வரலாறு திரிக்கப்பட்டு, மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

மே 31, 2023, 
தமிழில்: ச.வீரமணி