articles

தமிழக அரசின் பெண்களுக்கான நகல் கொள்கை - 2021 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைகள்!

தமிழக அரசு சுற்றுக்கு அனுப்பியுள்ள பெண்களுக்கான நகல் கொள்கை (2021) மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின்  சார்பிலான ஆலோசனைகளை 2022 ஜனவரி 11 செவ்வாயன்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருக்கும், துறை செயலாளருக்கும்அனுப்பியுள்ளார். அதன் முழு விபரம் இங்கு தரப்படுகிறது.

தமிழகப் பெண்களுக்கான நகல் கொள்கை குறிப்பு, தமிழக அரசின் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் சுற்றுக்கு விடப் பட்டுள்ளது. பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளைக் கலந்தாலோசித்து இதனைத் தயாரித்திருப்பது பொருத்தமானது  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது. உடன டியாக இதைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டு கருத் துக்களை வரவேற்க வேண்டுமென்பதோடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கீழ்க்கண்ட கருத்துக்களை  முன்வைக்கிறோம்: எந்த ஒரு கொள்கையையும் தனித்து பார்க்க முடி யாது. ஒன்றிய அரசின் கொள்கைகள் மாநில உரிமைக ளைப்பறித்து, நிதி/வரி பகிர்வை சுருக்கி, சமூக நீதியை, சமத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளும் போது, அக்கொள்கைக்கு எதிர் திசையில் பயணித்தால் மட்டுமே பெண்கள் குறித்த கொள்கையையும்  நடை முறையாக்க முடியும்.  உழைப்புச் சுரண்டலையும், சமூக ஒடுக்குமுறையையும் எதிர் கொள்ளும் பகுதி யினரின் முன்னேற்றமே கொள்கையின் அடித்தள மாக இருக்க வேண்டும்.

வரவேற்கத்தக்க அம்சங்கள்

பொதுவாக வரவேற்கத் தகுந்த பல அம்சங்கள் நகல் கொள்கையில் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக, பெண்களின் வீடு சார் இலவச உழைப்பை  மதிப்பீடு செய்வதற்கான ஆய்வு நடத்தப்படும் என அறிவித்தி ருப்பது நல்ல துவக்கம். பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் பல்வேறு நலிந்த பிரிவுகளைச்  சார்ந்த பெண்களுக்கு சிறப்பு கவனம், முன்னுரிமை  மற்றும் நலத்திட்டங்கள், தனித்து வாழும் பெண்களும்  குடும்பம் என்பதாகக் கருதப்பட்டு ரேசன் அட்டைகள் வழங்கப்படும், நில உரிமை, வாரிசுரிமை சட்டங்கள் உட்பட பெண்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சட்டங்கள் பரிசீலிக்கப்படும், பெண்கள் குறித்த ஊடக சித்தரிப்பு  பிற்போக்காகவும், ஒரே மாதிரியான வார்ப்பிலும் (ஸ்டீரியோடைப்)  இருக்கக்கூடாது, சிறு வியாபாரம் செய்யும் பெண்கள்  பொருட்களை  ஏற்றி வருவதற்கு  தனியான பொது போக்குவரத்து வாகனங் கள் செயல்படும், மாதவிடாய் நிறுத்த காலகட்டத் தில் விடுப்பு அளிக்கப்படும் என்பன போன்றவை வர வேற்புக்குரியவையாகும். அனைத்து அம்சங்களிலும்  பெண்கள் சார்ந்த புள்ளி விவரங்கள் தனியாக அளிக் கப்படும் என்பதும் சிறப்பானது. 1000 ஆராய்ச்சி மாணவி களுக்கு உதவிகள் கிடைக்கும் என்பது முக்கியமா னது. இருக்கக்கூடிய சட்டங்களுக்கு முரணான காட்சி யமைப்புகள் ஊடகங்களில் வரும் பட்சத்தில்  அது சட்ட ரீதியாக தவறு என்கிற  விவரம்  விழிப்புணர்வு ஊட்டும் வகையில்  போடப்படும்  என்பது வரவேற்கத்தக்கது. வன்முறையை எதிர்கொண்ட பெண்களுக்கான ஆதரவு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்கிற விவ ரங்கள் உள்ளன. ஆனால் இது அரசின் அறிவிப்பாக இருப்பதோடு நிறுத்திவிடாமல் சட்டரீதியாக்கப் படவேண்டும் (victim/witness protection act) என்பதை வலியுறுத்துகிறோம். பாலியல் வழக்கு களைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிப்ப தற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

அமலாக்கம்

அமலாக்கம் என்று வரும்போது சமூக, பொருளா தார, அரசியல், உளவியல் தளங்கள் குறிப்பிடப்படு கின்றன. இதில் பண்பாட்டுத் தளத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் குறித்த ஆணாதிக்க மற்றும் பிற்போக்கு கண்ணோட்டம் சார்ந்த சடங்கு கள், சம்பிரதாயங்கள் விரவிக் கிடக்கின்ற சூழல் கணக்கில் எடுக்கப்பட வேண்டும்.

மொழி நடை மாற்றம்

பாலியல் தொழிலாளர்கள் என்று வரும் இடத்தில் எல்லாம் பாலியல் வணிகத்தில் தள்ளப்பட்ட பெண்கள் என வருவது பொருத்தமானது. அது ஒரு தொழில் என்கிற கண்ணோட்டம் மாற்றப்பட வேண்டும் எனக் கருதுகிறோம். பெண்கள், பெண் குழந்தைகள் என வரும் இடங்களில் திருநர் என்பதையும் இணைத்திட வேண்டும். பாதிக்கப்பட்டவர் (victim) என்பதற்கு பதிலாக குற்றத்தை எதிர்கொண்டவர்கள் (survivor) எனப் பொருள்படும் பதத்தைப் பிரயோகிக்கலாம்.

சரிந்து வரும் பாலின விகிதம்

பிறப்பு  பாலின விகிதாச்சாரம் 2015-16ல் 954 என இருந்தது, 2020-21ல் 878ஆக சரிந்து இருப்பதாக தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை-5  கூறுகிறது. இதில் பிழைகள் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை கூறினா லும் 11 மாவட்டங்களில் தேசிய சராசரியை விட குறை வான பாலின விகிதாச்சாரம் நிலவுகிறது என்பதை மறுக்க முடியாது. இதை உயர்த்துவதற்கான சரியான திசைவழி, கொள்கையின் முக்கியப் பகுதியாக அமைய வேண்டும்.

எஸ்சி/எஸ்டி பெண்களின் முன்னேற்றம்

பட்டியலின, பழங்குடியின பெண்களுக்கான திட்டங்கள், நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். சமமான குடிமக்கள் என்ற முறையில் சம வாய்ப்புகளும், அவற்றை பயன்படுத்துவதற்கான சூழலையும்  உறுதிப்படுத்த வேண்டும்.  ஆலயங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அவர்களின் நடமாட்டம் முடக்கப்படக்கூடாது. கல்வி உதவித் தொகை, பயிற்சி கள், இன சான்றிதழ், குடிமனை உட்பட காலதாமத மின்றி வழங்கப்பட வேண்டும். வன உரிமை  சட்ட மேலாண்மை குழுவில் பெண்களுக்கு சமமான பிரதி நிதித்துவம் அளிக்கப் படும் என்பது வரவேற்கத்தக்க தாக இருந்தாலும் அந்த சட்டத்தை அமல்படுத்தும் ஏற்பாடே தமிழகத்தில் இன்னும் துவங்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

நில விநியோகம்

பெண் விவசாயிகளுக்கான  பல நல்ல திட்டங்கள்  இக்கொள்கையில் இடம்பெற்றுள்ளன.  ஆனால்,  பெண்களை விவசாயிகள் என அங்கீகரிப்பதும்,  பெண் கள் பெயரில் நிலப்பட்டா இருப்பதும் மிகவும் குறை வாக உள்ள  சமூகச் சூழலில் நாம் இருக்கிறோம். நோயின் முதல் அல்லது வேர் இங்குதான் உள்ளது. நில மற்றோருக்கு நில விநியோகம், அதிலும் குறிப்பாக பெண்கள் பெயரில்  நில விநியோகம்  என்பது அரசின் நிகழ்ச்சி நிரலில் மீண்டும் இடம் பெற வேண்டும்.

குடியிருப்பு

நகரமயமாதல், அதன் ஒரு பகுதியாக ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் போன்றவை உலக வங்கி நிபந்தனைகளையும், நவீன தாராளமய கொள் கையையும் அடியொற்றி வரும் போது ஏழைக் குடும் பங்களின் குடியிருப்பு பெரும் பிரச்சனையாகிறது. புறம்போக்கு இடங்களிலிருந்து வணிக நோக்கத்தோடு அவர்கள் அகற்றப்படுவது பெருநகர வளர்ச்சியின் ஓர் அம்சமாகப் பார்க்கப் படுகிறது. பட்டியலினக் குடும்பங் கள் வாழும் தொகுப்பு வீடுகள் பழுது பார்க்கப்படுவ தில்லை. இத்தகைய நடவடிக்கைகளில் பெண்கள் தாம் பிரதான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவர்களின் பாதுகாப்பு, குடியிருப்புத் தேவைகள் இக்கொள்கை யின் உள்ளார்ந்த அம்சமாக மாற்றப்பட வேண்டும்.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு

கல்விக் கூடங்கள் மற்றும் பணியிடங்களில் பாலி யல் துன்புறுத்தல் உள்ளிட்ட வன்முறைகள் அற்ற  சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.  உள் புகார் கமிட்டி (ICC) மற்றும் ஸ்தல புகார் கமிட்டி (LCC ) அமைக்கப்படு வதுடன், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட வேண்டும் என்பதும் இருக்க வேண்டும்.

சுகாதாரம்

பொது இடங்களிலும் பணியிடங்களிலும் அடிப்படை  சுகாதார வசதிகள் பெண்களுக்கு உறுதி செய்யப்படும் என்ற விவரங்கள் வரும் இடங்களில், தண்ணீரோடு கூடிய சுத்தமான கழிப்பறை வசதி என்பதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முதியோர் பாதுகாப்பு

முதியோர் பாதுகாப்பு மற்றும் சேவை குறித்து விவரிக்கும்போது அரசு-தனியார் துறைகள் இணைந்து இவற்றை செய்யும் என குறிப்பிடப்படுகிறது. இரண்டும் ஒத்துழைப்பது என்பது வேறு; ஆனால், PPP என்கிற அரசு-  தனியார் கூட்டு செயல்பாடு சாதாரண மக்களுக்கு பாதகமாகவே அமைகிறது என்பதுதான் அனுபவம். தீவிர நோய்களால் பாதிக்கப்படும் முதியவர்களை கவ னிக்கும் பணி குடும்பங்களில் உள்ள பெண்களின் பணி யாகவே இருக்கிறது. எனவே, தீவிர நோயால் அவதிப் படும் நோயாளிகளை, அவர்தம் குடும்பங்களை ஆற்றுப் படுத்துவது, சிகிச்சை அளிப்பது போன்றவை அடங்கிய (மனித சிகிச்சை நேய கவனிப்பு) Palliative care மையங்கள் கூடுதலாகத் தேவை.

வன்முறை தடுப்பு

வன்முறை தடுப்பு நடவடிக்கைகள் பட்டியலிடப் படும் இடங்களில் ஆசிரியர்களுக்கு பாலின நிகர்நிலை பயிற்சி அளிக்கப்படும் என்று மட்டும் கூறப்படுகிறது. கல்வி நிலைய அலுவலர்கள் மற்றும் கல்வி நிலைய நிர் வாகத்தினர், அரசின் கல்வி துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் அலுவலர்களுக்கு  பாலின நிகர்நிலை பயிற்சி அளிக்கப்பட வேண்டும், குறிப்பாக, காவல் துறை, விசாரணை, நீதித்துறை ஊழியர்கள், அலுவ லர்களிடமிருந்து இப்பயிற்சியைத் துவங்க வேண்டும். மேலும், ஒடுக்கப்பட்ட பகுதியினர், குறிப்பாக பழங்குடி யின மக்களை அரசு, காவல்துறை அதிகாரிகள் சமத்துவ கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும். சட்டப்படி வன்முறை புகார்களைக் கையாளாத காவல்துறை அதி காரிகள் மீது இ.பி.கோ 166A பிரிவின் படி நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுவாக, பெண் கள் பிரச்சனைகளைக் கையாளும் அதிகாரிகளின்  அணுகுமுறை குறித்து ஆண்டுக்கு ஒரு முறை பாலின நிகர்நிலை தணிக்கை (Gender audit)  மேற் கொள்ளப்பட வேண்டும்.

பிரதான வன்முறைக் களமாக மாறி நிற்கும் இணைய தள குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு போதுமான முக்கியத்துவம் கொள்கைக் குறிப்பில் கொடுக்கப்பட வில்லை. பாலின நிகர்நிலை பாடத்திட்டம் வகுக்கப் படும் என்பது வரவேற்கத் தகுந்ததானாலும் அது தனித்த பாடமாக இடம் பெறுவது உதவாது, அனைத்து பாடங் களிலும் நிகர்நிலை கருத்துக்கள் ஊடாட வேண்டும். பெண்களுக்கான தற்காலிக தங்கும் விடுதிகள் உள்ளாட்சி அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் என்பது நடைமுறை சாத்தியமற்றது. மாநில அரசுதான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

வேலை வாய்ப்பு 

தமிழக உழைப்புப் படையில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்கப்படுவதற்கான சில நடவடிக்கை கள் குறிப்பிடப்படுகின்றன. அவை இன்னும் வலுப் படுத்தப்பட வேண்டும். ஆனால், அது அரசுத்துறை யில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஊரக வேலை உறுதி சட்டத்தின் அடிப்படையில் வேலை நாட்களை அதிகரிப்பது, நகர்ப்புற வேலை உறுதி சட்டத்தைக் கொண்டுவருவது, அயல்பணியமர்த்தம்(அவுட்சோர்சிங்), ஒப்பந்த முறைகளை ஒழித்துக்கட்டி நிரந்தர பணிகளை உருவாக்குவது, பன்னாட்டு நிறுவனங்களின்  முத லீட்டுடன்   வேலைவாய்ப்புகளை  அதிகரிக்கும் கண்ணோட் டத்தை இணைப்பது என்கிற பொது கொள்கையோடு (public policy), அதாவது அரசின் கொள்கை திசை வழி மாற்றத்துடன் இணைந்ததாகும். தற்போது பின் பற்றப்படும் நவீன தாராளமயக் கொள்கைகளின் கார ணமாக இருக்கும் வேலைகளும் பறிபோகும் சூழலில், பெண்களின் வேலை வாய்ப்பை அதிகரிப்பது சவால் நிறைந்தது என்பதைக் கருத்தில் கொண்டு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். போக்கு வரத்து, குழந்தைகள் காப்பகம் உள்ளிட்ட நடவடிக்கை களை உதவி அல்லது கருணை என்பதாக பார்க்கா மல் சட்டப்படியானவையாகக் கருதி உறுதிப்படுத்த வேண்டும்.

ஊதியத்தில் பாலின இடைவெளியைக் குறைக்கும் முயற்சிகள் குறித்த இடத்தில், சம வேலைக்கு சம ஊதிய  சட்டத்தை அனைத்து துறைகளிலும் அமல்படுத்த வேண்டும் என்பதை இணைக்கலாம்.

நுண்நிதி மற்றும்  குடிபோதை பாதிப்பு

தமிழக பெண்களை அதிகம் பாதிக்கும் பிரதான பிரச்சனைகளான நுண்நிதி நிறுவனங்களின் அநியாய வட்டி, அத்துமீறல்கள் மற்றும் மதுக்கடைகள் மூடல் சம் பந்தமாக போதுமான குறிப்புகள் இடம்பெறவில்லை. கடன் (credit) என்பது மிக முக்கிய தேவையாகும். கூட்டு றவு வங்கிகள் உள்ளிட்ட  வங்கிக் கடன்களை  உறுதி செய்வதும்,  நுண் நிதி நிறுவனங்களின் அநியாய வட்டி விகிதத்தைக் குறைப்பதும், அத்துமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதும்  அவசியம். குடிநோய் சிகிச்சை மையங்கள், குடிநோய் மரணங்களுக்குக் காப்பீடு, மதுக்கடைகளைப் படிப்படியாகக் குறைப்பது போன்ற அம்சங்களைத் திட்டமிட வேண்டும். வீட்டிலிருந்து வருமானம் ஈட்டும் தொழிலாளிகள் (home based workers), அரசு திட்டம் சார் தொழிலா ளிகளின் (scheme workers) ஊதியம், பணி பாதுகாப்பு, அந்தஸ்து பாதுகாப்பு சம்பந்தமான உறுதியான நட வடிக்கைகள் இணைக்கப்பட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் பணி யாற்றும் இளம்  பெண்களுக்கு சுகாதாரமான தங்கு மிடம், உணவு, கண்ணியமாக நடத்தப்படுதல் போன்ற வற்றை உறுதி செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி களின் உதவித்தொகையை அதிகரிப்பது, இக்கொள் கையில் கூறப்பட்டிருக்கும் அம்சங்களை மாற்றுத் திறனாளி பெண்களின் முன்னேற்றத்திற்காக முழுமை யாக செயல்படுத்த வேண்டும்.

அரசியலில் பெண்களின் பங்கேற்பு 

இப்பகுதியில் கிரிமினல்மயமாக்கப்பட்ட அரசியல் சூழல் மாற்றப்படுவது குறித்த அம்சங்கள் இடம்பெற வேண்டும். ஊராட்சிமன்றத் தலைவராகவும், உள் ளாட்சி பிரதிநிதிகளாகவும் பணியாற்றும் பெண்கள் குறிப்பாக பட்டியலினப் பெண்கள் செயல்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய வகையில் அவர்கள் குடும் பத்தைச் சார்ந்த ஆண்கள் அல்லது அவர்கள் பணியாற் றும் விவசாய நிலத்தின் உரிமையாளர் பினாமியாக பணி யாற்றும் முறை முற்றாகத் தடுக்கப்பட வேண்டும்.

சாதிய மதவாத ஆணாதிக்க சூழல்

சாதிய- மதவாத ஆணாதிக்க நடவடிக்கைகள், சம்பிரதாயங்கள், சடங்குகள் பெண்களின் முன்னேற் றத்திற்குப் பெருமளவு முட்டுக்கட்டை போடுகின்றன. பள்ளிகளிலேயே மாணவர், ஆசிரியர் தம் சாதி ‘பெரு மிதத்தை’ பகிரங்கப்படுத்தும் போக்கு அதிகரித்து வரு கிறது. சாதி ஆணவக் குற்றம் மிக முக்கியமான பிரச்ச னையாக தமிழகத்தில் முன்னுக்கு வந்துள்ளது. இவை குறித்து எதுவும் கொள்கைக் குறிப்பில் இடம்பெற வில்லை என்பது கவலையளிக்கிறது. சாதி ஆணவக் குற்றங்களை தடுக்க தனி சட்டம் கொண்டு வரப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இணைக்கப்பட வேண்டும். மத வழி சிறுபான்மை  பெண்களுக்கு தற்போதைய அர சியல் சூழலில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் பாது காப்பின்மையை மாற்றிட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இசுலாமிய பெண்களின் கல்வி, சிறு தொழில் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பெண்களை இழிவுபடுத்தும் அல்லது போகப் பொருளாக சித்தரிக்கும் விதத்தில் பேசுப வர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.  மக்கள் பிரதிநிதிகளின் நடத்தை விதிகளில் ஒன்றாக இது மாற்றப்பட வேண்டும். ஊடக நிறுவனங் கள், விளம்பர முகமை பிரதிநிதிகளோடு அவ்வப் போது இது குறித்த கலந்துரையாடல் நடத்திட வேண்டும். ஒரு திட்டமிட்ட, பரவலான, பெண் சமத்துவ தொடர் பிரச் சாரத்தை அரசு மேற்கொள்ள வேண்டும்.

உயர்மட்டக் குழு

நிறைவாக இக்கொள்கை அமலாக்கம் சம்பந்த மான உயர்மட்டக் குழுவில் உலக வங்கி உறுப்பினர் இருக்க வேண்டிய அவசியமில்லை. பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் கட்டாயம் இடம் பெற வேண்டும். மகளிரி யல் துறைகள், மையங்களை அமலாக்கத்தில் ஈடு படுத்த வேண்டும். அரசு அதிகாரிகள் அல்லாத ஒரு சுயேச்சையான கண்காணிப்பு /மதிப்பீட்டுக் குழுவினை உருவாக்குவது என்ற முடிவு  மிகச் சரியானது, அதே  சமயம், ஏதாவதொரு முகமையிடம் மதிப்பீட்டை ஒப்ப டைப்பதை விட, பாலின சமத்துவ உயர்மட்டக் குழு ஒன்றை உருவாக்கி  பல்வேறு பெண்கள் அமைப்பு களின் பிரதிநிதிகளை இடம்பெறச் செய்து, அது இந்தக் கொள்கை  அமலாக்கத்தைக்  கண்காணிக்கும், மதிப்பீடு செய்யும்  என்ற முடிவுக்குப் போகலாம் எனக் கருதுகி றோம். மிக முக்கியமாக இக்கொள்கையை நடை முறைப்படுத்துவதற்கு போதிய நிதி ஒதுக்கீடு உறுதிப் படுத்தப்பட வேண்டும். பல்வேறு அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்பு கள், ஜனநாயக இயக்கங்கள், தனி நபர்கள் சார்பில் வரும் கருத்துக்களைப் பொருத்தமான முறையில் இணைத்துக்கொண்டு இக்கொள்கையை செழுமைப் படுத்த வேண்டும். ஆவணத்தில் அருமையாக இருக்கும் விஷயங்கள் எல்லாம் நடைமுறைக்கு வரும் போது ஏராளமான தடங்கல்களை சந்திக்க வேண்டி யிருக்கும். அவற்றை எதிர்கொண்டு அரசியல் உறுதி யோடு கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டம் வகுக்கப்படுவது  உதவிகரமாக இருக்கும் என்பதனையும் சுட்டிக் காட்டுகிறோம்.
 

;