articles

img

கூட்டிக்கழிச்சுப்பாரு, கணக்கு சரியா வரும்...

நடிகர் ரஜினிகாந்த், புரெவி புயல் நிலவரம் குறித்து மக்கள் கலவரம் அடைந்திருந்த நிலையில் வியாழனன்று திடீரென பிரசன்னமாகி ஜனவரி மாதம் அரசியல் கட்சி துவங்கயிருப்பதாகவும் டிசம்பர் 31 அன்று கட்சி பெயர் குறித்த அறிவிப்பை வெளியிடயிருப்பதாகவும் தன்னுடைய தவணை முறை திட்டத்தை தெரிவித்துள்ளார்.கட்சி துவங்குவது அவருடைய விருப்பம்.அதை யாரும் கேள்வி கேட்க முடியாது.ஆனால் அவருடைய அறிவிப்புகள் குறித்து சில கேள்விகள் எழுகின்றன.

அவர் பேட்டியளித்தபோது வலது பக்கமும் இடது பக்கமுமாக தலைமறைவாகி இயங்கிவரும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவிமணியனும் மறுபுறத்தில் அர்ஜூன மூர்த்தியும் நின்றுகொண்டிருந்தனர்.தமிழருவியை அறிவிக்காத கட்சியின் மேற்பார்வையாளராக நியமித்திருப்ப தாகவும் அர்ஜூனமூர்த்தியை கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்திருப்பதாக ரஜினி அறிவித்தார்.இதில் தமிழருவிமணியனை அனைவரும் அறிவர். அவ்வப்போது இதோ கீரியும் பூனையும் சண்டைபோடப்போகிறது என்று வேடிக்கை காட்டுவதைபோல ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்றுகூறிக்கொண்டிருப்பவர். நேற்றுகூட ரஜினியைசந்தித்துவிட்டு குழப்பமாக திரும்பிய அவர், செய்தியாளர்களிடம் ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா என்று எனக்கு தெரியாது. அவருக்கு மட்டும்தான் தெரியும். என்றாலும் உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்கள் என கூறிவிட்டு வந்தேன் என்று விரக்தியாக கூறினார். இப்போது அவரை மேற்பார்வையாளராக நியமித்திருப்பதன் நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு இன்றுதான் தீபாவளி என்று கூறி, எண்ணெய் தேய்த்துக் குளித்து பட்டாசு வெடித்து மகிழ்ந்திருக்கிறார். ரஜினிக்கு அணில் போல நான் செயல்படுவேன் என்றும் கூறியுள்ளார். இலங்கைக்கு பாலம் கட்டும் திட்டம் எதுவும் இருக்கும் போல இருக்கிறது. 

ரஜினியால் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜூனமூர்த்தி யார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது. அதிக ஆராய்ச்சி எதுவும் தேவைப்படாமலே அவர் யார் என்பது உடனடியாக தெரியவந்தது. 3-7-2020 இல் பாஜகவின் பல்வேறு நிர்வாகிகளை பாஜக தலைமை அறிவித்தது. அதில் அறிவுஜீவிகள் பிரிவின் மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்டவர் அர்ஜூனமூர்த்தி. சமீபத்தில் நடந்த வேல் யாத்திரையிலும் அவர் ஆங்காங்கே கலந்துகொண்டு கைது செய்யப்பட்டார். அண்மையில் அமித்ஷா நடத்திய ஆலோசனைக்கூட்டத்திலும் பங்கேற்றிருக்கிறார். வேல் யாத்திரை முடியும் முன்பே கட்சி மாறிவிட்டார். 

இவரைத்தான் ஆரம்பிக்கப்போகும் தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்திருக்கிறார் ரஜினி.இன்னொரு கட்சியின் தலைவர் எப்படி ஆரம்பிக்கப்போகும் கட்சியின் நிர்வாகியாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுவது இயல்பே. இவ்வளவு தூரம் திட்டமிட்டு செயல்படும் பாஜக இதை யோசிக்காமல் இருக்குமா? கமலாலயத்தில் இருந்து கரு.நாகராஜன் பெயரில் அறிவிப்பு ஒன்று பறந்துவந்தது. அறிவுஜீவி பிரிவின் மாநிலத் தலைவர் அர்ஜூனமூர்த்தியின் ராஜினாமாவை ஏற்று, அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக அதில் கூறப்பட்டிருந்தது.பாவம் பாஜக, இருந்த ஒரு அறிவுஜீவியும் ராஜினாமா செய்துவிட்டார். இதைவிட பெரிய காமெடியும் கரு.நாகராஜன் அறிக்கையில் உள்ளது.இனிமேல் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அர்ஜூனமூர்த்தியிடம் கட்சி சார்பாக எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.அர்ஜூனமூர்த்தி வழியாகத்தானே ரஜினியை இயக்க வேண்டும். அதற்காக தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாமா? பாஜகவின் அறிவிப்பும் ரஜினியின் அறிவிப்பும் ஒரே நாளில் வந்திருக்கிறது. அதாவதுஅங்கே அறிவிக்கப்பட்டவுடன் இங்கே விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

மின்னல் வேகம். இந்த அர்ஜூனமூர்த்தி ஆர்எஸ்எஸ் தயாரிப்பு.ஏற்கெனவே பாஜகவின் வர்த்தகப்பிரிவு தலைவராகஇருந்தவர். தற்போது புதிய கடையின் பொறுப்பாள ராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பள்ளித்தோழியாம். ரஜினி நடித்த அண்ணாமலை படத்தில் வில்லன் ராதாரவி அடிக்கடி ஒரு வசனம் சொல்வார். “ கூட்டிக்கழிச்சுப்பாரு கணக்கு சரியா வரும்” என்று இப்போது கணக்கு சரியாக வருகிறது அல்லவா. சமீபத்தில் ரஜினிகாந்த் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியிருந்தார். அவரை இந்தபாடுபடுத்துகிறார்கள். இன்று மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம் என்கிறார் ரஜினி. அதன் முதல் கட்டம்தான் ஏற்கெனவே இருந்த மன்ற நிர்வாகிகளுக்கு அல்வா கொடுத்துவிட்டு, பாஜககாரரை தலைமை நிர்வாகியாக நியமித்திருப்பதன் போலும்.இந்த கதையை எழுதிக்கொண்டிருப்பவர்கள். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது.

==மதுரை சொக்கன்==

;