articles

img

தோழர் ஏ.நல்லசிவன்: பின்பற்றத்தக்க வாழ்க்கை....

தோழர் ஏ.நல்லசிவன் குறித்து தோழர் சுர்ஜித்இப்படி எழுதினார்: “கம்யூனிஸ்ட் கட்சியில்சேர்வதால் மட்டும் ஒருவர் கம்யூனிஸ்ட்டாக மாறிவிடுவதில்லை. கம்யூனிஸ்ட்டாக விளங்குவது என்பது ஒரு தொடர்ச்சியான போராட்டம். ஒருவருடைய கோட்பாடுகளை மக்களிடையே செய்யப்படும் தியாகப் பணியோடு இணைப்பதற்கான போராட்டம். நல்லசிவன் அத்தகையதொரு கம்யூனிஸ்ட் ஆவார். மார்க்சிய லெனினியத்தில் அவர் கொண்டிருந்த உறுதி, அதற்காக தன்வாழ்வை அர்ப்பணித்தது போன்றவை அனைத்து தோழர்களுக்கும் முன்னுதாரணமாக விளங்கும். குறிப்பாக, நம்மை நாசத்திற்கு இட்டுச்செல்லும் ஆபத்தை கொண்டிருக்கின்ற அனைத்து வகைப்பட்ட அந்நிய வர்க்க தாக்கத்திற்கு நாம் ஆளாகியிருக்கும் நடப்பு சூழ்நிலையில்நல்லசிவனின் மேலே சொன்ன அம்சங்கள் முன்னுதாரணமாக விளங்கும். தமிழகத்தில் கட்சியை கட்டுவதற்கான மகத்தான பங்களிப்போடு அவர் மத்தியக்குழு உறுப்பினர் என்றமுறையிலும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் என்றமுறையிலும் ஒரு பெரும் பங்களிப்பை செய்துள்ளார். அவருடைய அற்புதமான பங்களிப்பிற்காகவும், குணாம்சங்களுக்காகவும் அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார்”.

1922 பிப்ரவரி 22 அன்று அம்பாசமுத்திரம் தாலுகா பிரம்மதேசம் கிராமத்தில் ஆறுமுகம் – ஆதிமூலமீனாட்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் தோழர் ஏ.நல்லசிவன். தனது ஆரம்பக்கல்வியை பிரம்மதேசத்திலும், உயர்நிலை பள்ளிக்கல்வியை அம்பாசமுத்திரம் தீர்த்தபதி பள்ளியிலும் பயின்றார்.  எஸ்எஸ்எல்சி படிப்பில்பள்ளியில் முதல் மாணவனாகவும், மாநிலத்தில் மூன்றாவது மாணவனாகவும் தேர்வானார். நெல்லை மதிதாஇந்துக்கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார்.அவருக்கு விளையாட்டிலும் பேரார்வம் இருந்தது. கல்லூரியின் கால்பந்து, கூடைப்பந்து விளையாட்டு குழுக்களில் இணைந்து விளையாடினார். கால்பந்து விளையாட்டின் போது அவரது வலதுகை முறிந்தது. சிகிச்சைக்காக பலஊர்களுக்கும் சுற்றி அலைந்ததில் அவரது கல்லூரிப் படிப்பு பாதியில் நின்று போனது. 

தோழர் ஏ.நல்லசிவன் ஆச்சாரமிக்க சைவக் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயது முதல் கடவுள் பக்தி மிகுந்தவர். ஆனந்தவிகடன், சுதேசமித்திரன் பத்திரிக்கைகளை படித்து வந்தார். அவருக்கு விடுதலைப் போராட்டத்தில் ஈர்ப்பு ஏற்பட்டது. சுபாஷ்சந்திர போஸ், காந்தி, நேரு ஆகியதலைவர்கள் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார். சுபாஷ்சந்திரபோஸ் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போது தற்கொலைக்கு முயன்றுள்ளார். கல்லூரியில் நடைபெற்ற அரசியல் விவாதங்கள், அவரது கண்ணோட்டத்
தை விசாலமாக்கின. தொ.மு.சி. ரகுநாதன் அவரது கல்லூரி நண்பராக இருந்தார். இந்த சமயத்தில் குடியரசுபத்திரிகையின் வாசகனாக மாறினார். அதில் வந்த கட்டுரைகள் அவரது சிந்தனையில் பெரும் தாக்கத்தை உருவாக்கின. அவரது கடவுள் நம்பிக்கையில் கீறலைஏற்படுத்தின.

முதல் அரசியல் போராட்டம்
1940ஆம் ஆண்டு தோழர் நல்லசிவன் வாழ்க்கையில் மிகமுக்கியமான ஆண்டு. அந்த வருடத்தில் பிரம்மதேசம் கிராமத்தில் தேசிய வாலிபர் சங்கம் எனும் அமைப்பை உருவாக்கினார். அதன்மூலம் தனது அரசியல் நடவடிக்கையைதுவக்கினார். அதே ஆண்டு நேரு கைது செய்யப்பட்டதைகண்டித்து, தீர்த்தபதி பள்ளி மாணவர்களை திரட்டி ஊர்வலமொன்றை நடத்தினார். இதுவே அவரது முதல் அரசியல் போராட்டமாகும். இச்சமயம் பாபநாசம் நீர்மின் நிலையத்தில் நடந்த கட்டுமானப் பணியில் இருந்த தோழர் செல்வராஜ் மூலம்கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்த அறிமுகம் கிடைத்தது. இதுதோழர் நல்லசிவன் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வாக மாறியது. மேலகரம் தோழர் பிச்சையா மூலம் கம்யூனிஸ்ட் அறிக்கை, என்ன செய்ய வேண்டும்? மார்க்சியக்கையேடு ஆகிய நூல்கள் கிடைத்தன. இதே ஆண்டு சென்னை சதிவழக்கு குறித்த செய்திகளும், நீதிமன்றத்தில் தோழர்கள் ஆற்றிய உரையும் அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இதனை ஊன்றிக்கவனித்து வந்தார் தோழர் நல்லசிவன். நெல்லை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்க பணிகளுக்காக கேரளாவில்இருந்து வந்த தோழர் ராமச்சந்திர நெடுங்காடியுடனான தொடர்பும் இதே காலத்தில் நிகழ்ந்தது. 1940 அக்டோபரில் தோழர் நல்லசிவன் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார். 

தொழிற்சங்கப்பணி
1936ல் தமிழகத்தின் முதல் கம்யூனிஸ்ட் கிளை உருவானது. நெல்லை மாவட்டத்தில் 1939ல் 5 கிளைகளும், மாவட்டஅமைப்பும் உருவாக்கப்பட்டது. 1941ல் நெல்லை சதி வழக்குபுனையப்பட்டது. தோழர்கள் ராமச்சந்திர நெடுங்காடி, பெ.சீனிவாசன், மீனாட்சிநாதன் உள்ளிட்ட தோழர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஒன்றரை முதல் மூன்றரை ஆண்டுகள்சிறைத்தண்டனை அனைவருக்கும் விதிக்கப்பட்டது. 1883ல் துவக்கப்பட்ட பாபநாசம் பஞ்சாலையில் 1938ல்தொழிற்சங்க அமைப்புகளும், தொழிலாளர் போராட்டங்களும் துவங்கின. நெல்லை சதி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த தோழர் மீனாட்சிநாதன், தோழர் நல்லசிவனை பஞ்சாலை தொழிலாளர் சங்க பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார். அப்போதிருந்து அவரது தொழிற்சங்கப் பணி துவங்கியது. 1943ல் பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் தலைவராக தோழர் பி.ராமமூர்த்தியும், செயலாளராக தோழர் மீனாட்சிநாதனும், துணைச்செயலாளராக தோழர் நல்லசிவனும் பொறுப்பேற்றுச் செயல்பட்டனர். 1943ல் தோழர் நல்லசிவன் முழுநேர ஊழியரானார். 

சிறைத் தண்டனை
1946ல் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் வெற்றி பெற்றது. நிர்வாகத்தின் அடக்குமுறையும், நிர்வாகத்திற்கு ஆதரவான பாபநாசம் லேபர் யூனியனின் வன்முறைத் தாக்குதலும் தீவிரமாகியது. தொழிலாளர்களது போராட்டத்தை ஒடுக்க போலீஸ்நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அருணாசலம், செல்வம்,செபஸ்தியான், மஸ்தான் ஆகிய நால்வர் கொல்லப்பட்டனர். பொய்யான கொலைக் குற்றச்சாட்டில் தோழர் நல்லசிவன் உள்ளிட்டு 18 தோழர்கள் கைது செய்யப்பட்டு, 10 மாத சிறைத் தண்டனைக்குப் பின் விடுதலை செய்யப்பட்டனர். 1947ல் பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக தோழர் நல்லசிவன் தேர்வானார். 

1948ல் கட்சி தடை செய்யப்பட்டது. 1949ல் மூன்றாவது(ஆஷ் கொலை வழக்கே முதல் நெல்லை சதிவழக்கு) நெல்லை சதி வழக்கில் 97 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தோழர் நல்லசிவன் பதினேழாவது குற்றவாளி. (97பேரில் இப்போது தோழர் நல்லகண்ணு, வாத்தியார் ஜேக்கப் இருவர் மட்டுமே நம்மோடு வாழ்கிறார்கள்). இந்தவழக்கை நடத்திய இன்ஸ்பெக்டர் கூறினார், நல்லசிவன் கட்சியின் மூளை; அவருடைய மண்டையோடு உடைக்கப்பட வேண்டும். தோழர் நல்லசிவன் நாங்குநேரி, கொக்கிரகுளம், மதுரைச் சிறைகளில் அடைக்கப்பட்டார். மதுரைச் சிறையில் அவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. நெல்லை சதி வழக்கு குறித்து வாத்தியார் ஜேக்கப்,“நல்லசிவன் புறக்கோர்ட்டு வக்கீல், நெல்லை சதி வழக்குநடத்துன என்.டி.வானமாமலை, பாளை சண்முகத்துக்கு பாயிண்ட் எடுத்துக் கொடுப்பாரு, அதனால புறக்கோட்டு வக்கீல்னு சொல்லுவோம்” என்றார்.

எம்.எல்.சி., எம்.பி.,
கட்சி மீதான தடை நீக்கப்பட்ட பின், நெல்லையில் கட்சியை புனரமைக்க தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் வந்தார்.ஒவ்வொரு தோழர்களையும் தனித்தனியாக சந்தித்து கட்சிப்பணிகளை வேகப்படுத்தினார். 1954ல் மாவட்டஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்வாகி செயல்பட்டார். 1978ல் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வானார். சட்டமேலவையில் சத்துணவு திட்டம், வேலைநிறுத்த உரிமை,நிலச் சீர்திருத்தம், மாநில சுயாட்சி, மாநிலங்களின் நிதியாதார உரிமைகள், தொழிலாளர் நலன், கல்விப் பிரச்சனைகள் குறித்து தனது ஆணித்தரமான வாதங்களை முன்வைத்தார். 1989ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார். புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுக மான அக்காலத்தில் அதன் ஆபத்தான அம்சங்களை எதிர்த்து வாதாடினார். போராடினார். 

எளிமையான வாழ்க்கை முறை
1957ல் கம்யூனிஸ்ட் கட்சியின் மாகாண கவுன்சில் உறுப்பினர். 1964 மதுரை மாநில மாநாட்டில் மாநிலக்குழு உறுப்பினராகவும், 1968 கோவை மாநில மாநாட்டில்மாநில செயற்குழு உறுப்பினராகவும், 1970க்கு பின்சிஐடியு துவக்கப்பட்ட போது அதன் மாநில இணைச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலம் முழுவதும் புதிய தொழிற்சங்கங்களை உருவாக்குவதிலும், தொழிற்சங்க இயக்கங்களுக்கும், கட்சிக்கும் வழிகாட்டுவதிலும் மகத்தான தடங்களை பதித்துள்ளார். 1981 முதல்1994 வரை 14 ஆண்டுகள் கட்சியின் மாநிலச்செயலாளராக பணியாற்றினார். 1978 சால்க்கியா பிளீன ஸ்தாபன முடிவுகளை அமலாக்குவதில் முக்கிய பங்காற்றினார். கட்சியின் மாநில தலைமையின் அரசியல், சித்தாந்த, ஸ்தாபன ஒற்றுமையை வளர்ப்பதில்,

செழுமைப்படுத்தியதில் தோழர் நல்லசிவன் பங்கு நிகரில்லாதது என  தோழர் உமாநாத் குறிப்பிட்டுள்ளார். ஜலந்தரில் நடைபெற்ற  பத்தாவது அகில இந்திய மாநாட்டில் மத்தியக்குழு உறுப்பினராக தேர்வானார். சென்னையில் நடைபெற்ற 14ஆவதுஅகில இந்திய மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தோழர் நல்லசிவன் குறித்து தோழர் சங்கரய்யா கூறுகிறார், “ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டுக்குரிய இயல்பான குணங்களினால் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சரியான  ஸ்தாபன கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டி வளர்ப்பதில் பெரும் பங்கு வகித்தவர். வாச்சாத்தி பிரச்சனையை மக்களுடைய கவனத்திற்கு கொண்டுவந்ததிலும், அந்த மக்களுக்கு நீதி கிடைக்கவும் அவர்தொடர்ந்து நடவடிக்கை எடுத்தார். கட்சியிலும், தொழிற்சங்கத்திலும் எத்தனையோ பொறுப்புக்களை வகித்துவந்த போதிலும் மிகுந்த எளிமையான ஒரு வாழ்க்கையை கடைசி வரை வாழ்ந்து வந்தார். அவருடைய தன்னடக்கம்அனைத்து கம்யூனிஸ்ட்டுகளும், பொதுநல ஊழியர்களும் பின்பற்றத்தக்கதாகும்”.  

கனவுகள் கை கூடும்
தோழர் ஏ.நல்லசிவன் தனது பொதுவாழ்வில் ஐந்தரையாண்டு சிறை வாழ்க்கையும், மூன்றரை ஆண்டுகால தலைமறைவு வாழ்க்கையையும் அனுபவித்துள்ளார். தனது மரணத்திற்கு பத்து மாதங்களுக்கு முன்பு நடந்ததீக்கதிர் நேர்காணலில், “தோழரே, விடுதலை போராட்டகாலத்தில் உங்கள் கனவு, இன்றைய நடப்பு இவற்றைஒப்பீட்டு பார்க்கிறீர்களா? சோசலிச லட்சியம் கைகூடவில்லையே என்ற ஏக்கம் ஏற்படுவது உண்டா? என்று கேள்வி எழுப்பிய போது, அவர் சொன்னார்: 
“இல்லை. அதற்காக நான் வருந்தவில்லை. உணர்ச்சிபூர்வமாக அல்லாமல் அறிவுபூர்வமாக மார்க்சியத்தை புரிந்து கொண்டவன் நான். எனவே, சோசலிச மாற்றம்உடனடியாகவோ, தானாகவோ வந்துவிடாது. அரசியல் களத்திலும், சமுதாயத்திலும் நீண்ட நெடும் போராட்டத்துக்குப் பிறகே அது ஏற்படும் என்ற புரிதலுடன்தான் பொதுவாழ்க்கையை தொடங்கினேன். இன்றைக்கு நம்மக்கள் அனுபவிக்க முடிகின்ற முன்னேற்றங்கள், உரிமைகள் இவற்றுக்கு இதுவரை நடந்த போராட்டங்கள்தான் காரணம். இது மேலும் தொடரும் என்றே நினைக்கிறேன். ஆகவே எனது கடந்த காலம் வீணாகிவிட்டதோ என்ற எண்ணமோ, ஏக்கமோ எனக்கில்லை. 

இன்று என் உடல் இத்தனை பலவீனமாகிவிட்டதால் முன்புபோலவோ மற்ற தோழர்கள் போலவோ உழைக்கமுடியவில்லையே என்ற ஏக்கம் தான் உண்டு. இயக்கம்மேலும் வளரவும், லட்சியத்தில் முன்னேறிச் செல்லவும் சாத்தியம் நிறைய உள்ளது. வகுப்புவாத சக்திகளும், பிரிவினைவாதிகளும், சீர்குலைவாளர்களும், சமூக விரோதிகளும் மக்களை திசை திருப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொய்வில்லாமல் போராட்டத்தை தொடர வேண்டும். கனவுகள் கைகூடும்”. 2021 பிப்ரவரி 22
அன்று அவரது நூற்றாண்டு துவங்கியுள்ளது. நூற்றாண்டுநாயகர் ஏ.நல்லசிவன் என்றென்றும் கம்யூனிஸ்ட்டுகளால் நினைவு கூரப்படுகிறார்.

கட்டுரையாளர்: கே.ஜி.பாஸ்கரன், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)

;