articles

img

ஜியாவுல் ஹக் என்றொரு தோழர்...

உழைத்துக் கொடுத்த தொழிலாளிக்கு மேதினத்தில் ஆட்டோவை சொந்தமாக வழங்கிய சேரன் ஆட்டோ உரிமையாளரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.கோவை அல்அமீன் காலனியைச் சேர்ந்தவர் ஜியாவுல்ஹக். இவர் சிஐடியு சாலைபோக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு உறுப்பினராக உள் ளார். 27 ஆட்டோக்களின் உரிமையாளரான இவர் சேரன் ஆட்டோ தமிழ் நண்பன் என்கிறபெயரில் இந்த ஆட்டோக்களை ஒருங்கிணைத்து இயக்கி வருகிறார். நான்கு வருடமாக இந்நிறுவனத்தை நடத்தும் இவரிடம் 20க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் தன்னிடம் 22 மாதங்கள் ஆட்டோவை இயக்கிவாகன பராமரிப்பு மற்றும் வாடகை கட்டணத்தை முறையாக செலுத்திய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அந்த ஆட்டோவையே சொந்தமாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஜியாவுல்ஹக் கூறுகையில், நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு நிறுவனத்தில்சம்பளத்திற்கு ஆட்டோ ஓட்டினேன். இரண்டுவருடத்திற்கு பிறகு அங்கிருந்து வெளியே வருகிறபோது என்னிடம் உழைப்பை தவிரஒன்றுமே இல்லை. இப்படியே நமது வாழ்க்கைஓடிவிடுமோ என்று எண்ணினேன். இதனையடுத்து வங்கியில் கடன் பெற்று சொந்தமாக ஆட்டோ வாங்கி இயக்கி வந்தேன். பிறகு அடுத்தடுத்து ஆட்டோக்களை வங்கியில் கடன்பெற்று வாங்கி சேரன் ஆட்டோ என்கிறநிறுவனத்தை துவக்கினேன். இந்த ஆட்டோக்களை இயக்கிய தொழிலாளர்கள் எனக்கு நல்லஒத்துழைப்பை அளித்தனர். நிறுவனமும் நன்கு வளர்ந்தது. தற்போது 27 ஆட்டோக்களை வைத்து இயக்கும் அளவிற்கு சேரன் ஆட்டோநிறுவனம் வளர்ந்துள்ளது. நான் பெரிதாகஏதும் சொத்து சேர்க்கவில்லை என்றாலும், மனநிறைவு தரும் வாழ்க்கை இந்த தொழிலாளர்களால் அமைந்தது. இந்நேரத்தில்தான் நான் முன்பு வேலை செய்த நிறுவனத்தை நினைத்துப் பார்த்தேன். என்னிடம் பணி
யாற்றும் தொழிலாளர்களும் இதுபோல் ஆகிவிடக்கூடாது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குறிப்பிட்டகாலத்தை தீர்மானித்து அவர்களுக்கே அந்தஆட்டோவை வழங்கிவிடலாம் என யோசித் தேன். அந்த வகையில் 22 மாதங்கள் வசூல் கட்டணத்தை முறையாக வழங்கியும், வாகனத்தை சிறப்பாக பராமரித்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கே அந்த வாகனத்தை வழங்குவது என சிஐடியு சங்கத் தோழர்களுடன் பேசி முடிவெடுத்தேன். 

தொழிலாளர்களின் தினமான மே தினத் தன்று இந்த ஆட்டோக்களை வழங்குவது என திட்டமிட்டோம். இதேபோன்று மற்ற நிறுவனத்தினரும் தொழிலாளர்களின் உழைப் பிற்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதே என் எண்ணம். அந்த வகையில் நாம் ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இன்று ஒரு ஆட்டோவை வழங்குகிறேன். இன்னும் மூன்று மாதங்களில் 6 ஆட்டோ ஓட்டுனர்கள் தாங்கள் இயக்கும் ஆட்டோக்களை சொந்தமாக்க உள்ளனர் என்றார் பெருமிதத்தோடு.

முன்னதாக கோவை உக்கடம் வேன் ஸ்டேண்டில் நடைபெற்ற நிகழ்வில் சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தின் துணைத் தலைவர் அப்துல்கலாம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஏ.எம்.ரபீக் முன்னிலை வகித்தார். சேரன் ஆட்டோ நிறுவனத் தின் கீழ் இரண்டரை ஆண்டு காலமாக சிறப்பாகபணியாற்றிய ஆட்டோ ஓட்டுனர் பக்ருதீனுக்குசிஐடியு மாவட்டத் தலைவர் சி.பத்மநாபன் ஆட்டோவின் ஆவணங்கள் மற்றும் சாவியைவழங்கினார். இதில் ஏராளமான சிஐடியு தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து பக்ருதீன் கூறுகையில், இதனை நான் எதிர்பார்க்கவில்லை. நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஜியாபாய் தோழருக்கு நன்றி சொல்கிறேன். இந்தநல்ல எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும்.இதேபோன்று உழைத்துக் கொடுத்த தொழிலாளிக்கு உரிய அங்கீகாரத்தை அனைவரும் தர வேண்டும் என்பதே என் விருப்பம் என் றார்.

இதுகுறித்து சிஐடியு மாவட்டத் தலைவர் சி.பத்மநாபன் கூறுகையில், இயற்கையையும் உழைப்பையும் சுரண்டியவன் மட்டுமே வெகுவிரைவில் சொத்துக்களை சேர்க்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை. அடுத்தவன் பையில் இருந்து பத்து ரூபாயை எப்படியாவது எடுக்க வேண்டும் என்பதாய் சமூகம்மாறிக்கிடக்கிறது. இதனை எதிர்த்த போராட் டத்தை செங்கொடி இயக்கத்தைத் தவிர வேறுயாரும் நடத்த முன்வரமாட்டார்கள். அத்தகைய நெடிய போராட்டத்தை நாம் நடத்திக் கொண்டே இருப்போம் மனித குலம் விடியலைப்பெறும் வரையில். அத்தகைய செங்கொடியின் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட ஒருவருக்குத்தான் உழைப்பவனுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்கிற சிந்தனை இருக்கும். இதனை மெய்ப்பித்துள்ளார் ஜியாவுல்ஹக். அவருக்கு சிஐடியு சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

கட்டுரையாளர் : அ.ர.பாபு

;