திங்கள், மார்ச் 1, 2021

articles

img

மருதநிலத்தின் அடிமண்ணை உழுத எழுத்துழவர் சோலை....

நாவலாசிரியர் சோலை சுந்தரபெருமாள் 12-01-2021 அன்று திருவாரூர் அருகிலுள்ள காவனூரில் அவரது இல்லத்தில் காலமானார்.முற்போக்கு இலக்கிய முகாமின் பெருமைமிகு படைப்பாளி அவர். 09-05-1953இல் காவனூர் சுப்பிரமணியம்-கமலம் ஆகியோரின் மகனாகப் பிறந்த அவர் கல்வியியலில் இளங்கலையும் தமிழில் முதுகலையும் கற்றார்.தமிழாசிரியராகப்பணியாற்றினார்.

வேளாண்மக்களின் வாழ்வியலையும் – உழுவித்து உண்பவர்கள், உழுதுண்பவர்கள் ஆகிய இவர்களின் வாழ்க்கைப்பாடுகளையும் , பண்பாட்டு அம்சங்களையும் நுட்பமாகப் படைப்பாக்கிய அவரது எழுத்து வாழ்க்கை 1987 இல் துவங்கியது.‘மனசு’ என்கிற குறுநாவல் ‘கலைமகள்’ இதழ் நடத்திய  அமரர் இராமரத்தினம் நினைவுக் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது. கலைமகள் ஆசிரியர் அழைப்பின் பேரில் அவரைச் சந்திக்கச்சென்ற இடத்தில் கலைமகளில் இதுபோன்ற (அடித்தட்டு மக்களின் போராட்டம் பற்றிய) கதைகளை இனி வெளியிடமாட்டோம்.இதுவே முதலும் கடைசியும். நீங்கள் வேறு இதழ்களுக்கு எழுதுங்கள் என்று சொன்னதைத்தொடர்ந்து  ‘தாமரை’யில் அவரது படைப்புகள் வெளிவரத்துவங்கின. அமரர் கே.சி.எஸ்.அருணாச்சலம் அவர்கள் தாமரையின் ஆசிரியராக இருந்த அந்த நாட்களில் மாதம் தோறும் அவரது கதைகள் தாமரையில் வந்துகொண்டிருந்தன.

அவருடைய முதல் சிறுகதைத்தொகுதியான “மண் உருவங்கள்” நூலின் முன்னுரையில் “வண்டல் மண்ணில் வாழும் மக்களின் வாழ்வை,மகிழ்ச்சிகரமான பொழுதுகளை, சிதைப்படுதலை,அவர்கள் அறிந்தோ அறியாமலோ சுரண்டப்படுதலை எழுத என் காலமே போதாது” என்று குறிப்பிட்டிருப்பார்.அந்த வார்த்தைகளை உண்மையாக்குவதுபோல அவரது வாழ்நாள் முழுவதும் –அவரால் எழுத முடியாமல் போகுமளவுக்கு உடல் நலம்குன்றிய நாள் வரைக்கும் அவர் எழுதிய சிறுகதைகள், நாவல்கள்,கட்டுரைகள் அனைத்துமே ‘வண்டல் வட்டார’ வாழ்வையே பேசின.

வண்டல் இலக்கிய முன்னோடி
வண்டல் வட்டார இலக்கியம் என்கிற சொல்லாட்சி யையும் கருதுகோளையும் முதன் முதலாக முன் வைத்தவரும் அப்படி ஒரு வகைமையை அடையாளம் காட்டியவரும் அவரே. அதுகாறும் தஞ்சை வட்டாரம் என்று மொத்தமாகக் குறிப்பிட்டு வந்த போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார் சோலை. காதல்,காமம்,உயர்சாதி மேட்டுக்குடி மக்களின் ஆண்-பெண் உறவுகள்,கர்நாடக சங்கீதத்தின் மேன்மை என்றே பேசிக்கொண்டிருந்த தஞ்சை வட்டார இலக்கியத்துக்குள், கீழத்தஞ்சை மக்களின்வேளாண் வாழ்க்கையை, உழுகுடிகளின் போராட்டங் களை, சாட்டையடிக்கும் சாணிப்பாலுக்கும் எதிராகச் செங்கொடியுடன் உயர்ந்த கரங்களின் மொழியைத் தன் படைப்புகளில் கொண்டுவந்து பெரும் மாற்றத்தை நிகழ்த்திக்காட்டியவர் சோலை.கீழத்தஞ்சை வட்டாரம் வேறு.அதன் வாழ்க்கையும் கருப்பொருளும் உரிப்பொருளும் வேறு எனத்துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியவை அவரது படைப்புக்கள்.

கரிசல் இலக்கியத்துக்கு ஒரு கி.ராஜநாராயணன், கொங்கு வட்டார இலக்கியத்துக்கு ஒரு சண்முகசுந்தரம் என்றால், வண்டல் இலக்கியத்துக்கு ஒரு சோலை சுந்தரபெருமாள் என இலக்கிய உலகம் பேசும்படி செய்தார்.சங்கச் இலக்கியம் சுட்டும் திணை மரபின் தொடர்ச்சிதான் இந்த வட்டார இலக்கியம் எனப்படுவது. ஒற்றைப் பண்பாடு, ஒற்றை வாழ்க்கை முறை இந்தியாவில் ஒருபோதும்கிடையாது. பன்மியம்தான் இந்தியப் பண்பாட்டின் அடித்தளம் என்பதை உரக்கச் சொல்லுபவை இந்த வட்டார இலக்கியங்கள்.“மானுட சமுத்திரம் நானென்று கூவு” என்கிற பாவேந்தரின் குரலையும் கணக்கில் கொண்டேதான் வட்டார இலக்கியம் பேச வேண்டும்.இல்லாவிட்டால் அது சாதிகளைப் புதுப்பிக்க உதவும் கருவியாக,பழமை பாடும் இலக்கியமாக மாறி சனாதனத்தைக் கொண்டாட உதவும் ஒன்றாக ஆகிவிடும் அபாயமும் உள்ளது. அந்த எச்சரிக்கையுடன் இயங்கிய படைப்பாளியாகவே சோலை திகழ்ந்தார்.

மண் உருவங்கள், வண்டல் சிறுகதைகள்,  ஓராண்காணி, ஒரு ஊரும் சில  மனிதர்களும், மடையான்களும் சில காடைகளும்,  வட்டத்தை மீறி, வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும்,  கப்பல்காரர் வீடு ஆகிய அவரது சிறுகதைத்தொகுப்புகள் மானுடத்தின் மகத்தான போராட்டங்களை வட்டார மொழியில் பேசின.

நாவலிலும் தடம் பதித்தது
பின்னர் நாவல் என்னும் வடிவத்தைக் கையில் எடுத்த சோலை,நாவலாசிரியராகவே அறியப்படும் அளவுக்கு அவ்வடிவத்தில் சாதனை புரிந்தார்.அவரது முதல் நாவலான “உறங்க மறந்த கும்பகர்ணன்கள்” கதையின் நாயகன் அப்புனு மன வளர்ச்சி குன்றியவன்.உடன்பிறந்தவனாலேயே புறக்கணிக்கப்பட்டவன். பண்ணை அடிமையாக வாழ்ந்த தாழ்த்தப்பட்ட பெண்ணாகிய செவந்தியின் நேசத்துக்கு ஆளான அவனது வாழ்வை மையமாகக்கொண்டு அந்த நாவல் இயங்கியது.நாகதோஷம் என்னும் மூடநம்பிக்கையால் ஒரு பெண்ணின் வாழ்க்கை எவ்விதம் சிதைகிறது என்பதைச்சொன்ன அவரது இரண்டாவது நாவலே “ஒரே ஒரு ஊர்லே”.மூன்றாவது நாவலான “நஞ்சை மனிதர்கள்” காவிரி பாயும் அவ்வட்டாரத்தில் மூன்று தலைமுறைப் பெண்களின் வாழ்வையும் மாற்றங்களையும் பேசுகிறது,கணவனால் ஒடுக்கப்பட்ட முந்தைய தலைமுறை துவங்கி தன் பெயருக்கு முன்னால் இனிஷியலாக தந்தை பெயரை நீக்கிவிட்டுத் தன் தாயின் பெயரை வைத்துக்கொள்ளும் நவீனகாலத்துப் பெண் வரை அக்கதை பேசியிருக்கிறது.இந்நாவலுக்காக அவர் அவரது உறவினர் ஒருவராலேயே தாக்கப்பட்டதும் உண்டு.

அவருக்குப் பெரும்புகழ் சேர்த்த அவரது அடுத்த நாவலே “செந்நெல்”. செங்கொடியை இறக்கு என்கிற ஆண்டைகளின் உத்தரவைக் காலில் போட்டு மிதித்த செங்கொடியின் புதல்வர்களும் புதல்விகளுமான 44 பேர், கீழ்வெண்மணி கிராமத்தில் ராமையாவின் குடிசையில் பூட்டிவைத்துக் கொளுத்தப்பட்ட பெருங்கொடுமையின் கதையை ஒரு வரலாற்று ஆவணமாக்கிய நாவல் அது. கீழ்வெண்மணிக் கொடுமையை மையமாகக் கொண்டு 5 நாவல்கள் இதுவரை வந்துள்ளன. இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப்புனல்’ 1975இல் வெளியானது.சோலை சுந்தரபெருமாளின் ‘செந்நெல்’ 2000 த்தில் வெளி வந்தது.பாட்டாளி எழுதிய “கீழைத்தீ (பின் வெண்மணி)” 2007இல் வெளியானது. 2014இல் மீனா கந்தசாமி ஆங்கிலத்தில் எழுதிய The Gypsy Goddess  என்கிற நாவல் பிரேம் மொழிபெயர்ப்பில் தமிழில் 2016 ஆம் ஆண்டு “குறத்தியம்மன்” என்கிற பேரில் வெளிவந்துள்ளது. 2020 இல் சீனிவாசன் நடராஜன் எழுதிய “தாளடி” வந்துள்ளது.இந்த ஐந்து நாவல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கையும் பாத்திரத்தையும் சரியாகப் பதிவு செய்த ஒரே நாவல் “செந்நெல்”தான் என்னும் பெருமை அவருக்குண்டு.

“பள்ளி மாணவராக இருந்தபோது விடுமுறைக்குச் சித்தி வீட்டுக்குப் போய்விட்டு பஸ்ஸில் திரும்பும்போது, “ஆழியூர் திருப்பத்தை மீறினதும் தேங்கிட்டு. ரோடு ரெண்டு பக்கமும் சனங்க பீதியோட எதிர்க்க வர்ற போலீஸ் வேனையும் மாட்டு வண்டிகளையும் பாத்துக்கிட்டு நின்னுச்சிங்க. பெரிய பெரிய கரிக்கட்டைய அடிக்கி ஏத்திட்டு வர்றாப்போல வண்டிக நெறைய மனுசங்க.எரியுண்டு போன சனங்க.

பஸ்ஸுல இருந்த பலரும் “சு..ச்சு..”ன்னு சப்புக்கொட்டிக்கிட்டுங்க.” 

“அதுக்குன்னு இப்படியாச் செய்வானுங்க பாவிக.. ராத்திரி வெம்மணியில் நடந்த கலவரத்தில எரிஞ்சிப்போனதுகள நாகப்பட்டினம் ஆஸ்பத்திரிக்கு போஸ்ட்மார்ட்டம் பண்ண கொண்டுப் போறாங்க.”

“இப்பவாச்சும் இந்தக் கம்யூனிஸ்ட்காரப் பசங்களுக்கு புத்தி வருமான்னு பாப்போம்”இப்படி பஸ்ஸுக்குள்ளே உக்காந்திருந்ததுங்க தலைக்குத் தலை அவங்க மனசில பட்டதைப் பேசிக்கிட்டு இருந்தாங்க…”அந்தப்பள்ளி மாணவன் அய்யோன்னு அலறிப் பயந்து கூட வந்த அப்பாரு மடியிலே தலைய வச்சி பொதைஞ்சிக்கிட்டான்.”

அந்த மாணவன் பின்னாளில்   வலிவலம் தேசிகர் பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியராகப் போகிறார். அவரே சோலை சுந்தரபெருமாளாக பின்னர் செந்நெல் நாவலை எழுதுகிறார். செந்நெல் நாவலுக்கான உந்துதல் எப்படிக்கிடைத்தது என்பதை சோலை இவ்விதமாக முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“சாதிய நோய்க்குக் கம்யூனிச மருந்து” என்று இந்தியா டுடே இதழ் குறிப்பிட்ட சோலையின் அடுத்த நாவல் “தப்பாட்டம்”. மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்களின் தூண்டுதலும் உற்சாகமூட்டலும் பின்னணியில் இருக்க நான் எழுதிய நாவல் இது என சோலை ‘தப்பாட்டம்’ பற்றிக்குறிப்பிடுவார்,செங்கொடி இயக்கத்தின் மீது சில விமர்சனங்களையும் இந்நாவல் கொண்டிருந்தாலும்,நாட்டின் ஜனாதிபதியாக ஒரு தலித் வரமுடியும். ஆனால் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக ஆக முடியாதது ஏன் என்கிற கேள்விக்கு விடைதேடிய பயணமாகவே ‘தப்பாட்டம்’நாவலை அவர் படைத்தார்.

கோ.வீரய்யனின் அச்சம்
கீழ்வெண்மணிக்கொடுமைக்குப் பிறகான அப்பகுதி  வாழ்வில் புகுந்துவிட்ட கார்ப்பரேட் விவசாயம், இறால் பண்ணைகள் போன்றவை மக்களின் வாழ்விலும் பண்பாட்டிலும் கண்ணோட்டத்திலும் ஏற்படுத்திவரும் தலைகீழ் மாற்றங்களை 2014இல் வெளியான அவரது கடைசி நாவலான “எல்லைப்பிடாரி”யில் எழுதியிருப்பார்.அந்நாவலை வாசித்தபோது “தமிழக நெற்களஞ்சியமாம் தஞ்சை மண்ணில் வருங்காலத்தில் விவசாயமே இருக்குமா என்கிற அச்சம் எனக்கு இருக்கிறது” என்று தான் இறப்பதற்கு முன் ஒரு நேர்காணலில் விவசாய இயக்கப் போராளி தோழர் கோ.வீரய்யன் குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது.‘செந்நெல்’ நாவலை தோழர் வீரய்யன் தான் வெளியிட்டார் என்பதும் நினைவுக்கு வருகிறது. 
2011 இல் வெளியான அவரது “தாண்டவபுரம்” என்னும் நாவல் இந்துத்துவா சக்திகளால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அவர் இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டார் என்று நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. கொலை மிரட்டல்களும் அவருக்கு வந்தன. இவை யாவற்றையும் ஒரு முற்போக்கு இயக்கத்தின் முன்னோடியாக நின்று துணிவுடன் எதிர்கொண்டார்.தேவார மூவர் என்று போற்றப்படுபவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரை ஒரு மனிதராக,ஒரு மையக் கதாபாத்திரமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் அது. சோழப்பேரரசு காலூன்றி நிலைக்க ஒரு வலுவான  பண்பாட்டு அடித்தளத்தை அமைத்த பக்தி இயக்க காலத்தினூடான பயணமாகவே ‘தாண்டவபுரம்’  நாவல் அமைந்தது.ஆளுடையப்பபிள்ளை என்றழைக்கப்பட்ட ஞானசம்பந்தர் 14 வயதில் மதப்பணி துவக்கி 20 வயதுக்குள் வாழ்ந்து முடிந்தவர்.அவர் தேவதாசியான மனோன்மணியத்தின் மீது மையல் கொண்டு கூடி வாழ்ந்ததையும் ஞானசம்பந்தர் மணமுடிக்க இருந்த சொக்கி என்கிற பெண்ணும் அவளது உறவுகளும் தீயிலிட்டுப் பொசுக்கப்பட்டனர் என்கிற அவ்வட்டார வாய்மொழிக்கதையையும் இந்நாவலுக்கான மையச்சரடாகக் கொண்டார்.

வணிகவர்க்கத்துக்கு எதிரான உழுகுடிகளின் எழுச்சியாகவும் ஒடுக்குமுறைக்கு எதிரான மதம் சார்ந்த எழுச்சியாகவும் பக்தி இயக்கத்தை முன்வைக்கும் இந்நாவல் இடதுசாரிகளாலும் விமர்சனத்துக்காளானது.எண்ணாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றிய ஞானசம்பந்தரை நேர்மறையாகச் சித்தரித்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.எனினும் விவாதத்துக்குரிய ஒரு வரலாற்றுக் காலகட்டத்தைத் துணிச்சலுடன் கையாண்ட நாவல் என்கிற வகையில் ‘தாண்டவபுரம்’ வாசித்து விவாதிக்கப்பட வேண்டிய நூல் என்பதை மறுக்க முடியாது.

தாண்டவபுரத்துக்கு முன்னால் 2007 இல் அவர் வெளியிட்ட “மரக்கால்” என்னும் நாவல் இருண்டகாலம் என சைவ, வைணவக்காரர்களால் பழிக்கப்பட்ட களப்பிரர் காலத்தின் முடிவில் வாழ்ந்து தீட்சிதர்களால் சிதம்பரம் நடராசர் ஆலயத்துக்குள் வைத்துத் தீயிட்டுக்கொளுத்தப்பட்ட நந்தனை நாயகனாகக் கொண்ட நாவலாகும்.இலக்கியச்சான்றுகளுடன் மக்களின் வாய்மொழிக்கதைகளையும் ஆதாரமாகக் கொண்டே இந்நாவலையும் அவர் படைத்தார் என்பது முக்கியமானது.சைவ நாயன்மார்கள் அறுபத்து மூவரில் பறையர் சாதியிற்பிறந்த நந்தனின் கதை சாதிகளற்ற சமணத்தை எதிர்க்க ஒரு கைத்தடியாக வேதமதத்துக்குப் பயன்பட்டதை  சோலை பேசுகிறார்.

அபூர்வ படைப்பாளி
வறட்சி வெள்ளத்தால் மட்டும்தான் தஞ்சைச்சீமையின் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களா?ஆளும் அரசின் கொள்கைகளும் அவர்களைப் பட்டினிச்சாவை நோக்கித் தள்ளுகிறது என்கிற சமகால நெருக்கடியையும் அதற்கெதிராக செங்கொடி இயக்கம் மக்களைத் திரட்டுவதையும்  விவாதிக்கும் நாவலாக 2005இல் அவர் எழுதிய ‘பெருந்திணை’ வந்தது.

இன்று திரும்பிப் பார்த்தால் அவரது நாவல்களின் ஒருமுகப்பயணம் என்பது, முழுமையாக இந்தத் தஞ்சைப்பகுதியின் வரலாற்றை ஞானசம்பந்தர் காலம் தொடங்கி இன்றைய கார்ப்பரேட் விவசாயம் வரை இலக்கியமாகச் சொல்லிவிடவேண்டும் என்கிற தன்மையும் முனைப்பும் கொண்டதாகப் பளிச்செனத் தெரிகிறது.இப்படி ஒரு வட்டாரத்தை முழுமையாகப் பேசிய இன்னொரு படைப்பாளியைத் தமிழில் காண முடியாது. கதைகள், நாவல்கள் தாண்டி வெண்மணியிலிருந்து..(வாய்மொழி வரலாறு) என்கிற அவரது நூலில் மக்கள் மொழியில் வெண்மணிக்கொடுமையை ஆவணப்படுத்தி யுள்ளார்.  ‘தமிழ் மண்ணில் திருமணம், மருத நிலமும் சில பட்டாம்பூச்சிகளும்’, வண்டல் உணவுகள் உள்ளிட்ட கட்டுரைத்தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.ஆரம்பகாலங்களில் கவிதைகளும் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் மாவட்டத்தலை வர் என பல பொறுப்புகளில் இருந்து சங்கத்தின் வளர்ச்சிக்கு அவரது பங்கைச் செலுத்தியுள்ளார்.“பொத்தாம் பொதுவாக எழுதுகிறவர்களெல்லாம் வண்டல் இலக்கியவாதி ஆகிவிட முடியாது.‘சோழநாடு சோறுடைத்து’ என்கிறோம். இன்றைக்கு நிலை என்ன? நாம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிற இந்த மண் முப்பது ஆண்டுகளுக்கு முன் சங்க இலக்கியத்திலே மருத நிலத்தை எப்படிச் சொல்கிறார்களோ அப்படியான மண்ணாக இருந்தது, இந்த மண் உண்மையில் மணக்கும். ஆனால் இன்று? வறண்டு கிடக்கிறது.நெல் விளைந்த பூமியிலே காட்டாமணியும் கருவேலும் மண்டிக்கிடக்கிறது.விவசாயி பட்டினியால் சாகிறான்.எலிக்கறி தின்று உயிர் வாழ்கிறான்.

இந்தியாவுக்கே சோறு போட்டவன் தட்டேந்தி நிற்கிறான்.இந்த எதார்த்தத்தைச் சொல்கிற இலக்கியம்தான் வண்டல் இலக்கியம்”  என்று ஒரு நேர்காணலில் சோலை குறிப்பிட்டார்.அந்த வரையறுப்புக்கு சாட்சியமாகவும் முன்னுதாரண மாகவும் அவரது எழுத்துக்கள் திகழ்கின்றன. சங்கீதமும் காதலும் காமமும் ஆண்-பெண் உறவும்,பூவும் வாசமும்  என்றே சுழன்றுகொண்டிருந்த தஞ்சை எழுத்துலகில்    சேறும்சகதியும் சாட்டையடியும் சாணிப்பாலும் செங்கொடியும் எனக் கொண்டுவந்து சேர்த்தவர் சோலை சுந்தரபெருமாள். அதற்காக என்றென்றும் அவர் நினைவுகூரப்படுவார்.

26-01-2021 – அன்று சோலை. சுந்தரப்பெருமாள்  படத்திறப்பும் நினைவேந்தல் நிகழ்வும் திருவாரூரில் நடைபெறுகிறது.

கட்டுரையாளர்: ச.தமிழ்ச்செல்வன், தமுஎகச மதிப்புறு தலைவர்

;